எழுத்தாளனுக்கான பாதை

அன்புள்ள ஜெ

நான் இலங்கை நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒரு மாணவன்.நான் ஓர் எழுத்தாளராக வர வேண்டுமென வேட்கை கொள்கிறேன். உங்களால் எனக்கு ஒருசில அறிவுரைகள் தர முடியுமா?….

Aakif Athaullah

அன்புள்ள ஆகிஃப்,

உங்களுடையது போன்ற ஒரு பெயரை முதல்முறையாகக் கேள்விப்படுகிறேன். எனக்கு இஸ்லாமியப்பெயர்களில் ஓர் ஈடுபாடுண்டு. அகராதியில் உங்கள் பெயரின் பொருளை தேடிப்பார்த்துக்கொண்டேன்.

நம் சூழலில் இளைஞர் என்னென்னவோ ஆகவேண்டும் என எண்ணுவார்கள். எழுத்தாளர் ஆகவேண்டுமென ஒருவர் எண்ணுவதே மிக அரிது. ஆகவே வாழ்த்துக்கள். எழுத்தாளராக ஆகுங்கள். உங்களை தேர்ந்த எழுத்தாளராகச் சந்திக்க விழைகிறேன் .

எழுத்தாளர் ஆவதற்கான பயணம் சற்று நீண்டது. தோல்விகளும் சலிப்பும் அவ்வப்போது உருவாவது. வேறு எதுவாக ஆனாலும் நீங்கள் ஒரு கட்டத்தில் ஓய்வுபெற வேண்டியிருக்கும். எழுத்தாளர் என்பது ஒரு தொழில் அல்ல, ஓர் ஆளுமை. நீங்கள் அதுவாக ஆனால் இறுதிவரை அதுதான். வேறெந்த களத்திலும் இல்லாத ஒரு தன்னிறைவை நீங்கள் அடைய முடியும். ஏனென்றால் நீங்கள் இச்சமூகத்திற்குப் பங்களிப்பாற்றுபவர் என நீங்கள் அறிவீர்கள்.

எழுத்தாளர் ஆக முதல் தேவையே படிப்பதுதான். இதுவரை என்னென்ன எழுதப்பட்டுள்ளது என அறிந்து கொள்ளாமல் இனிமேல் ஒன்றை எழுத முடியாதல்லவா? எழுத்தில் கற்றுக்கொள்ளவேண்டியவை மொழிநடை, இலக்கியவடிவங்கள் இரண்டும்தான். அவ்விரண்டுமே வாசிப்பினூடாகவே வரும். தமிழிலக்கியத்தில் புனைவு, புனைவல்லா எழுத்து என இரண்டு களங்களிலும் எழுதப்பட்டுள்ளனவற்றை வாசியுங்கள். ஓர் ஐந்தாண்டுக் காலம் தீவிர வாசிப்பு நிகழ்ந்தாலே தகுதிபடைத்தவர் ஆகிவிடுவீர்கள். ஆங்கிலத்தில் மேலே வாசிப்பது உங்கள் தனித்தேர்வு.

எழுத்தாளருக்கான வாசிப்பு வெறும் மௌனவாசிப்பாக இருக்கலாகாது. அதில் ஒரு விமர்சனமும் ஊடாடவேண்டும். ஆகவே இலக்கியத்திற்கான விவாதமேடைகளுடன் தொடர்புகொள்ளுதல், அங்கு நிகழும் விவாதங்களைக் கவனித்தல், அதனூடாக விவாதிக்கக் கற்றுக்கொள்ளுதல் இன்னும் உதவியானது. ஏனென்றால் இலக்கியப்படைப்புகள் விவாதங்களினூடாக மேலும் மேலும் நுட்பங்களை வெளிக்காட்டுபவை.

