அண்மையில் உத்தரகண்டில் ஒரு குகைக்குள் மனிதர்கள் மாட்டிக்கொண்ட செய்தி வந்தது. எலிவளைத் தொழிலாளர்கள் என்னும் ஒரு வகை அகழ்வுப்பணியாளர்கள் அப்படி மாட்டிக்கொண்டவர்களை மீட்டார்கள். எலிவளைத் தொழிலாளர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை பற்றி நிறைய எழுதப்பட்டன. அவர்களுடைய வேலையில் மாயம் மந்திரம் ஏதுமில்லை. அவர்கள் ஒரு குழுவாக ஒருவருக்கொருவர் மிகச்சிறப்பாகப் பழகியிருக்கிறார்கள். ஆகவே ஒரே உடலும் ஒரே மனமும் கொண்டு இணைந்து வேலைசெய்கிறார்கள். துளித்துளியாக அவர்கள் செய்யும் வேலை என்பது அத்தனைபேரும் ஒரே அலைவரிசையில் செய்யும்போது மிகப்பெரிய வேலையாக ஆகிறது. அந்த வேலை இயந்திரங்களின் வேலைகளை விடச் சிறப்பானதாக ஆகிறது.
நான் அச்செய்தியை வாசிக்கையிலெல்லாம் பத்துலட்சம் காலடிகள் கதையைப் பற்றி மட்டும்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த கலாசிகளும் அதேபோலத்தான். இணைந்து வேலைசெய்கிறார்கள். துளித்துளியாக பெரிய எடைகளை தூக்கிவிடுகிறார்கள். அதை ஒரு சோஷியல் மேஜிக் என்று சொல்லிவிடலாம். அந்த மேஜிக் இருப்பது அவர்களின் ஒத்திசைவில்தான். அந்த ஒத்திசைவை குலைக்கும் ஒரு செயல் என்பது ஒட்டுமொத்தத்தை அழிக்கும் என்றுதான் சாகிப் சொல்கிறார்.
உண்மையில் விரிவான பார்வையில் குற்றம் என்பது அதுதான். அந்த ஒத்திசைவு பாதிக்கப்படுமென்றால் அது மொத்தச் சமூகத்தையும் குலைக்கும் என்பதனால்தான் அது குற்றமாக ஆகிறது. ஒரு துப்பறியும் கதையாக பத்துலட்சம் காலடிகளை வாசிக்கலாம். ஆனால் அதேசமயம் அது குற்றமென்றால் என்ன என்பதையும் அழகாக வகுத்துச் சொல்லிவிடுகிறது.
ஆனந்த்ராஜ்
அன்புள்ள ஜெ,
ஓநாயின் மூக்கு கதையை நான் வாசித்தபோது முதலிலேயே ஒரு பதற்றத்தை அடைந்தேன். அதன்பிறகு அந்தப்பதற்றம் காரணமாகவே அந்த கதையை மறுபடி வாசிக்கவில்லை. ஏனென்றால் அதே கதை இன்னொரு வகையில் எங்கள் குடும்பத்திலேயே உள்ளதுதான். மீண்டும் அந்தக்கதையை வாசித்தேன். இப்போதும் ஒரு பதற்றத்தையே அளிக்கிறது. ஒரு பழி என்பது ஒரு நோய்க்கிருமி. அது எத்தனை காலமானாலும் உள்ளே இருந்து அழிவைக்கொண்டுவரும் என நினைக்கிறேன்.
எம்