அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..,
உங்கள் நலம் அறிய விருப்பம் சார். “கன்னியாகுமரி” யை நேற்று தான் படித்து முடித்தேன். மிகச்சிறந்த உள்ளோட்டத்தை அடிநாதமாக வைத்து சிலிர்ப்பை ஏற்படுத்தி விட்டது நாவல் . இதன் சுவாரசியமான நடை, ரவி என்ற கதாபாத்திரம் வழியாக நகர்வுகளை சொல்லும் முறை; ஆசிரியரிடம் கை குலுக்கி பாராட்ட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.
ஒருத்தர தன்னுடைய பெருந்தன்மையே இயல்பாக வைத்து அதனாலேயே அவரை தலை குனிய வைத்து .. யார் சார் இந்த விமலா ! கிரேட் ஹுமன் பெஇங். இதில் விமலா பேச்சிநூடக ஒரு கான்செப்ட் ஐ சொல்லுவாங்க “மத்தவங்கள பொருள் ரீதியாகவோ உணர்ச்சி ரீதியாகவோ ஏமாற்றமா இருந்தா எல்லாமே ஒழுக்கம் தான் . நான் புருஞ்சிகிட்டது இதுதான்” சத்தியமான வாக்கு.
(பொதுவாக ஒரு நாவலில் மின்னல் தெறிப்பான வார்த்தைகளை மட்டுமே கவனிப்பது என்னை பொறுத்தவரை சரி இல்லை ).ஆனால்
ஏன் என்று தெரியவில்லை இந்த வாக்கியம் ஒரு படிமம் மாதிரி எனக்குள் படிந்து விட்டது. அப்புறம் பிரவீனா , சினிமா நடிகை என்றால் அநேக விஷயங்களில் ரொம்ப சின்னதனமானவர்கள் என்ற பொதுவான பிம்பத்தை உடைத்து ஒரு மனிதாபிமான intellectual ஆக காட்டிய விதம் ஒரு புத்துணர்ச்சி அனுபவம்.மிக நுட்பமாக சில விஷியங்களை அலசும்போது இந்த நாவலை எழுதியது ஒரு ஆசிரியரா? அல்லது ஆசிரியையா ? என்று பாமரத்தனமான சந்தேகம் கூடவே தோன்றுகிறது.
கன்னியாகுமரி என்ற ஊருக்கு நான் இதுவரை போனதில்லை. ஆனால் அந்த ஊர் மிக பரிச்சயமான ஒரு நண்பரை போன்ற உணர்வை தந்தது நாவலை முடிக்கையில். இந்த நாவலை “பெரும்கனிவாக ” படைத்த உங்களுக்கும் கன்னியகுமரிகும் ரொம்ப நன்றி சொல்லி கொள்கிறேஅன்
—
Regards
dineshnallasivam
அன்புள்ள தினேஷ்
ந்ன்றி. கன்யாகுமரி என்னுடைய ‘சரளமான’ கதை கொண்ட நாவல்களில் ஒன்று. செறிவான சித்தரிப்பு முறைக்குப் பதிலாக சரளமான உரையாடல்கள் மற்றும் நிகழ்ச்சி விவரணைகள் வழியாக கதையை முன்னெடுப்பது அது. பொதுவாக உரையாடல்களை அமைப்பதிலேயே ஒரு கலைஞனின் தனித்தன்மையும் அவன் வாழ்க்கையை அவதானிக்கும் விதமும் சிறப்பாக வெளிபடுகிறது என்பது என் எண்ணம். உரையாடல்களை நிகழ்த்தும் கதாபாத்திரங்களின் குணச்சித்திரம், அவ்வுரையாடல் நிகழும்போதே உள்ளூர ஓடும் மனக்கொந்தளிப்புகள், உரையாடல் வழியாக அவர்கள் ஒருவரை ஒருவர் பகிர்ந்துகொண்டும் ஒளித்துக்கொண்டும் ஆடும் ஆடங்கள் ஆகியவை சிறந்த எழுத்தில் வெளிப்படும்– ஆனால் அவை சரளமும் நம்பகத்தன்மையும் குறையாமலும் இருக்கவேண்டும். தமிழில் புதுமைப்பித்தன், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், கி ராஜநாராயணன், ப.சிங்காரம் அசோகமித்திரன் போன்று தமிழின் மிகச்சிறந்த கலைஞர்களின் எழுத்தில் உரையாடல்களே பலம். அந்த அம்சத்தில் என் படைப்புகளில் கன்யாகுமரி முக்கியமானது என்பது என் எண்ணம்.
