எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்

அன்புள்ள ஜெ ,,

எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் உள்ள உறவைப்பற்றி நான் எப்போதுமே சிந்திப்பதுண்டு. நெருங்கிப்பார்த்தால் எழுத்தாளர்களின் எழுத்துக்கும் அவர்களின் பர்சனாலிட்டிக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. எழுத்தாளர்கள் ஏன் எழுத்தாளர்களைப்போல இல்லை என்று கேட்கிறேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.. அதாவது எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் இடையே ஒரு சீரான உறவு உண்டா என்ன?

அதாவது ஒரு நாவலை வாசித்து ‘இந்த எழுத்தாளன் இப்படிச் சொல்கிறான்’ என்று நம்மால் நினைத்துக்கொள்ள முடியுமா?  நான் சரியாகக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். நான் கேட்பது இதுதான். நாம் ஏன் ஒரு எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துப்பேசவேண்டும்? நீங்கள் உங்கள் விமர்சனங்களில் ஓரளவுக்குத் தனிப்பட்ட விஷயங்களை தொட்டுக்கொள்கிறீர்கள். அதைப்பற்றித்தான் கேட்கிறேன்.எழுத்தாளனை நாம் எப்படி எதிர்கொள்ளவேண்டும்? அதனால்தான் இந்தக்கேள்வி. இன்னும் நான் சரியாகக் கேட்கவில்லை.

தமிழ்

 

அன்புள்ள தமிழ்

.

 

நீங்கள் கேட்கும் கேள்வி இதுதான். சமூகப் பொதுமனதில் இருந்து எழுத்தாளன் என்ற  ஒரு பொதுப்பிம்பம் உருவாக்கப்பட்டு உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதை எல்லா எழுத்தாளர்களுக்கும் போட்டுப் பார்க்கிறீர்கள். அந்தக் கற்பனைச்சித்திரத்தின் குரலாக எழுத்துக்களை வாசிக்கிறீர்கள். ஆனால் நேரில் சந்தித்தால் எழுத்தாளர்கள் அப்படி இருப்பதில்லை.

இது ஏன்? எழுத்தாளர்களின் பொதுபிம்பம் என எதையும் வகுத்துவிடமுடியாது என்பதே என் பதில். நான் இங்கே பேசுவதெல்லாம் உண்மையான எழுத்தாளர்களைப்பற்றி. ஒரு நல்ல ஆக்கத்தையாவது உருவாக்கிய கலைஞர்களைப்பற்றி. பிற எதிலும்போலவே எழுத்தாளர்களிலும் போலிகளே அதிகம். பலசமயம் அதிக புகழுடன் இருப்பவர்களும் அவர்களே. காரணம் வாசகர்களிலும் பெரும்பாலானவர்கள் போலிகள். உண்மையான வாசகனுக்கு நீடித்தகவனமும் சுயமான கற்பனையும் தேவை. போலிகளுக்கு அவை எதுவும் தேவையில்லை.

எழுத்தாளர்களின் மனம் என்பது அந்தச் சமூகத்தின் மனத்தின் உச்சமாக வெளிப்படுவது. அதற்காகவே தீவிரப்படுத்தப்பட்ட சமூகமனத்தின் ஒரு சிறு பகுதி  அது என்று சொல்லலாம். ஒரு சமூகத்தின் கூட்டுஆழ்மனத்தின் லாவா  வெளிப்படும் சில புள்ளிகள் என்று எழுத்தாளர்களை வகுத்துக்கொள்ளலாம்.  ஆகவே அச்சமூகத்தின் உன்னதங்களும் கீழ்மைகளும் எல்லாம் அங்கே பீறிட்டு வெளிக்கிளம்புகின்றன. எழுதும் கணத்தில் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு நாவாக அவன் மாறுகிறான். தனிப்பட்ட முறையில் எழுத்தாளனின் பணி என்பது தன்னைத் துல்லியமான ஓர் ஊடகமாக ஆக்கிக்கொள்வது மட்டுமே.  எழுத்தில் எழுத்தாளனுக்குத் தேவையாக உள்ள பயிற்சி என்பது அதுவே

ஆழ்மனம் என்பது படிமங்களின் கொந்தளிப்பு. ஆழ்படிமங்களின் முடிவில்லாத மறுபிறப்புவெளி.  ஆகவே எந்தக் கலைஞனும் படிமங்களையே தன் மொழியாகக் கொண்டிருக்கிறான்.  அறியும் மொழியாகவும் வெளிப்படுத்தும் மொழியாகவும். ஆகத் துல்லியமான படிம மொழியை அடைவதே அவன் சவால். மொழியில் ஒலியில் வடிவங்களில் வெளியில் இருந்து அவனுக்குக் கிடைக்கும் கடந்தகாலப் படிமங்களை விலக்குவது, அன்றாடம் புழங்கும் எளிய கருத்துக்களைப் படிமங்களாக ஆக்குவதைத் தவிர்ப்பது ஆகியவற்றை அவன் செய்யவேண்டும்.

