இலக்கிய ஆணைகள் – கடிதம்

அன்புள்ள ஜெ

அண்மையில் தமிழ்ப் பிரபா அஜிதனின் மருபூமி வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரையை கேட்டேன். அந்த உரையில் அவர் உங்களுடைய பேசாதவர்கள் என்ற கதையை பற்றிச் சொல்கிறார். அந்த கதை நீலம் இதழில் வெளியானமை பற்றி உருவான கண்டனங்களைப் பற்றி சொல்கிறார். கதையை வாசிக்காமலேயே கடுமையான வசைகள் வந்தன என்று சொல்கிறார் ( அந்தக் கதையை நான் வாசித்ததில்லை) இந்த வகையான வசைகள் உங்கள்மேல் வருவதற்கான காரணங்களை யோசித்துப்பார்க்கிறேன்.

பிரபுராம் குமார்

அன்புள்ள பிரபு,

இவர்கள் என்னை ஒருவகையாக வரையறை செய்க்கிறார்கள். அந்த வரையறைக்கு இவர்களின் எளிமையான அரசியல்தான் அடிப்படையே ஒழிய எவரும் என் படைப்புகளை படிப்பவர்களோ, படித்தாலும் புரிந்துகொள்ளக்கூடியவர்களோ அல்ல. அந்த வரையறையை பிறரும் ஏற்கவேண்டும் என நினைக்கிறார்கள். ஏற்காவிட்டால் வசைபாடுகிறார்கள்.

அந்த வசை எல்லார்மேலும் வராது. தலித் அரசியலியக்கங்கள், தலித் ஆளுமைகளைப் பொறுத்தவரை நம்மூரிலுள்ள ‘முற்போக்குப் பாவனையாளர்களின்’ மனநிலை ஒன்று உண்டு. அதாவது அவர்களுக்குச் சுயபுத்தி இல்லை. அவர்களை பிறர் எளிதில் ‘ஹைஜாக்’ செய்துவிடுவார்கள். அவர்கள் சில்லறை லாபங்களுக்காக ஏமாந்துவிடுவார்கள். ஆகவே நாம்தான் அவர்களை பாதுகாவலனாகவும் வழிகாட்டியாகவும் இருந்து காப்பாற்றவேண்டும் என்னும் மனநிலை. இந்த மனநிலைக்குப் பின்னாலுள்ளது வெறும் சாதியமேட்டிமைத்தனம்.

இங்கே ஒரு தலித் சிந்தனையாளர் காலச்சுவடு பதிப்பகத்தில் புத்தகம் போட்டால், விஷ்ணுபுரம் விருதைப் பெற்றுக்கொண்டால் வரும் வசைகளிலுள்ள அந்த ஆதிக்கக் குரலைக் கவனியுங்கள். அதுதான் உண்மையான ஒடுக்குமுறையின் குரல்

பேசாதவர்கள் என்னும் கதை ஐந்து நெருப்பு என்னும் தொகுதியில் உள்ளது

ஜெ

அஜிதன் ஏற்புரை- பின் நவீனத்துவம் பின்னகர்ந்த பின்னர்…

https://youtu.be/BPyXA8KDU3M

ஐந்து நெருப்பு வாங்க

புனைவுக்களியாட்டு நூல்கள் வாங்க

முந்தைய கட்டுரைஒரு கலைஞனின் தசாவதாரம்
அடுத்த கட்டுரைஏ.கே.செட்டியார்