கடந்த வருடம் மட்டும் உங்களை ஆறு அல்லது ஏழு முறை நேரில் சந்தித்திருப்பேன். ஆனால் உங்கள் அருகில் வந்து பேசத் தயக்கம். இரண்டு முறை மட்டும் குடிமை பனிதேர்வுக்கு பயிலுகிறேன் என்று கூறி ஆசி பெற்றுள்ளேன். உங்கள் கட்டுரைகளும் உரைகளும் எனக்கு சிந்தனையில் தெளிவை அளித்து வருகிறது .உங்கள் புனைவுகளை இப்பொழுது வாசிக்க தொடங்கி உள்ளேன். வகுப்பிற்கு எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. இது உங்களுக்கு நான் அனுப்பும் முதல் கடிதம். புத்தாண்டு கொண்டாட்டத்தை பற்றியது.
மதியத்தில் இருந்தே புத்தாண்டு கூடுகைக்கு நண்பர்கள் வந்து கொண்டே இருந்தனர். விஜய பாரதி அண்ணா தலைமையில் ஒரு குழு பைனாகுலருடன் பறவைகளை பார்க்க கிளம்பினார்கள் நானும் இணைந்து கொண்டேன். யானை குடில் அருகே நிழலான பகுதியில் நின்று கொண்டு பறவைகளை பார்க்க தொடங்கினோம் நீலகண்ணியும்( Blue-faced malkoha) இருவாச்சியும் (Indian grey hornbill) காட்சியளித்தனர். பறவைகளை பார்ப்பதற்கான சூட்சமங்களையும் கற்றுக்கொண்டோம்.
பின் உங்களுடனான மாலை நடையில் இயற்கை நீரோடைக்கு அருகில் இருந்த பாறையின் மேல் அமர்ந்து வந்திருந்த அனைவரும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பின் கிட்டத்தட்ட 90 நபர்கள் சூழ கூடுகை இனிதே தொடங்கியது. பிற புத்தாண்டு கொண்டாட்டங்களை விட இது எவ்வாறு வேறுபட்டது என்று கூறினீர்கள்.முதலில் மகிழ்ச்சி பற்றிய விளக்கம் அளிக்கபட்டது.இங்கு கொடுப்பதே மகிழ்ச்சி. கொடுப்பது என்பது தானம் செய்வது அல்ல. நமக்கான களங்களில் வேள்விப்போல செயல்படுவது. அவ்வாறு செயல் செய்து நாம் அளிக்கும் பங்களிப்பே இங்கு கொடுப்பது அதுவே உண்மையான மகிழ்ச்சி என்றீர்கள்.
நமது களமானது கலை, இலக்கியம் அறிவியக்கம் சார்ந்தது.கொண்டாட்டங்களும் அது சார்ந்த விவாதம், ரசனை, நகைச்சுவை,அனுபவ பகிர்வு, அகம் மலர்தல் போன்றவையாகவே இருக்கும் என்றும் . யார் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை மட்டும், அது முழுக்க பாசிட்டிவ்வான நேர்மறை தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். துளியும் சோர்வூட்டுபவையாக இருக்க கூடாது என்று. நண்பர்கள் அவர்களுடைய வாழ்வின் உவப்பான அனுபவங்களையும் கதைகளையும் பகிர்ந்தனர்.
யோகேஸ்வரன் அண்ணா தேர்ந்தேடுத்து பாடியஎம். ஜி. ஆர் பாடல்கள் புத்தாண்டு எழுச்சியை ஏற்படுத்தியது.நீங்கள் கூறிய முகேஷ், பிரேம் நசீர் சினிமா நகைச்சுவை அனுபவங்களை வீட்டிற்கு வந்து நினைத்தும் சிரித்து கொண்டு இருந்தேன். பாதிரவும் பகல்வெளிச்சமும் எம்.டி. வாசுதேவ நாயரின் குருநாவலை நீங்கள் கதையாக சொல்லிய போது இருப்பத்தைந்து வயதில் அதை எப்படி அவர் எழுதியிருப்பார் என்று வியப்பாக இருந்தது.
ஈரோடு கிருஷ்ணன் சார் The basement flat by lagerquist. தமிழாக்கம் அடித்தளம் என்ற சிறுகதையை கூறி அதன் முடிவை சொல்லாமல் நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்றது அந்த கதையை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. சரியாக 12 மணியளவில் இனிப்புகள் பரிமாறி புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிரப்பட்டன.
பின்பு நிகழ்ச்சியின் உச்சமான உங்களுடைய ஏழுநிமிட உரை. மிகவும் தேவையான, முக்கிய ஐயங்களை களைந்த உரை. எவ்வாறு ஒருவர் தன்னுடைய தன்னறத்தை கண்டுகொள்வது என்பதற்கான வெளிச்சம். எனக்கான செயல்கள் வரும், அதை நான் தேடி கண்டுபிடித்து தன்னறத்துடன் செய்வேன் என்று இல்லாமல்.தனக்கு அளிக்கப்பட்ட அன்றாட செயல்களில், மனதிற்கு உகந்ததாக இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை என்று முழு வீரியத்துடனும் முழுமையான மனதுடனும் அதில் செயல்படல் வேண்டும். அப்பொழுது நமக்கான இயல்பு நம்மால் உணரப்பட்டு நமது தன்னறத்தை நோக்கி கூட்டிச் செல்லும் . நம்மை கண்டடையும் தருணம் அது.இவ்வாறு உரை அமைந்தது.
