இசை, கவிஞனில்லா கவி

ஒவ்வொரு முறை ஒரு முதன்மையான கவிஞன் மொழியில் எழும்போதும் அவன் எழுதுவது கவிதையா என்னும் கேள்வியையே எதிர்கொள்கிறான். ஏனென்றால் கவிதையின் ரசனைமுறையில் தனக்கென ஒரு வழியை உருவாக்கிக்கொண்டு, தன் இடத்தை தானாகவே செதுக்கிக்கொண்டுதான் ஒரு முதன்மைக் கவிஞன் நிகழமுடியும். அனன்யத என்னும் பண்பு, முன்பில்லாத ஓர் இயல்பு, எந்த நல்ல கவிதைக்கும் இயல்பான ஒன்று. பெருங்கவிஞர்கள் முன்பு நிகழாதவர்கள்.

பாரதி அவ்வண்ணமே புதியதென நிகழ்ந்தான். ‘நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை’ என அவனே அறிவித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அறிஞர்களின் கண்களுக்கு இலக்கணப்பிழை மலிந்த, பேச்சுவழக்கு ஊடுருவிய, வழக்கமான அழகுகள் ஏதுமில்லாத ஒருவகை குறைமுயற்சிகளாகவே பாரதியின் கவிதைகள் தோன்றியிருந்தன.

பல ஆண்டுகளுக்குப்பின் தேவதேவன் தன் தொகுதியுடன் தோன்றியபோது சுந்தர ராமசாமி என்னிடம் சொன்னார். “இதெல்லாம் ரொம்பாண்டிக்கான கற்பனைகள். பாட்டா எழுதி மியூசிக்கோட கேட்டா நல்லா இருக்கலாம். கவிதையா இது தேறலை.” அன்றைய பல வாசகர்கள் ஏறத்தாழ இதே வரிகளைச் சொல்லியிருக்கிறார்கள். தேவதேவனை தொடர்ந்து எழுதி நிலைநாட்டியமை என் விமர்சனப் பங்களிப்புகளில் ஒன்று என்று சொல்வேன்.

எனக்கு அவை நவகவிதையெனத் தோன்றியமைக்குக் காரணம், நான் அப்போதும் மலையாளக் கற்பனாவாதக் கவிதைகளின் செல்வாக்குடன் இருந்தேன் என்பதே. தமிழில் புதுக்கவிதை உருவாக்கி நிலைநாட்டி பிறிதொன்றுக்கே இடமில்லாமல் செய்துவிட்டிருந்த நவீனத்துவம் என்னுள் இல்லை. நான் வேறொரு வகையில் என் அகத்தேடல்கள் வழியாக அதை முழுமையாகவே கடந்துவிட்டிருந்தேன்.

இசை அவ்வண்ணம் தன் தனித்தன்மையால் முரண்பட்டு உருவான முதன்மையான தமிழ்க்கவிஞர். இசையின் கவிதைகளின் அமைப்பு வழக்கமான புதுக்கவிதைக்குரியது. அவருடைய மொழிநடையும் நேரடியானது, எளியது. அவர் அரிய அல்லது புதிய படிம உலகமெதையும் கொண்டுவரவுமில்லை. ’புரிந்துகொள்ள’ மிக எளிய கவிஞர்களில் ஒருவர் இசை.

ஆயினும் இசை மீதான அணுக்கவாசிப்புகள் நிகழ நீண்டகாலம் தேவைப்பட்டது. அவரைப்போலவே கவிதை எழுதிக்கொண்டிருந்த அவர் நண்பர்கள் அவருக்கான தனித்தன்மையை உணரவில்லை. அவர் மீது வாசிப்புகள் குவியத் தொடங்கியபோது அவரை மதிப்பிடுவதில் இடர்கள் உருவாயின. வழக்கமான சொற்றொடர்களைக் கொண்டு அவரை வகுக்கும் முயற்சிகள் நிகழ்ந்தன. விளைவாக அவருடைய கவிதை மேலும் அன்னியப்பட்டது.

