சில்லறை-கடிதம்

அன்பின் ஜெ.எம்.,

விவேக் ஷன்பேக்கின் சில்லறை ,எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும்,அதிசயத்தையும் கொடுக்கும் கதையாக அமைந்து விட்டது.
காரணம் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் அம்மாவுக்கு இதே போல-ஒன்று விடாமல்-கணக்கெழுதும் பழக்கம் இருந்திருக்கிறது.அவர்கள் தலைமை ஆசிரியையாக இருந்தவர்.’50களில் அவருக்குக் கிடைத்த 60,70 ரூபாய் சம்பளத்தைச் சிக்கனமாய்ச் சேமித்துக் குடும்பத்தை நடத்த வேண்டும் என்னும் எண்ணத்தில் அந்தப் பழக்கம் ஏற்பட்டதா..அல்லது அம்மாவின் மூதாதையர் யாருக்கும்(நான் யாரையும் பார்த்ததில்லை)அந்தப் பழக்கம்  உண்டா,தெரியாது.
அம்மா 76 வயதில் நோய்ப் படுக்கையில் விழும் வரை இப் பழக்கம் அவர்களிடம் தொடர்ந்ததோடு நானும் அவ்வாறே செய்யுமாறு அவர்களால் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டேன்..

கதையில் வரும் அதே வகையில் அவர்கள் எதிலும் எந்தக் கஞ்சத் தனமும் காட்டியதில்லை;எதை வேண்டுமானாலும் வாங்கலாம்;நம்மால் முடிந்த அளவு செலவழிக்கவும் செய்யலாம்;ஆனால் எதற்கும் எழுதப்பட்ட கணக்கு வேண்டும் என்பதை உறுதியான கொள்கையாகச் சாகும் வரை அவர்கள் கடைப் பிடித்தார்கள்.

அவர்கள் உயிரோடு இருந்த சமயங்களில் அந்தமாதிரிக் கணக்கு வழக்குகளில் நான் சற்று நீக்குப் போக்குக் காட்டினாலும் -அது என்னவோ தெரியவில்லை,அவர்களின் மரணத்திற்குப் பிறகு -அது கட்டாயம் செய்தாக வேண்டிய ஒரு விஷயம்..அதுவும் அவர்களின் நினைவாக- என்பது போன்ற அசட்டுத்தனமான அப்செஷன் என்னைத் தொற்றிக் கொண்டது..அதன் பிடியில் 12 ரூபாய்க் கணக்குக்கு விழி பிதுங்கிப் போனது போல நானும் முட்டி மோதித் தவித்த சில கணங்கள் உண்டு..

இப்போது 5,6 ஆண்டுகளாகத்தான் – அந்தக் காரியம்,அவர்கள் நினைவுக்கு ஆற்றும் அஞ்சலி என்பது போன்ற மூடத்தனத்திலிருந்தும்,அசட்டுத்தனத்திலிருந்தும் விடுதலை பெற்று நிம்மதிக் காற்றை சுவாசிக்கிறேன்…
சுகமாகப் பறப்பது போல உணர்கிறேன்..

இக் கதை என் சொந்த வாழ்வின் பிரதியாகவே எனக்குப் படுகிறது…

அதைப் பகிரவே இக் கடிதம்.

எம்.ஏ.சுசீலா

புதுதில்லி

 

அன்புள்ள சுசீலா

நானும் பலகுடும்பங்களில் இவ்வழக்கத்தைப் பார்த்திருக்கிறேன். நான் என்ன நினைத்திருந்தேன் என்றால் ஏதோ ஒருவகையில் இது பிரிட்டிஷ் ஆட்சி நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்ட குடும்பங்களில் உள்ள மனப்பழக்கம் என. ஆனால் பின்னர் பல தனிநபர்களைப்பார்க்கும்போது பலதலைமுறைகளாக இவ்வழக்கம் இருப்பது தெரியவருகிறது. வியாபாரச்சாதிகளில் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைக்கும் வழக்கம் இருந்தது. 1700களைச்சேர்ந்த பைசாக்கணக்குகள் இன்றும் கிடைக்கின்றன.

நடுத்தர வர்க்கத்தின் எப்போதுமுள்ள பாதுகாப்பின்மை உணர்வே இதற்கு அடிப்படை. 1800களில் நடுத்தரவர்க்கம் பெரும்பஞ்சங்களின் விளைவாகப் பயங்கரமான அடிகளைப் பெற்றிருக்கலாம். அதிலிருந்து உருவான பாதுகாப்பின்மையாக இருக்கலாம். மிக அவசியத் தேவைக்குமேல் உள்ள ஒவ்வொரு காசையும் சேமிப்பவர்களாகவே நான் என்னைச் சுற்றிலுமுள்ள மனிதர்களைப் பார்க்கிறேன். என் அலுவலக வாழ்க்கையில் நான் கண்ட பலர் உணவு உடை உறைவிடம் மற்றும் அவசிய சமூகக் கடமைகளுக்கு மேலாக மனமகிழ்ச்சிக்காக எதையுமே செலவிட்டறியாதவர்கள். அதுவே இந்திய மனநிலை.

அந்தமனநிலையை உதறுவதே புதிய பொருளியல் விடுதலை என்று சொல்லப்படுகிறது என்று ஷன்பேகின் கதை காட்டுகிறது போலும். அதை உதறியதுமே அள்ளி வீசிச் செலவழிக்கும் மனநிலை வருகிறது. அந்த வீடு மற்றும் சீனப்படங்களைப்பற்றிய குறிப்பு . அந்த மனநிலை வந்ததுமே சம்பாதிக்கும் வெறி வருகிறது. இரவுபகலில்லாத உழைப்பில் சிக்கிக்கொள்ளும் மனநிலை வாய்க்கிறது. ஒட்டு மொத்தச் சமூகமே பொருளியல் வெறியில் இயந்திரவேகத்தில் செயல்பட ஆரம்பிக்கிறது

சில்லறைமனநிலையை உடைத்து வரும் விடுதலை. சில்லறை என்று எதைச்சொல்கிறார் என்பதுதான் கதை

ஜெ

முந்தைய கட்டுரைமேற்குநாடுகளின் ஆதிக்கம் வீழ்கிறதா?
அடுத்த கட்டுரைபிரபஞ்சனும் சங்ககாலமும்