விளைவாகத் தனக்குரிய படிமமொழியை அடைந்து அதைத் தன் ஆழ்மனத்துடன் கச்சிதமாக ஒரே அலைவரிசையில் இணைக்க அவனால் முடியுமென்றால் அவன் கலையை உருவாக்க ஆரம்பிக்கிறான். கலையில் உள்ள தொழில்நுட்ப அம்சம் என்பது இதுதான். அவ்வாறு இணைகையில் சமூகமனதின் குரலாக அவன் ஆகிறான். ஆனால் இது படைப்பூக்க நிலையில் மட்டும்தான். அப்போது மட்டுமே அவன் எழுத்தாளன். மிச்சநேரத்தில் அவன் வெறும் மனிதனே.

இன்னும் சொல்லப்போனால் சராசரி மனிதர்களை விட உள்வாங்கியவனாகவும் சஞ்சலங்கள் கொண்டவனாகவும் உணர்ச்சிகரமானவனாகவும் அவன் இருக்கக்கூடும். ஆனால் வாசகர்களுக்கு எப்போதும் எழுத்தாளன் பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. அந்தபிம்பம் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டு அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒன்று. அதிகம் வாசிக்காதவர்களுக்குக்கூட அந்தச் சித்திரம் மனதுக்குள் உள்ளது. நம் வணிகக்கதைகள் திரைப்படங்கள் எல்லாமே அந்த எளிமையான சித்திரத்தை அளிப்பவை. அந்தச் சித்திரத்துடன் எழுத்தாளனைச் சந்திக்கும் வாசகனுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. பலசமயம் நடை உடைபாவனைகளேகூட ஏமாற்றத்தை அளிக்கின்றன.

நான் எப்போதுமே எழுத்தாளன் என்று சமூகம் கட்டமைத்துள்ள அந்த பிம்பத்தைச் சுமக்கக்கூடாதென நினைத்துக்கொண்டிருப்பவன். லௌகீகவாழ்க்கையில் நான் எதுவோ அதையே புறத்தோற்றமாகக் கொண்டவன். சமூக மரியாதைகளைப் பேணக்கூடியவன். ஆகவே என்னைச் சந்திக்கும் பலர் ‘நீங்க எழுத்தாளர் மாதிரியே இல்லை’ என்று சொல்வதுண்டு. மேலும் ஓர் அளவுக்குமேல் நெருக்கமாக ஆகிவிட்டவர்களிடமே நான் விரிவாகவும் தீவிரமாகவும் பேசுகிறேன். ஆகவே சிலருக்கேனும் என் பிம்பம் நேரில் சிதையக்கூடும்.

ஆனால் என்பிம்பம்  கணிசமான வாசகர்களிடம் மெல்ல மெல்ல வேறுவகையில் வலுவாக உருவாவதையே காண்கிறேன். அதுவே எனக்கிருக்கும் மிக விரிவான தனிப்பட்ட நண்பர்-வாசகர் வட்டத்துக்கான காரணம். இருபதுமுப்பது வருடங்களில் என்னை விட்டு விலகிச்சென்ற நண்பர்கள், வாசகர்கள் ஓரிருவர்கூட கிடையாது. இருப்பவர்கள் அனைவருமே வழக்கமான எழுத்தாள சித்திரம் ஒன்றை உடைத்துவிட்டு என்னைப்பற்றிய வேறு ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொண்டவர்கள். அப்பிம்பம் உடைவதில்லை.

