சாம்ராஜின் கொடைமடம், சுபா

அன்புநிறை ஜெ,

புத்தாண்டு ’கொடைமடம்’ வாசிப்புடன் துவங்கியது. நேற்றிரவு முழுவதும் வாசித்து இன்று அதிகாலை வாசித்து முடித்தேன்.

ஒரு வித்தியாசமான அனுபவமாக நண்பர் சாம்ராஜின் குரலில்தான் நாவலின் பெரும்பகுதிகள் மனதுள் ஒலித்தது. அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பது போல, அவருடன் உரையாடிக் கொண்டிருப்பது போல. (முகுந்திற்கு சாம்ராஜ் உருவை மனம் வரைந்து கொண்டது காரணமாக இருக்கலாம்.)

எப்போதுமே மேடை உரையாயினும் தனிப்பட்ட பேச்சுக்களாயினும், வாழ்வனுபவங்களின் எடையை சிரிப்புக்குள் புதைத்து அவற்றை இறகென எண்ணச் செய்யும் விதமாக கேட்பவர் மேல் பொழிந்து கொண்டே இருந்து, அச்சிறும் கணம்வரை பீலியென்றே அதை நம்பச் செய்வது சாம்ராஜ் அவர்களின் பேச்சு; ஒரு கணத்தில் அதன் உள்ளார்ந்த அத்தனை வலியையும் ஒரு புள்ளியில் தொட்டுவிட்டு, மயிற்பீலியென புன்னகை முலாம் பூசிய அடுத்த நிகழ்வுக்குத்தாவும். குழுந்தையை சிரிக்க வைத்து என்ன நிகழ்ந்ததென்றே தெரியாமல் ஊசி போட்டு விடும் கைதேர்ந்த குழந்தை மருத்துவர் போல. நாவலும் இது போன்ற ‘சாம்’ தன்மை கொண்டிருக்கிறது.

எத்தனை எத்தனை தோழர்கள்! எத்தனை விதமான தற்பலிகள்!

ஆள்நடை மறந்த ஆலயங்களில் நவகண்ட சிற்பத்தைப் பார்க்கும் போது மனதில் ஒரு வலி எழுவது போல… எங்கு எதற்காக அல்லது யாருக்காக அரிந்து வைக்கப்பட்ட தலை! அங்கு நிகழ்த்தப்பட்ட தியாகம் காற்றிலேனும் மிச்சமிருக்கிறதா என்று அதன் மீது அமர்ந்திருக்கும் ஓணானிடம் கேட்கத் தோன்றுவது போல.. மீண்டும் மீண்டும் ஒவ்வொரு உபகதையாக வாசிக்க வாசிக்க பல தருணங்களில் பெருமூச்சும் கண்ணில் நீரிடும் திரையுமாகவே வாசிக்க முடிந்தது.

உடைந்து சிதறிக் கொண்டே இருக்கும் எம்எல் குழுக்கள். அதற்கான நியமங்கள், அழுத்தங்கள், துரத்தாத கரங்களிடமிருந்து கூட இறுதிவரை பயந்து பதுங்கி வாழும் வாழ்க்கை. அது ஒவ்வொன்றிலும் அர்ப்பணிப்பு என்னும் சொல்லின் அர்த்தமாய் வாழ்வை பலியிடும் தோழர்கள். சிலம்பு சொல்லும் இட்டெண்ணி தலை கொடுக்கும் எயினர் கூட்டம். (‘நாவலில் வரும் சிலம்புச் செல்வர் கம்பு சுத்துவாரா தோழர்’  மனதில் வந்து போகிறது )

சையது அண்ணன், அவர் கடைக்கெதிரே வேறோர் உலகில் வாழும் அரிஸ்டாட்டில், காதலை ஆற்று மணலில் புதைத்து அறியா ஊரில் பலியாகிப் போகும் தாமஸ், காதல் மனைவியும் விலகி, கட்சியும் விலக்கி விட உடலை வாங்கக் கூட வழியின்றி ஊட்டியில் தூக்குப்போட்டு இறந்து போகும் தோழர் செம்முகில், தங்கள் சொந்த வாழ்வை ஒட்டுமொத்தமாக பலியிடும் சஜீதாக்கள் – இதுபோன்ற எத்தனையோ பேர், ரத்தமும் சதையமாக வாழ்ந்தவர்கள்தானே என்பதை எண்ணாமல் இருக்க முடியவில்லை!