இசை விலகி நிற்பது அவருடைய மனநிலையால். கவிதைக்குள் வெளிப்படும் கவிஞனின் தன்னிலை (subjectivity) ஒன்று உண்டு. அதற்கும் அக்கவிஞனுக்கும் நேரடியான உறவு இருந்தாகவேண்டும் என்பதில்லை. என் வழக்கப்படி ஒரு படிமமாகச் சொல்லப்போனால் பென்சில்போல. சீவப்பட்ட கூர்முனையில்தான் உண்மையில் பென்சில் நிகழ்கிறது. அதுதான் எழுதுகிறது. ஆனால் சாதாரணமாக அது தன் உடலுக்குள் ஒளிந்திருக்கிறது. தனித்து அதனால் நிலைகொள்ள முடியாது.

எழுதும் தன்னிலை என கவிஞன் தன்னிலிருந்து தானே செதுக்கி எடுப்பது அவனுடைய கவிதைகள் முழுக்க  ஏதோ ஒருவகையில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். நான் என்னும் தன்னிலை ஒரு சொல்லில்கூட வெளிப்படாத கவிதைகளில்கூட பார்வைக்கோணமாக, சொல்தேர்வாக, கட்டமைப்பாக, உணர்வுநிலையாக அந்த தன்னிலை வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். வாசகன் அந்தத் தன்னிலையுடன்தான் உரையாடிக் கொண்டிருக்கிறான்.

கவிதை, செவ்வியலோ நவீனமோ ஓர் உரையாடலேதான். காவியங்கள் புறவயமான ஓர் நிகருலகை அளிக்கின்றன. காவிய ஆசிரியன் கதைமாந்தரினூடாகப் பேசுகிறான். அப்போதும்கூட வாசகன் கவிஞனுடன் ஓர் அந்தரங்க உரையாடலில் இருக்கிறான். நான் கம்பராமாயணம் வாசிக்கையில் கம்பன் இல்லாத ஒரு கணம்கூட நிகழ்வதில்லை. காளிதாசனின் ஒரு வரியைக்கூட காளிதாசனை தவிர்த்து நான் வாசித்ததில்லை.

கவிஞன் தனக்கென புனைந்து கொள்ளும் அந்தத் தன்னிலை எது என்பது அவனுடைய இடத்தைப் பெரும்பாலும் தீர்மானித்துவிடுகிறது என்று படுகிறது. அந்த தன்னிலை அவனுக்கே உரியதா, மொழியிலிருந்தும் சூழலில் இருந்தும் பெறப்பட்டதா என்ற கேள்வியே கவிஞர்களை வகுத்துக்கொள்ள முதன்மை அளவுகோலாக அமையும்.

கவிதை என்பது ஒரு சூழலில் ஒரே சமயம் ஒரு கூட்டுச்செயல்பாடாகவும் தனிச்செயல்பாடாகவும் நிகழ்கிறது. கவிஞன் தனியானவ, தன் அகத்தனிமையில் இருந்து அவன் கவிதையை உருவாக்குகிறான். ஆகவே கவிதை என்றுமே தனிச்செயல்பாடுதான். கவிதை வாசிப்பும் தனிச்செயல்பாடே. நான் கவிஞனை என் அகத்தனிமையில்தான் சந்திக்கிறேன்.

ஆனால் கவிதை என்பது ஒரு கூட்டுச்செயல்பாடாக மெல்லமெல்ல ஆகிவிடுகிறது. கவிதையை எழுதி வாசிப்பவர்கள் ஒரு சிறுவட்டம். மொழிக்குள் ஒரு மொழி என அவர்கள் கவிதைக்கான மீமொழி ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே சொற்கள் வேறு பொருள் கொள்கின்றன. படிமங்களை உள்வாங்க ஒரு முறைமை உள்ளது. ஒரு பொதுவான வடிவப்புரிதலும் உள்ளது.

அந்த மீமொழியையும் வடிவபோதத்தையும் கற்றுக்கொள்ளுவதே கவிதை வாசிப்புக்குள் நுழைவதற்கான அடிப்படைப் பயிற்சியாகவும் அமைகிறது. அவ்வாறு நோக்கினால் கவிதை என்பது ஒருவகையில் குழூக்குறித் தொகுப்பேயாகும். கவிதை வாசிப்புக்குள் வந்துவிடும் வாசகன் ஓரிரு ஆண்டுகளில் அதைக் கற்றுக்கொள்கிறான். அந்த ‘பேக்கேஜ்’ஜில் கூடவே கவிஞன் என்னும் ஒரு தன்னிலையும் அவனுக்கு கிடைக்கிறது.

