நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
ஓராண்டுக்கு முன்பு அந்த முகில் இந்த முகில் நூலை வாசித்தேன். அன்று அந்த நாவல் ஓர் அழியாத காதலின் கதை என்று தோன்றியது. அந்த காதலின் இழப்பு என்னை மிகவும் பாதித்தது. அதில் ஒரு தவிர்க்கமுடியாத தன்மை இருந்துகொண்டிருக்கிறது. வாழ்க்கையிலுள்ள தவிர்க்கமுடியாத தன்மைதான் அது. அந்த தன்மையால்தான் மிகுந்த சோர்வும் பெருமூச்சுமாக அதைப் படிக்க முடிந்தது.
பின்னர் அந்நாவல் மனசில் பின்னால் சென்றது. பொதுவாக உணர்ச்சிகரமான நாவல்கள் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னகர்ந்துவிடுகின்றன. அதன் பிறகு அவற்றிலிருந்து சில விஷயங்கள் மேலே எழுந்து வந்தால் அது நல்ல நாவல் என நினைப்பேன். அண்மையில் நான் விஜயவாடா சென்றிருந்தேன். அப்போது நான் அறிந்த ஒருவருடைய வாழ்க்கையை ஞாபகப்படுத்திக் கொள்வதுபோல அந்த முகில் இந்த முகில் நாவலை ஞாபகப்படுத்திக்கொண்டேன். ஒரு விதமான கனம் மனசிலே வந்தாலும் சோகம் இல்லை.
இப்போது அந்நாவலை யோசித்தால் அந்த காமிராமேதை முகில்களை படம்எடுத்துக்கொண்டே இருப்பதுதான் முக்கியமானது என்று தோன்றுகிறது.முகில்கள் ஒரு கணம் கூட நிலையாக நிற்பதில்லை. ஆனால் அதை நிலையாகப் பதிவுசெய்யவேண்டும் என்று அவர் முயல்கிறார். அதைப்போன்ற ஒரு முயற்சிதான் நாம் வாழ்க்கையைப்பற்றி நினைப்பதும். ’காலத்தை கையைப் பிடித்து நிறுத்திக் கனிந்த காதலுடன் தழுவினாலும், அது நகர்ந்து சென்றுகொண்டேதான் இருக்கும்’ என்ற மௌனியின் வரிதான் ஞாபகத்துக்கு வந்தது.
அவர்கள் இணைந்திருந்தாலும்கூட காலம் அப்படித்தான் கடந்துபோகும். முகில்களின் ஒளி அப்படியே இருக்குமா என்ன? அதை எவரால் பிடித்து நிறுத்திவிட முடியும்? வாழ்க்கையின் நியதியே அதுதானே? நாம் வாழ்க்கையில் நிலையான எதையாவது பற்றிவிடுவதற்குத்தான் கைகளை விரித்து அளைந்துகொண்டே இருக்கிறோம். மௌனி அதை ஒரு கதையிலே சொல்கிறார். ’ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடி, கைவிரித்து தேடித் துழாவுவதைப் பார்த்தாயா? ஆடி அசந்து நிற்கிறது அது; ஆட்டம் ஓய்ந்து நிற்கவில்லை . . . மெல்லெனக் காற்று மேற்கிலிருந்து அடிக்கும். காதல் முகந்த மேகங்கள், கனத்து, மிதந்துவந்து அதன்மேல் தங்கும் . . . தாங்காது தளர்ந்து ஆடும்’
நான் அந்த முகில் இந்த முகில் நாவலின் இன்றைக்கு உச்சமாக நினைப்பது ஸ்ரீபாலாவுக்கு இருந்த முதிர்ச்சியைத்தான். அவள் ராமராவை விட்டுச்செல்வதும் சரி, திரும்பவும் சந்திக்கும்போது நிதானமான ஒரு மனநிலையுடன் இருப்பதும் சரி அவள் எவ்வளவு வாழ்க்கையை அறிந்து முதிர்ச்சியுடன் இருக்கிறாள் என்பதையே காட்டுகின்றது.
சிவக்குமார் ராம்