ஆனால் தவிர்க்கவேண்டிய இரண்டு உண்டு. ஒன்று, பொதுச்சூழலில் புழங்கும் பொதுவான அரசியல்- சமூகவியல் கருத்துக்கள். இவற்றையே இலக்கியப்படைப்பிலும் எழுதுபவர்கள் உண்டு. இவற்றையே இலக்கியப்படைப்பில் தேடுபவர்களும் உண்டு. அவ்விரு சாராரும் இலக்கியவாசகனால் முழுமையாக நிராகரிக்கப்படவேண்டியவர்கள். பொதுவான கருத்துக்கள், எல்லாரும் சொல்லும் கருத்துக்கள் மீண்டும் எழுதப்பட இலக்கியமும் இலக்கியவாதியும் தேவையில்லை அல்லவா?

இரண்டு, அரசியல் கருத்துக்கள். இலக்கியவாதிக்கு அரசியல் தேவையா என்றால் தேவை. அது அவனே தன்னைச்சூழ்ந்துள்ள வாழ்க்கையில் இருந்து கண்டடைந்த அரசியலாக இருக்கவேண்டும். தன் வாசிப்பினூடாக தானாகவே யோசித்துச் சொல்வதாக இருக்கவேண்டும். அது தானாகவே உருவாகி வரட்டும். அதன்பொருட்டு நீங்கள் முனையவேண்டியதில்லை.

அதேசமயம் இங்கே அரசியல் இயக்கங்கள், அரசியல் தரப்புகள் பெரும்பொருட்செலவில் ஊடகங்களை எல்லாம் கைப்பற்றிக்கொண்டு நடத்தும் மாபெரும் பிரச்சாரங்கள் வழியாக நம்முள் திணிக்கும் அரசியல் கருத்துக்களுக்கு நம் மண்டையை கொடுக்கலாகாது. அதில் எந்த தரப்பை நீங்கள் பேச ஆரம்பித்தாலும் எழுத்தாளனாக உங்களுக்கு அது அழிவுதான். அந்த அரசியல் கூச்சல்களுக்கு அப்பால் நின்று நீங்களே என்ன எண்ணுகிறீர்கள், என்ன சொல்கிறீர்கள் என்பதுதான் உங்கள் எழுத்தின் மதிப்பை தீர்மானிக்கிறது.

அரசியல் கருத்துக்கள் மிகமிக  வலிமையானவை. நம்மைச்சூழ அவை நடந்துகொண்டிருப்பதனால் நம்மை மிக வலுவாக அவை பாதிக்கின்றன. அவை பெரும்பாலும் எதிர்மறையான காழ்ப்புகள் வெறுப்புகள் கசப்புகளால் ஆனவை. ஆகவே நம் மனம் அவற்றை வளர்த்துக்கொள்கிறது. அதில் ஈடுபட ஆரம்பித்தால் நாம் மிகமிக பயனுள்ள ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறோம் என்றும், களமாடிக்கொண்டிருக்கிறோம் என்றும் நாம் நம்ப ஆரம்பித்துவிடுவோம். ஆனால் எந்த வகையான அரசியல் கருத்தும் நம்மை ஒரு படையின் சிப்பாய்களில்  ஒருவனாகவே ஆக்குகிறது. அது எழுத்தாளனின் , சிந்தனையாளனின் சாவு.

நாம் நம் சிந்தனையை கண்டுகொள்ள மிகப்பெரும் தடையாக ஆவது இந்த அரசியல் கருத்துக்களின் செல்வாக்குதான். அதைக் கடக்கும் ஒரே வழி இலக்கியம் மற்றும் சிந்தனைகளின் செல்வாக்குக்கு நாம் நம்மை அளிப்பது. ஆனால் அதை செய்ய இங்கே உள்ள அரசியல்வாதிகள் நம்மை விடமாட்டார்கள். ஓர் ஆசிரியரை கொஞ்சநாள் வாசித்தாலே ‘உன்னில் அவருடைய செல்வாக்கு உருவாகிவிடும். உன் தனித்தன்மை அழியும். ஜாக்கிரதை’ என்பார்கள். ஆனால் அவர்கள் உருவாக்கும் சராசரித்தனமான அரசியல் செல்வாக்கை நியாயப்படுத்தவே இதைச் சொல்கிறார்கள். நஞ்சு ஊட்டுபவர்கள் முறிமருந்தை விலக்கும்படிச் சொல்கிறார்கள்.

