அஜிதனின் சிறுகதைத் தொகுதியான ‘மருபூமி’ வெளியீட்டுவிழா. அஜிதன் எழுத ஆரம்பித்தே ஓராண்டுதான் ஆகிறது. என் அறுபதாவது அகவை விழாவின்போது நான் மகிழும் ஒன்றைச் செய்வதன் பொருட்டு எழுதப்பட்டது மைத்ரி. அதன்பின் சென்ற 2023 ஜனவரியில் மலேசியா வல்லினம் இதழில் அஜிதனின் முதல் சிறுகதை ஜஸ்டினின் நியாயத்தீர்ப்பு வெளிவந்தது. ஓராண்டில் இரண்டு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுதி. இரண்டு நாவல்களும் இரண்டு பதிப்புகளாகிவிட்டன என்பதும் அரிய நிகழ்வே.
விழாவின் எல்லா உரைகளும் மிகச்சிறப்பானவையாக இருந்தன என்பது உருவாகிவரும் இலக்கியச் சூழல் பற்றிய மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. தமிழ்ப்பிரபா, சுசித்ரா, அகரமுதல்வன் ஆகியவர்களின் இயல்பான நட்புணர்வு கொண்ட உரைகள். சம்பிரதாயங்களே இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் புதியதாக ஒன்றை வாசகர்களிடம் சொல்ல வந்துள்ளனர். சுசித்ராவின் உரை மிகச்சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட ஒன்று.
ஓர் இலக்கிய நிகழ்வு என்பது அளவால் அல்ல, தீவிரத்தால்தான் மிகப்பெரிய நிகழ்வாக ஆகிறது. இந்த வெளியீட்டுவிழாவை அஜிதனின் நண்பராக அகரமுதல்வன் ஒருங்கிணைத்தபோது உரைகள் இத்தனை நேர்த்தியானவையாக இருக்கும் என நான் மெய்யாகவே எதிர்பார்த்திருக்கவில்லை. நன்று, நம் இலக்கியக்கூட்டங்கள் இவ்வண்ணம்தான் நிகழவேண்டும். வந்தமர்ந்த ஒவ்வொருவருக்கும் ஓரு சிந்தனைத் தூண்டல் அமையவேண்டும்.
பாவண்ணன் 1997 வாக்கில் பத்மநாப புரத்தில் என் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அஜிதன் யூகேஜி மாணவன். அவர் அவனை தூக்கிக் கொண்டே அலைந்தார். நான் அவரிடம் கீழே விடுங்க, அவன் பெரிய பையன் என்றேன். அவர் பரவாயில்ல என்று சுமந்துகொண்டிருந்தார். அஜிதனிடம் நீ இறங்குடா, மாமாவுக்கு கை வலிக்கும் என்றேன். உடனே கைக்குழந்தையின் முகம் காட்டினான். அன்றே அவன் மாபெரும் நடிகன். பாவண்ணன் அஜிதனின் நூல் பற்றிய உரையாற்றக் கேட்கையில் அந்நினைவுகள் எழுகின்றன. அவருக்கே வேடிக்கையாகத்தான் இருந்திருக்கும்.
தமிழ்ப்பிரபா உரை
சுசித்ரா உரை
அகரமுதல்வன் உரை
பாவண்ணன் தலைமையுரை