பாலை நிலவனுக்கு தன்னறம் விருது


“வாழ்க்கையைவிட்டு இலக்கியத்தைத் துண்டித்துவிடாமல் பத்திரப்படுத்தியிருக்கிறேன். சிதைந்துபோன மனிதனின் மன உலகத்தைத்தான் நான் மனித மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். கவிதையின் சாத்தியம் வாழ்வின் கட்டவிழ்ப்பு என்பது என் பிரகடனம். இழப்புணர்வால் உந்தப்பட்ட என் மொழியை பிரச்சார யுக்தியிலிருந்து வெளியேறிய மன உலகத்தின் ஓலமாய் நான் வார்க்கிறேன். ஒட்டுமொத்த மானுட நேயம்தான் எனது தற்போதைய தேடுதலின் தீவிரம்…”

தமிழ் இலக்கியத்தில் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் படைப்பாளியாக எழுந்துவந்த கவிஞர்களில் பாலைநிலவன் குறிப்பிடத்தக்கவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலைநிலவனின் கவிதைகள் தமிழ் கவிதைப்பரப்பில் தனக்குரிய தனிநிலத்தை அகழ்ந்தெடுத்து நிற்கின்றன. தனிமை, சிதைவுகள், நிராசைகள், வாழ்வுத்துயர், சகமனித துக்கம் என இவருடைய கவிதைகளின் பாடுபொருட்கள், எக்காலத்தும் இம்மண்ணில் மனிதரை அலைக்கழிப்பவைகளாக உள்ளன. அக்கவிதைகள் வழியாக இவர் தொட்டுக்காட்டிய புனைவுண்மைகள் அனைத்தும் சிதைவின் ஆழத்தை முன்வைப்பவை.

உலகளாவிய தமிழ் இலக்கியப் பரப்பை மூர்க்கமாக வெளிப்படுத்தும் நோக்குடன் ‘நீட்சி’ எனும் சிற்றிதழைத் தொடங்கினார். ‘படைப்பு ஆவேசத்தை வாழ்வுகதியில் மீட்டெடுக்க வேண்டிய காலம்’ என்ற தலையங்கத்தில் எழுதியவர். ஆவேசமும் தன்விடுவிப்பும் கொண்டு இலக்கியத்தின் உள்ளோட்டத்தில் பாய்ச்சலை நிகழ்த்த முயன்றவர்களில் கவிஞர் பாலைநிலவனும் முதன்மையானவர். அதற்கென அவர் தேர்ந்தெடுத்த படைப்புமொழியும் சுயவாழ்வின் வதைகளளித்த வைராக்கியத்திலிருந்து உருவாகியது. கள்ளி முட்களுக்குள் நெளியும் நாகம் போல மொழியை இவரது கவிதைகள் கையாள்கின்றன.

“கவிதை அது தன்னைத்தானே புதுப்பித்து யார் கண்களுக்கும் படாமல் தன் பாம்பின் சட்டையை சதா உரிக்கும். ஒருவர் ஏன் கவிதை எழுத வேண்டும் ஏனெனில் அவர் தன் பழைய சட்டையை இழந்தவர். தன் தோலைச் சீவினால் ஒழிய அவருக்கு இனி புதுச்சட்டை இல்லை. எனவே கவிதை இருக்கிறது” எனக் கவிதை குறித்து வரையறுக்கிற பாலைநிலவனின் படைப்புகள் நிராதரவான மானுட வாழ்வின் ஆழங்களையும் அவலங்களையும் எவ்வித போலி ஒப்பனைகளுமின்றி பேசத்துடிக்கின்றன.

தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத எழுத்துப்படைப்புகளைத் தந்து, இவ்வாழ்வுக்கு நேர்மறைக்கோணம் அளிக்கும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அப்படைப்பாளிகளை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’  வருடாவருடம் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் சு.வேணுகோபால் (2022) ஆகிய ஆளுமைகளுக்கு அவர்களின் இலக்கியப் பங்களிப்பினை பணிந்து வணங்கி இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டுக்கான விருது, கவிஞர் பாலைநிலவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுவரை இவரது எட்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கோணங்கியின் புனைவுரு ‘வேட்டையில் அகப்படாத விலங்கு’ நூலின் தொகுப்பாசிரியர். எம்.ஜி.ராமச்சந்திரனும் காரல் மார்க்சும், மல்லாந்த நிலையில் ஒரு கரப்பான்பூச்சி ஆகிய புனைகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கண்ணாடி வெளி, சீலிடப்பட்ட  கதையில் ஜி.என் ஆகிய இரு கட்டுரைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. ‘தனிமை-வெளி’ எனும் இலக்கிய காலண்டிதழைத் தொடங்கி தீவிரமாகவும் நடத்திவருகிறார்.

