அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்.
தளத்தில் வந்த இந்த https://www.jeyamohan.in/195630/ கடிதத்தை வாசித்தேன் .
அதையொட்டிய எனது அனுபவத்தை பகிரவே இக்கடிதம்.
சில நாட்களுக்கு முன் என் மகளுக்கு (7 வயது) பனிமனிதன் தினம் ஒரு அத்தியாயம் என வாசித்து இரவு கதை சொல்லிவந்தேன். ஆரம்பத்தில் அதில் ஈடுபாடற்று இருந்தவள் நாட்கள் செல்ல செல்ல நானே மறந்தாலும் என்னை வற்புறுத்தி பனிமனிதன் கேட்டுவிட்டு தான் தூங்க செல்வாள்.( அருகிருந்து கேட்டு வந்த என் மகனும் (3 வயது) புரியுதோ இல்லையோ அவனும் ” அப்பா பனிமனிதன் சொல்லுங்க எனக் கேட்க ஆரம்பித்து இருந்தான் நான் நாவலை வாசித்து முடித்த நாட்களில் “)
இது நடந்து சில நாட்கள் கடந்து இப்போது உடையாள் வாசித்து சொல்லி வருகிறேன் .
கடந்த 13.1.24 பள்ளிக்கு என் மகளை காலையில் அழைத்து செல்லும்போது சாலையோரம் இருந்த புல்வெளியில் புறாக்கள் கூடி இருந்ததை காண்பித்தேன். ‘எனக்கு அது பனிக்கட்டி அங்க அங்க விழுந்து இருக்க மாதிரி இருக்குப்பா‘ என்றாள். எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை அவளிடம் ‘கவிதையும் இப்படித்தான் படிக்கிற ஒவ்வொருத்தவங்களுக்கும் வேறு வேறு meaning தரும்னு சொல்றாங்க பாப்பா‘ என்றேன் . ‘ஏன் அப்படி‘ என்றாள் . ‘இப்போ எனக்கு புறாவா தெரிஞ்சது உனக்கு பனிக்கட்டியா தெரிஞ்சுது தானே அது மாதிரி ‘ என்றேன் .
அவள் சட்டென ‘ ஆமாம்பா நம்ம பனிமனிதர்கள் மாதிரி ஒரே மனம் உள்ளவங்க இல்லல்ல ..தனித்தனி மனம் தானே நமக்கு ‘ என்றாள் .
உள்ளபடியே சொல்கிறேன் ..நான் அவளுக்கு பனிமனிதன் வாசிக்கும்போது அவளுக்கு புரியுமா சில இடங்கள் என தயக்கம் இருந்தது .அதற்கு முன்பு வரை பாட்டி வடை சுட்ட கதைகள் போல நானும் சில கதைகளை சலிப்பின்றி அவளுக்கு சொல்லிக்கொண்டிருந்தவன் தான் .
ஆனால் மேலே குறிப்பிட்ட அவளுடனான எனது உரையாடல் அந்த சந்தேகத்தை தீர்த்துவிட்டது . தங்களுக்கு மிக்க நன்றி !
பெற்றோராகிய நாம் பாதுகாப்பு வளையத்துக்குள் (சமூக வலைதள மேலாண்மை மற்றும் இதர பல இத்தியாதிகளிலும் களித்திருக்க ) பத்திரமாக இருக்க ஏதேதோ காரணங்களை அடுக்கி ‘குழந்தைகளுக்கு புரியாது‘ என கற்பிக்கவேண்டியவற்றை தவற விடுகிறோம் என்றே எனக்குப் படுகிறது.
புரியுதோ புரியவில்லையா அதை அவர்கள் முடிவு செய்யட்டும் ! நாம் நமது கடமையை (கும்பல் மனப்பான்மை தவிர்த்து) செவ்வனே செய்வோம் !
அன்புடன்
கே.எம்.ஆர்.விக்னேஸ்