ஜெ
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்.
தங்களது இணைய தளத்தில் வரும் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். உணர்வில் பட்டத்தை, மறைக்காமல், ஒளிக்காமல் உள்ளது உள்ளபடி எழுதும் உங்களது நேர்மை பாராட்டுக்குரியது. தமிழிசையாகட்டும், இந்துத்வா ஆகட்டும், தனியார் சதைப்படுத்துதல் ஆகட்டும், மங்களூர் தாக்குதல் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் உங்களது கருத்தை மிகவும் தைரியமாக, போலித்தனமில்லாமல் சொல்கிறீர்கள். ’என் மீது எந்த வித முத்திரை விழுந்தாலும் பரவாயில்லை நான் என் மனதில் பட்ட உண்மையை, நேர்மையாகச் சொல்வேன்’ என்னும் உங்களது மனப்பாங்கு எழுத்தாளர்களிடத்தே மிக்க அரிதானது. பணத்துக்கும், புகழுக்கும் விலை போவதற்கு தயாராக ஒருசிலர் இத்துறையில் இருப்பதால் தான் பல உண்மைகள் இங்கே திரித்து வெளியாகின்றன. உங்களது நேர்மைக்கு என் வணக்கங்கள்.
அதுமட்டுமல்ல; நீங்கள் சில கடிதங்களுக்கு அளிக்கும் பதில்கள் – மனத் தெளிவையும், போலித் தனமில்லாமல், வாழ்க்கையை அதன் போக்கில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதையும் தெரிவிக்கின்றன. குறிப்பாக வாழ்வியல் குறித்த உங்களது அனுபவக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பொக்கிஷம். குழந்தை வளர்ப்பது பற்றிய உங்களது கட்டுரையைப் படித்த பின்புதான் என் மனைவி குழந்தையை குளிப்பாட்டுவது பற்றிய ஒரு தெளிவுக்கு வந்தாள். ( குழந்தைக்கு தற்போது ஐந்து மாதம். ஜெயஸ்ரீ என்று பெயர் வைத்திருக்கிறோம்) எம் போன்ற இளைஞர்களுக்கு உங்களது வாழ்வனுபவங்கள் ஒரு பாடம். அது குறித்தும் தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
இணையத்தில் எழுதுவதால் ஒன்றும் பணம் வரப் போவதில்லை. ஏற்கனவே பரவலாக அறியப்பட்ட உங்களுக்கு புகழ் ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனாலும் நல்ல பல விஷயங்கள் வாசகனைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே நீங்கள் எழுதி வருகிறீர்கள். இது வாசகர்கள் நன்றி பாராட்டக் வேண்டிய விஷயம்.
ஒரு காலத்தில் மனக் கொந்தளிப்புடன் வாழ்ந்தவருக்கு இவ்வளவு அமைதியும், பொறுமையும், தெளிவும், ஞானமும் எங்கிருந்து வாய்த்தன என எண்ணும் போது அது உங்கள் குரு நித்ய சைதன்ய யதியிடமிருந்து தான் என நான் எண்ணுகிறேன். குரு – சீடன் உறவு என்பது கடவுள் – பக்தன் உறவை விட உயர்ந்தது. உண்மையான குரு போதிப்பதில்லை. அதை விட அவர் வாழ்ந்து காட்டுகிறார். அந்த வாழ்க்கையிலிருந்து தனது வாழ்வானுபவங்களை மீள்பார்வை செய்து சீடன் ஞானமடைகிறான். இதுவும் உங்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒரு காரணமாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.
