அழிவின் நடனம் -கடிதம்

வெள்ளையானை மின்னூல் வாங்க

வெள்ளையானை வாங்க

அன்புள்ள ஜெ

வெள்ளையானை நாவலை வாசிக்கவேண்டும் என்ற ஆவல் நீண்டநாட்களாகவே இருந்து வந்தது. ஒருமுறை அதன் ஒரு பகுதியை மட்டும் வாசித்தேன். முழுமையாக வாசிக்கவேண்டும் என்று நினைத்தாலும் அதை வாங்க முடியாத சூழல் இருந்தது. அண்மையிலே வாங்கி வாசித்தேன்.

அந்நாவலில் உள்ள பல விஷயங்களை பலரும் பேசிவிட்டார்கள். அதில் இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டிஷ் ஆட்சியின் கொடூரமும் உள்ளது. கூடவே அந்தச் சுரண்டலுக்கு எதிராக அதே பிரிட்டிஷார் தரப்பிலிருந்து உருவான அறத்தின் குரலும் உள்ளது. பிரிட்டிஷாரின் இரண்டு முகங்களையும் காட்டும் ஒரு சமநிலை அந்நாவலில் உள்ளது.

அதேபோல அந்த கடுமையான பஞ்சத்தாலேயே தலித்துகளுக்கு இடம்பெயர்வதறகான வாய்ப்பும் அதன் வழியாக விடுதலைக்கான ஒரு வாசலும் உருவானதையும் நாவல் சொல்கிறது. வரலாறு இவ்வாறு பலவகையான அபத்தங்கள் வழியாகத்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எது வரலாற்றின் நோக்கம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. வரலாற்றுக்கு அப்படி நோக்கமெல்லாம் இல்லை. கண்ணாடிப்பொருள் கீழே விழுந்து உடைந்து சிதறுவதைப்போலத்தான் அது நிகழ்ந்துகொண்டிருக்கிறதென நினைக்கிறேன்.

வெள்ளையானையிலுள்ள கிறிஸ்தவப் படிமங்கள் அதிகம் கவனிக்கப்படவில்லை. நம்மவருக்கு அவை அதிகம் தெரியாதவை. ஏசுகிருஸ்துவின் ரத்தத்தை ஏய்டன் குடிக்கும் இடம் குறியீட்டுரீதியாக முக்கியமானது. அது ஒரு ஞானஸ்னானம் அல்லது பாவமன்னிப்பு என்று படுகிறது’

எனக்கு அந்நாவலில் முக்கியமானதாகப் பட்டது ஷெல்லியின் டேன்ஸ் மெகாபிர் பற்றி வரும் இடம். ஒரு பெரிய ஒடுக்குமுறையின் சித்திரம். அதே ஒடுக்குமுறைதான் அப்படியே வெள்ளையானையிலும் நடக்கிறது. டேன்ஸ் மெகாபிர் என்று அந்த நிகழ்ச்சியையும் சொல்லலாம். அங்கே இறந்தவர்களின் ஆவிகள் தெருவில் ஊர்வலமாகச் செல்வதை ஏய்டன் பார்க்கும் இடமும் முக்கியமானது.

வரலாறு முழுக்க இதெல்லாம் நடக்கிறது. இன்றைக்கு இதோ பாலஸ்தீனில் நடந்துகொண்டிருக்கிறது. என்ன செய்ய முடியும்? அந்த ஆவிகள் சரித்திரம் முழுக்க அப்படியே இருட்டில் ஊர்வலமாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

ஜஸ்டின் ராஜ்

முந்தைய கட்டுரைகாகமும் கதைகளும்
அடுத்த கட்டுரையாத் வஷேம் – இரு தேசங்களின் கதை: சுதா ஶ்ரீனிவாசன்