மரங்களும் மனிதர்களும்- கடிதம்

ரப்பர் வாங்க

அன்புள்ள ஜெ

நான் அடைந்த ஒரு புரிதலை ஒரு டைரியிலே எழுதி வைத்திருந்தேன். அது இதுதான். ஒரு இடத்திலுள்ள மரங்களும் செடிகளும் அந்த இடத்திலே வாழும் மக்களின் மனநிலையை உருவாக்குகின்றன. மக்கள் அந்த மரங்களைத்தான் பிரதிபலிக்கின்றனர். இதை நான் இந்தியாவில் மத்தியப்பிரதேசத்திலும் பஞ்சாபிலும் தென்னிந்தியாவில் ஹூப்ளியிலும் தமிழ்நாட்டிலும் வாழ்ந்த அனுபவத்திலே சொல்கிறேன்.

மத்தியப்பிரதேசத்தின் பல ஊர்களில் நிலம் வெறிச்சிட்டு கிடக்கும். டிசம்பரை ஒட்டிய காலகட்டம் முழுக்க அப்படியே பாலைவனமாகவே தெரியும். அப்போதெல்லாம் அந்த ஊர் மக்களையும் நினைத்துக்கொள்வேன். எப்படியாவது உசிரைப்பிடித்து வைத்துக்கொள்ளப் போராடுபவர்களாகவே அவர்களெல்லாம் இருப்பார்கள். தென்தமிழ்நாட்டிலும் பல ஊர்களில் மக்கள் அப்படித்தான்.

அப்படியென்றால் மரங்களையும் இயற்கையையும் மாற்றிக்கொண்டால் மனிதர்களும் மாறிவிடுவார்களா என்ற எண்ணம் எனக்கு உருவாகியுள்ளது. அதற்கு விடையாக ஆமாம் மாறிவிடுவார்கள் என்று சொல்லும் நாவலாக உள்ளது 1990 ல் நீங்கள் எழுதிய ரப்பர் நாவல். இப்போது அந்நாவல் வெளிவது  முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகப்போகின்றன. இன்றைக்குள்ள வாசிப்புக்கும் நுணுக்கமான அழகான வாசிப்பை அளிக்கும் நாவலாகவே ரப்பர் உள்ளது.

ரப்பரின் அமைப்பே அழகானது. ஆங்காங்கே புள்ளிகளை மட்டும் வைத்துக்கொண்டு நாவல் செல்கிறது. பெரிய காலகட்டம் நாவலுக்குள் உள்ளது. அதை வாசகன் தன் கற்பனையிலே உருவாக்கிக்கொள்ள முடிகிறது. அந்தப் புள்ளிகளில் எல்லாம் மனிதர்களின் கதைகள் உள்ளன. அந்த மனிதர்களின் வாழ்க்கை மாறுவதையே நாவல் காட்டுகிறது. அந்த மாற்றத்துக்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு பின்னணியாக மரங்களும் இயற்கையும் எப்படி மாறுகின்றன என்பதை நாவல் சொல்கிறது.

அந்த மாற்றம் மரங்களில் இருந்து மனிதர்களுக்கு வருகிறது. லாபநோக்கால் வாழையை அழித்து ரப்பர் வைக்கிறார்கள். ரப்பர் மக்களை பிளாண்டேஷன் மனிதர்களாக ஆக்கிவிடுகிறது. குளம்கோரி போன்றவர்கள் அன்னியப்படுகிறார்கள். லாரன்ஸ் கடந்துசெல்கிறர். லிவி, பெருவட்டர், திரேஸ் போன்றவர்களெல்லாம் அந்த அலையிலே மூழ்கிப்போகிறார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள ஈரத்தை ரப்பர் எப்படி உறிஞ்சிவிடுகிறது என்று சொல்லும் நாவல் ரப்பர்.

இந்நாவலை நீங்கள் அவ்வளவு சின்ன வயசிலேயே உருவாக்கியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. வாழ்த்துக்கள்.

சிவசங்கர் என்

முந்தைய கட்டுரைதிருவருட்செல்வி – வாசிப்பு
அடுத்த கட்டுரைபனிமனிதன் வாசிப்பு