இந்த தன்னிலை ஒரு சூழலில் பொதுவாக வரையறை செய்யப்பட்டு அனைவராலும் பொதுவாக ஏற்கப்பட்டு ஒரு ரூபாய்நோட்டு போல புழங்குவதாக இருக்கும். காகிதம்தான், ஆனால் அதில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து உள்ளது. ஆகவே அது பொருட்களை வாங்கும், பலவற்றுக்கு ஈடு நிற்கும்.

அந்த பொதுவான தன்னிலையை இளவயதில் கவிதை எழுதத் தொடங்குபவர்கள் உடனே தங்களுக்குரியதாக எடுத்துச் சூடிக்கொள்கிறார்கள். அதையே தாங்கள் என முன்வைக்கிறார்கள். மெய்யாகவே அப்படி நம்புகிறார்கள். ஒரு காலகட்டத்தில் எழுதப்படும் கவிதைகளில் மிகப்பெரும்பாலானவற்றில் ஒன்றோ இரண்டோ தன்னிலைகளையே நம்மால் காணமுடியும். எல்லா கவிதைகளுமே ஏறத்தாழ ஒரே குரல், ஒரே உணர்வுநிலை கொண்டதாக உணரப்படுவதற்கான காரணம் இதுவே.

எண்ணிப்பாருங்கள், இன்று தமிழில் நவீன கவிதை எழுதுபவர்களிடம் பொதுவாக உள்ள ‘கவித்தன்னிலைகள்’ என்ன. நான் என கவிஞன் சொல்லும்போது அக்கவிதையில் வெளிப்படும் ஆளுமைகள் என்ன? இரண்டு புகழ்பெற்ற ‘டெம்ப்ளேட்டுகள்’ உண்டு இங்கே. ஒன்று, அரசியல் சார்ந்த தன்னிலை.  பொதுவாக இடதுசாரிப்பார்வை கொண்டவன். அநீதிக்கு எதிராக நிலைகொள்ளக்கூடிய, தீதுகண்டு பொங்கி விமர்சிக்கக்கூடிய ஒரு வகை புரட்சியாளன். மக்களை நோக்கி அறைகூவக்கூடியவன். அரசியல் நோக்கங்கள் கொண்டவன்.

இரண்டு, இருத்தலியல் சார்ந்த தன்னிலை. அவநம்பிக்கை கொண்டவன், வாழ்க்கையின் அபத்தங்களையும் இருண்ட பக்கங்களையும் காணும் கண் கொண்டவன், ஆகவே அதை பகடியாகவும் விமர்சனமாகவும் முன்வைப்பவன். கசப்பும் தனிமையும் கொண்டவன். கைவிடப்பட்டவன், நேசிக்கப்படாதவன், துரோகங்களைச் சந்திப்பவன்.

தொடர்ச்சியாக மரபுக்கும் சென்று கவிதைகளை வாசிப்பவர்களுக்குத் தெரியும் சென்ற காலங்களிலும் இப்படி கவிஞன் என்னும் தன்னிலைகள் அந்தந்த காலச்சூழலுக்கு ஏற்ப உருவாகி வந்திருந்தன என்று. சிற்றிலக்கியக் காலகட்டக் கவிஞன் ஒருவகையான மொழிவிளையாட்டு நிபுணன். ஒருவகையான ’மேஜிக்’ நிபுணன் அவன். பாலியலை முதன்மைப் பேசுபொருளாகக் கொண்டவன். பக்திப்பாடல்களிலேயே அவ்வியல்பே வெளிப்படும். அதற்கு முந்தைய காலகட்டத்துக் கவிஞன் தீவிரமான பக்தன். பக்திநெகிழ்வை வெளிப்படுத்தியாக வேண்டியவன்.

(இதில் சுவாரசியமான ஓரு முரணியக்கம் இசையில் உண்டு. சிற்றிலக்கியக் காலகட்ட இசைக்கலைஞர்கள் அன்றிருந்த கவிஞர்களுக்கிருந்த அதே தன்னிலை கொண்டவர்கள். சிற்றின்பம், கேளிக்கை, தன் கலையில் தொழில்நுட்பத்திறன் ஆகியவை அவர்களின் இயல்புகள். அதற்கு அடுத்த காலகட்டத்தில் இசை நவீனச் சூழலுக்குள் நுழைந்தபோது உருவாகி வந்த இசைக்கலைஞர்கள், குறிப்பாக பிராமணர்கள் இந்த தன்னிலையை வெறுத்தனர். ஆகவே அவர்கள் அதற்கு முந்தையகாலக் கவிஞர்களின் ‘கனிந்த பக்திமான்’ என்னும் தன்னிலையை சூடிக்கொண்டனர். அன்று புழக்கத்தில் இருந்த ஏராளமான இசைப்பாடல்கள் பழைய ’சுகவாசி’ என்னும் தன்னிலை வெளிப்படுபவை. அவை காலாவதியாயின. தூய பக்தியை மட்டுமே முன்வைக்கும் இசைப்பாடல்கள் மட்டும் முன்வைக்கப்பட்டன.

