ஊரில் இருந்து காட்டுக்குச் சென்று, காட்டிலேயே வளர்ந்து, காட்டை கற்றுக்கொண்டு, ஆற்றல்மிக்கவனாக மீளும் கதைநாயகனின் கதை உலக இலக்கியம் முழுக்கவே உண்டு. மகாபாரதம் உட்பட பல செவ்வியல் நூல்களில் அதற்கான முன்வடிவங்கள் உள்ளன. மகாபாரதத்தின் வனபர்வம் காடு எனும் மாபெரும் கல்விக்கூடத்தின் கதைதானே?
பின்னர், பதினாறாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் கற்பனாவாதக் காலகட்டம் முதல் காடு மேலும் கற்பனைச் செறிவூட்டப்பட்டது. அது ஓர் இடமென்று அல்லாமல் ஒரு கூட்டுப் படிமமாக உருமாறியது அப்போதுதான். பிரிட்டிஷ் இயற்கைவாதம் காட்டைக் கொண்டாடியது. கடவுளின் கையொப்பம் இடப்பட்ட ஓவியம். இப்புவியை உருவாக்கிய அடிப்படை விசைகள் செயல்படும் நாடகக்களம்.
பிரிட்டிஷ் கற்பனாவாதமும், ஐரோப்பியர்களுக்குரிய சாகசமோகமும் இணைந்து ஒரு இலக்கியப்பேரலையையே உருவாக்கியது. அறியாத நிலங்களுக்குச் சென்று அங்கே போராடி வாழ்ந்து கற்றுக்கொண்டு புதையல்களுடன், அல்லது புதையலைவிட மேலான ஞானத்துடன் மீளும் நாயகர்களின் கதைகள் இருநூறாண்டுகள் மிக விரும்பிப் படிக்கப்பட்டன. ராபின்ஸன் க்ரூஸோ ஒரு தொடக்க உதாரணம். டிரஷர் ஐலண்ட் இன்னொரு உதாரணம்.
அந்த உளஎழுச்சியின் இன்னொரு வடிவமென டார்ஸான், ஃபாண்டம் உள்ளிட்ட சிறுவர்களுக்கான புனைவுகளைச் சொல்லலாம். அவை காடு என்னும் அபாயவசீகரம் கொண்ட வெளியைப் புனைகின்றன. ஆப்ரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் சென்ற ஐரோப்பியப் பயணிகள் மற்றும் படையெடுப்பாளர்கள் சென்று கொண்டுவந்த அனுபவப் பதிவுகள் ஐரோப்பாவில் மிக விரும்பிப் படிக்கப்பட்டன. பின்னர் அவை மிகைக்கற்பனைகளை உருவாக்கின. அவற்றிலிருந்து இந்த சிறுவரிலக்கியம் உருவாகியது.
ஆனால் காட்டுக்கு மீள்தல் என்பது ஒரு நவீனக் கரு. நவீனக் கலாச்சாரம் தொழிற்புரட்சி வழியாக வேரூன்றியபோதே அந்த ஏக்கம் மானுடக்கனவில் திரண்டுவிட்டது. நகரங்கள் ஒரு காலத்தில் உயர்குடிகள், அதிகாரம் கொண்டவர்கள் ஆகியோருக்கான இடங்களாக இருந்தன. ஆட்சிமையங்கள் என கருதப்பட்ட நகரங்கள் தொழிற்புரட்சியின்போது தொழில்- வணிகை மையங்களாக மாறின. அவற்றில் அடித்தளத்தினர், விளிம்புநிலையினர் உள்ளிட்ட மக்களை கொண்ட ஒரு நெரிசலன சமூகம் உருவாகியது.
தொழில்நகரங்களின் சமூகம் அழுக்கும், வறுமையும், நோயும், அடிமைத்தனமும் நிறைந்தது. தொழில்நாகரீகம் நகரங்களை மானுடக்குப்பைக்கூடங்களாக ஆக்கியது. அந்நகரங்களின் தொடக்ககாலச் சித்திரங்களை நாம் இரண்டு வகை நாவல்களில் காணலாம். சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய நாவல்களில் நகரங்களின் புற அழுக்கும் தாக்கரே எழுதிய நாவல்களில் நகரங்களின் ஆன்மிக அழுக்கும் சித்தரிக்கப்பட்டன.
