அன்புள்ள ஜெ
ஏழாம் உலகம் நாவலை நீண்ட இடைவேளைக்குப்பின் படித்தேன். 2010 வாக்கில் அதை வாசித்துப் பாதியில் விட்டுவிட்டேன். அதன்பின்னர் 2016 ல் வாசித்து முடித்தேன். இப்போதுதான் அதை மீண்டும் முழுசாகப்படித்து முடிக்க முடிந்தது.
நான் படித்த முதல் பதிப்பில் ‘நரகம்’ என்று எழுதி வைத்திருக்கிறேன். இன்றைக்கு வாசிக்கும்போது ஆரம்பத்தில் இருந்த அதிர்ச்சியும் படபடப்பும் இல்லாமலாகிவிட்டது. இன்றைக்கு சமூகவலைத்தளங்களும் டிவியும் சேர்ந்து ஏழாம் உலகத்தின் கொடுமைகள் எல்லாம் சாதாரணமாக ஆகவிட்டுள்ளன. இன்றைக்கு காஸாவின் கொடுமையான சித்திரங்களைப் பார்க்கையில் ஏழாம் உலகமே பாதுகாப்பான ஓர் இடம்தானோ என்ற எண்ணம் வந்துவிட்டது.
நான் முதலில் வாசிக்கும்போதிருந்த சில எண்ணங்கள் மாறிவிட்டன. அன்று இது யதார்த்தச் சித்தரிப்பு என்று நினைத்தேன். இப்படி ஒரு உலகம் உண்டு என்பதை வாசகனுக்குக் காட்டும் நோக்கமே பிரதானமாகத் தெரிந்தது. அப்படியென்றால் அந்த உலகத்தின் நம்பகத்தன்மை என்ன என்ற எண்ணமும் இருந்தது. புனைவுக்குள் அந்த நம்பகத்தன்மை நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது, அது போதும் என்ற எண்ணமும் உருவாகியது.
ஆனால் இன்றைக்கு வாசிக்கும்போது இது யதார்த்தத்தைச் சொல்லும் நாவல் அல்ல என்ற எண்ணம் வந்தது. யதார்த்தம்போல ஒரு surreal உலகம்தான் படைத்துக் காட்டப்பட்டுள்ளது. அதன் நுணுக்கம்தான் அதை யதார்த்தம் என நம்பச்செய்கிறது. ஆனால் அது தத்துவார்த்தமாகவும் கலாபூர்வமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆகவே உண்மைச்சம்பவங்களின் நேரடித்தன்மைக்குப் பதிலாக பல இடங்கள் வர்ணனை வழியாக கனவுமாதிரி உள்ளன.
இப்போது வாசிப்பில் ஏழாம் உலகம் ஒரு Inferno அல்;ல அது ஒரு Purgatory என்ற எண்ணம் வந்துள்ளது. ஒரு ஆத்மா சென்றடையும் இருள் அல்ல அது. அதன் வழியாக எல்லாருமே மீட்பை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒரு நகர்வு உள்ளது. குய்யனும் மாங்காண்டிச்சாமியும் இரண்டு வகைகளில் விடுதலையானவர்களாகவும் இருக்கிறார்கள். குய்யனின் புன்னகையிலும் மாங்காண்டிச்சாமியின் பாடலிலும் நாவல் முடிவடையும்போது தோன்றிய எண்ணம் அது
எம்.முருகேஷ்