பக்திமான் என்னும் தன்னிலையே இசைக்கலைஞர்களிடம் நூறாண்டுக்காலம் புழக்கத்தில் இருந்தது. அந்த பக்திமான் என்னும் தன்னிலையில் இருந்தே மதுரை சோமுவும் மகாராஜபுரம் சந்தானமும் பாடினர். அவர்களின் பாடலை நாம் அவ்வாறே கேட்டோம். நம் காலகட்டத்திலேயே இந்த இரண்டு வகையான தன்னிலைகளுக்கும் நடுவில் இருந்த முரணியக்கத்தையும் கண்டோம்.

அது தங்களுக்கு எப்படி ஒவ்வாமையை அளிக்கிறது என்றும், தங்களுக்கும் பக்திக்கும் எப்படி சம்பந்தமே இல்லை என்றும் டி.எம்.கிருஷ்ணா, சஞ்சய் போன்ற இன்றைய இசைக்கலைஞர்கள் எழுதியுள்ளனர். ஆனால் கர்நாடக இசையில் பக்திமனநிலையே நீடிக்கிறது.)

இந்த பொதுத்தன்னிலையில் இருந்து எழுதப்படும் கவிதைகளை உடனடியாக வாசக உள்ளம் அடையாளம் கண்டுகொள்கிறது – ஏனென்றால் அந்தப் பொதுத்தன்னிலை கவிதைச்சந்தையில் எளிதில் வாங்கக்கிடைப்பது. கவிதைத்தெருவில் சாதாரணமாகச் சந்திக்க அமைவது. ஆனால் ஒரு கவிஞனின் வெற்றி என்பது அந்த பொதுத்தன்னிலையில் இருந்து அவன் எந்த அளவு வேறுபடுகிறான், தனக்கான தன்னிலையை எவ்வண்ணம் உருவாக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை ஒட்டியே அமைகிறது.

முதன்மைக் கவிஞர்கள் அந்த பொது ஆளுமையில் இருந்து முழுமையாகவே விலகிச் செல்கிறார்கள். கவிதையின் அமைப்பு, மொழிநடை, பலசமயம் படிமத்தன்மை ஆகியவற்றில் அவர்களிடம் பெரும்பாலும் மாறுதல்கள் இருப்பதில்லை. கவிஞன் என நாம் கவிதைக்குள் உணரும் அந்த ஆளுமை மட்டும் மாறிவிட்டிருக்கிறது. நாம் வழக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் அதே செல்பேசியில் மறுமுனையில் பேசுபவர் மாறிவிட்டிருக்கிறார். அதுதான் நமக்குக் குழப்பத்தை அளிக்கிறது.

தேவதேவன் தமிழில் எழுதவந்தபோது தமிழ் நவீன கவிதை என்பது இருண்மையின் சித்திரங்களால் ஆனதாக இருந்தது. இருத்தலெனும் துயர். காலமும் வெளியும் சேர்ந்து சமைத்த சிறையில் சிக்கியிருக்கும் கவிஞன். உறவுகளின் குரூரம், சூழ்ந்திருக்கும் சமூகத்தின் தாளமுடியாத இயந்திரத்தனம், இலட்சியங்களும் கனவுகளும் வறண்ட எதிர்காலம், ஒவ்வொன்றும் சென்று முட்டிநிற்கும் பொருளின்மை.

ஆனால் குழந்தைகளுக்குரிய பிரகாசமான ஓர் உலகில் இருந்து தேவதேவன் எழுதினார். நான் பலமுறை எழுதியதுபோல அவருடையது துயரமே அற்ற ஓர் உலகம். கவிஞன் என அவர் முன்வைக்கும் ஆளுமை இங்குள்ள மொத்த மானுடவாழ்க்கைக்கும் மிக அப்பால், வானின் ஒளியுடனும் முடிவின்மையுடனும் அளவளாவியபடி நின்றிருக்கும் ஒருவர். மானுடனிடம் கடவுளின் குரலில் பேசுபவர். கடவுளிடம் மொத்த மானுடமாக நின்று பேசுபவர்.