சமீபத்தில் ’நான் கடவுள்’ பார்த்தேன். நல்ல படம், கெட்ட படம் என்றெல்லாம் இதை வகைப்படுத்துவதை விட, இது ஒரு பதிவு, நாம் அன்றாடம் சந்திக்கக் கூடிய, ஆனால் அறியாமல் புறந்தள்ளிப் போகின்ற மக்களின் வாழ்க்கையின் அப்பட்டமான நிதர்சனம் என்றே இதனைக் கூறலாம். மிக நல்ல தைரியமான முயற்சி. நீங்கள் கூறியிருப்பது போல சில இடங்களில் ’கத்திரி’ விழுந்துள்ளதால் சராசரி ரசிகனுக்கு பல விஷயங்கள் புரியாமல் போவதில் வியப்பில்லை. உங்கள் பதில்களைப் படித்துத் தான் நானும் படம் பற்றி நுணுக்கமான பல விஷயங்களில் தெளிவடைந்தேன். மென்மேலும் நீங்கள் கதை, வசனங்கள் எழுதி திரைப்படத்துறையிலும் சாதனை படைக்க வாழ்த்துகள்.
உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் என்று அசோகமித்திரனைச் சொல்லியிருக்கிறீர்கள். அவரது நேர்காணல் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தமிழ் ஆன்லைன்.காம்/தென்றல் இதழில் வெளியாகி இருக்கிறது. அதற்கான லிங்க் இதோ…
ஜஸ்ட் ரிஜிஸ்டர் செய்து படிக்கலாம்.
உங்களைப் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதை கீழே தந்திருக்கிறேன்.
*******
கே: உங்களது சமகால மற்றும் தற்கால எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார், யார், ஏன்?
ப: என்னைக் கவர்ந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். எனக்கு அதைச் சொல்வதில் தயக்கம் ஏதும் இல்லை. எனது சமகால எழுத்தாளர்களில் ஜி. சுவாமிநாதன், ஐராவதம் என்ற ஆர். சுவாமிநாதன் என இருவர் என் மனம் கவர்ந்தவர்கள்.
தற்காலத்தில் ஜெயமோகன். ஒருமுறை ஜெயமோகன் கணையாழிக்கு இரண்டு படைப்புகளை ஒன்றாக அனுப்பியிருந்தார். நான் அவரிடம் சொன்னேன். ‘நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். ஆனால் பத்திரிகைகளுக்கு இரண்டு கதைகளை அனுப்பி வைத்தால் அவர்கள் உடனே ஒன்றைத் திருப்பி அனுப்பி விடுவார்கள். அதுதான் அவர்களுக்குச் சுலபமான காரியம். ஆகவே அப்படிச் செய்ய வேண்டாம்’ என்று சொன்னேன். நான் ஓர் இடைவெளி விட்டு மற்றதைப் பிரசுரம் செய்தேன். வண்ணநிலவன், வண்ணதாசன் ஆகியோரைப் பிடிக்கும். எனக்குப் பிடித்தமான பல படைப்பாளிகள் இருக்கிறார்கள்.
*******
என்றும் அன்புடன்
அரவிந்த்
அன்புள்ள அர்விந்த்
நன்றி. அசோகமித்திரன் என்னைப்பற்றிச் சொன்ன சொற்கள் ஊக்கமூட்டுபவை.
எழுத்து என் யோக சாதனைகளுக்கு தடையாக இருந்தது. அது என் மனதில் பிம்பங்களைப்பெருக்கி என்னை சுழற்றியடித்தது. அப்படி அல்ல எழுத்தே என் யோகமாக இருக்க முடியும் என்று எனக்குக் காட்டியவர் நித்யா. எழுத்தை நான் என்னுடைய அகப்பயணமாகவே செய்கிறேன். அதில் நான் எந்த அளவு உண்மையாக இருக்கிறேன் என்பது பிறரைவிஅ எனக்கு முக்கியம். ஒருவர் தனியறையில் அமர்ந்து செய்யும் தியானத்தை பாவனையாக செய்ய ஆரம்பித்தால் அதனால் அவருக்கன்றி பிறருக்கு என்ன நஷ்டம்?
