அஜிதனின் உரையும் நானும்.

 

பின்நவீனத்துவம் பின்னகர்ந்த பின்… அஜிதன் உரை
மருபூமி வெளியீட்டு விழா உரைகள்

அன்புள்ள ஜெ,

அஜிதன் பின் -பின்நவீனத்துவம் அல்லது transmodernism பற்றி பேசிய உரையைக் கேட்டேன். இன்று உலகசிந்தனையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை மிக விரிவான சிந்தனைப் பரிணமாமாக விளக்கிய உரை. வெறும் நாற்பது நிமிடங்களில் இந்தப் பெரிய சித்திரத்தை எந்தக் குழப்பமும் இல்லாமல் முன்வைக்கமுடிகிறது.

எந்தக் குறிப்புகளுமில்லாமல் தத்துவ ஆசிரியர்களையும் அவர்களின் கருத்துக்கள் ஒன்றுடனொன்று தொடர்புகொண்டும் மறுத்தும் செல்வதை விளக்கமுடிகிறது என்பது ஆழமான வாசிப்பைக் காட்டுகிறது. ஆனால் அத்தனை கோட்பாட்டு வாசிப்புக்குப் பிறகும் கலையின் பக்கம் நின்றிருக்கும் தெளிவையும் காணமுடிகிறது. ஆச்சரியமான உரை. தமிழ்ச்சிந்தனைக் களத்தில் மிகப்புதிய ஒரு திறப்பு.

ஆனால் என் நண்பர்கள் பலர்அந்த உரை உங்கள் உரை போலிருக்கிறது என்றும், உங்கள் குரல் என்றும் சொன்னார்கள். நான் தெரிந்துகொள்வதற்காகவே கேட்கிறேன். அந்தக்கருத்துக்களில் உங்கள் கருத்துக்கள் எவ்வளவு?

அருண்குமார். பா

அன்புள்ள அருண்,

அந்தக் கருத்துக்களில் பெரும்பாலும் எல்லாமே என்னுடையவை. ஆனால் நான் உருவாக்கி அஜிதனுக்கு அளித்தவை அல்ல. அஜிதனிடமிருந்து நான் பெற்றுக்கொண்டவை.

என் அடுத்த தலைமுறையிடமிருந்து என்றுமே கற்றுக்கொள்பவனாகவே இருந்துள்ளேன். அவர்களுக்கு பயில்வதற்கான வாய்ப்பு மிக அதிகம். அவர்களுக்கு எங்கள் தலைமுறையில் இருந்த எளிய உலகியல் போராட்டங்கள் மிகக்குறைவு. ஆகவே தங்களைக் குவிக்க முடிந்தால் அவர்கள் செல்லும் தொலைவு மிகுதி.

முந்தைய தலைமுறையினர் இளமையில் தீவிரமாகக் கற்கிறோம், புதிய எண்ணங்களை வாங்கிக் கொள்கிறோம். ஆனால் ஒரு கட்டத்தில் கற்றவற்றைக் கொண்டு சுயமாக யோசிக்க ஆரம்பிக்கிறோம். யோசித்தவற்றை விவாதங்களில் கூறி நிறுவ ஆரம்பிக்கிறோம். விளைவாக நாம் நிறுவியவற்றை பற்றிக்கொண்டு நாம் நின்றுவிடுகிறோம். மேலே கற்க, ஏற்க நம்மால் இயல்வதில்லை.

நானறிந்த தமிழ்ப்படைப்பாளிகள் பெரும்பாலோர் கற்கும் காலமே மிகமிகக் குறைவானவர்கள். அதிகபட்சம் ஓரிரு ஆண்டு வாசிப்பு. அதன்பின் வாசிப்பே இல்லை. வம்புகளினூடாக, செவிவழியாக தெரிந்துகொள்வது  மட்டுமே அவர்களின் வழக்கம். அந்த தொடக்ககால வாசிப்பைக்கொண்டு எஞ்சிய காலம் முழுக்க விவாதிப்பார்கள். பெரும்பாலும்  சமாளிப்புகள்தான். ஆகவே இங்கே புதிய ஒருவர் வராமல் புதியவை வர முடியாத நிலை உள்ளது.