[காஃப்கா]

 

கலைஞர்களைப்பற்றிய இந்த சமூகச்சித்திரம் எப்படி உருவானது? ஒரு தொடக்கப்புள்ளியாக ஜான் ரஸ்கின் எழுதிய ‘நவீன ஓவியர்கள்’ என்ற பெரும் நூலைச் சொல்லலாம். அது ஓவியத்தை விட அதிகமாக நவீன இலக்கிய விமர்சனத்தில் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்தியதாகும். எழுத்தாளனின் மனதை அடிப்படையாகக் கொண்டு எழுத்தை ஆராய்வதற்கான சிறந்த தொடக்கமாக அமைந்தது அந்த நூல்.

அதன் பின்னர் இன்றைய விமரிசனம் வரை தொடர்ச்சியாக எழுத்தாளனின் மனதுக்கும் எழுத்துக்கலைக்குமான உறவைப்பற்றி ஏராளமான கோட்பாடுகள் பேசப்பட்டிருக்கின்றன. கலை என்பது கலைஞனின் ஆளுமையின் ஓர் உச்ச வெளிப்பாடு என்ற கருத்தை மேலைச்சிந்தனையில் ஆழமாகப் பதிவுசெய்தது ரஸ்கினின் நூல்தான். இன்றுவரை அந்த அடிப்படை நம்பிக்கையில் இருந்து மேலைச்சிந்தனை வெளிவந்து விட்டது என்று சொல்ல முடியாது.

இன்றைய இலக்கிய விமர்சன மரபு என்பது கிட்டத்தட்ட ரஸ்கினின் சமகாலகட்டத்தில் தத்துவ விவாதம், அறிவியல் விளக்க கட்டுரைகள், மதவிளக்கக் கட்டுரைகள் ஆகியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஆகவே ஆரம்பகால இலக்கியவிமர்சனம் எழுத்தாளனின் ஆளுமைக்கும் இலக்கியத்துக்கும் இடையே ஒரு நேர்கோட்டைப் போட முயல்கிறது.

சாமுவேல் ஜான்சன், கூல்ரிட்ஜ் போன்றவர்களின் இலக்கிய விமரிசனத்தின் செயல்பாட்டை எளிமையாக இவ்வாறு சொல்லலாம். இலக்கியப் படைப்புகள் காட்டும்  உணர்ச்சிகள் மற்றும் கருத்துக்கள் வழியாகவும் வாழ்க்கை வரலாற்றுத்தகவல்கள் வழியாகவும் அந்த படைப்பாளியின் ஆளுமையை உருவகித்துக்கொள்கிறது அது. அதன்பின் அந்த ஆளுமையின் வெளிப்பாடாக அந்த இலக்கியப்படைப்புகளை வாசிக்கிறது. படைப்பு – > படைப்பாளி -> மீண்டும்படைப்பு என்ற இந்தச் சுழற்சியை நாம் மரபான விமர்சனங்கள் அனைத்திலும் காணலாம்.

இது இயல்பானதும் பயனுள்ளதுமாகும் என்றே நானும் நினைக்கிறேன்.  இதன் போதாமைகளை நிரப்பி நாம் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது.

ஆனால் படைப்பைப் படைப்பாளியின் ஆளுமையாகக் காண ஆரம்பித்ததுமே படைப்பாளியின் ஆளுமைச்சித்திரம் பிரம்மாண்டமானதாக ஆகியது. எழுத்தாளன் அவன் வாழும் காலகட்டத்தின் மாதிரிச்சான்று என்ற எண்ணம் எழுந்தது. ஆகவே அவனை ஆராய்வது அச்சமூகத்தையே ஆராய்வதாகும் என நம்பினர். கலைஞனைக் கதாநாயகனாக ஆக்குவதென்பது ரஸ்கினின் காலம் முதலே இலக்கியத்தில் பெருமரபாக ஆகிவிட்டிருந்தது. கலைஞன் மிகமிகச் சிக்கலான ஆளுமை என்றும் அவனுடைய அகம் நுட்பங்களால் ஆனது என்றும் உருவகிக்கப்பட்டது. கலைஞனின் அகத்தைச் சித்தரிப்பதென்பது எழுத்தாளர்களுக்கு எளியது, அவர்களால் அதைத் தன்னுடன் சேர்த்து அடையாளம் காணமுடியும் என்பதும் காரணம்.