அந்த ஆளுமையைத்தான் அன்றைய நவீன கவிஞர்களால் உள்வாங்க முடியவில்லை. அவர்கள் மிக எளிமையாக அதை ‘கற்பனாவாதம்’ என அடையாளப்படுத்தி நிராகரித்தார்கள். அது பழைய கற்பனாவாதத்தின் மிகை அல்ல அது ஒரு நவகவிஞனின் புத்தம்புதிய தன்னிலை என உணர மேலும் ஒரு தலைமுறைக்காலம் ஆகியது.

இசை எழுதவந்தபோதும் அந்த இடர்களைச் சந்தித்தார். அவருடைய கவிதைகளில் திகழும் தன்னிலை மட்டுமே முற்றிலும் வேறுபட்டது. அதை உடனடியாக வாசகர்களால், சக கவிஞர்களாலும்கூட அடையாளம் காண முடியவில்லை. அதன்மேல் அன்றைய வாசிப்பில் ஏற்கனவே இருந்த சில அடையாளங்கள் சுமத்தப்பட்டன. இன்றும் அந்த சில அடையாளங்களைக் கடந்தே இசையின் கவிதைகளை ஒரு வாசகன் வாசிக்கவேண்டியிருக்கிறது.

இசை முதலில் கவிதைக்குப் பின் நெடுங்காலமாக இருந்து வந்த கவிஞன் என்னும் ஆளுமையை ரத்துசெய்துகொண்டார். அந்தக் கவிஞனுக்கு எத்தனை முகங்கள் நம் மரபில். வரிசையறியா பரிசிலை மறுத்த பாணன். உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்று சொன்னவன். தெய்வங்களை நேருக்குநேர் கண்டு பேசியவன். நெஞ்சுபொறுக்குதில்லையே என்று கொதித்தவன். கொலைவாளினை எடடா என்று சீறியவன். வழிதொறும் நிழல்வலைக் கண்ணிகள் திசைதடுமாற்றும் ஓராயிரம் வடுக்கள் என குழம்பியவன். எல்லா அடையாளங்களையும் துறந்து வெறும் ஒருவனாக கவிதைக்கு அப்பால் ஒரு கவிஞன் இருந்து பேசுவது தமிழ்க் கவிதைக்கு புதியது.

கவிஞன் தன்னை சாமானியனாக உணர்வதொன்றும் தமிழுக்குப் புதியதல்ல. ‘நான் சாமானியன்’ என அறைகூவும் கவிதைகள் இங்கு ஏராளம். ஆனால் அவையெல்லாம் கவிஞன் சாமானியனின் குரலாக தன் குரலை ஆக்கிக்கொள்ளும் முயற்சியின் விளைவே ஒழிய இயல்பாக அவன் அங்கே சாமானியனாக வெளிப்படுவதில்லை. ‘மக்களோடு மக்களாக’ இருந்தாலும் புரட்சியாளன் மக்களில் ஒருவனல்ல அல்லவா? போலிப்புரட்சியாளன் இன்னும் பல படிகள் வேறானவன் அல்லவா?

கவிஞனுக்குரியவை என நாம் உணர்ந்து வந்துள்ள பல்வேறு இயல்புகளை இசை கவிதைகளில் திரண்டுவந்து நின்றிருக்கும் கவிஞன் என்னும் தன்னிலையில் காணமுடிவதில்லை. ஒன்று, அறச்சீற்றம். கவிஞன் மேலும் நுண்ணுணர்வு கொண்டவன். கவிஞனாக மேலும் பொறுப்புணர்வும் கொண்டவன், ஆகவே சமூக அநீதிகள், வரலாற்றுக் கொடுமைகள் மீதான அறச்சீற்றக்குரல் என்றும் கவிஞர்களின் இயல்பான வெளிப்பாடாக உள்ளது. கவிஞன் எனும் நிலையில் அந்தக் குரல் இசையில் இல்லை.

அதன் மறுபக்கமாக இருப்பது கவிஞன் என்னும் பெருங்கருணை, அகவிரிவு. விண்ணில் பறக்கும் புள்ளெலாம் நான் என்றோ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றோ எழும் ஒரு உளப்பெருக்கு. யாரோ ஒருவன் என்று எப்படி சொல்வேன் என்று நிறையும் பிரியம். அதுவும் இசைக் கவிதைகளில் இல்லை.