காற்றின் தீநாவு ஆகவும், கடலின் உப்பு ஆகவும் கவிதையை கண்டடைகிற படைப்புமனம் பாலைநிலவனுடையது. கடலில் திடீரென எதிர்ப்படும் சுறாவைப் போல அன்றாடம் பயன்படுத்தும் சாதாரணச் சொற்களை கவிதையில் எதிர்கொள்வதாக ஓர் முன்னுரைக் குறிப்பில் எழுதியிருக்கும் பாலைநிலவன் சித்தரிக்கும் அகநிலம் என்பது சிதிலங்கள் துயரழுத்தமும், அதிலிருந்து விடுபடத்தவிக்கும் எத்தனிப்பும் நிறைந்தவை. அவ்வகையில் அவர் மிக முக்கியமான படைப்பாளியாக நம்முன் எளிமையைச் சுமந்தலைகிறார். எத்தகு எதிர்மைகள் சூழ்ந்தாலும் வாழ்வென்பதை அன்பின் பரவல்வெளியாக காணச்செய்யும் ஓர் மாற்றுப்பார்வையும் இவரது கவிதைகள் வழங்கத்தவறுவதில்லை.

கவிஞர் பாலைநிலவனின் அகத்தை அணுகச்செய்யும் சொற்களையும் வார்த்தைகளையும் அவரே நமக்குத் தந்திருக்கிறார். “எல்லா ஏமாற்றமும் குழந்தைமையிலேயே நடந்ததால் ஏமாற்றப்பட்ட ஒரு குழந்தைமைதான் எனது படைப்பின் சிதைவாகிறது. நான் கடவுளால் ஏமாற்றப்பட்டவன்; கொலை செய்யப்பட்ட இயேசுவை இப்போது சுமந்து திரிகிறேன். பைத்தியம் பிடித்த எனது பாட்டிதான் எனது தலையாயிருக் கிறாள். எனது தீராத வேட்கையில் மீண்டும் மீண்டும் புனரமைக்கப்படுகிற படிமமாக குழந்தைகள் வந்துவிட்டார்கள். எனது புனைவுகளின் வழியே இவர்களோடு நான் விளையாடுகிறேன். எனக்கு மீட்பை வழங்கக்கூடியவர்களும், கைவிடக்கூடியவர்களும் இவர்கள்தான் என்பதால் இந்த விளையாட்டு புனைவின் தொட்டுவிளையாட்டு போல் வேகங்கொள்கிறது. படைப்பின் அதிகாரத்திலிருந்து இந்த விளையாட்டுதான் என்னை கடுகாக்கியது. ஆக, பிரபஞ்சத்தில் நான் குழந்தைகள் சுற்றிப்போடுகிற பம்பரம்.”

தன் படைப்புகளைத்தவிர பிறவற்றில் எதுவும் தன்னை வெளிச்சப்படுத்திடாத தனிமையுலகை ஏற்றிருக்கிறார் பாலைநிலவன். அவரது அகமும் செயலும் கருணைப்பருக்கைகள் நிறைந்த சோற்றுச்சட்டியாக குமிழிடுகிறது. இருளடர்ந்த மலைச்சுரங்கத்தின் இறுதியில் தெரியும் வட்டவெளிச்சம் போலத்தான் அவருடைய கவிதையுலகும் நம்மை ஒளிநோக்கி வழிப்படுத்துகிறது. ஆகவே, 2023ம் ஆண்டுக்கான தன்னறம் இலக்கிய விருது கவிஞர் பாலைநிலவனுக்குச் சென்றடைவதில் மிகுந்த அகநிறைவு அடைகிறோம். விருதளிப்பு விழா குறித்த தகவல்களை விரைவில் பகிர்கிறோம்.

~
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி

குக்கூ குழந்தைகள் வெளி

முந்தைய கட்டுரைநமது தெய்வங்கள்
அடுத்த கட்டுரைவேதசகாயகுமார் நினைவுப்பேருரை