உங்களுக்குரிய ஓர் ஆசிரியன், எவராக இருந்தாலும், உங்களை ஆட்கொள்ளட்டும். அவருடன் உரையாடுங்கள். அவர் மொழிக்கு அணுக்கமான மொழியை இயல்பாகவே அடைவீர்கள். அதிலிருந்து உங்கள் மொழி நுணுக்கமாக உருவாகி வரும். ஓர் ஆசிரியரை உள்ளும் புறமும் அதிநுணுக்கமாக அறிவதன் வழியாக நாம் அந்த ஆசிரியரில் செயல்படும் சிந்தனைச் சூழலை ஒட்டுமொத்தமாக அறிகிறோம். அவர் வழியாக ஒட்டுமொத்த மரபும் நம்மை வந்தடைகிறது. நாம் நமக்குரிய ஆசிரியரையே தேர்வுசெய்வோம். அது நம் தேர்வே ஒழிய அரசியல்போல நம் மீது பிறர் திணிப்பது அல்ல. ஆகவே அந்த தேர்வால் நாம் நம்மை ஒருபோதும் இழப்பதில்லை. நாம் கூர்மைதான் அடைவோம்.

எப்படி வாசிப்பது என்று , என்னென்ன தெரிந்துகொள்வது என சில வரையறைகள் நம் சூழலில் இயல்பாக உருவாகி வந்துள்ளன. உதாரணமாக, இங்கே வணிகக்கேளிக்கை எழுத்து– இலக்கியம் என்னும் ஒரு பிரிவினை உள்ளது. வாசகனின் சுவாரசியத்திற்காக, வாசகனை மட்டுமே கவனத்தில்கொண்டு, திட்டமிட்டு உருவாக்கப்படுவது வணிகக் கேளிக்கை எழுத்து. விற்பனை அதன் நோக்கம். ஆசிரியன் தனக்கு என்ன சொல்ல இருக்கிறதோ அதை மட்டுமே கருத்தில்கொண்டு எழுதுவது இலக்கியம். அதில் வாசகன் என்பவன் ஆசிரியனின் அகத்தைப் பகிர்ந்துகொள்பவன் மட்டுமே.

நீங்கள் இலக்கியவாதியாக ஆக விரும்புகிறீர்களா, வணிகக்கேளிக்கை எழுத்தாளர் ஆக விரும்புகிறீர்களா என்பது உங்கள் தெரிவு. அதற்கேற்ப இலக்கியங்களையோ அல்லது வணிக எழுத்துக்களையோ வாசித்துப்பார்க்கலாம். வணிகக்கேளிக்கை எழுத்தை திறம்பட எழுதுபவர்கள் இலக்கியத்தையும் கொஞ்சம் வாசிப்பவர்கள். இலக்கியவாதிகள் வணிகக்கேளிக்கை எழுத்தில் சிறப்பானவற்றை வாசித்துப்பார்ப்பது நல்லது.

இலக்கியப்படைப்புகளை வாசிக்கையில் சில தனிக்கவனங்கள்தேவை. ஏனென்றால் அவற்றை வெறுமே கதையாக வாசிக்க முடியாது. அவை எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டன, அவை உருவான அறிவுச்சூழல் என்ன, அவை முன்வைக்கும் சமூகச்சூழல் என்ன என்பது முக்கியமானது. அவற்றின் அழகியல் வடிவம் என்ன என்பது முக்கியமானது. அந்த அழகியலை புரிந்துகொண்டால் மட்டுமே அந்த இலக்கியப்படைப்பைப் புரிந்துகொள்ள முடியும்.

