எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ் விக்கி
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களின் தீர்த்த யாத்திரை நூலை வாசித்தேன். அவருடைய முந்தைய நூல்களான மணற்கடிகை, மனைமாட்சி மற்றும் வேங்கை வனம் போன்ற பிரமாண்டம் இல்லாத எளிமையான நூல் இது. ஆனால் பெரிய நாவல்கள் தரும் அதே பரவசத்தை கொந்தளிப்பை இந்நாவலும் அளிக்கிறது.
தீர்த்த யாத்திரை என்பது புண்ணிய நதிகளில் நீராடி அருகிலிருக்கும் ஆலயங்களில் குடிகொண்டு அருள்பாலிக்கும் தெய்வங்களிடம் ஆசி பெற்று திரும்புவது என்பதே பொதுவான கருத்து.
“…பூழி வெங்கானம் நண்ணி புண்ணிய துறைகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டில் வா…” என்று கைகேயி இராமனை காட்டுக்கு அனுப்புகிறாள். தனக்கு வரும் இழிவை தெரிந்தே ஏற்றுக்கொண்டு மக்களை காப்பதற்காக இராமனை காட்டுக்கு அனுப்பியவள் என இக் கைகேயியை வணங்குபவர்களும் உண்டு. கைகேயி இராமனை காட்டுக்கு அனுப்புவது தீர்த்த யாத்திரைக்குத்தான். அதன் மூலமே அவனின் பிறவி நோக்கமும் நிறைவேறுகிறது.
இந்நாவலில் முரளி வீட்டைவிட்டு வெளியேறுகிறான். அது தீர்த்த யாத்திரையாக அவனுக்கு அமைகிறது. காவிரியின் வெவ்வேறு துறைகளில் நீராடுகிறான். ஒவ்வோர் இரவும் வேறுவேறு நபர்களிடமிருந்து கிடைக்கும் சொற்கள் இவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஞானத்தை விதைக்கின்றன.
உதாரணமாக சிறிய மலைக்கோவிலின் இரவுக் காவலாளி “என் கண்ணுக்கு வால் மட்டும் தெரிஞ்சது. நீங்க என்ன பாத்தீங்கன்னு தெரியாது. ரெண்டு பேரும் பாத்தது ஒன்னுதான். ஆனா நீங்க பாத்தது வேற. நான் பார்த்தது வேற. அந்த ஒரு நொடி எப்பவோ காணாமப் போயிடுச்சு. அதப்பத்திதான் இப்ப மாஞ்சி மாஞ்சி பேசிக்கிட்டிருக்கோம்…” எனக் கூறுகிறார். முரளிக்கு அவர் இரவுக் காவலாளியா அல்லது தனக்கு அருள்தர வந்தவரா என ஐயம் தோன்றுகிறது.
முரளி ஒரு கணம் அவன் மனதில் ஏற்பட்ட பிறழ்வோ உணர்வெழுச்சியோ அல்லது வேட்கையோ போன்ற ஒன்றால் பீடிக்கப்பட்டதற்காக வருந்தியே வீட்டைவிட்டு வெளியேறுகிறான். சங்கரி, ஜெயந்தி மற்றும் அர்ச்சனா ஆகிய மூன்று பெண்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக இவன் மனம் குமைகிறது. அதோடு மனைவி மனோகரியின் நினைவும் அலைக்கழிக்கிறது.
இவற்றை கூறும் முறையில்தான் எம். கோபாலகிருஷ்ணனின் மேதைமை வெளிப்படுகிறது. தனித்தனி நிகழ்வுகளை நினைவுகளாக மீட்டிக்கொள்ளும் வடிவத்தில் கூறும்போது எவ்வித குழப்பமும் வாசகனுக்கு ஏற்படாத வகையில் எழுதியுள்ளார். இவரின் மற்ற நாவல்களில் நேரடியாக ஒரு நிகழ்விற்குபின் அடுத்ததென வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்நாவல் முன்பின்னாக தாவும் நினைவுகள் என்ற வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. மனதின் அல்லாடலை விவரிக்க இவ்வடிவம் கைகொடுக்கிறது.
முரளி படும் அல்லாடல்கள் எல்லாம் யோக ஆஞ்சனேயரை அடைவதற்காகவே என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் யோக ஆஞ்சனேயரின் லீலையே முரளியை அங்கு வரவழைக்கிறது என்றும் எனக்குத் தோன்றுகிறது. இவன் வாழ்வின் நோக்கம் அவரின் அடியைப் பணிவதே. அதை நோக்கியே அனைத்தும் நிகழ்கின்றன.
முக்கியமாக சங்கரிக்கும் அர்ச்சனாவுக்கும் பெருந்துரோகம் இழைத்ததாக இவன் எண்ணுகிறான். ஆனால் இவனை அதற்கு தூண்டுவதே அப்பெண்கள்தான் என்பதற்கு ஆசிரியர் குறிப்பு வைத்திருக்கிறார். முதல்முறை சங்கரி முரளியை தூண்டாமலிந்திருந்தால், இவன் நெருங்கும்போது அர்ச்சனா தனது எதிர்ப்பைக் காட்டியிருந்தால் முரளிக்கு இத்துயரம் ஏற்பட்டிருக்காது. அதனைக் கொண்டு வாசிக்கும்போது முரளிக்கு வரும் துயரங்கள் மொத்தமும் பக்தனுக்கு இறைவன் வைக்கும் சோதனைதான் எனக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது.
காவேரியின் வெவ்வேறு துறைகளில் நீராடிச் செல்லும் முரளி கடைசியில் ஒரு விரலால் கூட தீண்டமுடியாதவாறு சாக்கடையாக நகரும் நதியைக் காண்கிறான். அது அவனுடைய மனதின் உருவகமாகவும் கொள்ளலாம். அப்போது பொழிகிறது பெருமழை. மரங்களையும் சாய்த்து பாலத்தின்மீதும் தாவியோடுகிறது நதி. அதன் கசடுகளெல்லாம் கரைந்து காணாமல்போகிறது. போலவே இவன் மனத்தின் கசடுகளும் மறைந்து வாழ்வின் இலக்கை அடைவதாக வாசிக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. உச்சமாக யோக ஆஞ்சனேயர் முரளியின் கன்னத்தில் கிள்ளியும் தலையில் தட்டியும் விளையாடும்போது மெய் சிலிர்த்துவிடுகிறது.
தீர்த்த யாத்திரை போன்ற நூல்களை வாசிப்பதன் மூலம் தனக்கு மட்டுமே உலகின் துயர்கள் அனைத்தும் ஏற்படுகின்றன என குமைந்து கொண்டிராமல் எல்லாமே இறைவனின் லீலையாகவும் இருக்கலாம் என தனது பாத்திரத்தில் மகிழ்ந்து திளைத்து வாழ்வதற்கான ஒரு திறப்பை ஒவ்வொரு வாசகனும் அடையலாம்.
அளவில் சிறியதாக இருந்தாலும் ஒரு மனிதனின் முழு வாழ்வையும் அவன் தேடலையும் அவன் அடைந்த இலக்கையும் இந்நாவல் காட்டுகிறது. புரியாத தத்துவ விளக்கங்களோ சிடுக்கான சொல்விளையாட்டுகளோ இன்றி சுவாரசியமாக நாவலை அளித்துள்ள எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றியும்.
அன்பன்
கா. சிவா