தன் அகத்தை இயற்கையால் நிறைத்துக்கொண்டு, இயற்கையினூடாக தனக்கென ஒரு படிமமொழியை உருவாக்கிக்கொள்வது கவிஞர்களின் இயல்பு. இயற்கைமீதான நெகிழ்வாக, இயற்கையுடனான இசைவாக அது வெளிப்படும். இசைக் கவிதைகளில் இயற்கையெனும் இருப்பே அரிதாகத்தான் வெளிப்படுகிறது. பெரும்பாலும் நகர்ப்புறம். சாலைகள், தேநீர்க்கடைகள், அலுவலகங்கள். ஒரு மரம் அவ்வழியில் நின்றால் நன்று, அவ்வளவுதான்.

இந்த மூன்று அடிப்படை இயல்புகளும் இல்லாதவன் இசை என்னும் கவிதைத்தன்னிலை. அவன் ஒரு நகர்சார் மனிதன். எல்லா வகையிலும் சாமானியன். அவனிடம் சீற்றம் வெளிப்படுகிறது. கழிவிரக்கமும்  சகமானுடர் மீதான கனிவும் வெளிப்படுகிறது. அவையெல்லாமே சாமானியனாக மட்டுமே வெளிப்படுகிறது. அந்த எளிய சாமானியனின் உணர்வுநிலைகள் கூரியவை. மிகநுட்பமாக மொழியில் வெளிப்படுபவை. ஆனால் கவிஞனின் ’மேலதிக’ உணர்வுநிலைகளை நாம் எதிர்பார்ப்பதனால் நமக்கு அவை உடனே கவிதை என பிடிகிடைப்பதில்லை.

இசையின் கவிதைகள் கவிஞன் என்னும் தன்னிலையை ரத்துசெய்து கொண்டுவிட்டன. விளைவாக கவிதைவாசகன் என்னும் முன்னிலையையும் அவை ஏற்றுக்கொள்ளவில்லை. பெரும்பாலான கவிதைகள் நண்பனுடன் பேசும் தன்மை கொண்டவை. நண்பா என்னும் அழைப்பு கொண்ட கவிதைகளும் பல உண்டு. தன்னைப்போன்ற அதே உளநிலைகொண்ட ஒருவனிடம் இயல்பான உரையாடல் ஒன்றை நிகழ்த்துபவை அவை

ஆகவே அக்கவிதைகளில் நாம் வழக்கமாக கவிதைகளில் கண்டுவரும் ‘தீவிரநிலை’ பெரும்பாலும் கூடுவதில்லை. உணர்வுத்தீவிரம், சிந்தனைத் தீவிரம் இரண்டுமில்லை. அவை மிகச் சாதாரணமாக, அன்றாட வாழ்க்கையின் ஒரு தருணத்தை சற்றே அழுத்திக்காட்டுவனவாக, கூடுதலாக ஒரு வரி அபிப்பிராயத்தை சேர்த்துக்கொள்வனவாக இருக்கின்றன.

மிகப்பெரும்பாலான இசை கவிதைகளில் ’கவிதைக்குரியவை’ என நாம் இதுகாறும் வாசித்துவந்த தருணங்களேதும் இல்லை. அன்றாட நடுத்தரவர்க்க நகர்ப்புற வாழ்க்கையில் காணக்கிடைக்கும் தருணங்களின் வழியாகவே அக்கவிதைகள் நிகழ்கின்றன. ஆசிரியரின் உணர்வுகளும் தீவிரமாக அவற்றின்மேல் படிவதில்லை. பல தருணங்களில் மெல்லிய புன்னகை ஒன்றுடன் அவை சொல்லப்படுகின்றன.