அந்த நெரிசலும் இருளும் அளிக்கும் திணறல் காடுகளை ஒளிகொண்டவையாக மானுடக் கற்பனையில் மாற்றியது. இன்று சூழியலாளர் உள்ளிட்டோரால் முன்வைக்கப்படும் காடு என்னும் சித்திரம் அப்போது உருவானதுதான். முன்னர் காடு என்பது உயிர்வாழ்தலுக்கான போராட்டம் நிகழும் ஒரு வெளியாகவே உருவகிக்கப்பட்டது. தொழிற்புரட்சிக்குப்பின்னர்தான் அது ஒருவகை விடுதலைப்பரப்பாக, ஞானவயலாக கருதப்படலாயிற்று.
இன்று, உலகமெங்கும் மக்கள் காடுகளுக்கு ஓய்வெடுக்கச் செல்கிறார்கள். காட்டுக்குள் மாளிகைகள் , சுற்றுலாத்தலங்கள் அமைக்கப்படுகின்றன. உலக வரலாற்றில் என்றுமே இத்தனை மக்கள் காடுகளுக்குள் சென்றதில்லை என ராமச்சந்திர குகா அவருடைய Environmentalism: A Global History என்னும் நூலில் குறிப்பிடுகிறார். எதிர்காலத்தில் ஒருவேளை உலகின் முழு ஜனத்தொகையும் பலவகையான நகரங்களில் வாழ, ஓய்வுக்கும் கேளிக்கைக்குமான இடமாக காடு மாறக்கூடும்.
காட்டுக்கு, தொல்வாழ்வுக்கு நவீனஉலகில் இருந்து கதைநாயகன் சென்று அங்குள்ள மனிதர்களிடம் கற்று மீள்வது என்னும் கதைக்கரு வெவ்வேறு வகையில் உலகின் மகத்தான இலக்கியங்களுக்கு அடிப்படையாக இருந்துள்ளது. தேடும் ஒருவன், சென்றடையும் நிலம், அங்குள்ள மானுடர் என மூன்று புள்ளிகள் கொண்ட புனைவுப்பரப்பு அது. என் நினைவில் நூல்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன.
தல்ஸ்தோயின் கஸாக்குகள் அவ்வகை எழுத்துக்கான மிகப்பெரிய தொடக்கம். அதன் கதைநாயகன் திமித்ரி ஒலேனின் இலட்சியவாதமும் நகர்மேல் விலக்கமும் இயற்கைக்கான ஏக்கமும் கொண்டவன். அவன் சந்திக்கும் வேட்டைக்காரரான எரோஷ்கா மண்ணில் முளைத்த காட்டுமரம் போன்றவர். கட்டற்றவர், இயற்கையானவர், ஆகவே விழைவும் நட்பும் பகையும் எல்லாமே கலந்த மனிதர்.
அந்த இரண்டு கதைமாந்தரும் வெவ்வேறு வகையில் மீண்டும் மீண்டும் உலக இலக்கியத்தில் புனையப்பட்டுள்ளனர். உடனே நம் நினைவில் ஒத்துநோக்க வேண்டியவர்கள் நிகாஸ் கஸண்ட்ஸகீஸின் சலிப்புற்ற அறிவுஜீவியான பாஸிலும் அவன் முன் தொல்மானுட வீரியத்துடன் வந்து நிற்கும் சோர்பாவும்.
சோர்பா ஒரு காலகட்டத்தில் அமெரிக்க ஹிப்பி இயக்கத்தின் பைபிள் என்றே போற்றப்பட்டது. வாழ்வுவிருப்பு என்றும் ஹெடோனிஸம் என்றும் சொல்லப்பட்ட உணர்வுநிலை அதிலுள்ளதாக வகுக்கப்பட்டது. (ஆனால் அது உண்மை அல்ல. சோர்பா அந்நாவலில் தன் கட்டற்ற வாழ்விலிருந்து பரிணாம மாற்றமே அடைகிறான்)
அப்படியே உலக இலக்கியத்தின் பெரும்படைப்புகள் என நூறு நாவல்களை இச்சரடில் கோத்துவிடமுடியும். இந்த ‘டெம்ப்ளேட்’ சினிமாவுக்கு மிகமிக உகந்தது என்பதனால் ஏராளமான நல்ல படங்கள் இவ்வரிசையில் உள்ளன. இப்படிச் சொன்னதுமே என் மூளையில் உடனடியாக மின்னும் படம் என்ன என்று பார்த்தேன். கெவின் காஸ்ட்னரின் Dances with Wolves. அதில் செவ்விந்திய நிலத்தில் கதைநாயகனுடன் இணங்கும் ஓநாய் அந்நிலத்தின் பெரிய உருவகமாக என் மனதில் உள்ளது.