ஆகவே என் எழுத்தை எப்போதுமே வெளிப்படையாகவே முன்வைக்கிறேன். முத்திரைகளைப் பற்றி கவலை இல்லை. அவை மூலம் நான் இழப்பது ஒன்றும் இல்லை. அம்முத்திரைகளை நம்பி என் எழுத்தை ஒருவர் வாசிக்கமறுத்தாலோ தவறாக வாசித்தாலோ அது அவருக்கு மட்டுமே நஷ்டம். எனக்கு இந்த சமூகத்தில் இருந்து எழுத்தின் வழியாக ஈட்டுவதற்கும் எதிர்பார்ப்பதற்கும் ஏதும் இல்லை
பிறகென்ன, எழுதவேண்டியதுதான். எழுத்தே எழுத்தின் வழி. நோக்கம் எழுத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று
ஜெ
வணக்கம் குரு.,
“உள்ளான்” ஒரு இறை”விளையாடல்” என்று தான் தோன்றுகிறது. மகா சிவராத்திரியான இந்நாளில் தங்களின் வலைபக்கத்தில் மாணிக்கவாசகரின் வரிகளுக்கு விளக்கமளித்ததை வேறு எவ்வாறு எண்ணுவது? நான்கு வருடங்களுக்கு முன் ஈஷாவின் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்து,ஒவ்வொரு வருடமும் இந்நாளில் இரவு முழுவதும் விழித்திருந்து தியானம் செய்வது எனக்கு வழக்கம்,தொடர்ந்து முடியாதபோது வாசிப்பேன்.வாசிப்பதால் விழித்திருப்பது எனக்கு சுலபமான காரியம்.நன்மைகருதி இல்லாவிட்டாலும் ஒவ்வொருவருடத்தின் இந்நாளை தவறவிடாமல் பார்த்துக்கொள்கிறேன். ஆனால் இவ்வருடத்தின் சிறப்பு என்னவென்றால், உங்கள் வலைதளத்தில் அறிமுகம் செய்த வலைதளங்கள் தான். புராணங்களை வாசிப்பதில் அவ்வளவு ஈடுபாடில்லை. இந்த இரவை புராணவாசிப்பில் கழிக்க இறைவிருப்பம் கொண்டுள்ளதாக நினைத்துகொள்கிறேன்!! எனவே உங்கள் “உள்ளான்” ஒரு இறை விளையாடல் தானே?? நன்றி
பணிவன்புடன்
மகிழவன்.
அன்புள்ள மகிழவன்
செவ்வியல் தகுதி கொண்ட படைப்புகளை கையெட்டும் தூரத்தில் எப்போதுமே வைத்திருப்பது நித்ய சைதன்ய யதியின் வழி. கை தன்னிச்சையாக நீண்டு எடுக்கும் நூலை எப்போதும் வாசிப்பது. என் கையருகே கம்பராமாயணம் நாலாயிர திவ்ய பிரபந்தம் தேவாரம் திருவாசகம் சிந்தாமணி என முக்கியமான நூல்கள் உள்ளன. கை ‘தானாக’ நீளாது. அதற்கு ஓர் அகமனக் கட்டுப்பாடு உண்டு. அன்று சிவராத்திரி என்பதை ஏதோ மனமூலை நினைவு வைத்திருக்க வேண்டும்
ஜெ
**
அன்புள்ள ஜெ!
நான் ராமனுஜம்.திருநெல்வேலி மன நல மருத்துவர்.ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
எனக்குக் பதிலளித்தமைக்கு மிக்க நன்றி.என் வீட்டு இணையத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் என்னால் உடனே பதிலளிக்க முடியவில்லை.மன்னிக்க்கவும்(எல்லாம் உங்கள் பீஎஸ்ஸென்னெல் படுத்தும் பாடு).