அவ்வாறு வருபவர்களின் குரலை கவனிக்கவும், கற்றுக்கொள்ளவும் எப்போதும் கூர்ந்திருக்கவேண்டும் என நான் எனக்கே சொல்லிக் கொள்கிறேன். ஆகவே புதியவர்களை வாசிக்கிறேன். அவர்களில் எவர் குறிப்பிடும்படி எழுதினாலும் தவறவிடுவதில்லை.

நான் தத்துவ – கோட்பாட்டு விவாதங்களை எப்போதுமே மிகக்கூர்ந்து வாசித்து வருபவன். எந்த அளவுக்கு முயற்சி எடுத்து பயின்றிருக்கிறேன் என்பதை என் பழைய கட்டுரைகளில் காணலாம் (உதாரணம் குருகு இதழில் வெளியான இக்கட்டுரை. இது இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சொல்புதிது இதழில் வெளிவந்தது. நவீன மொழியியல் ஓர் அறிமுகம் – ஜெயமோகன்)

அவ்வாறு அன்று மேலைத்தத்துவம் மற்றும் கலைக்கோட்பாடுகளைப் பயிலும்போது நான் கண்ட இடர்கள் பல. எந்நூல்களைப் பயிலவேண்டும், எப்படி தொடங்கவேண்டும், தொடக்கக் கட்ட குழப்பங்களை கடப்பதெப்படி என்பதற்கு எனக்கு வழிகாட்டிகள்  தமிழ்ச்சூழலில் இருக்கவில்லை. அன்று தமிழ்ச்சூழலில் அவற்றைப் பற்றிப் பேசியவர்கள் பெருங்குழப்பங்களையே உருவாக்கினர்.  அவர்களிடமிருந்து எதையுமே கற்றுக்கொள்ள முடியாது என நான் கடும் கசப்புடன் அறிந்துகொண்டேன்.

தத்துவம்- அதன் ஒரு பகுதியான  கலைக்கோட்பாடு ஆகியவை கலைச்சொற்கள் நிறைந்தவை, செறிவான மொழி கொண்டவை. ஆகவே கூர்ந்து பயில வேண்டியவை. வாசிக்கையில் குழப்பம் உருவாகக்கூடும். ஆனால் குழப்பமான தத்துவப்பேச்சு என்பது தத்துவத்திற்கு நேர் எதிரான பயணம் கொண்டது. தெளிவை அடைவதற்கே தத்துவக்கல்வியை நாம் செஉய்கிறோம். செறிவான தத்துவக் கட்டுரைகளைப் பயில முயன்று தோற்ற முதிரா உள்ளங்கள் அந்தச் செறிவை போலி செய்து உருவாக்கும் மொழிச்சிடுக்குகள் மற்றும் பார்வைக்குழப்பங்கள் தத்துவத்தின் சிக்கல்க அல்ல. அவற்றிலிருந்து மெய்யான தத்துவ உரையாடலை வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். நமக்கு நமக்குரிய தத்துவத் தேடல் இருந்தால் உடனடியாக அந்த வேறுபாடு புரியவரும்.

