காகமும் கதைகளும்

Dear my Jemo Sir,
நான் ராமச்சந்திரன், தங்களின் நீண்ட நாள் வாசகன்.தங்களின் காக்காய்பொன் சிறுகதை நீண்ட நாள் முன்பு படித்தது, அதில் வரும் காகம் மின்னும் பொருட்களை சேகரித்து வீட்டு முற்றத்தில் கொண்டு வந்து போட்டு விடும், (மேலும் நாங்கள் மட்பாண்ட பொருட்கள் செய்யும் குயவர் குடும்பம், லேசான தெறிப்புள்ள உண்டியல் மற்றும் தூவக்கால் மீது காக்காய்ப் பொன்னை அரைத்து தடவி விடுவோம், மின்னிக்கொண்டும் இருக்கும், அதே வேளையில் தெறிப்பும் மறைந்து விடும்).
பின்வரும் செய்தி குறிப்பைப் பார்த்தவுடன் புன்னகை வந்தது, உடனே கடிதம் எழுதினேன்.
என்றென்றும் அன்புடன்
ராமச்சந்திரன்.
அன்புள்ள ராமச்சந்திரன்
காக்காய்ப்பொன் என்னும் சொல்லே காகத்திற்கு மின்னுவதிலுள்ள ஆர்வத்தையும், மின்னும் பொருட்களை அது சேகரிப்பதையும் கண்டபின் நம் முன்னோர் உருவாக்கியதாக இருக்கலாம். காக்காய்ப்பொன் காகத்தால் விரும்பப்பட்ட இயற்கை உலோகக்கலவை மண்ணாக இருக்கலாம். துரிசு எனப்படும் காப்பர் சல்ஃபைட் தான் காக்காய்ப்பொன் என ஒரு கொள்கை உண்டு.
அந்தக்கதைகளில் நான் காகங்களின் இயல்பை வேறொருவகையில் ஆன்மிகக்குறியீடுகளாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அக்கதைகளை வெறும் புனைவுகொண்ட, மகிழ்ச்சியான கதைகளாக வாசிக்கலாம். குழந்தைகளுக்குச் சொல்லலாம். ஆனால் அதற்கப்பால் செல்லும் தன்மை கொண்டவை அவை. ஆன்மிக- யோக பயிற்சிகள் கொண்டவர்களால் அவற்றை உணர முடியும்
ஜெ
முந்தைய கட்டுரைஅன்னையரின் மடியமைதல்
அடுத்த கட்டுரைஅழிவின் நடனம் -கடிதம்