அடர் கொன்றை மரங்களினூடும், கரும் பாறைகளினூடும், பசும்புல் வெளிகளினூடும், நீள் வெண்துகில் நீர்வீழ்ச்சிகளினூடும், இறும் மலைகளினூடும், குறிஞ்சி மலர்ப் பரல்களினூடும் புறம் வழி அகம் விரிக்கிறது ‘காடு’.
வாழ்வில் ஒருமுறை மட்டுமே வந்து மறையும், முதற் காதல் போன்ற, சில சித்திர தருணங்களின் பதிவு இந்த நாவல். உறவுகளின் பின்புலத்தால் தன்முனைப்பற்று தாழ்வுளச்சிக்கலில் உழலும் ஒரு இளைஞனின் அகக்கண்ணினூடே காடு என்னுள்ளே அடர்ந்தது. அடர்கின்றது.
இப்பாத்திரத்தின் இயல்பு நிலை சித்தரிப்பிற்கு நியாயம் சேர்க்க ஜெயமோகன் பின்னிய உறவுப் பின்னணி வெகுவாக ஈர்க்குமொன்று.
சந்தனக்காட்டு வெள்ளை உள்ள தேவதைப் பெண், ‘நீலி’ வரும் இடங்களில் எல்லாம் நில்லாமல் செல்கிறது மனது அவள் பின்னால்! இவர்கள் மட்டுமன்றி, மனித உறவுகளுக்கு, பந்தங்களுக்கு முக்கியத்துவம் தராத, காட்டை மட்டுமே அறிந்து, அதன் வழக்கில் வாழும் பாத்திரங்கள் வாழ்வியலின் பன்முகத் தரிசனங்களை உருவகப்படுத்துகின்றன.
மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை சித்தரிக்கும் ‘காடு’, நம் இலக்கிய வாசித்தலின் அடுத்த படிக்கட்டாக அமையும் என நம்புகின்றேன்.
காட்டுக்குள் தனிமை இல்லை.காடு ஒர் அரவணைப்பு. ‘காடு’ம்!
ஜனார்த்தனி நடராஜா
ஒரு மனிதன் அவனுக்கு நெருக்கமான சூழலை விட்டு வாழ்வதற்கான சூழலை ஏற்று கொண்டு வாழ வேண்டி வரும் போது அவன் கொஞ்சம் கொஞ்சமாக சிதறுண்டு போய் இறுதியில் ஏதோ ஒரு புள்ளியில் கரைந்து போகிறான் . கிரிதரனும் நீலிக்கு பிறகு சந்தனகாட்டிற்குள்ளாகவே கலந்து போகிறான் எஞ்சிய பிண்டம் வாழ்ந்து கொண்டிருக்கிறது . என்னுடைய நெருக்கத்தில் எப்போதும் இருக்கும் இந்த “காடு” . வாசிப்பை நேசிப்போர் தவறாது வாசிக்க வேண்டிய படைப்பு.
ரெ. விஜயலட்சுமி