அத்துடன் தமிழ்ச்சூழலில் கோட்பாடுகளை  முன்வைத்தவர்கள் அன்று படைப்பூக்கத்திற்கு எதிரான பேச்சுக்களை நிகழ்த்தினர். படைப்புநிலை என்பதே ‘காலாவதி’ ஆகிவிட்டது என்றனர். எல்லா எழுத்தும் சமமே என்றும் எழுத்து என்பது வெறும் உற்பத்தியே என்றும் கூவினர். (சுந்தர ராமசாமி சொன்னார், தமிழில் இலக்கணவாதம், மார்க்ஸிய அழகியல் முதல் பின்நவீனத்துவம் வரை எந்தக் கொள்கை அறிமுகமானாலும் அது படைப்புச்செயல்பாட்டுக்கு எதிரான ஒன்றாகவே இங்கே கொண்டு வரப்படும் என்று. அரசியல்வாதிகள் அல்லது இலக்கிய அரசியல்வாதிகளின் அதிகார நிறுவுதலுக்காகவே அது இங்கே பயன்படுத்தப்படும்)

எனக்கு மானுடப் படைப்பூக்கம் மேல் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. அதன் ஒரு பகுதி நான் என்னும் எண்ணம் இருந்தது. ஏனென்றால் படைப்புநிலையின் அரிய தருணங்கள் எனக்கு அமைந்திருந்தன. அவற்றின் பெறுமதி எனக்கு தெரிந்திருந்தது. மானுடசிந்தனை ஒருபோதும் படைப்பூக்கநிலையை நிராகரிக்காது என ஆழமாக அறிந்திருந்தேன்.

ஆற்றூர் ரவிவர்மா

ஆகவே கலைக்கோட்பாடுகளை முறையாகக் கற்க விரும்பினேன். என் ஆசிரியர்களில் ஆற்றூர் ரவிவர்மா கேரளம் இன்றும் போற்றும் நவீன மொழியியலாளர். ஆனால் நவீன ஐரோப்பிய தத்துவம் கற்றவர் அல்ல. அன்றைய இலக்கியக் கொள்கைகள் மொழியியல் சார்ந்தவை, மொழியியலாளர் வழியாகவே கற்கத்தக்கவை. ஆனால் அவை மேலைத்தத்துவத்தில் வேரூன்றியவையும் கூட. மொழியியலாளர் என்றாலும் தத்துவ அறிஞர் அல்ல என்ற எல்லை ஆற்றூருக்கு இருந்தது.

தத்துவம் – கலைக்கோட்பாடு ஆகியவற்றைக் கற்க படிப்படியான ஒரு கல்வி தேவை. அவை வளர்ந்து வந்த பரிணாமத்துடன் இணைத்தே அவற்றை புரிந்துகொள்ள முடியும்.  உதாரணமாக ஹெகல் அல்லது நீட்சே பற்றிய அறிமுகமாவது இல்லாமல் பின்நவீனத்துவச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஹெகலையும் நீட்சேயையும் பயிலவேண்டுமென்றால் முன்னர் இருந்த பிளேட்டோவியச் சிந்தனைகள், ஐயவாதச் சிந்தனைகளை அறிந்திருக்கவேண்டும். இலக்கியத்தில் பின்நவீனத்துவத்தை புரிந்துகொள்ள அமெரிக்க பிரதிசார் விமர்சனத்தை அறிந்திருக்கவேண்டும். அதை அறிய ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், வில்லியம் எம்ஸன் ஆகியோரை அறிந்திருக்கவேண்டும். அது ஒரு முழுமையான கல்வியாகவே இருக்கமுடியும்.

மாறாக, இன்று புகழ்பெற்றிருக்கும் ஒரு தத்துவ ஆசிரியரை அல்லது நூலை ஆர்வத்தால் பாய்ந்துசென்று படித்தால் ஒன்றும் புரியாது. புரியாதவற்றை நாம் நம் அறியாமையைக் கொண்டு நிரப்பிக்கொள்வோம். அது மேலும் அறியாமையாக மாறும்.  அரைகுறையாக அறிந்தவற்றை முன்வைத்து விவாதிக்க ஆரம்பித்தால் அந்த அறியாமை பேருருவம் கொள்ளும். ஆகவே ஒரு கல்விநிறுவன வழிகாட்டல் மிக அவசியம்.அது எனக்கு அமையவில்லை. நல்லூழாக 1992ல் நித்ய சைதன்ய யதி அறிமுகமானார்.

