கதைக்கொண்டாட்டம், கடிதம்

அன்புள்ள ஜெ

கொரோனா காலகட்டத்தில் வெளிவந்த 136 சிறுகதைகளில் பெரும்பாலானவற்றை அன்றே வாசித்திருந்தேன். ஆனால் முழுமையாக வாசித்தேனா என்ற சந்தேகம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. காரணம் அன்று ஒன்றுக்குமேல் ஒன்றாகக் கதைகள் வெளிவந்துகொண்டே இருந்தன. ஒரு கதையை வாசித்து அசைபோட்டு முடிவதற்குள் அடுத்த கதை. இன்றைக்கு எல்லா கதைகளையும் சேர்த்துப்பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டயிரம் பக்கம் வரும். வாசித்ததே தெரியாமல் அந்தக் கதைகளை வாசித்துவிட்டோம்.

நான் அண்மையில் தங்கப்புத்தகம் தொகுப்பை வாங்கினேன். அதை வாசித்தபோதுதான் அதிலுள்ள கதைகளை நான் பெரும்பாலும் கவனமாக வாசிக்கவே இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. கவனமாக வாசிக்கும்போது அவையெல்லாம் மிகப்பெரிய அளவில் உள்ளாழம் கொண்ட கதைகள் என்று தெரிந்துகொண்டேன். கரு போன்ற ஒரு கதையை ஆன்மிகமாகத்தான் புரிந்துகொள்ள முடியும். சாதாரணமாக அதை உள்வாங்க முடியாது.

அதன்பிறகு எல்லா தொகுதிகளையும் வாங்கினேன். இந்தவகையில் சப்ஜெக்ட் சார்ந்து கதைகளை தொகுக்கும்போது ஓர் ஆழமான வாசிப்பனுபவம் அமைகிறது.  படையல் தொகுதியிலுள்ள கதைகளின் அழகை ஒரு கதையுடன் இன்னொரு கதையை தொடர்புபடுத்தினால்தான் புரிந்துகொள்ள முடியும். அந்தக்கதைகளின் களம் ஒன்றாக இருப்பதனால் ஒரு நாவல் போல ஒருகதையில் இருந்து இன்னொரு கதைக்குப் போக முடிகிறது. அதேபோல ஆயிரம் ஊற்றுகள். புத்தகமாக வாசித்தால்தான் உள்ளே செல்ல முடிகிறது.

எல்லா கதைகளையும் பொறுமையாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய கனவுக்குள் சென்றுவிட்ட அனுபவத்தை அளிக்கின்றன. பல கதைகளை இன்னும்கூட என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு பல கதைகள் அன்னியமாகவும் உள்ளன. அனலுக்குமேல் எனக்கு உள்வாங்கவே முடியாத கதை. பொலிவதும் கலைவதும் மிக அணுக்கமான கதை. தேவி தொகுப்பிலுள்ள எல்லா கதைகளும் அழகானவை.

சரவணன் கிருஷ்ணகுமார்

முந்தைய கட்டுரைகுற்றவுணர்வை வெல்லுதல்
அடுத்த கட்டுரைதுறத்தல், ஒரு கடிதம்