பனிமனிதனும் இயற்கையும்- வாசிப்பு

பனிமனிதன் புதிய பதிப்பு  வாங்க 

பனிமனிதன் மின்னூல் வாங்க

கால ஓட்டத்தில் மின்னல் வேகத்தில் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். அதில் அறிவியலும் ஆய்வுகளும் அதை விட மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதில் இறந்த காலத்தைப் பற்றி அறியவும் எதிர்காலத்தைப் பற்றி அறியவும் பல ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் நாம் தற்போது வாழும் காலத்திற்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பரிணாம வளர்ச்சிகளை அறிய அவ்வப்போது ஆவல் கொள்வதும் உண்டு….

இந்தப் புத்தகத்தைத் திறந்தவுடன் ஏதாவது ஸ்பை த்ரில்லர் அல்லது சூப்பர் மேன் கதை போன்று இருக்கும் என நினைத்து தொடங்கினேன். புத்தகத்தின் சாராம்சம் நான் எதிர்ப்பார்க்காத அளவிற்கு இருந்தது. ஒரு கதையாக படிக்கலாம் என நினைத்து ஆரம்பித்தது பல தகவல்களை தரும் பெட்டகமாக அமைந்தது இந்த புத்தகம்.

லடாக் எல்லைப்பகுதியில் இமயமலை சாரல்களில் ஒரு பெரிய காலடி தடம் தென்படுகிறது.அதைப் பற்றி ஆர்வம் கொண்டு அதை ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்காக ராணுவ அதிகாரியான மேஜர் பாண்டியன் முயல்கிறான். மானுடவியல் மற்றும் மனித பரிணாம வளர்ச்சிகளை ஆய்வு செய்யும் ஆர்வம் கொண்ட டாக்டர் திவாகரும் இணைகிறார். இந்த திவாகர் என்ற பெயர் ஒரே இடத்தில் மட்டும் தான் வருகிறது. மீத புத்தகம் முழுவதும் டாக்டர் என்றே குறிப்பிடப்படுகிறார். இவர்கள் இருவருடனும் அப்பகுதி மலைக்கிராம சிறுவனான கிம் இணைகிறான்.

மூவரும் இணைந்து பனி மனிதன் எனப்படும் பாதி பரிணாம வளர்ச்சிபெற்ற, ஒரு மனிதனும் அல்லாத மிருகமும் அல்லாத, ஓர் உயிரினத்தை தேடிச் செல்கின்றனர். அப்படி செல்லும் வழியில் அவர்களுக்கு பல பல தகவல்கள் அனுபவங்கள் கிடைக்கிறது. புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு தகவல் பெட்டகம் தந்திருக்கிறார் ஆசிரியர்.

பயணம் செல்லும் வழியில் பனி சூழ்ந்த மலைகளின் இயற்கை அமைப்பையும் அவற்றின் தன்மைகளையும் டாக்டர் விளக்க விளக்க பாண்டியன் அறிந்து கொள்கிறான். கிம் ஒரு பௌத்த மடாலயத்தில் முறையாக பயிற்சி பெற்று புத்த மதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவனாகவும் இருப்பதை அறிகிறான். செல்லும் வழியில் கிடைத்த மிகப்பெரிய நீலக்கல் வைரத்தை வேதியல் வெடி வைத்து தகர்த்து கொண்டு செல்ல திட்டமிட்டு பிறகு அது முடியாமல் தனது நோக்கம் சிதறிவிடும் என தவிர்த்து விடுகிறார்கள். இங்கேயும் ஒரு தகவல் பெட்டகத்தை தந்திருக்கிறார் ஆசிரியர். செல்லும் வழியில் பல பல அனுபவங்கள் பெறுகின்றனர் மூவரும்.

ஒளி மற்றும் ஒலி, பூமி காற்று பனி வெப்பம் மற்றும் இயற்கை பேரழிவுகள், மனிதன் தோன்றிய விதம் அவனது உடல் அமைப்பு பல லட்சம் ஆண்டுகளாக மெல்ல மெல்ல தகவமைத்த விதம், குரங்கில் இருந்து மனிதன் தோன்றிய வளர்ச்சிப் பாதை, அதனூடே தோன்றிய நாகரிகம், பாறைகள், பனி மூடும் சூழ்நிலைகள், பாரிசில் பூமியின் ஆழத்தில் புதைக்கப்பட்ட வெப்பநிலைமானி போன்ற பல தகவல்களை வரிசை வரிசையாக ஆசிரியர் டாக்டர் எனும் கதாபாத்திரம் மூலம் தந்து கொண்டே இருக்கிறார்.

இந்த மூவர் குழு வழியில் புத்த பிக்குகளை சந்திக்கிறது. அவர்கள் தங்களின் அடுத்த தலைமை புத்த பிக்குவை காண முயல்கின்றனர். இறுதியில் அந்த தலைமை புத்த பிக்கு அந்தச் சிறுவன் கிம் தான் என தெரிய வருகிறது. இவர்கள் தேடிப்போன அந்தப் பனி மனிதன் தன்னை காண இந்த மூவரையும் அங்கு வரவழைத்த நிகழ்வும் புரிய வருகிறது.

மனித இனத்தின் கூறுகளை பகுதி பகுதியாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு செய்தியாக கோரி ஒரு நிறைவான நூலை தந்திருக்கிறார் ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள். இதில் புரிந்து கொள்ளும் படி கதை வடிவில் ஒரு பயணம் செல்வது போல நாம் பயணிக்க முடிகிறது.

பனிமனிதன்பயணிக்க வேண்டிய மனிதன்

சேதுராமன்

முந்தைய கட்டுரைஅச்சுறுத்தும் முடிவின்மை- கடிதம்
அடுத்த கட்டுரைஎம்.கோபாலகிருஷ்ணனின் தீர்த்தயாத்திரை- கா.சிவா