இக்கதைகள் அனைத்துடனும் இணைவதுபோல் ஏராளமான உண்மைக்கதைகளும் எழுதப்பட்டுள்ளன. டெர்ஸு உசாலா என்னும் உண்மைக்கதைக்கும் இந்நாவல்களுக்கும் உள்ள ஒற்றுமை என்பது இந்த மனநிலை இன்றைய மானுடத்தை இயக்கும் அடிப்படையான விசைகளில் ஒன்று என்பதற்கான சான்று.
சரவணன் சந்திரனின் புதியநாவலான அத்தாரோ அந்த வரிசையில் வரும் புனைவு. பெரும்பாலும் குடும்பம், ஊர், அரசியல் என்னும் மூன்று புள்ளிகளை விட்டு வெளியே நகராத தமிழிலக்கியப் பரப்பில் பலவகையிலும் புதிய வாசிப்பை வழங்கும் நாவல் இது. இதன் கதைக்களம் தெற்காசியாவில், சீனக்குருதி கொண்ட மக்கள் வாழும் ஒரு தீவு. அங்கே சென்றடையும் கதைநாயகன் அறியும் அகமும் புறமும்தான் இந்த நாவல்.
நாகரீகத்தின் ரத்தம்தோய்ந்த ஒரு புள்ளியில் இருந்து கதைநாயகன் கிளம்புகிறான். அதை மிகச் சுருக்கமாக ஆசிரியர் சொல்லிச் செல்கிறார். வறுமையான சூழலில் பிறந்த அவனை திருடி வளமான ஒரு குடும்பத்திற்கு விற்றுவிடுகிறார்கள். ஆனால் சட்டம் அவனைப் பிடுங்கி அவன் இயற்கைப்பெற்றோரிடம் ஒப்படைக்கிறது. அவனை விலங்குபோல நடத்தும் அவர்கள் ஒரு கட்டத்தில் அனாதை இல்லத்தில் சேர்க்கிறார்கள். தன் வளர்ப்புப் பெற்றோரை தேடி அவன் கிளம்பி கப்பலில் அலைக்கழிந்து வந்தடையும் இடமே அத்தாரோ மலை இருக்கும் அந்த சிறு தீவு.
நாகரீகத்தின் இரக்கமற்ற நெறிகளில் இருந்து தப்பி அவன் செல்லவிரும்புமிடம் ஓர் அடைக்கலப்புள்ளி. அன்னையும் தந்தையும் கொண்ட பழையகாலம். அவன் வந்தடைந்த இடம் ஒரு காடு. அங்கே அவனை பொறுப்பேற்றுக்கொண்டவன் காட்டுமனிதனாகிய ஏடன். ஆர்வலி என்னும் ஊரிலிருந்து விலகி அத்தாரோ மலையில் ஒரு வேட்டைக்காரனாக தனித்துவாழும் ஏடன் முன்னாள் ராணுவவீரன். மனைவியை விலக்கிவிட்டு வாழ்பவன்.
இந்நாவல் மூன்று களங்கள் கொண்டது. ஏடனும் அவன் வாழும் காடும் ஒரு களம். ஏடனைப்பற்றிய கதைகளைச் சொல்லும் ஆர்வலி என்னும் ஊர் இன்னொரு உலகம். கதைநாயகன் தன்னுள் உருவாக்கிக்கொள்ளும் பிரமைகளும் கண்டடைதல்களும் அடங்கியது மூன்றாவது உலகம். மூன்றும் ஒன்றோடொன்று முயங்கும்படி அமைந்துள்ளது இந்நாவலின் கதையொழுக்கு.
ஏடன் இன்று இவ்வகை நாவல்களில் உள்ள வழக்கமான கதாபாத்திரக் குணங்களான ’மண்ணோடு இயைந்த தன்மை’ ’கள்ளமின்மை’ ஆகியவற்றை கொண்டவன் அல்ல. அவன் முன்னாள் ராணுவ வீரன். நாகரீகவாழ்க்கையிலிருந்து பின்வாங்கியவன். அவன் பழங்குடியோ காட்டுமனிதனோ அல்ல. எளியவர்களைப்போல கதைநாயகன் மேல் அவன் அன்பைப் பொழிவதுமில்லை.
