«

»


Print this Post

உங்கள் கதைகள்-கடிதம்


ஜெ,

தங்களது இணய தளத்தில் வட கிழக்குப் பயணம் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது வயதுகளைத் தாண்டி, நாயர் புலி வாலைப் பிடித்த கதையாக, வர்த்தக உலகின் ஓட்டத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் எனக்கு, உங்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. மனதுக்கு இனிய நண்பர்களுடன், வட கிழக்கின் இயற்கைச் சூழலில் சுற்றி வருவது ஒரு பெரிய பாக்கியம்.

பத்து ஆண்டுகளுக்கு முன் உங்களது எழுத்துக்களைப் படிக்க முயன்று தோல்வி அடைந்திருக்கிறேன். தி.ஜானகிராமன், சுந்தர ராம சாமி, ஜெயகாந்தன்,இந்திரா பார்த்த சாரதி, ஆதவன் எழுத்துக்களைப் படித்து ரசிக்க முடிந்த எனக்கு, உங்களது எழுத்துக்கள் சவாலாகவே இருந்தது.

தற்செயலாக திரு பி.ஏ.கிருஷ்ணன் அவர்களைத் தில்லியில் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. அவருடைய ‘புலி நகக் கொன்றை’ எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனது சொந்த ஊர் திருநெல்வேலி என்பதும், அவருடைய கதாநாயகன் கண்ணன்,ஏறத்தாழ எனது சம காலத்தவன் என்பதும், அவருடைய எழுத்து நடையும் என்னைக் கவர்ந்தது.

அவர் கேட்ட கேள்வி – உமக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் யார்?

என்னுடைய பதில் – திஜா, சுரா, இபா, ஆதவன், இராமுருகன், அ முத்துலிங்கம்.

ஜெயமோகன் எழுத்துக்களைப் படிக்க வில்லையா?

படிக்க முடியவில்லை – இது எனது பதில்.

முயற்சி செய்யுங்கள் – இது அவரது அறிவுரை.

தங்களுடைய காடு புத்தகம் வாங்கினேன். புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். ஆனால் எழுத்தில் என்னால் முங்க முடியவில்லை. வெகு நாட்களுக்குப் பின் தங்களுடைய ‘சோற்றுக் கணக்கு‘ கதையை இணைய தளத்தில் படிக்க நேரிட்டது. அன்று முழுவதும் யாருடனும் பேச முடிய வில்லை. அழுகை அழுகையாக வந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன், ஒரு திசம்பர் மாதக் குளிரில், மகாநதி இரண்டாம் காட்சியைக் கோவையில் ஒரு அரங்கில் பார்த்து விட்டு, மனது கனமாக விடுதியில் தூங்க முடியாமல் தவித்த நாள் நினைவுக்கு வந்தது.

அறம் தலைப்பில் நீங்கள் எழுதிய கதைகள் அனைத்தும் படித்து முடித்து விட்டேன். என்னுடைய ரசனை உயர்ந்து விட்டதா அல்லது என் போன்றவர்களுக்காகத் தங்களது திறமையைக் குறைவாக வெளிப்படுத்துகிறீர்களா என்பது தெரியவில்லை.

ஒரு பெரிய தொழிற்சாலை நிறுவ வேண்டி, பூர்வாங்க பணிகளுக்காகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் எனக்கு, சோற்றுக் கணக்கு போன்ற எழுத்துக்களே, பாலைவனச் சோலைகள்.

வாழ்த்துக்களுடன்

சு செல்லப்பா

அன்புள்ள செல்லப்பா அவர்களுக்கு

அறம் வரிசைக் கதைகள் அறம் என்ற நேரடியான விஷயத்தைப் பேசுகின்றன. ஒவ்வொருவரும் அந்தரங்கத்தில் நன்கறிந்தது அறம். ஆகவே அவற்றுக்கு  உள்ளாழங்களேதும் தேவையில்லை

நுண்ணிய அகச்சிக்கல்களையோ வாழ்க்கைசார்ந்த  அறச்சிக்கல்களையோ ஞான உசாவல்களையோ பேசும் ஒரு ஆக்கத்துக்கு இந்த எளிமை சாத்தியமில்லை. எல்லாப் பக்கங்களையும் கணக்கில் கொண்டு எழுந்தாகவேண்டியிருப்பதனால் விரிவாகவும் ஆழ்மனம் சார்ந்து செல்லவேண்டியிருப்பதனால் கனவுத்தன்மையுடனும் அவை அமைகின்றன.

கடினம் என ஏதுமில்லை. என்னுடைய நடை மற்றும் குறியீடுகள் பிடிபடக் கொஞ்சம் தொடர்ந்து வாசிக்கவேண்டும். நான் செறிவாக எழுதுபவன் என்பதனால் கொஞ்சம் கவனமாக வரிக்குவரியாக வாசிக்கவேண்டும். அப்படி வாசித்தால் நீங்கள் வாசித்த பல இலக்கிய நூல்களில் ஆங்காங்கே தென்படும் நுட்பங்களும் ஆழங்களும் அனேகமாக எல்லா வரிகளிலும் இருக்கக் காண்பீர்கள். இது அவர்கள் தோள் மேல் ஏறி அடுத்த கட்டத்துக்குச் செல்லும் அவர்களின் தொடர்ச்சியின் எழுத்து.

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/19545