அன்புள்ள ஜெ,
நான் 1999 முதல் ஐந்தாண்டுகள் கேரளத்தில் மூனாறு பகுதியில் பணியாற்றினேன். என் வாழ்க்கையின் வசந்தகாலம். எனக்கு 25 வயதுதான் சேரும்போது. அற்புதமான காடு. மழையீரம். எனக்கு ராமநாதபுரம் பக்கம். மழை என்றாலே கொண்டாட்டம். ஆண்டு முழுக்க மழை பெய்யும் ஊர் என்றால் கேட்கவேண்டுமா என்ன? மழையில் மழைக்கோட்டு அணிந்துகொண்டு நடப்பதுதான் பெரிய சந்தோசம் அன்றெல்லாம்.
அப்போதுதான் ஒரு காதல். அவள் மலையாளிப்பெண். அங்கே ஆரம்பப்பள்ளி ஆசிரியையாக வந்தாள். நானும் அவளும் அவ்வப்போது சந்திப்போம். புன்னகை செய்துகொள்வோம். அதன்பின் பேச்சு நடந்து ஒரு கட்டத்தில் என் காதலை அவளுக்குச் சொன்னேன். அவள் ஒருவாரம் யோசித்துவிட்டு சம்மதித்தாள். நாங்கள் நெருக்கமாக இருந்தோம். உடல்ரீதியான நெருக்கமும் உண்டு. அந்த மழைப்பகுதியின் அமைப்பே அப்படித்தான். காடு நாவலில் நீங்கள் சொல்லியிருப்பதுபோல கூடலும் கூடல் நிமித்தமும்தானே குறிஞ்சி நிலம் என்பது.
ஆனால் அந்த உறவு முறியநேரிட்டது. அவர்கள் வீட்டில் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. அவளுக்கு இரண்டு தங்கைகள். அவர்களுக்காக அவள் யோசிக்கவேண்டியிருந்தது. ஆனால் அவர்களைச் சம்மதிக்கவைக்கலாம் என்ற சூழல் இருந்தது. உண்மையான பிரச்சினை என் வீட்டில் மிகப்பெரிய நெருக்கடி. என் அம்மா தற்கொலை செய்துகொள்வேன் என்று சொன்னாள். என் அண்ணாக்கள் இருவரும் கொலைசெய்வோம் என்று சொன்னார்கள். (நான் தேவர். அவள் ஈழுவா) ஆகவே நானும் விலகிவிடலாம் என்று முடிவெடுத்தேன். அந்த முடிவை எடுத்ததைப்பற்றி வருத்தமெல்லாம் இல்லை. எனக்கு என் வீட்டாரைத் தெரியும். கொலைக்குக்கூட அஞ்சக்கூடியவர்கள் இல்லை. சேர்ந்து வாழ்வதே பெரிய போராட்டமாக இருக்கும் என்று தோன்றியது. 2004ல் பிரிந்துவிட்டோம். நான் வேலையை விட்டுவிட்டு சென்னைக்குச் சென்றேன். இரண்டு ஆண்டுகள் சரியான வேலை இல்லை. அதன்பிறகு வேலை. குடும்பம் பிள்ளைகள் எல்லாம் ஆகிவிட்டது. அவளுக்கும் குடும்பம் குழந்தை எல்லாம் உள்ளது
நாங்கள் ஒரு முடிவு எடுத்தோம். இனி எப்போதுமே தொடர்பு கொள்வதில்லை. ஆகவே இன்றுவரை நான் அவளை பார்க்கவோ தொடர்புகொள்ளவோ இல்லை. ஆனால் அப்படி தொடர்புகொள்ளாமலிருந்தால்தான் நினைவுகள் மிகவும் கனமானவை ஆகிவிடுகின்றன. எனக்கு மலைப்பகுதிக்குச் செல்லவே முடியாத நிலை. சென்றால் மனம் கனமாக ஆகிவிடும். மூச்சுத்திணறல் வந்து நிஜமாகவே ஆஸ்த்மா வந்துவிடும். அந்த நினைவுகள் அப்படிப்பட்டவை.
காடு நாவலை நான் பத்து தடவையாவது வாசித்திருப்பேன். பல வரிகளை அடிக்கோடு போட்டு வைத்திருப்பேன். காதலின் தோல்வியைச் சொல்லும் பல கதைகள் உண்டு. ஆனால் காதல்தோல்வியிலே நாம் இழப்பது வெறும் ஒரு பெண்ணை அல்ல. அந்த நிலமே நமக்கு இல்லாமலாகிவிடுகிறது. அந்த நினைவுகளில் இருந்த நிலமே இல்லாமலாகிவிடுகிறது. அந்த நாட்களின் நினைவுகள் பெரிய சுமையாக ஆகிவிடுகின்றன. அதை அவ்வளவு தீவிரமாகச் சொன்ன நாவல் காடுதான்.
சென்ற நவம்பரில் ஒரு முடிவெடுத்து மூனாறு சென்றேன். மூனாறு செல்லமுடியவில்லை. ஆகவே அப்படியே திரும்பி வால்பாறை சென்றுவிட்டேன். அங்கே இருந்துகொண்டு மூனாறை நினைத்துக்கொண்டே இருந்தேன். மழை கொட்டிக்கொண்டே இருந்தது. மழைபோல நினைவுகள் கொட்டிக்கொண்டே இருந்தன. காடு நாவலிலுள்ள வரிகள் இவை
“உன் நினைவென ஓயாது பெய்துகொண்டிருக்கிறது மழை. இம்மண்ணிலுள்ள அனைத்தையும் ஈரமாக்கி விட்டாய். புதைந்து கிடந்த விதைகளை எல்லாம் முளைத்தெழச் செய்துவிட்டாய். எல்லா இடைவெளிகளையும் நிரப்பி வழிகிறாய். எல்லாவற்றையும் கழுவிக் கழுவி நீ ஓய்ந்தாய். புத்தம் புதியதாக நான் விரிந்து எழ புதிய வெயிலொளிபோல மென்மையாக என் மீது படர்கிறாய். உன் பெயர் என்னில் ஒருகோடித் துளிகளில் சுடர்விடுகிறது. உன்னை நிசப்தமாகப் பிரதிபலித்தபடி வியந்து கிடப்பதே என் கடனென்று உணர்கிறேன். உன் மகத்துவங்களுக்கு சாட்சியாவதற்கென்றே படைக்கப்பட்டிருக்கிறேன். உன் மௌனத்தால் அடித்தளமிடப்பட்டிருக் கின்றன என் உரையாடல்கள் அனைத்தும். உன்னுடைய அசைவற்ற ஆழத்தின் மீது சுழிக்கும் அலைகளே நான்.”
ஜெ, என்னுடைய அந்த நாளின் மனசை அப்படியே எழுதிய வரிகள் இவை. நன்றி ஜெ
அன்புடன்
ச