நித்ய சைதன்ய யதி மொழியியல், நவீன மேலைத்தத்துவம் இரண்டிலும் பேராசிரியர். அவரைச் சந்தித்த பிறகே எனக்கு வழி தெளிந்தது. நித்யாவின் மாணவர்களான பீட்டர் மொரேஸ், பீட்டர் ஓப்பன்ஹீமர் ஆகியோர் எனக்கு பலவற்றை கற்பித்தனர். அப்போது புரிந்துகொண்ட ஒன்று உண்டு, இதை பலமுறை எழுதியுள்ளேன், இக்கொள்கைகளை இங்கே பேசிய பலருக்கு அவை பற்றிய புரிதலோ தெளிவோ இல்லை. ஒருவகை பாவலாக்களாகவே அந்தச் சிந்தனைகள் இங்கே அறிமுகமாயின. ஆகவே மிகைப்படுத்தப்பட்டும், எளிய அரசியலுக்கு ஏற்ப  ஒற்றைப்படையாக்கப்பட்டுமே அவை புரிந்துகொள்ளப்பட்டன. அவர்களால் விவாதிக்கவே முடியவில்லை. விளைவாக அவர்களிடமிருந்து மட்டம்தட்டல்கள், எள்ளல்கள், மிகைப்பாவனைகள் மட்டுமே வெளிப்பட்டன.

நான் எனக்குத் தெளிவாகும் வரை கற்றேன்.ஆனால் பின்னர் நான் என் இடத்தை இந்திய சிந்தனைமரபை சார்ந்ததாக மட்டும் குறுக்கிக் கொண்டேன். ஏனென்றால் என் கேள்விகள் திகழும் இடம் இதுவே. எழுத்தாளனாக என் இடமும் இதுவே. இதைப் புரிந்துகொள்ளும் அளவு மட்டுமே எனக்கு மேலைச்சிந்தனை தேவை. தத்துவத்தில் இப்படி ஓர் எல்லையை தனக்காக  அமைக்காமல் எவரும் எதையும் பயில முடியாது.

அஜிதனுக்கு அமைந்த வாய்ப்புகள் ஏதும் எனக்கு அமையவில்லை. மிக இளம் வயதிலேயே  குடும்பச்சூழலில் இலக்கிய – தத்துவக் கல்வி அவனுக்கு அறிமுகமாகியது. மெய்யான அறிஞர்கள் அறிமுகமானார்கள். தத்துவக் கல்விக்கான மிகச்சிறந்த இந்தியப் பல்கலை ஒன்றில், இந்தியாவின் முதன்மையான ஆசிரியர்களின் கீழ், நேரடியாகப் பயில்வது அவனுக்கு அமைந்தது. ஒரு தத்துவப் பல்கலையின் சிறந்த பாடத்திட்டம் என்பது இத்தகைய கல்விக்கு மிகமிக முக்கியமான ஓர் அடித்தளத்தை அமைக்கிறது. பல குழப்பங்களை மிக எளிதாகக் கடந்து விட முடியும். அங்கே ஆண்டுக்கு அறுபது உலகப் புகழ்பெற்ற தத்துவயியல் அறிஞர்களின் உரைகளைக் கேட்பது என்பது மேலதிகத் திறப்பு.

முறையான தத்துவக் கல்வி பற்றிய அந்த ஏக்கம் இன்றும் என்னிடம் உண்டு. சென்ற ஆண்டு நானும் என் நண்பர் ஈரோடு கிருஷ்ணனும் காலடி பல்கலையில் முழுநேர மாணவர்களாகச் சேர்ந்துவிடுவது பற்றிக்கூட திட்டமிட்டோம் – ஒருவேளை இனி  சேரவும்கூடும்.