ஆனால் இவ்வாறு பத்தொன்பதாம்நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கதாநாயகக் கலைஞர்கள் எப்படிப்பட்டவர்கள் என மேலை இலக்கியத்தில் விரிவாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. ரோமெய்ன் ரோலந்தின் ழீன் கிரிஸ்தோஃப் என்ற புகழ்பெற்ற பேரிலக்கிய நாவலை முன்வைத்து விரிவான சர்ச்சைகள் நிகழ்ந்துள்ளன. அந்த உருவகங்கள் பெரிதும் விருப்பக் கற்பனைகளே என்று கூறப்பட்டது. கலைஞனைத் தன்னைப்போன்றவன் என நினைக்கும் எழுத்தாளன் கலைஞனின் சித்திரத்தை மிகையாகப் புனைய ஆரம்பிக்கிறான். தன் இலட்சிய பிம்பமாக அவனைப் புனைந்து வைக்கிறான்.

ஐரோப்பாவின் சமகாலப் பண்பாட்டு வரலாற்றில் ஷீன் கிறிஸ்தோஃப் முதலிய பேரிலக்கியங்கள் ஆற்றிய பங்களிப்பு மிக நுட்பமானது. முந்தைய நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் கலைஞர்கள் ஒருவகை அன்னியர்களாகவே கருதப்பட்டார்கள். அவர்கள் கட்டற்றவர்களாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் எண்ணப்பட்டார்கள். வீரர்களுக்கும் பிரபுக்களுக்கும் அளிக்கப்பட்ட மரியாதையில் சிறுபகுதிகூட கலைஞர்களுக்கு அளிக்கப்படவில்லை.

ஆனால் ஜனநாயக யுகம் ஆரம்பித்தபோது குலப்பெருமை வழிபாடு பின்னகர்ந்தது. வீரவழிபாடு வேறு வடிவங்களுக்கு உருமாற்றம் கொண்டது. மக்களை கவரக்கூடியவர்களான கலைஞர்கள் பெரும் வழிபாட்டு பிம்பங்களாக எழுந்து வந்தார்கள். அப்போது கலைஞர்களின் பொதுப்பிம்பங்களைக் கட்டி எழுப்பவேண்டிய தேவை உருவானது. அதற்கான முன்னுதாரணங்களைப் புனைவில் உருவாக்கி அளித்தன ஷீன் கிறிஸ்தோஃப் போன்ற நாவல்கள்.

ஐரோப்பிய வரலாற்றை எடுத்தால் பல கலைஞர்களின் ஆளுமைகள் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுப் பெருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். முக்கியமான உதாரணம் மொசார்த் தான். நவீன ஐரோப்பிய பண்பாட்டின் தொடக்கப்புள்ளி என்றுகூட அவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். [ அவரது ஆளுமையின் சாயலில் உருவாக்கப்பட்டவர் ழீன் கிறிஸ்தோஃப்.அங்கே ஆரம்பித்த இந்தக் கலைஞனைச் சித்தரிக்கும் போக்குத்தான் இன்று எழுத்தாளர்களின் வரலாற்றை எழுதுவதில் வந்து நிற்கிறது.  

1

நமக்கு நவீன இலக்கியம் ஐரோப்பிய கற்பனாவாத இலக்கியங்கள் மூலம் அறிமுகமாகியது. அதனுடன் சேர்த்தே கலைஞன் என்ற நவீன உருவகமும் இங்கே வந்திருக்கவேண்டும். அந்த உருவகம் இங்கிருந்த எழுத்தாளர்களை எப்படிக் கிளர்ச்சி கொள்ளவைத்திருக்குமென ஊகிக்க முடிகிறது. ஆரம்பகால வங்க எழுத்துக்களிலெல்லாம் கலைஞனான  இலட்சியக் கதாநாயகனை நாம் காண்கிறோம்.

இந்த இலட்சியவாத நோக்கு பின்னர் கலைஞர்களை அந்த வெளிச்சத்தில் சித்தரித்துக்கொள்ள நமக்குத் தூண்டுதலாகியது. கலைஞர்களை நாம் இலட்சியவாதிகளாகச் சித்தரித்துக்கொண்டதை சமூகமே சேர்ந்து நிகழ்த்திக்கொண்ட புனைவு என்று சொல்லலாம்.

உதாரணமாக நாம் பாரதியை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்று பாருங்கள். பாரதியின் பாடல்களின் உணர்ச்சிநிலைகள் வழியாக நாம் அவரை உணர்ச்சிகரமானவராக, கற்பனாவாதப்பண்பு கொண்டவராக, கொந்தளிப்பானவராக உருவகித்துக்கொள்கிறோம். அவரது கருத்துக்கள் வழியாக அவர் ஒரு தேசியவாதி, தமிழ்ப்பற்றுக் கொண்டவர், சக்தி வழிபாட்டாளர்,பின்னர் அத்வைதி என்று புரிந்துகொள்கிறோம். அதன் பின் பாரதியின் வாழ்க்கைவரலாற்றை இந்தக் கோணத்தின் வழியாகத் தேடிக் கிடைக்கும்  பலவகையான தகவல்கள் வழியாகப் புனைந்து உருவாக்கிக் கொள்கிறோம்.