மறுநாள் காலை ஜனவரி 1 அன்று நடந்த அமர்வு என்பது ஒரு கேள்வி பதில் அமர்வு, யார் வேண்டுமானாலும் அங்கு வந்திருந்த யாரிடமும் அறிவு சார்ந்த கேள்விகளை எழுப்பாலம். கிருஷ்ணன் சார், கடலூர் சீனு அவர்களிடம் எழுப்பிய கேள்வி முக்கியமானதாகப்பட்டது. நீங்கள் நிறைய பயணங்கள் செய்கிறீர்கள் அதில் இலக்கியத்தை எவ்வாறு தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது என்று? அதற்கு அவர் இரண்டு நிஜ அனுபவங்களையும் உங்களுடைய சோற்றுக் கணக்கு கதையையும் ஒட்டி பதிலளித்தார்.அடிப்படையில் இலக்கியம் ஒருவரை சிந்திக்க தூண்டுகிறது என்று புரிந்து கொண்டேன்.அன்று காலையில் இருந்து மதியம் வரை நாள் போனதே தெரியவில்லை. தொடர்ந்து உரையாடல்கள்.
இந்த வகையான புத்தாண்டு கூடுகை அல்லது கொண்டாட்டம் என்பது மனதிற்கு ஒரு நெருக்கத் தையும் தெளிவையும் ஏற்படுத்துகிறது. நாம் செயலாற்றும் தளத்தில் இருந்தே கொண்டாட்டத்துடன் முன்னகர்வது.இந்த வருடமும், எல்லா வருடத்தை போல இதை செய்ய வேண்டும் அதை தட்டி தூக்க வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டு வைத்திருந்தேன். இனிமேல் இது எனக்கு தேவைப்படாது என்று தோன்றுகிறது. ஏனெனில் இனி எனக்கு ஒவ்வரு நாளும் புது ஆண்டு தானே!
சிரஞ்சீவி
அன்புள்ள சிரஞ்சீவி,
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பொதுவாக இருவகைகளில் நிகழ்கின்றன. ஒன்று வெற்றுக்கேளிக்கை. குடிப்பது, கொண்டாடுவது. அவை பலசமயம் மோசமானவையாகவே முடியும். ஏனென்றால் நமக்கு ஒவ்வாதவர்களுடன் நம்மால் கொண்டாட முடியாது. அரிதாக இனிய கூடுகைகள் அமையலாம். அப்போதுகூட வெறும் கூடுகைகளின் வெறுமை எஞ்சும்.
சிலர் தங்களுக்கு உகந்த பணிகளின் வழியாகவே கூடுகைகளை நிகழ்த்துகின்றனர். தங்கள் செயற்களங்களில். தங்கள் தேடல்கள் நிகழும் இடங்களில். அவையே முக்கியமானவை என நான் நினைக்கிறேன். அவ்வகைப்பட்ட புத்தாண்டுக் கூடுகைகளையே நான் எப்போதும் அமைக்கிறேன். என் நண்பர்களுடனிருக்கையில் அவை பொருள்கொள்கின்றன
எல்லாக்கொண்டாட்டங்களும் முக்கியமானவையே. மதப்பண்டிகைகள் உட்பட. எவற்றையுமே தவறவிடலாகாது என்பது என் கொள்கை. என் நூல்களில் அவற்றை விரிவாகவே எழுதியுள்ளேன். வாழ்க்கையில் கொண்டாட்டங்கள் அரிது. வாழ்வென்பது வெறுமே நாட்களைக் கடத்துவது அல்ல. அடையவேண்டிய ஓர் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போட்டியும் அல்ல. அதன் எல்லா கணங்களும் முக்கியமானவை. ஆகவே எல்லாமே கொண்டாடப்படவேண்டியவை.
ஆனால் அக்கொண்டாட்டங்களின் நிபந்தனைகள் சில உண்டு. நம் இயல்புக்கு இணைந்தவர்களுடன் கொண்டாடவேண்டும். நேர்நிலையான உணர்வுநிலைகளே கொண்டாட்டத்தில் இருந்தாகவேண்டும் என நாமே முன்னர் உறுதிகொள்ளவேண்டும். கொண்டாட்டங்கள் செலவேறியவையாக, ஆணவத்தின் வெளிப்பாடுகளாக இருக்கலாகாது. எனில் மேலும் கொண்ட்டாட்டங்களுக்குப் பணமிருக்காது.
அத்துடன் அக்கொண்டாட்டங்கள் கல்விக்குரியவையாக இருந்தால் மேலும் நல்லது. ஏனென்றால் கற்றலே மிகப்பெரிய கொண்டாட்டம். இனிய அழகிய சூழலில் ஒரு கல்விநிகழ்வதே மெய்யான புத்தாண்டுக்கொண்டாட்டம் என்பது என் எண்ணம். அதுவே இம்முறையும்
ஜெ