அனைத்துக்கும் மேலாக, பதினைந்து ஆண்டுக்காலம் முழுமையாகவே வாழ்க்கையை தத்துவம் மற்றும் கலைகளைப் பயில்வதற்காக மட்டுமே முழுமையாக அமைத்துக்கொள்வது அஜிதனுக்கு அமைந்தது. எந்த திசைதிரும்புதலும் இல்லாத, நேர விரயம் இல்லாத ஒரு வாசிப்பு. கூடவே கலைகளுடனான நேரடி அறிமுகம். அதற்கான பயணங்கள். அத்தகைய வாசிப்பு கொண்ட மிகச்சில இளைஞர்களையே நான் சந்தித்துள்ளேன். அது தமிழ்ச்சூழலில் ஒரு பெரிய ஆடம்பரம் என்பதை அறிவேன்.

தமிழில் இன்று எழுதுபவர்களில் எவர் அந்த தரத்திலான வாசிப்பும், புரிதலும் அதற்கான வாழ்க்கை வாய்ப்பும் கொண்டவர்கள் என்பதே என் முதல் கேள்வி. இங்கே எழுந்த எதிர்க்கருத்துக்கள் சிலவற்றைப் பார்த்தேன், பொருட்படுத்தும்படி வாசிப்போ புரிதலோ கொண்ட எவையும் இல்லை என்பதே என் எண்ணம். இத்தகைய  ஒரு விவாதத்தின் தரப்பாக நிலைகொள்வதற்கே இங்குள்ளோர் செல்லவேண்டிய பயணத்தொலைவு மிகுதி. அவர்கள் தங்கள் எளிய தன்னாணவத்தை கடந்து நோக்கினால் அதை உணர முடியும். அப்படி உணர்ந்தால் அவர்கள் தாங்களே செல்லக்கூடிய பயணம் நிகழலாம்.

(அஜிதனின் இந்த உரை பற்றி என்ன நினைக்கிறார் என நான் அறிய விரும்பியது அவன் தலைமுறையில் ஒருவரிடமே. மணிரத்னத்தின் மகனும், எரிக் ஹாப்ஸ்வமின் நேரடி மாணவரும், இமானுவேல் காண்டில் முனைவர் பட்ட ஆய்வுசெய்தவருமான நந்தனிடம். அவருடைய மறுப்பு மிக முக்கியமானது).

அஜிதன் வாசித்துள்ள நூல்களை வாசிக்க, அவற்றைப்பற்றி விரிவாக விவாதித்துப் புரிந்துகொள்ள எனக்கு வாய்ப்பே இல்லை. அவன் அறிந்துள்ள களங்களில் என்னுடைய அறிதல் மிகக்குறைவு. குறிப்பாக மேலைத்தத்துவம், அதில் பிளேட்டோ மரபு மற்றும் பிற்காலக் கிறிஸ்தவ இறையியல், பௌத்தம், அதில் பிற்கால (உலகளாவிய) பௌத்தம்  ஆகியவற்றில். அவன் மேலையிசை, மேலைக்கலை ஆகியவற்றுடன் இணைத்து மேலைத்தத்துவத்தை அறிந்துகொண்டிருக்கும் முறை நவீன இணைய ஊடகம் இன்றி இயன்றிருக்காது. என் காலகட்டத்தில் அவை இல்லை. இனி எனக்கு அதற்குரிய உளநிலை இல்லை.

இங்கே ஓர் உரையை அல்லது கட்டுரையை கண்டபின் அதிலிருந்து சொற்களை உருவி, இணையத்திலிருந்து தொட்டுத் தொட்டு எடுத்து, எவரும் எதையும் தெரிந்ததுபோலப் பேசலாம். அறிவுத்துறையில் அந்த சில்லறை உத்திகளைப் பற்றி அறியாத எவருமில்லை. அவற்றை ஒரு கேலிப்புன்னகையுடன் கடந்துசெல்வார்கள். அஜிதனுடைய உரையில் நீங்கள் காணும் அந்த திசைத்தெளிவு, சீரான சிந்தனைமுறை என்பது முறையான, மெய்யான வாசிப்பின் விளைவாகவே அமையும்.