அதாவது இலக்கியம் அளிக்கும் சித்திரத்தை வைத்தே வாழ்க்கை வரலாற்றுச் சித்திரத்தைத் தொகுத்துக்கொள்கிறோம். பலசமயம் இலக்கியம் அளிக்கும் சித்திரத்தைக் கொண்டு வாழ்க்கைவரலாற்றின் இடைவெளிகளைக் கற்பனை மூலம் நிரப்பிக்கொள்கிறோம். நிறைய சந்தர்ப்பங்களில் இலக்கியம் அளிக்கும் சித்திரத்துடன் பொருந்தும்படியாகப் பாரதியின் வாழ்க்கையைக் கற்பனைமூலம் மிகைப்படுத்தவும் செய்கிறோம்.

பாரதி காந்தியைச் சந்தித்தது போன்ற பல நிகழ்ச்சிகள் பின்னர் இவ்வாறு உருவாக்கப்பட்டவை. பாரதியின் வாழ்க்கையைச் சித்தரித்து அவரது ஆளுமைச்சித்திரத்தை உருவாக்க  அப்படி எத்தனை நூல்கள் தொடர்ச்சியாக ஐம்பதாண்டுக்கால இடைவெளியில் எழுதப்பட்டுள்ளன என்று பார்த்தால் ஆச்சரியம் ஏற்படும்.

கற்பனை அம்சம் குறைவான நூல்கள் என்று யதுகிரி அம்மாளின் ‘நான் கண்ட பாரதி’ ,கனகலிங்கத்தின் ‘எனது குருநாதர்’ போன்ற நூல்களைச் சொல்லலாம். கற்பனை அம்சம் கூடிய சித்தரிப்புகள் என வராவின் ‘மகாகவி பாரதி’ என்ற வரலாற்றையும் பரலி சு நெல்லையப்பரின் ‘மகாகவி பாரதி வரலா’ற்றையும் சொல்லலாம். இந்தப்போக்கு கடைசியில் படைப்புக்களில் இருந்து உருவாக்கப்பட்ட பாரதியே பாரதியின் ஆளுமை என்ற  இறுதிநிலையை அடைவதை ராஜம் கிருஷ்ணனின் ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற நூலில் காணலாம்.
1
இவ்வாறுதான் சென்றகாலத்தைய இலக்கிய ஆளுமைகளின் சித்திரங்கள் முழுக்க நமக்கு உருவாக்கியளிக்கப்பட்டிருக்கின்றன. மேலைநாட்டில் இலக்கிய ஆளுமைகளின் குணச்சித்திரத்தை படிப்படியாக பல்வேறு நூல்கள் மூலம் உருவாக்கிக் கொள்வதென்பது முக்கியமான இலக்கியச் செயல்பாடாகவே உள்ளது. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, பால்ஸாக்,மாப்பசான், மார்சல் புரூஸ்ட் போன்ற எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சித்தரிப்புகள் பல தலைமுறை எழுத்தாளர்களால் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டவை.

 

அதன்பின் வந்த நவீனத்துவ இலக்கிய காலகட்டம் எழுத்து என்பதை எழுத்தாளனின் ஆளுமையின் ஒரு முகம் மட்டுமே என்று எண்ணியது. ஆகவே இக்காலகட்டத்தில் கலைஞனின் தனிவாழ்க்கை என்பது மிக அதிகமாக பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. உதாரணமாக எந்த கா·ப்கா கதையும் கா·ப்காவின் தனிவாழ்க்கை அளவுக்குப் பேசப்பட்டதில்லை. அவரது தனிவாழ்க்கையை மனதில் கொள்ளாமல் அவரது எந்தக் கதையும் வாசிக்கப்பட்டதில்லை

 

இக்கணம் வரை இவ்வாறு கலைஞனின் ஆளுமையை புனைவதும் மறுபுனைவுசெய்வதும் ஆராய்வதும் மேலைநாட்டு இலக்கியத்தில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. வின்செண்ட் வான்கா, போன்ற ஓவியர்கள்,  விட்ஜென்ஸ்டைன் போன்ற தத்துவ அறிஞர்கள் எக்காலமும் வாழ்க்கைவரலாற்று ஆய்வாளர் கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். திரைப்படத்தில்கூட இன்றும் அப்போக்கு தொடர்கிறது.

