குருகு

அன்புள்ள நண்பர்களுக்கு

கலை, வரலாறு, தத்துவம் முதலிய அபுனைவு தளங்களை முன்னிறுத்தும் பத்திரிகையை தமிழில் கொண்டுவர வேண்டும் என்று கடந்த 2022 டிசம்பர் மாதம் முடிவு செய்தோம். 2023 -ஜனவரி 26 அன்று குருகு முதலாவது இதழ் வெளியாகியது. அங்கு துவங்கி இந்த ஒரு வருடத்தில் நாங்கள் திட்டமிட்டபடியே பத்து இதழ்கள் வெளிவந்துள்ளன.

குருகுவிற்காக நேர்காணல் அளித்த ஆளுமைகளுக்கும், தங்கள் படைப்புகளை தந்த எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், படைப்பாளிகளுக்கும் நன்றிகளும் வணக்கங்களும். குருகு இதழுக்கு ஆலோசனை நல்கிய, தொழில்நுட்ப ரீதியாக பங்களித்த அனைவருக்கும் எங்களது அன்பு. இதுபோலவே இனிவரும் காலங்களிலும் படைப்பாளிகள் நண்பர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என விரும்புகிறோம்.

குருகுவின் நேர்காணல்கள் அனைவராலும் விரும்பப்பட்ட ஒன்றாக இருந்தன, மின் இதழியலில் நேர்காணல்கள் வழியே மீண்டும் உரையாடல்களை துவங்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்திருந்தோம். இந்த வருடம் குருகு இதழில் ஒன்பது நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. மானுடவியல், சூழலியல், பௌத்தம், வைணவ தத்துவம், அரங்கம், பதிப்பியல், சொல் ஆய்வு, தொல்லியல், சிற்பவியல் என்று வெவ்வேறு துறைகளின் ஆளுமைகள் நேர்காணல் அளித்திருந்தனர்.

இந்த ஓராண்டில் இந்த உரையாடல்களின் வழியே நாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் அற்புதமானவை , இதே உணர்வுகளை பல வாசக நண்பர்களும் தெரிவித்திருந்தனர். குருகு தனது நோக்கத்தின்படியே, தத்துவம் கலை வரலாறு தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை, தொடர்களை இந்த ஒருவருடத்தில் வெளியிட்டிருக்கின்றது.

சூழலியல் எழுத்தின் முன்னோடி தியடோர் பாஸ்கரனுக்கும், தமிழ் விக்கி தூரன் விருது விழாவுக்குமாக இரண்டு சிறப்பிதழ்கள் வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு இதழிலும் மொழிபெயர்ப்புகள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்த வாசிப்பின் மூலம் வாசக நண்பர்கள் கொடுத்த வரவேற்பும் அவர்களது அன்புமே இவற்றை எல்லாம் செய்ய எங்களுக்கு உற்சாகமளித்தது. வரும் வருடத்தில் குருகு இன்னும் மேம்பட்டதாக வெளிவர எங்களுடைய அனைத்து முயற்சிகளையும் செய்கிறோம். இறையருள் அதை நிகழ்த்தட்டும்.

இந்த வருடத்தின் கடைசி இதழாக குருகு-வின் பத்தாவது இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்புதிது இதழில் எழுதிய ‘நவீன மொழியில் அறிமுகம்’ கட்டுரை மீள்பிரசுரமாகிறது. கட்டுரையை வெளியிட அனுமதித்த ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி.

குருகு மூன்றாவது இதழில் ஆரம்பித்த ‘தெய்வ தசகம்’ தொடர் வருட முடிவில் நிறைவடைகிறது. நாராயண குரு இயற்றிய இந்த பத்து பாடல்களும் மதம் கடந்த இறைவணக்கப் பாடல்கள். அவற்றுக்கு குரு நித்ய சைதன்ய யதி எழுதிய உரை ஞானமும் பக்தியும் பிணைந்த ஆசிரியனின் சொற்களாலானது. வாசிக்க எளிமையானவையாக தோற்றம் கொண்டிருக்கும் அரும் தரிசனங்கள். அவற்றின் ஆழம் உணர்ந்து இலகுவாக வாசிக்கும்படி மொழிபெயர்த்திருந்தார் ஆனந்த் ஶ்ரீனிவாசன். அவருக்கு அன்பும் வணக்கங்களும்.

சென்ற இதழில் வெளிவந்து நண்பர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட ‘கிருஸ்துவின் சித்திரங்கள்’ கட்டுரையின் பகுதி-2 இந்த இதழில் வெளிவருகிறது.

செவ்வேள் ஆடல் கட்டுரையின் அடுத்த பகுதி சூரசம்ஹார கதைகளை நோக்கி செல்கிறது. நண்பர் இராமநாதனின் செட்டிநாடு மாளிகைகளின் சுதைசிற்பங்கள் கட்டுரை, நகரத்தார் கட்டிடக்கலையின் ஒருபகுதியாக அமைந்த சிற்பங்களின் பின்னணியை விவரிக்கின்து.

இவற்றுடன் அறிவியல் தத்துவம் தொடர் அறிவியல் புரட்சி மற்றும் அதன்மீதான கோட்பாடுகளை விவாதிக்கின்றது. இந்த ஒருவருட அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நண்பர்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முயற்சியாக, அடுத்து வரும் இதழ்களில் புதிய பகுதிகளையும், மாற்றங்களையும் கொண்டுவர முயற்சிக்கிறோம். அனைவருக்கும் குருகு இதழின் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

https://www.kurugu.in/?m=1

குருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். எங்கள் பதிவுகளை அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும். https://twitter.com/KuruguTeam

அன்புடன்

குருகு

முந்தைய கட்டுரைபைபிள் அறிமுக வகுப்புகள்- அறிவிப்பு
அடுத்த கட்டுரைஅறமும் ஆலமும்- கடிதம்