அஜிதனின் அந்த கல்விக்கும் வாசிப்புக்கும்  பின்னாலுள்ள தவத்தை மதிக்க எந்த மெய்யான அறிவியக்கவாதியும் தயங்கமாட்டான். இந்த உலகிலுள்ள எவ்வளவோ சாதாரண வெற்றிகளையும் மகிழ்ச்சிகளையும் அடையாளங்களையும் தியாகம் செய்து அடையப்பெற்றது அது. அத்தகைய வாசிப்புத்தவத்தில் கால்வாசி செலுத்தினாலே மிக எளிதாக இங்கே ஓர் உயர்பதவிக்குச் சென்றுவிடமுடியும்.  கடுமையான உளச்சோர்வுக் காலகட்டங்களும் அதிலுண்டு. அந்த வாசிப்பின் பெறுமதியைப் புரிந்துகொள்ள முடியாதவன் அறிவியக்கவாதியும் அல்ல.

ஆனால் மெய்யான படைப்புசக்தி கொண்ட சிலரால் தங்கள் படைப்புகள் வழியாக அடையப்பெற்ற  நுண்ணுணர்வால் அங்கே சென்று நின்று பேச முடியும்.  அதற்குத்தேவை கொஞ்சம் கவனம், முறைசார் கல்வியின் முன் கொள்ளவேண்டிய மெல்லிய தன்னடக்கம்.  எளிய பொறாமையால் ஒற்றைவீச்சில் கல்வி அளிக்கும் தத்துவத் தெளிவை மட்டம்தட்டலாகாது. அதன் மதிப்பை உணர்ந்து  கூர்ந்து கவனிக்கவும், தன் படைப்பு சார்ந்த நுண்ணுணர்வு கொண்டு அதை ஒப்பிட்டுப் பரிசீலிக்கவும், அதனுடன்  இணைப்பயணம் ஒன்றை நிகழ்த்தவும், ஆக்கபூர்வமான ஓர் உரையாடலை நிகழ்த்தவும் கூடிய தன்னுணர்வு தேவை.

அஜிதனைத் தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவன் சிறந்த உரையாடல்காரன். ஒரு கருத்தை மிக விரிவாக நுணுக்கமாக விளக்கும் திறன் கொண்டவன். முழுக்க வாசிக்காத, தெளிவாகப் புரியாத  எதையும் பேசாமலிருக்கும் நிமிர்வும் அவனிடமுண்டு. அதெல்லாம் சென்ற ஆறேழாண்டுகளாகவே நண்பர் குழாமுக்கு தெரிந்தவையே. அவன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவனுக்கான இளம் நண்பர் வட்டமும் உண்டு. பலருக்கு நவீன இசை, மேலைத்தத்துவம், கதகளி போன்றவை அவனால் அறிமுகமானவை.

கொஞ்சம் தத்துவ அறிதலுள்ளவர்கள் இந்த உரையில்கூட ஒன்றைக் காணமுடியும். சமகாலச் சிந்தனையாளர்களைப் பற்றிப் பேசும்போது அவன் சென்ற ஐநூறாண்டுகளில் ஐரோப்பிய சிந்தனையில் அந்தச் சிந்தனைக்கு இருக்கும் தொடர்ச்சியை அஜிதன் தத்துவ ஆசிரியர்களினூடாக எளிதாக முன்வைப்பதை. அப்படி மட்டும்தான் அதைப் புரிந்துகொள்ள முடியும். நான் முக்கியமானதாகக் கருதுவது அந்த தொடர்ச்சியைத்தான்.