 

தமிழிலக்கியத்தில் கற்பனாவாதச் சாயலுடன் கலைஞனை கதாநாயகனாக ஆக்கிய படைப்புகளுக்கு மூன்று சிறந்த முன்னுதாரணங்களைச் சொல்லலாம். ஒன்று, ’மோகமுள்’. பாபுவை இசைக்கலைஞனாக சித்தரிப்பதனூடாக அவனை மிகமிக நுட்பமானவனாக உணர்ச்சிகரமானவனாக காட்டுகிறார் தி.ஜானகிராமன். பாபுவின் நெகிழ்ச்சிகள் எல்லாமே இசைமூலமே சொல்லப்படுகின்றன என்பது அந்நாவலை மிக விரும்பத்தக்கதாக ஆக்கியது.

 

இன்னொரு உதாரணம் கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்’ சிக்கல் ஷண்முகசுந்தரம் என்ற இசைக்கலைஞனின் வாழ்க்கைச்சித்திரத்தை அளிக்கிறது இந்நாவல். அன்றைய இசைமேதையான ராஜரத்தினம்பிள்ளையின் சாயலில் உருவாக்கப்பட்டது இக்கதாபாத்திரம். ராஜரத்தினம்பிள்ளை அவரது கலைச்செருக்கு சுதந்திர மனப்பான்மை கட்டற்ற உணர்ச்சிநிலைகள் ஆகியவற்றுக்காக பெரும்புகழ்பெற்றவர். அந்த ஆளுமைக்கூறுகளை இந்நாவல் வெற்றிகரமாக அதன் நாயகனுக்கும் அளிக்கிறது.

 

இவ்விரு நாவல்களும் கிட்டத்தட்ட ஷீன் கிறிஸ்தோஃப் ஆற்றியபணியையே இங்கே செய்தன என்பதை காணலாம். அவை நவீன ஜனநாயக சூழலுக்காக கலைஞன் என்ற முன்னுதாரணச் சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகின்றன.பழைய நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பிரபுக்களின் சேவகர்களாக இருந்த கலைஞர்கள் அக்காலகட்டத்தில் மக்கள்நாயகர்களாக மாற ஆரம்பிக்கிறார்கள். அதற்கு இந்த சித்தரிப்புகள் பேருதவி செய்கின்றன. அதற்கு அன்று பேருருவம் கொண்ட அச்சு, காட்சி ஊடகங்களும் உதவின

 

இக்காலகட்டத்தில் எஸ்.ஜி.கிட்டப்பா, ராஜரத்தினம் பிள்ளை போன்ற வசீகரமான கலைஞர்களின் ஆளுமைகள் வாய்மொழிப்பேச்சுகளில் பரவிய துணுக்குச்செய்திகள் மூலம் சமூகமனத்தில் கட்டி எழுப்பப்பட்டன. இக்கலைஞர்களின் ஆளுமையில் மிக வசீகரமாக இருந்தது இவர்களின் மீறல்தான். மரபை இவர்கள் மீறிய விதம். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தை உதறி முன்னால்சென்ற விதம். ஏன் ஒழுக்கத்தை மீறி எழுந்த விதமும்தான். மக்கள் அவர்கள் விழைந்த மீறல்களைச் செய்பவர்களாக இவர்களைப்புனைந்தார்கள்.

 

[ராஜரத்தினம் பிள்ளை ]

உண்மையில் தில்லானா மோகனாம்பாளுக்கு பின்னரே ராஜரத்தினம்பிள்ளை பெரும் ஆளுமையாக சமூக மனதில் வளர்ந்தெழுந்தார் என்கிறார்கள். இருக்கலாம். அது ஒரு கொண்டு-பெற்று வளரும் உறவு. வாய்மொழிக்கதைகள் இலக்கியமாகின்றன. இலக்கியம் வாய்மொழிக்கதைகளை வளர்க்கிறது

 

இவ்விரு நாவல்களையும் இன்று வாசித்தால் இருமைகள் கட்டமைக்கப்பட்டு அந்த வேற்றுமைகள் மூலம் இலட்சியக்கலை, இலட்சியக்கலைஞன் என்ற படிமம் செதுக்கி உருவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தியாகையரின் சாயலில் உருவாக்கப்பட்ட ரங்கண்ணா என்ற இசையாசிரியனின் நேரடி வாரிசாக பாபு உருவாக்கப்படுகிறான். இசையை வணிகக்கலையாக ஆக்கும் ராமு பாபுவுக்கு நேர் எதிரான ஆளுமையாக கட்டமைக்கப்படுகிறான்.