மாறாக அவன் கதைநாயகனிடம் சொல்லும் முதல் வரியே எக்காரணம்கொண்டும் அவன் ஏடனுடைய குடிலுக்குள் நுழையலாகாது, ஏடன் அவனுக்கு அளிக்கும் எல்லைகளை மீறலாகாது என்பதுதான். ஏடன் கதைநாயகனுக்கு அளிக்கும் மெய்ஞானம் என்பதே அதுதான் – எல்லை மீறாமலிருத்தல், அவரவர் எல்லைகளுக்குள் வாழ்தல்.
வேட்டைக்காரன் , வேட்டைவிலங்கு என்னும் இரண்டு எல்லைகளே உள்ளன காட்டில் என ஏடன் வழியாக கதைநாயகன் அறிகிறான். ஒவ்வொரு விலங்கும் தன் எல்லைகளை வகுத்துக்கொண்டுள்ளது. மானுடன் அதேபோல உள எல்லைகளையும் வகுத்தாகவேண்டும் ‘வேட்டைக்காரன் விலங்குகளின் கண்களைப் பார்த்து உரையாடலாகாது’ என்று ஏடன் சொல்வது அதனால்தான்.
இவ்வகை நாவல்கள் உரையாடல்கள், அனுபவ விவரிப்புகள் வழியாக உருவாகிவரும் நுண்மையான கண்டடைதல்களால் ஆனவை. கதை என்பதை நம்புவன அல்ல. கதைச் சுவாரசியத்தை வாசிப்பவர்களுக்கானவையும் அல்ல. தேங்காய்ச்சிரட்டையில் ரப்பர் ஊற்றிச்செய்த விளக்கு போன்ற நுண்தகவல்கள், ‘இந்த உலகினை அனைவரும் தனித்தே எட்டிப்பார்க்கிறோம்’ என்பது போல மின்னிச்செல்லும் வரிகள், ஓடையில் தவழ்கிற ருசி ரத்தருசிக்கு சமானமானது. கடலுக்குக்கொண்டுசெல்லும் என்பதுபோன்ற கண்டடைதல்கள் ஆகியவையே இதை இலக்கியப்புனைவாக ஆக்குகின்றன.
‘தசைமேல் தோல் உரிந்துவிட்டால் எல்லா விலங்குகளும் ஒன்றென அறிந்தேன். அவன் இந்த அத்தாரோ மலைஒயினை தலைகீழாகத் தொங்கப்போட்டு உரித்துக் காட்டினான். கீறப்பட்ட அதன் வயிற்றினுள் தலையை விட்டு அறியாதவைகளை பார்த்தேன்’ என்ற வரி இந்நாவலின் நடைக்கு உதாரணம். எங்கு நினைவு, எங்கு அனுபவம், எது உருவகம் என வாசகன் கண்டடைந்துகொண்டே செல்லும் இயல்புகொண்டது அது.
கதைநாயகன் கண்டடைவதென்ன என்பதை வாசகன் உணர்வதிலுள்ளது இந்நாவல் அளிக்கும் அனுபவம். அவன் அணுகுவது ஒரு பெண்ணை அல்லது புலியை. ஒருவன் தன் எல்லையை வகுப்பது முதல் ஞானம், எவ்வண்ணம் அதை விட்டு வெளியே சென்று புதிய ஒன்றை ஏற்பது என்பது இன்னொரு ஞானம். ஒன்றை அடைந்து இன்னொன்றை நோக்கிச் சென்று அவன் உணரும் ஒன்று இந்நாவலை அழகுள்ளதாக ஆக்குகிறது
’அந்த ஒன்று எதனைக்காட்டிலும் மகத்தானது.என்னிடம் உள்ளது விலங்கிடம் இல்லாதது’ என்று கதைநாயகன் கண்டடைகிறான். அது இந்நாவலை இயற்கைக்கு மீளும் கனவை முன்வைக்கும் நாவல்களில் இருந்து விலக்கி நிறுத்துகிறது. நாகரீகத்தின் குரூரத்தில் இருந்து சென்று காட்டின் தீவிரத்தை கண்டடைபவன் அங்கிருந்து நாகரீகத்தை முற்றிலும் வேறொரு கோணத்தில் கண்டுகொள்கிறான். தன்னுள் அதை அவன் அறிகிறான். அவனுடைய மீட்பும் நிறைவும் அதில்தான்.