நான் பிறந்து வளர்ந்த அதே மதுரையில் நிகழ்ந்து கொண்டிருந்த வேறு வகையான நிகர் உலகங்களை வாசித்த போது ‘முற்றத்து வெயில் முகத்தில் படாமல் வளர்த்தது போல’ தான் என் வாழ்வு இருந்திருக்கிறது எனத் தோன்றியது. கோவில்களும், கோலங்களும், பக்தியும், உறவுகளுமாக நான் வளர்ந்த மதுரை. ஆனால் அதிதீவிர அன்பு காட்டும் இத்தகைய ‘அண்ணன்’களை சந்தித்திருக்கிறேன். நடுராத்திரியிலும் இயங்கும் உணவுக்கடைகளும் தேநீர் விடுதிகளும் மட்டுமல்ல எத்தகைய வாழ்வை வாழ்ந்திருந்தாலும் உண்மையான உயிரோடடமான மனிதர்களை அவர்களது அன்பைக் காட்டியிருக்கிறது மதுரை.

கொடை மடம் வெறும் கண்ணீர்களின் கதையென யாரும் சொல்லி விட முடியாது. வாழ்வைப் போலவே வேர்ப்பற்று இற்று விலகிவிடாமல் பிடித்து வைத்திருக்கும் நேசமும் இவை அத்தனை கதைகளுக்குள்ளும் ஊடாடும் சரடாக வருகிறது. உண்மையில் ஜென்னியை, அவளது ஆணையிடும் அன்பை சற்று பயத்துடன்தான் வாசித்துக் கொண்டிருந்தேன். பெட்டிகளுக்குள் அடங்கிப் போன பொன்னம்மாள்களுக்கும், இளம் வயதிலேயே விதவைக் கோலம் பூண்டு சந்தையில் தொலைந்து போகும் சின்ன அம்மாச்சிகளுக்கும் பதில் சொல்பவள் போல வருகிறாள் ஜென்னி. ஒவ்வொரு தருணத்திலும் நாணேற்றிய வில்லாக நிற்கும் அவள் ஆளுமையும் நேசமும் காமமும் முகுந்தனை அலைக்கழித்த போதெல்லாம், ‘வேண்டாம் முகுந்த், காதலில் தேவதையாகத் தெரிந்தாலும் இதுவும் தன் தலையை அரிந்து வைக்க சொல்லும் கொற்றவைதான்’ என மனம் அரற்றியது.

நாவல் நெடுகிலும் வரும் சாம்ராஜுக்கே உரிய வரிகள், அங்கதங்கள் மிகவும் அருமையானவை.

மதுரையின் குணத்தை ஒரு சிறு வரியில் சொல்லிவிடுவது (மதுரையின் தேசிய குணத்தின் படி உலகில் எந்த நிகழ்வு நடந்தாலும் அதன் பெயரில் கடை திறப்பது), அமைப்புகளின் தேய்வழக்கான விவாதங்களை இடக்கரடக்கலாக பிரயோகிப்பது (தேசிய இனப் பிரச்சினைல உங்களுக்கு கேள்வியா தோழர்?), எம்எல் கணவர் ஆற்றிய அரசியலுரையை முதலிரவிலேயே பதம் பிரித்து “சுருக்கமாகச் சொன்னா வேலை வெட்டிக்குப் போக மாட்டீங்க” என  பொருள் கொள்ளும் அவர் மனைவி என – போகிற போக்கில் சொல்லிச் செல்லும் அழகும் சிறப்பு.

“யாருய்யா ஸ்டூடண்ட்டு.. யாரோ கன்சோலாவாம்ங்யா பேரு..” – வெடித்துச் சிரித்தேன்..

நிகரகுவா சிறையிலிருக்கும் கன்சோலாவுக்காக மதுரையில் போராட்டத்தில் ஈடுபடும் தோழர்கள், யாரோ சட்டக் கல்லூரி மாணவர் என அதைப் புரிந்து கொள்ளாது காவல் துறை படும் பாடு – சிரிப்புக்குள் உறையும் அனர்த்தங்கள்.

இன்னும் பல பகுதிகள் நாவலின் நடையை வெகு இயல்பாக மனதுக்கு அருகே கொண்டு சேர்ப்பவை. உதாரணமாக,

கோரிப்பாளையம் மார்க்கெட் ஏன் இவ்வளவு பரபரப்பாய் இருக்கிறது என வேதாந்தமாய் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மதுரை சண்டியர் குழு; 

போலிஸ் ஸ்டேஷனில் வக்கீல்கள், குற்றவாளிகள், அப்பாவிகள் கலந்து நிற்க, ஒரு ஓரமாய் நிற்கும் சட்டம் ஒழுங்கு ;  

தனக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என பத்திரகிரியாரைப் போல பார்க்கும் குரங்கு;

ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் போட்டோக்களில் விழுவது குறித்த எந்த பிரக்ஞையுமற்று ஆன்மீகமாய் நீந்தும் வாத்துக்கள்;

பேரத்திற்கும் மரணத்திற்கும் இடையே ஆடும் ரோஜா மாலைகள்;

ஒரு மலையாளப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு மொழிபெயர்ப்புக் கவிதை போல வாழ்ந்துவிடலாம் என்னும் எண்ணம் –

போன்ற வரிகள் எந்தச் சூழலிலும் புன்னகைக்க வைப்பவை.