உதாரணமாக, பின்நவீனத்துவத்திற்கு எதிராக உருவாகும் இலட்சியவாதச் சிந்தனையைச் சொல்லும்போது Meister Eckhart பெயர் குறிப்பிடப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவ இறையியல் சிந்தனையாளர் அவர். இந்த வகையான ஐரோப்பிய இலட்சியவாதச் சிந்தனைகளில் பிளேட்டோவின் மரபு என்றுமிருக்கும். பிளேட்டோ மரபு, செயிண்ட் அகஸ்டின் வழியாக உருவான கிறிஸ்தவ இலட்சியவாத மரபு, நவபிளேட்டோ மரபு என ஒரு தொடர்ச்சிபற்றிய சிந்தனைக் கட்டமைப்பு உங்கள் சிந்தனையில் இல்லாமல் இதைப் புரிந்துகொள்ள முடியாது. தமிழ்ச்சூழலில் அச்சிந்தனையாளர்களில் பலருடைய பெயர்கள் கூட  உச்சரிக்கப்பட்டிருக்காது. அவ்வாறு தொடர்ச்சியை தொட்டுக்கொண்டு வாசிப்பவரே உண்மையில் எதையாவது புரிந்துகொள்கிறார்.

எக்கார்ட்டை நான் அஜிதன் வழியாகவே அறிந்துகொண்டேன். பலமுறை வனை எனக்காக வகுப்பு எடுக்க கேட்டுக்கொண்டு மாணவனாக அவன் முன் அமர்ந்து கற்றிருக்கிறேன்.அஜிதனுடைய கருத்துக்கள் என்னிடம் சென்ற ஐந்தாண்டுகளாகவே பெரிதும் செல்வாக்கு செலுத்தியவை. அவனுடைய அரசியல் நிலைபாடுகள் கூட. ஆனால்  நான் என் இயல்பான ரசனைப்படி , என் தத்துவப்பார்வையின்படி  முரண்பட்டு நின்றிருக்கும் இடங்களும் உண்டு. ஒரே சொல்லில் கூறுவதென்றால் நான் உணர்ந்றிந்த இந்து மெய்ஞானம் சார்ந்த ஒரு தளம், மறைஞானக் கூறு, அவனுக்கு இன்று அன்னியமாகவே உள்ளது.

அஜிதன் போன்று தனக்கான புரிதலுடன் உள்ளே வரும் ஒருவரிடம் ஒரு தன்னம்பிக்கையான குரல் இருக்கும். அது சிலரைச் சீண்டவும் செய்யும். நான் அப்படித்தான் வந்தேன். 1991ல் என் முதல் நாவல் வெளியீட்டு விழாவில் நாவலெனும் கலைவடிவம் பற்றி நான் பேசிய உரை அன்று வியந்து விவாதிக்கப்பட்டது, பலரிடம் எரிச்சலையும் உருவாக்கியது. ஏனென்றால் அது அன்றிருந்த இலக்கியப் போக்குகள் மேல் கடும் நிராகரிப்பை முன்வைத்தது.  ஆனால் அன்று நான் ஊன்றி வாசித்திருந்த நாவல் பேரிலக்கியங்களை அன்றைய மூத்த படைப்பாளிகள்கூட பெயர் மட்டுமே கேள்விப்பட்டிருந்தனர். என் குரலில் இருந்தது வெறும் தோரணை அல்ல, பத்தாண்டுகளுக்குமேல் வெறிகொண்ட வாசிப்பினூடாக வந்தடைந்த ஓர் இடம் அது என காலப்போக்கில் தெளிவாகியது.