ஆகவே இசையின் கவிதைகள் இரண்டு வகையில் பிழையாக வாசிக்கப்பட்டன. ஒன்று, நா.முத்துக்குமார் வகையிலான விடலைத்தனமான ஓர் ஆளுமை அக்கவிதைகளுக்குப் பின்னாலுள்ளது என்னும் புரிதல்.  அப்படி நோக்கினால் அப்படித்தோன்றும் பல கவிதைகள் உள்ளன என்பதும் உண்மை. ஆனால் இசையின் கவிதைகளிலுள்ள புன்னகை சாமானியனுடையதாயினும் மாறாத கனிவு கொண்டது. அந்தக் கனிவே ஓர் ஆழம்தான்

இன்னொன்று, இசையின் கவிதைகள் தமிழில் படிமக்கவிதை வழக்கொழிந்தபோது உருவாகிவந்த நுண்சித்தரிப்புக் கவிதைகளாக அடையாளம் காணப்பட்டன. அத்தகைய கவிதைகள் மிக எளிதில் ஒரு ‘டெம்ப்ளேட்’ ஆகி கண்ணில்பட்டவை எல்லாம் சுருக்கமான சித்தரிப்புகளாக மாறி கவிதையென விகடன் பக்கங்களில் அச்சாயின. இசையின் பல கவிதைகளும் அந்த பக்கங்களில் வெளியாக நேர்ந்தது.

இசையின் கவிதைகள் நுண்சித்தரிப்புக் கவிதைகள் அல்ல. நுண்சித்தரிப்புக் கவிதைகள் தொழில்படுவது இரண்டு வகைகளில். ஒன்று, அவை ஒரு நிகழ்வை அல்லது காட்சியை சித்தரித்து படிமம் ஒன்றை உருவாக்கி வாசகன் உள்ளத்தில் விரிகின்றன. இரண்டு, ஒரு நிகழ்வை அல்லது காட்சியை வாசகன் உள்ளத்தில் ஆழமாக பதியச் செய்து அதைப்போன்ற பல நிகழ்வுகளையும் காட்சிகளையும் அவன் நினைவில் எழச்செய்கின்றன. image, evocation என்னும் இருநிலைகளில் நுண்சித்தரிப்புகள் செயல்படுகின்றன. இசை கவிதைகளின் அனுபவம் அவை இரண்டும் அல்ல.

மூன்றாவதாக, இசையின் கவிதைகளை ‘பகடி’ கவிதைகள் என பலர் வாசித்தனர். இன்றும் இசை எதிர்கொள்ளும் வசை அதுதான் என நினைக்கிறேன். பகடி என்பது ஒருவகை விமர்சனம். அதிலுள்ளது எவ்வளவு நுட்பமாகச் சொல்லப்பட்டாலும் ஒவ்வாமையும் எதிர்ப்பும்தான். இசையின் கவிதைகளில் விமர்சனம் என்பதே இருப்பதில்லை. ஒவ்வாமையும் எதிர்ப்பும்கூட ஒருவகை இனிய உளநிலையில் வெளிப்படும் அவருடைய கவிதைகளில் உள்ளது சிரிப்பு மட்டுமே. புன்னகை என்று சொல்லலாம். விமர்சனம் என்றால்கூட அது பிரியமான கேலிதான். பகடிக் கவிதைகள் என அவற்றை வகைப்படுத்துவது அவற்றை முழுமையாக நிராகரிப்பதே.

இந்தவகையில் இசையின் கவிதைகள் எவையெல்லாம் அல்ல என வரையறை செய்தபின் எஞ்சுவதென்ன என்று பார்க்கும் ஒருவர் அக்கவிதைகளின் உலகில் எளிதில் புகமுடியும். அவற்றில் உள்ளவை இவையிவை என அட்டவணையிடுவது விமர்சகனின் பணி அல்ல. அது வாசகன் தன் பயணத்தால் கண்டடைய வேண்டியது. அவற்றின் மீதான பிழையான வாசிப்புகளை களைவதொன்றே நான் உத்தேசித்தது. நாமறியாத புதிய ஒரு கவித்தன்னிலை, கவிஞனல்லாத ஒரு தன்னிலை, அக்கவிதைகளின் பின்னால் வந்தமர்வதனால் உருவாகும் பிழைவாசிப்புகள் அவை.

இசையின் கவிதைகள் கையில் ஒரு சூடான டீக்கோப்பையுடன் அமர்ந்து தெருவில் சென்றுகொண்டிருக்கும் மானுட அனைவர் மேலும் பரவும் கனிவுடன் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் சொற்களாலானவை. அவன் அங்கே வருவதற்கு முன்னரே அவனுக்கான சூடான டீயை எடுத்துவைக்கும் டீமாஸ்டர்களாலும் ஆனவை.

இசை கவிதைகள்-  வாங்க

முந்தைய கட்டுரைவே.நி.சூர்யா
அடுத்த கட்டுரைசாம்ராஜின் கொடைமடம், சுபா