பைபிள் அறிமுக வகுப்புகள்- அறிவிப்பு
நண்பர் சிறில் அலெக்ஸ் அவர்கள் பைபிளை (ஏனோ ஜெயமோகன் விவிலியம் என்ற சொல்லை பிரயோகிக்கவில்லை ) முறையாக அறிமுகம் செய்து பயிற்றுவிக்கும் வகுப்புகளை ஜெயமோகன் ஏற்பாடு செய்து அறிவித்திருக்கிறார்.
பைபிளை அறிந்துக் கொள்வதுப் பற்றி ஜெ விளக்கி இருக்கிறார். “அறிவியக்கச் செயல்பாட்டில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு பைபிள் முன்வைக்கும் மெய்யியலிலும் கவித்துவத்திலும் ஆர்வமிருக்கும். தமிழிலக்கியத்தில் பைபிளின் குறிப்புகள் மற்றும் படிமங்கள் ஏராளம். ஏனென்றால் உலக இலக்கியத்தில் பைபிள் சாராம்சமாக கரைந்துள்ளது. ஆனால் முறையாக ஓர் அறிமுகம் , தொடர் வாசிப்பு பலருக்கும் இங்கே இருக்காது.”
தமிழ் நாட்டில் ஒருவன் மகாபாரதத்தை, ராமாயணத்தை, கீதையை பயில வேண்டுமென்று சொன்னால் ஒரு கூட்டத்தார் இஞ்சி தின்ற குரங்கைப் போல் குதிப்பார்கள். ரவி சுப்ரமணியனின் ஜெயகாந்தன் பற்றிய ஆவணப் படத்தில் அத்தகையோரை ஜெயகாந்தன் கிண்டலடித்திருப்பார். இதற்கு நாம் பெரியாரின் வறட்டு நாத்திகத்தை மட்டும் குறை சொல்லிவிடக் கூடாது. மேற்கத்தியப் பல்கலைக் கழகங்களில் கிறிஸ்தவத்தை வரலாறாகவும் இறையியலாகவும் படிக்கும் மரபுண்டு. இரண்டும் வெவ்வேறு தளத்தில் செயல்படும் அதே சமயம் அதற்கான அறிவுலக சட்டகம் பொதுவானது. கிறிஸ்தவ இறையியல் கல்லூரிகளின் பாட முறைமையேக் கூட மௌடீகமான ஆசாரவாதத்தை நிறுவுபவை அல்ல இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலான இறையியல் கல்லூரியில் ஒரு சாதாரணர் கூட சேர்ந்து படிக்க இயலும். அம்மாதிரி இறையியல் கல்லூரிகளில் கூட பைபிள் பயிற்றுவிக்கப்படும் விதமே அலாதியாக நவீனக் கல்வியின் சட்டகத்துக்குள் இருக்கும். நவீனக் கல்வியின் ஊற்றுக் கண்ணே கத்தோலிக்கமும் சீர்திருத்த கிறிஸ்தவமும் தானே !! இம்மரபு இந்திய மரபு அல்ல. சமீபத்தில் சில பல்கலைக் கழகங்களில் இம்மரபை இந்து மதம் சார்ந்த பட்டங்களுக்குப் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக இக்கருத்துக்கு பல மறுப்புகள் வரலாம். உரை எழுதும் மரபு, ஒவ்வொரு பக்தி இலக்கியத்திலும் மற்றொன்று பற்றியக் குறிப்புகளை சுட்டிக் காட்டுவார்கள். எலைன் பேகக்ஸின் (Elaine Pagels) எளிமையான “Why we need religion” அல்லது சி.எஸ்.லூயிஸின் “Not mere Christianity” மாதிரியான புத்தகங்கள் உருவாக்க நமக்கு வேறொரு மரபு தேவையாயிருக்கிறது. இந்த பின்புலத்தில் இருந்து வருகிறார் சிறில் அலெக்ஸ் போன்றவர். (எனக்கு அவர் பேஸ்புக் நண்பர் மட்டுமே). ஜெயமோகனே சங்கரர் பற்றியும் கீதைப் பற்றியும் உரையாற்றிய போது மரபு உரைகள் ஒரு சாதாரணன் வீரமணியின் “கீதையின் மறுபக்கம்” நூலுக்கு மரபான உரைகளின் வழியே பதில் சொல்ல தத்தளிப்பதைச் சுட்டிக் காட்டி இருப்பார்.