அதேபோல ஒற்றைக் கோடிழுத்து ஓவியம் ஒன்றை உருவாக்கிடும் கலைஞனைப் போல யாரும் இல்லாத வெட்டவெளியைக் கடந்து போகும் இரண்டு ஆடுகளின் சித்திரம், சதுக்க பூதம் போல கட்டபொம்மன் சிலையருகே நின்று முகுந்த் பார்க்கும் இடம்- போன்றவை காட்சித்துளிகளாக மனதில் இருக்கின்றன.

நடுக்குளம், செல்லூர், தமுக்கம், காந்தி மியூசியம், தேவர் சிலை, பாண்டி கோவில், கோமதிபுரம், ராஜாஜி மருத்துவமனை, நாகமலை என மதுரையில் உலவித் திரிந்த உணர்வு. இந்த முறை சங்கரதாஸ் சுவாமிகளைப் பார்த்தால் சற்று புன்னகைக்கத் தோன்றும்.

UC ஸ்கூல் முன்பிருக்கும் கட்டபொம்மனையும் வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களை விளிக்கும் ஏசுவையும் நேர்க்கோட்டில் நிறுத்திப் பார்த்து ”வாளிருக்க வேண்டுமெனில் சிலுவை வேண்டும், யாரையேனும் சிலுவையில் தொங்க விடாது வாள் சமாதானம் ஆகாது” என்ற வரி சிறப்பு.  தற்போதைய புதிய பேருந்து நிலைய அமைப்பு கட்டபொம்மனையும் ஏசுநாதரையும் சற்று இடதுகையால் ஒதுக்கி விட்டது போலிருக்கிறது இன்றைய மதுரை. அந்த 80-90களின் மதுரையும் தமிழக எண்ணெய் பலகார கடையும், சௌராஷ்ட்ர மொழியும், அதன் இரட்டை எழுத்து இனிஷியல் கொண்ட கணேஷ் பாபுக்களும் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்று விட்டன என்பதில் தனிப்பட்ட மகிழ்ச்சி.

நிச்சயமாக கொடை மடம் வாசித்தால் ப.சிங்காரம் மகிழ்ந்திருப்பார்.

நாவலில் இடம் பெறும் பொன்னம்மாளின் ஓலைப்பெட்டிக்கான தொன்மம் அனேகமாக மதுரைப் பகுதியின் பல வீட்டுச்சாமிகளின் கதை; செஞ்சி பகுதியில் இன்றும் கழுவேற்றத்தை மறக்க பிரியப்படும் சமணர் குடும்பம் என கிளைக் கதைகளிலும் மதுரையின் நினைவு மறக்கமுடியாததாக இருக்கிறது.

1973 வைகை வெள்ளத்தில் ஒரு பெண்ணும் அவளைக் காப்பாற்ற முயன்ற ராணுவ வீரரும் மறைந்த கதை என் இளம்பருவத்தில் மாமா சொல்லக் கேட்டது, இந்நாவல் வழியாக நினைவில் மீண்டது.

ஊர் ஊராக சுற்றித் திரிந்து மார்க்கெட்டிங் சர்வே செய்பவர்களின் வாழ்க்கைச் சித்திரம். அதிலும் தன் வாழ்வை நிறைவு செய்து கொள்ள முயலும் பரமேஸ்வரன் காமத்தையும் பசியையும் குறித்து சொல்லும் வரிகள் அருமை;

புரட்சியின் மூலம் விடியல் வரும் என்னும் நம்பிக்கையில் வாழும் அமைப்பின் முழுநேர ஊழியருக்கும், இயேசுவின் ஊழியத்தில் எல்லோரும் சுகமாக ஜீவிப்பார்கள் என நம்பும் சிஸ்டரையும் ஒன்றாகக் காணும் இடம் கிளாசிக்.

வரலாறையும் வீழ்ச்சியையும் அர்ப்பணிப்பையும் காதலையும் சிறு துகளாக்கி கடந்து செல்லும் காலத்தின் முன் தன் கொடையால் தியாகத்தால் முன்நின்று கல்நின்றவர்கள் கதை கொடைமடம்.

“ஜீவிதம் தன்னே மேஜிக் அல்லே. எல்லாம் உண்டங்கில் உண்டு, இல்லங்கில் இல்லா” என்ற ஆசான் மூசாவின் வரிகள் இக்கதையை சாரமாக சொல்லிவிடுபவை, செவ்விலக்கிய மரபு போல ஏறக்குறைய நாவலின் மையத்தில் வருபவையும் கூட!

அற்புதமான படைப்புக்கு நண்பர் சாம்ராஜுக்கு நன்றியும் ப்ரியமும் வாழ்த்துக்களும்.

அன்புடன்

சுபா

கொடைமடம் வாங்க

முந்தைய கட்டுரைஇசை, கவிஞனில்லா கவி
அடுத்த கட்டுரைதமிழ்ப்பண்பாட்டின் சோலை – கடிதம்