 

அதேபோல பல இருமைகளை தில்லானா மோகனாம்பாள் உருவாக்குகிறது. பழமையில் தேங்கிப்போய் ஒரேமாதிரியாக வாசிக்கும் மரபுக்கு நேர் எதிராக திருவாரூர் பாரிநாயனத்தை எடுத்து வாசிக்கும் சண்முகசுந்தரம் உருவாக்கப்படுகிறான். இன்னொருபக்கம் அன்று வந்துகொண்டிருந்த ஆங்கில இசைக்கு எதிரான தேசிய இசையின் கலைஞனாக காட்டப்படுகிறான். இன்னொரு பக்கம் ‘டப்பாங்குத்து’ இசையான ஜில்ஜில் ரமாமணியின் இசைக்கு எதிரானவனாக அவன் நிறுத்தப்படுகிறான்.

 

அக்காலகட்டத்து வெற்றிகரமான வணிகநாவலாக இருந்த, ஞானபீடப்பரிசு பெற்ற அகிலனின் ’சித்திரப்பாவை’ கலைஞனை ஒட்டுமொத்த சமூகத்தையே வழிநடத்தும் இலட்சியவாதியாக மேலும் முன்ன்னெடுத்துசெலவதை காணலாம். அதன் கதாநாயகன் அண்ணாமலை ஒர் ஓவியன். அன்றைய வெகுஜன வாசகர்களுக்கு புரியும்படியாக ஒரு எளிமையான உருவப்படம் தீட்டும் ஓவியனாகவே அகிலன் அவனை காட்டியிருக்கிறார்.

’இன்றைய வாழ்க்கையின் அகப்புற நிலைகளை ஆராய்ந்து, எதிர்காலத்துக்கான மனப்போக்கை உருவாக்கும் கடமை எனக்கிருப்பதாக நான் நம்புகிறவன்’ என சித்திரப்பாவையின் முன்னுரையில் அந்நாவலின் நோக்கத்தை சொல்லும் அகிலன் அந்த உயர் இலட்சியவாதத்தின் மனிதவடிவமாகவே அண்ணாமலை என்ற கலைஞனை படைத்திருக்கிறார். சமுதாயவீதியில் நா.பார்த்தராசதி முத்துக்குமரன் என்னும் இலட்சியக்கலைஞனைப் படைக்கிறார்.

 

தமிழில் நவீனத்துவ எழுத்து அதன் தொடக்கத்தை நிகழ்த்தியபோதே அறிவுஜீவியும் கலைஞர்களுமான கதாநாயகர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். இதற்கும்  இரு முக்கியமான உதாரணங்கள். ஒன்று, ஜெயகாந்தனின் பாரீஸுக்கு போ’ அதில் இசைக்கலைஞன் இசைக்கலைஞனாக அல்ல, நவீனத்துவத்துக்கே பிரதிநிதியாக வெளிப்படுகிறான். பழமையுடன் போரிடுபவனாக, புதிய உலகின் விழுமியங்களை உள்வாங்கி தெளிவாக முன்வைப்பவனாக அவன் காட்டப்படுகிறான்.

 

சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சிலகுறிப்புகள்’ இன்னொரு உதாரணம். சுந்தர ராமசாமி கலைஞனை ஒரு இலட்சியவாதியாகக் காட்டவில்லை. அவனுடைய சஞ்சலங்களையும் தத்தளிப்புகளையும் தேடலையும் முதன்மைப்படுத்துகிறார். நவீனத்துவத்துக்கு இரு முகங்கள். ஒன்று, பழைய மதிப்பீடுகளை மறுத்து வாதாடும் சீர்திருத்த வேகம். அதற்கு ஜெயகாந்தனின் நாவல் உதாரணம். இன்னொன்று, நவீன யுகத்தில் தன் இருப்புக்காக தேடி விழுமியங்களுக்காக அலைமோதும் இருத்தலியல். அதற்கு ஜேஜே சிலகுறிப்புகள் உதாரணம்

 

இவ்வாறு கிட்டத்த இரு நூற்றாண்டுகளாக பண்பாட்டுவெளியில் எழுத்தாளன் என்ற படிமம் தொடர்ந்து செதுக்கப்பட்டுவருகிறது. அது ஒரு நவீனத்தொன்மம் என்று கொள்வதே சிறந்தது. அதற்கு பலவகையான சமூகப்பயன்பாடுகள் இருந்தன. ஆகவேதான் அது தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட்டது. இன்றும் நீடிக்கிறது.