“ஆலயக் கலை முகாம்” அருமை நண்பர் ஜெயக்குமார் நடத்திய போது இல்லாத ஒரு சங்கடம் ஜெயமோகனுக்கு பைபிள் அறிமுக முகாம் நடத்தும் போது இருக்கிறது அதனால் தான் ஒன்றுக்கு இருமுறை இது மதம் சார்ந்த நிகழ்வல்ல என்று தெளிவுப் படுத்துகிறார். பெரியாரிய வறட்டு நாத்திகர்கள் கீதை பயிலும் முகாம் என்றதும் முகம் சுளிப்பார்கள், இந்துத்துவர்களோ “அது மத நூல் மட்டுமன்று” என்று இறுமாந்து சொல்வார்கள். இப்போது பைபிள் வகுப்பென்றால் ஜெயமோகனை ஜெபமோகனென்று இந்துத்துவர்கள் வசைப் பாடுகிறார்கள்.
பெர்னார்ட் ஷாவின் ‘பிக்மேலியன்” நாடகத்தில் பூ விற்கும் பெண்ணொருத்தி ஆங்கிலத்தை கொச்சையாகப் பேசுவதை கண்டிக்கும் ஹென்றி ஹிக்கின்ஸ் கதாபாத்திரம் “நீ கொச்சையாகப் பேசி அவமதிக்கும் மொழி எப்பேற்பட்ட மொழி தெரியுமா? அது ஷேக்ஸ்பியர், மில்டன், பைபிளின் மொழி” என்பார். அங்கே பைபிளை ஷா சேர்த்ததற்கு காரணம் பைபிளின் கிங் ஜேம்ஸ் பிரதி (King James Version) ஆங்கிலத்தில் பேரிலக்கியமாகவேப் போற்றப்படுகிறது. அதன் மொழி வளம் அப்படி. “God’s Secretaries” புத்தகம் அதனை அறிந்துக் கொள்ள நல்லதொரு புத்தகம். தமிழ் விவிலியம் எழுதப்பட்டதே மிகச் சுவையான வரலாறு. ஹெப்ஸிபா இஸ்ரேலின் “Religious Transactions in Colonial South India: Language, Translation, and the Making of Protestant Identity” அவ்வரலாற்றை கூறும் ஒரு நல்ல புத்தகம். (அவர் மிஷனரிகளின் மொழிமாற்ற முயற்சிகள் குறித்தும் அதன் பண்பாட்டு தாக்கம் பற்றியும் அநேக ஆய்வுகள் செய்தவர்).
ஒரு பெரியாரிய வறட்டு பகுத்தறிவாளர் (அவர்கள் எல்லாவற்றிலும் வறட்டுத் தனம் உடையவர்களே) எகிப்திலிருந்து யூதர்கள் 40 வருடங்கள் தங்கள் தேசத்தைத் தேடி 40 ஆண்டு அலைந்த கதையை ஒரு பூகோள வரைபடம் போட்டு 30 நாளில் போக வேண்டிய இடத்துக்கு ஆண்டவர் வழிக் காட்டுதலில் 40 ஆண்டுகள் எடுத்துக் கொண்டனர் என்று நக்கலடித்தார். இம்மாதிரி நக்கல்களை பெரியாரிய பகுத்தறிவு வேடதாரி கிறிஸ்தவர்களும் செய்து பார்த்திருக்கிறேன். அம்பேத்கரோ மோசஸை ஒரு பெரும் படிமமாகப் பார்க்கிறார் ஏன்? அவருக்கு யூதர்களின் அந்த 40 ஆண்டு பயணம் அடிமைத் தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்ட இனக் குழுக்கள் தங்களை ஒரு தேசமாக மாற்றியமைத்துக் கொண்டார்கள் என்பதைப் புரிந்துக் கொண்டதோடு ஒரு மீட்பனாக மோசஸுக்கு நேரும் துயர் அவருக்கு தன்னைப் பற்றிய படிமமாகத் தெரிந்தது. பைபிளை கற்பதென்றால் கன்னிக்கு குழைந்தைப் பிறக்குமா, பரிசுத்த ஆவியிலே இட்லி வேகுமா போன்றவைகளைத் தாண்டி ஒரு மாபெரும் பண்பாட்டுக்குள் நுழைந்து பார்ப்பது. கிருஷ்ணன் கோபிகையரின் உடைகளைக் கவர்வதை ஒரு கிறிஸ்தவ இறையியலாளர் ஆண்டவனிடம் சகலத்தையும் ஒப்படைப்பதென்று விளக்கிப் படித்திருக்கிறேன். மத காழ்ப்புகளும் மாச்சர்யங்களும் அற்ப நம்பிக்கையாளர் கைக் கொள்வது நல்லதோர் இறை நம்பைக்கையாளரோ இறையியலாளரோ செய்யக் கூடியதல்ல.