உதாரணமாக, இயல்புவாதம் என ஓர் அழகியல் உண்டு. அதை நம்புபவர்கள் ஒரு கதாபாத்திரம் மனதில் என்ன நினைக்கிறது என்பது முக்கியமே அல்ல என எண்ணுபவர்கள். வெளியுலகில் கண்கூடாக என்ன நடந்தது என்று மட்டுமே கதையில் சொல்லப்படவேண்டும் என நினைப்பவர்கள். ஆகவே கதை நடக்கும் இடம், அங்குள்ள பொருட்கள், அந்த சூழல் எல்லாம் அக்கதைகளில் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கும். பொதுவாக கதை வாசிக்கும் ஒருவர் ‘என்ன இது கதை நடக்கும் இடத்தை இப்படி விரிவாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்’ என சலிப்படையக்கூடும்.

அதேபோல பின்நவீனத்துவக் கதைசொல்முறை ஒன்று உண்டு. கதையை தொடர்ச்சியாகச் சொல்லாமல் அங்குமிங்குமாகச் சொல்லி வாசகனே கதையை இணைத்துக்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். வாழ்க்கையிலும் அப்படித்தானே நமக்கு விஷயங்கள் தெரியவருகின்றன என்று அவர்கள் சொல்வார்கள். அது என்ன என்று தெரிந்துகொண்டால் நம்மால் மிக எளிதாக அக்கதைகளைப் புரிந்துகொள்ள முடியும். இல்லையேல் கதை முன்னுக்குப்பின்னாக சொல்லப்பட்டிருப்பதாக நினைப்போம்.

இப்படி இலக்கியத்தின் காலகட்டங்கள், அழகியல் இலக்கணங்கள், அந்த இலக்கணங்களைச் சொல்லும் இயல்புவாதம் போன்ற கலைச்சொற்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு வாசிக்கவேண்டும். அது மிக எளிதாக இலக்கியத்திற்குள் நுழைவதற்கு நமக்கு உதவும்

இலக்கியம் என்பது இன்று எழுதப்படுவது அல்ல. அது ஒரு தொடர்ச்சி. கபிலன், கம்பன் காலம் முதல் இங்கே இலக்கியம் உள்ளது. அதன் தொடர்ச்சிதான் நவீன இலக்கியம். பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன் என நான்கு தலைமுறைக்காலமாக நமக்கு முன் இலக்கியம் உள்ளது. அதை நாம் வாசித்து நமக்குரிய இடமென்ன என புரிந்துகொள்ளவேண்டும். அந்த முன்னோடிகளை விமர்சனரீதியாக நுணுக்கமாகப் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் மீது நமக்கு ஆழமான புரிதல் இருக்கவேண்டும்.

இதெல்லாம் இல்லாமல் எழுதலாமா? எழுதலாம். ஆனால் எந்த எழுத்தும் அதற்குப்பின்னால் உள்ள பிரக்ஞையால்தான் பொருட்படுத்தப்படுகிறது. நீங்கள் முன்னோடிகளை வாசிக்க மாட்டீர்கள் என்றால் உங்களை ஏன் மற்றவர்கள் வாசிக்க வேண்டும்? வாசிக்காமல் எழுதுபவர் தன் அனுபவத்தை ஒட்டி சுமாரான ஓரிரு படைப்புகளை எழுதிவிட முடியும். ஆனால் தன் சூழலை மாற்றியமைக்கும் முதன்மையான எழுத்தாளர் ஆகவே முடியாது.

ஜெ

பிகு

வாசிப்புக்கான வழிகாட்டிகளாக, எழுதுவதற்கான வழிகாட்டிகளாக நான் சில நூல்களை எழுதியுள்ளேன். அவை

விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடுகள் வாங்க  

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்

எழுதும் கலை

எழுதுக

வணிக இலக்கியம்

இலக்கியத்தின் நுழைவாயிலில்

இலக்கிய முன்னோடிகள் 

வாசிப்பின் வழிகள்

நாவல் கோட்பாடு

முந்தைய கட்டுரைவிக்ரமன்
அடுத்த கட்டுரைதருணாதித்தன், கடிதம்