நான் மிகச்சமீபத்தில் நெல்லை புத்தகக் கண்காட்சியில் தங்களது ஏழாம் உலகம் வாங்கிப் படித்தேன்.நானறிந்த வரை இது போல் எதார்த்தத்தை மூளையில் துருப்பிடித்த ஆணிகளைச் சொருகுவது போன்று கூறும் கதை வேறெதும் இல்லை.தினமும் மூளை வளர்ச்சி குறைபாடுள்ள மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பார்ப்பதால் உங்கள் படைப்புக்களில் (வி.புரம் ,ஊ.செந்நாய் விட) என் மனதிற்கு மிகவும் நெருங்கி வருகிறது.
எல்லோரும் பார்க்கிறோம். கலைஞன் மட்டுமே கவனிக்கிறான்.
(everybody looks. an artist observes). தீவிரமான உளவியல் சிக்கல்களை கலை அல்லது வேறு வழிகளில் உன்னதமாக மாற்றுவது (SUBLIMATION) பெரும் கலைஞனாலேயே முடியும்.
நீங்கள் ஒரு மகா கலைஞன் !!!
நன்றி
ராமனுஜம்
உங்கள் முந்தைய கடிதம் நவீன மருத்துவத்தின் போதாமைகள் சார்ந்து நான் எழுதியவற்றுக்கான எதிர்வினை என்று நினைக்கிறேன்.
ஏழாம் உலகம் குறித்த உங்கள் கருத்துக்களைக் கண்டேன். ஏழாம் உலகம் ஒரு நேரடி அனுபவத்தின் நினைவில் இருந்து எழுந்தது. மனிதர்களை என்ன செய்துவிடமுடியும் என்றுதான் அந்நாவல் முடிந்தபோது எனக்குப் பட்டது. இறைவனோ விதியோ இயற்கையோ மனிதனை வென்றுவிடமுடியாது. எங்கும் அவனால் வாழ்ந்துவிடமுடியும். எங்கும் அவனால் நேசத்தையும் நகைச்சுவையுணர்ச்சியையும் தக்கவைத்துக்கொள்ளமுடியும்…
ஏழாம் உலகம் என் தேடலின் ஒரு புள்ளி
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
ஆர்.கே. நாராயணனது எழுத்து பற்றிய உங்கள் பதில் மிக மிகச் சரியானது. யாரும் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவது. பல வருடங்களாக இதே நிலைப்பாட்டில் எனது நிலை உள்ளது. ஆனால் இவர் பற்றி யாரும் இவ்வாறு எழுதிப் படித்ததில்லை. நல்ல மனிதர். உயர்ந்த நிலையிலுள்ள நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொண்டவர் இந்து நாழிதளின் செல்ல எழுத்தாளர். இவர்கள் எல்லாம் ஏன் இவரது எழுத்தை இந்த அளவுக்கு சொல்கிறார்கள் என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்.
ஆனால் எனக்கு இவரது சகோதரர் ஆர்.கே. லக்ஷ்மணனை மிகவும் பிடிக்கும். அற்புதமாக காகங்களை கருப்பு மையில் நமக்கெல்லாம் காட்டியவர். சிறந்த கார்ட்டூனிஸ்ட் மற்றும் ஓவியர். ஆங்கிலோ இந்தியரான ரஸ்கின் பாண்ட்டின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.
அன்புடன்
ஆனந்த்
அன்புள்ள ஆனந்த்
ஆம், எனக்கும் ஆர் கெ லட்சுமணனை மிக மிக பீக்கும். அவரிடம் ஒரு தத்துவார்த்தமான சிரிப்பு எப்போதும் உண்டு.
ஆர் கெ நாராயணன் சாதாரண எழுத்தாளர் என்பதற்கான ஒரே ஆதாரம் அவரது தலைமுறையை தாண்டி அவர் ஆக்கங்கள் வாழமுடியவில்லை என்பதே
ஜெ
அன்புள்ள ராமானுஜம் அவர்களுக்கு