டால்ஸ்டாயையும் மேற்கத்திய ஓவியங்களையும் புரிந்துக் கொள்ள பைபிளின் அறிமுகம் தேவை என்கிறார் ஜெயமோகன். காந்தியைப் புரிந்துக் கொள்ளவும் பைபிள் மிக மிக அவசியம். இந்தியர்களை விட காந்தியின் மேன்மையை நன்குணர்ந்தவர்கள் மேற்கத்திய ஆய்வாளர்களும் கிறிஸ்தவ இறையியலாளர்களும் தான் என்பது என் வாசிப்பின் வழி நான் வந்தடைந்த முடிவு. இந்து சாஸ்திர விற்பண்ணர்கள், சங்கராச்சார்யார்களை விட மிக அதிகமாக காந்தியை அணுகி காந்தியிடம் பயின்றவர்களும் விவாதித்தவர்களும் கிறிஸ்தவர்கள் என்றால் மிகையில்லை.
பொதுவாக மனிதர்களுக்கு தங்கள் சமூகத்தைத் தாண்டி அடுத்தவர் சமூக பண்பாட்டுத் தளம் பற்றியப் புரிதல் குறைவு. இந்தியாவில் இந்துக்களிலேயே தத்தம் சாதி வழக்கம் தாண்டி மற்றவர்கள் பற்றியப் புரிதல் மிகக் குறைவு. கிறிஸ்தவம் பற்றி மிகச் சிறிய அறிமுகம் கிறிஸ்தவக் கல்வி நிலையங்களில் பயின்றவர்களுக்கு உண்டு ஆனால் அது மிக மிக மேம்போக்கானது. அந்த மேம்போக்கானப் புரிதல் கூட இஸ்லாம் பற்றிக் காண்பதரிது. இந்த புரிதல் இடைவெளி அநேக சச்சரவுகளுக்கு வழி வகுக்கிறது. நாம் சாராத வேறு பண்பாடுகள் குறித்து குறைந்தப் பட்சம் ஒரு புரிதல் வேண்டும். பைபிள் வகுப்புகளை அடுத்து குர்—ஆன் வகுப்புகளை முன்னெடுக்கப் போவதாக ஜெயமோகன் கூறியிருப்பது மிகச் சிறப்பு. குர்-ஆன் எழுதப்பட்ட விதம் குறித்து சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் “The One and the Many: The Early HIstory of the Qur’an” முக்கியமானதொரு புத்தகம்.
டால்ஸ்டாய், மேற்கத்திய ஓவியங்கள், காந்தி ஆகியவற்றை புரிந்துக் கொள்ள பைபிள் உதவும் என்பதைத் தாண்டி எந்த மதமும் அளிக்கக் கூடிய தத்துவச் சிக்கல்களும் வாழ்வியலுக்கான வழிக் காட்டுதலும் பைபிளிலும் உண்டு. அவற்றை நாம் இறை நம்பிக்கையாக பயில வேண்டிய அவசியமே இல்லை. யோபு, மலைப் பிரசங்கம், தொலைந்து போன மகனின் மீட்சிக் கதையெல்லாம் கொஞ்சமேனும் சிந்திக்கும் யாரும் ரசிக்கவும் கற்கவும் வேண்டியதே.
பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் மத நூல்களை ஒரு வாழ்க்கையாக பாவித்து வாழ்க்கை வரலாறு நூல்கள் வெளியிட்டிருக்கிறது. கீதையின் வாழ்க்கை வரலாறு (இது குறித்து நீண்ட பதிவொன்று எழுதி இருக்கிறேன் சுட்டி முதல் கமெண்டில்), யோக சூத்திரத்தின் வரலாறு என்ற வரிசையில் யோபு, Exodus, குறித்தும் வரலாறுகள் வெளியிட்டிருக்கிறார்கள். மத நூல்களப் பற்றி எத்தனையோ விதங்களில் பேச இயலும்.
இவ்வகுப்புகளை ஜெயமோகன் முன்னெடுப்பது இந்துத்துவத் தரப்பில் எதிர்ப்பை சந்திக்கும் வேளையில் மற்றவர்களும் கேள்விக் கேட்டிருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. கிறிஸ்தவர்களின் மத மாற்ற முயற்சிகள் காந்தி முதல் ஜெயமோகன் வரை காட்டமாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ மதமாற்றம் குறித்து ஜெயமோகன் பேசியக் காணொளி ஒன்றை பலர் என்னிடம் முன் அனுப்பியிருக்கிறார்கள். அவரின் அக்கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. காணொளி அனுப்பியவர்களுக்கு நான் சொன்ன பதில், “கிறிஸ்தவ மத மாற்றம் குறித்து அது போல் பேசுவதற்கு ஊருக்கு பத்துப் பேர் இருப்பார்கள். இன்றிலிருந்து 30-40 வருடம் கழித்து அவரின் இக்காணொளி காணாமல் போயிருக்கும் ஆனால் தமிழ் விக்கியில் பல கிறிஸ்தவ வரலாற்றாசிரியர்களே அறியாத ஆளுமைகள் குறித்து அவர் தீவிரத்துடன் ஆவணப்படுத்தி இருப்பது 30-40 ஆண்டுகள் கழித்தும் நிற்கும், அது தான் ஜெயமோகனின் பங்களிப்பாக கிறிஸ்தவர்கள் காண்பார்கள்”.
தலித்திய மதமாற்றங்கள் குறித்து மிக மிகத் தவறான கற்பிதங்கள் பொது தளத்தில் இருக்கின்றன. இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்களுக்கு வெளியே கிறிஸ்தவம் செழித்து வளர்ந்தது தமிழகத்தில் தான், முதன்மையான காரணம் தலித்துகளின் மத மாற்றம். அந்த வரலாறு குறித்துத் தனியாகவேப் பேச வேண்டும். தலித்தியப் பார்வையில் பைபிள் பற்றி ஆராய வேண்டும்.
ஜெயமோகனின் சங்கரர், கீதை உரைகள் சில மணி நேரங்கள் நீள்பவை, அவற்றை கேட்டு, குறிப்பெடுத்து விரிவாகவே எழுதியிருக்கிறேன். அவற்றுக்கானச் சுட்டிகள் முதல் கமெண்டில், கீதையின் வரலாறு பற்றிய பதிவின் சுட்டியோடு. இவற்றை இங்கே அடிக் கோடிட்டு நான் சொல்வதற்கு காரணம் பைபிள் வகுப்பு மட்டுமல்ல கீதை வகுப்பையும் வரவேற்றிருக்கிறேன், பதிவு எழுதி கவனப்படுத்தி இருக்கிறேன் என்று சுட்டுவதற்காகவே.
நண்பர் சிறில் அலக்ஸுக்கும் இவ்வ்வகுப்புகளை சாத்தியப்படுத்தும் ஜெயமோகனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
அரவிந்தன் கண்ணையன்