சிறு சிறுகதைகள்: கடிதம்

அன்புள்ள ஜெ

நான் தொடர்ச்சியாக உங்கள் படைப்புகளை வாசித்துக்கொண்டே இருக்கும் ஒருத்தி. பலமுறை பல நூல்களை வாசித்து குறிப்புகளும் எழுதியதுண்டு. என்னைப்போன்ற வாசகர்கள் உங்கள் படைப்புகளை தேர்வுசெய்யும்போது அதெல்லாம் கொஞ்சம் பெரியதாக இருக்கவேண்டும் என்றுதான் நினைப்போம். நாலைந்து நாளுக்காவது அந்தப்புத்தகம் கூடவே இருக்கவேண்டும் என நினைப்போம். (ஆனால் வாசிக்கும்தோறும் உங்கள் நடை பழகிவிடுவதனால் பெரிய நூலைக்கூட அப்படியே வேகமாக வாசித்து முடித்து விடுவோம். நான் அண்மையில் விஷ்ணுபுரம் நாவலை மூன்றே நாட்களில் மறுபடியும் வாசித்தேன்) ஆனால் உங்கள் புத்தகங்களை வேறு புதிய வாசகர்களுக்குப் பரிந்துரைப்பதென்றால் சிறிய நூல்களைத்தான் கொடுக்கவேண்டும் என்பது நான் கண்டுபிடித்தது. பெரிய புத்தகங்களைக் கண்டாலே பயந்து நின்றுவிடுகிறார்கள். அத்துடன் பெரிய கதைகள் அதில் இருந்தாலும் படித்து முடிக்கமுடியாமல் விட்டுவிடுகிறார்கள்.

உங்கள் புத்தகங்களில் வாழ்விலே ஒரு முறை, துளிக்கனவு இரண்டும்தான் அந்தவகையில் புதியவாசகர்களுக்கு அளிக்கவேண்டிய நூல்கள். நான் பல படைப்புகளை வாங்கி அளித்திருக்கிறேன். எல்லாருமே ஏதேனும் ஒரு கட்டுரையையாவது வாசித்துள்ளனர். பலர் அதற்குள் ஆழமாகச் சென்று தொடர்ச்சியாக வாசிக்கவும் ஆரம்பித்துள்ளனர். துளிக்கனவு சில உதிரி சித்திரங்கள் கொண்டது. ஒரு தம்பதியை போலீஸ் ஒரே விலங்குபோட்டு அமரச்செய்திருக்கும் ஒரு சித்திரம் அதிலே வரும். என் தோழி அதை வாசித்து அழுதுவிட்டாள். அவளுடைய வாழ்க்கையிலேயே பெரிய இலக்கிய அனுபவம் என்றால் அதுதான். இலக்கியம் என்றால் என்ன என்று அதன் வழியாகத்தான்  அவள் உணர்ந்துகொண்டாள். அதன்பிறகு நாலைந்து புத்தகம் வாசித்துவிட்டாள். அந்த நூல்களைப்பற்றி அதிகம்பேர் பேசுவதில்லை. உங்களுடைய பெரிய புத்தகங்கள் அந்த நூலை மறைத்துவிட்டன என நினைக்கிறேன்.

அன்புடன்

லதா கிருஷ்ணன்

துளிக்கனவு வாங்க

முந்தைய கட்டுரைநம் குழந்தைகளுக்கான கதைகள், கடிதம்
அடுத்த கட்டுரைஇரு நூல்கள்- கடிதங்கள்