அன்புள்ள ஆசிரியருக்கு,
காடு நாவல் பற்றி நான் எழுதிய ஆய்வுக்கட்டுரை South Asian Review என்னும் கல்வித்துறை சார்ந்த ஆய்விதழில் வெளியாகியுள்ளது. நவீனத் தமிழ் மனம் ஒன்றின் அடியாழங்களில் இருந்து நீண்ட தமிழ் மரபின் அழகியல்கூறுகள் எவ்வாறெல்லாம் மீண்டெழுகின்றன என்பதையே காடு நாவலின் மூலமாகத் தேட முயன்றிருக்கிறேன். கட்டுரையை இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்வதற்கான இணைப்பை இங்கே தந்துள்ளேன்.
https://www.tandfonline.com/eprint/JWJBQKIPRUQESDXQQJ7N/full?target=10.1080/02759527.2023.2298612
காடு நாவலை நான் முதன்முதலாக வாசித்தது 2015-ல். அன்றிலிருந்தே அது வறனுறல் அறியாமல் என்னுள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. எனது சொந்த மண்ணான குமரி நிலத்தை நான் நெருங்கித் தீண்டியது இந்நாவலின் ஊடாகத்தான். நாவலை வாசித்து முடித்த நாட்களில் தான்தோன்றியாக நண்பன் ஒருவனுடன் குமரியில் சுற்றிக்கொண்டிருந்தேன். அசம்பு மலைப்பகுதியில் உள்ள காட்டுக்குள் ஒரு பயணம் சென்று வந்தேன். மேலாங்கோட்டு அம்மன் கோவிலில் கைகூப்பி நின்றிருந்தேன். இன்று திரும்பிப் பார்க்கும்போது என்னை எதோ ஒரு வகையில் தொடர்ந்து செதுக்கிக்கொண்டே இருக்கும் நாவல் இதுவென்றே தோன்றுகிறது.
ஒரு வாசகனாக இந்நாவல் எனக்கு ஏற்படுத்திய அனுபவங்களை முழுமையாக இந்த ஆய்வுக்கட்டுரையில் கொண்டுவந்துவிட முடியவில்லை. ஆனால், முக்கியமான சிலவற்றைச் சொல்லமுடிந்திருக்கிறது என்னும் திருப்தியும் ஏற்படுகிறது. ஒரு தேர்ந்த தமிழிலக்கிய வாசகர் இந்தக் கட்டுரைக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவார் என்றே இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தக் கட்டுரையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று தோன்றியது. நீண்ட தயக்கத்துக்குப்பின் இன்று அதைச் செய்துவிட்டேன். இதன் குறைகள் அனைத்திற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதுவே எனது பொன்னிறப் பாதை என்ற புரிதல் இப்போது இருப்பதால், எல்லா குறைகளையும் நிவர்த்தி செய்துகொண்டு முன்னகர முடியும் என்ற ஊக்கம் என்னிடம் இருக்கிறது. அது நீங்கள் வழங்கிய ஊக்கம் ஜெ. நன்றி.
அன்புடன்,
ஆல்ஸ்டன்.