 

முதலில் அது கருத்தியல்செயல்பாடு, கலைகள், இலக்கியம் ஆகியவற்றுக்கு சமூக அறத்தை உருவாக்கி நிலைநாட்டுவதில் உள்ள பங்கை சமூக மனதில் நிலைநாட்டுகிறது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் கலைஞனுக்கு இந்த இடம் இல்லை என்பதை நினைவுகூரவேண்டும். அவன் அரசசபைகளிலோ அல்லது தேர்ந்த சில ரசிகர்களிடமோ மட்டுமே தொடர்புகொண்டுவந்தான். அவன் ஜனநாயக யுகத்தில் இவ்வாறு  பொதுக்கருத்தை உருவாக்கும் ஆளுமையாக கட்டமைக்கப்படுகிறான். பாரதி,கல்கி, ஜெயகாந்தன் போன்றவர்களுக்கு தமிழ்ச்சமூகத்தில் இருந்த செல்வாக்கு இவ்வாறு உருவானதே.

 

ஒருபடைப்பை வாசிப்பதற்கு எப்படியோ அந்த படைப்பாளியின் ஆளுமை என்ற ஒரு மானசீகச் சித்திரம் தெவையாகிறது. வாசகன் அந்த ஆளுமையுடன் கொள்ளும் அந்தரங்கமான உரையாடலே வாசிப்பை ஆழம் மிக்கதாக ஆக்குகிறது. அந்த எழுத்துக்களின் உச்சநிலைகளை மட்டுமே தொடுத்து உருவாக்கப்பட்ட ஆளுமையாகவே அந்த சித்திரம் இருக்க முடியும்.

அது ஓர் இலட்சிய பிம்பமே. எழுத்தாளனின் உண்மையான அன்றாட ஆளுமை அந்த பணியை ஆற்றமுடியாது. அந்த வாசகன் எழுத்தாளனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு அன்றாடவாழ்க்கையிலும் அவ்வெழுத்தாளன் அல்லது கலைஞன் கொள்ளும் உச்சகட்ட வெளிப்பாட்டு நிலைகளையும் மனநிலைகளையும் நேரில் கண்டாலொழிய. அது அனைவருக்கும் சாத்தியமல்ல.

 

ஆகவே பொதுவெளியில் எழுத்தாளன் கலைஞன் என்ற ஒரு நவீன தொன்மம் எப்போதுமே நீடிக்கும். அதன் ஒளியில் எல்லா எழுத்தாளர்களும் வாசகனால் கட்டமைக்கப்படுவார்கள். அதற்கு ஒரு முக்கியத்துவமும் உண்டு. ஆனால் எழுத்தாளனிடம் அந்த ஆளுமையை அப்படியே எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே அளிக்கும். அப்படி எதிர்பார்க்காமல் இருக்கலாம். அல்லது எழுத்தாளனைச் சந்திக்க்காமல் இருக்கலாம்.

 

இதில் இன்னொன்று உண்டு. போலிஎழுத்தாளர்கள் மிக எளிதாக அந்த பொதுபிம்பத்தை தங்கள் ஆளுமையாக ஆக்கி நடிப்பார்கள். அப்படி எத்தனையோ போலிகளை நாம் மேடைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். ஆகவே இதை ஒரு விதி என்றேகூட சொல்லுவேன். ஓர் எழுத்தாளனை நேரில் சந்திக்கும்போது உங்கள் மனதில் உள்ள சித்திரம் மாறவில்லை என்றால் அவன் எழுத்தாளன் அல்ல, நடிகன்.

 

ஜெ

 

 

 

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Aug 15, 2011

முந்தைய கட்டுரைவிலகிச்செல்பவர்கள்…
அடுத்த கட்டுரைகதைகளைப்பற்றி கேசவமணி