நான் எழுதவந்தபோது தமிழில் நவீனத்துவ எழுத்துமுறை ஓங்கி நின்றிருந்தது. என் எழுத்துக்கள் நவீனத்துவத்தை மிக இயல்பாக மீறின. ஏனென்றால் என் இயல்புக்கும் என் தேடலுக்கும் நவீனத்துவம் ஒரு இரும்புக்கூண்டாகத் தோன்றியது. நான் மரணதண்டனை விதிக்கப்பட்டவனின் வாக்குமூலம் போல் என் எழுத்துக்களை முன்வைப்பவன். உச்சகட்ட வீழ்ச்சியிலிருந்து எழுத்து வழியாக மீண்டவன். விஷ்ணுபுரம் வெளிவந்தபோது நவீனத்துவர்களின் திகைப்பும் ஒவ்வாமையும் வெளிப்பட்டது. அதன் கட்டற்ற தன்மையும் கனவும் உட்சிக்கல்கொண்ட வடிவும் அவர்களைக் குழப்பின. அவர்கள் அறிந்திருந்தது நவீனத்துவ அழகியலான நேரான கூரிய வடிவமும், நடைமுறையதார்த்தம் சார்ந்த செறிவான மொழியும்தான்.

அப்போதுதான் நான் பின்நவீனத்துவச் சிந்தனைகளை பயின்றேன்.  ஆனால் பின்நவீனத்துவத்தில் இருந்த மையமற்ற விரிவு தவிர எதுவுமே எனக்கு உவப்பானதாக இருக்கவில்லை. எதையும் சிதறடிப்பதும் கவிழ்ப்பதும் என் நோக்கம் அல்ல. பின்நவீனத்துவத்தில் இருந்த மொழியை கட்டற்றுச் செல்ல விடுவது, உன்னதமாக்கல் (சப்ளைம்) என்னும் இரு கருக்களை மட்டுமே எடுத்துக் கொண்டேன். என் எழுத்தை பின்நவீனத்துவம் என ஒருபோதும் சொல்லவில்லை. நவீனத்துவத்திற்குப் பிந்தைய எழுத்துமுறை என்றே 1990 முதல் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன். இப்போது பார்க்கையில் 60 கட்டுரைகளுக்குமேல் இதை சொல்லியிருக்கிறேன்.

என் எழுத்துமுறை விஷ்ணுபுரம் முதல் கொற்றவை, வெண்முரசு, குமரித்துறைவி வரை ஒரு சீரான வளர்ச்சிப்போக்கு கொண்டது. அது என் தேடல். நான் எழுதுவது வெறும் இலக்கியம் அல்ல. என் பேசுபொருள் உலகியலின் சிக்கல்கள் மட்டும் அல்ல. நான் முன்வைப்பது தத்துவம் சென்றடையும் நுண்மையை, ஊழ்க அறிதலின் ஆழத்தை. என் படைப்புகளை இன்று யோகவெளிப்பாடுகள் என்று சொல்லத்துணிவேன். மறைஞானம் (mysticism) அவற்றின் உள்ளடக்கம். அவ்வகையில் தமிழில் பிரமிளின் ஆயி, நீலம்  புதுமைப்பித்தனின் கபாடபுரம், கயிற்றரவு போன்ற சில கதைகளே தமிழில் அவற்றுக்கு முன்னுதாரணங்கள்.

என் அழகியலுக்கு ‘இச’ங்களின் நெறிகாட்டுதல் தேவையில்லை. நான் செல்வது ஓர் அகப்பயணம். ஆனால் உலகமெங்கும் என்ன போக்கு உள்ளது என அறிய எப்போதும் முயன்றுவருகிறேன். இலட்சியவாதமும், விழுமியங்களும், அழகுணர்வும், அதன் விளைவான வடிவ ஒருமையும் புனைவுகளில் இன்று ஓர் உலகப்போக்காகவே உருவாகி வந்திருப்பதை அஜிதன் வழியாக  அறிந்தேன். அவற்றுக்கும் எனக்கும் இருக்கும் பொதுமையையும் அறிந்துகொண்டேன்.அதற்கு என்ன பெயர் விமர்சகர்களால் போடப்பட்டாலும் சரிதான்.

ஜெ

முந்தைய கட்டுரைகாசியபன்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை 67 அழைப்பிதழ்