ஆதிவிஷத்தின் தடங்கள்

ஆலம் மின்னூல் வாங்க

ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம்

103 டிகிரி ஜுரம் என்றால் நிறைய கனவுகளும் உருவெளித்தோற்றங்களும் வருமாம். கூடவே நிறைய உளறுவதற்கும் வாய்ப்பு உண்டு என்றார் நண்பர் ஒருவர். ஆலம் நாவல் வாசித்து அதைப் பற்றி தீவிரமாக விவாதித்த பிறகு காய்ச்சலில் விழுவது அபாயகரமானது. சுக்கிரி நண்பர்களுடன் ஆலம் பற்றி அதிதீவிரமாக விவாதித்து ஒரு வாரமாகியிருந்தது. அதன் பிறகு வேறு சில படைப்புகளும் வாசித்திருந்தேன். இருந்தும் காய்ச்சலின்போது கனவில் எல்லாம் இடம் வலமாக முடிச்சிட்டுக்கொள்ள, கதைமாந்தர்களை கலைத்துப்போட்டது போலவும், துண்டிக்கப்பட்ட  தலைகள் சம்பந்தமில்லாதவர்கள் கையில் இருப்பது போலவும், அதிர்ந்து பேசாத வக்கீல் கிருஷ்ணசாமி கையில் குருதி வழியும் அரிவாளுடன் நிற்பது போலவும், இவர்களுக்கெல்லாம் நான் வக்கீலாக ஆஜராக முயல்வது போலவும் குழப்பமான கனவுகள். அனைத்தும் ஆலம் பற்றிய கனவுகள் மீண்டு எழுந்த பிறகு வாசிப்பை ஒருவாறு தொகுத்துக்கொண்டேன்.

ஆலம் மனிதர்களின் அதிகாரம், செல்வம் மற்றும் புகழுக்கான விழைவையும், வன்முறை மீதான ஈர்ப்பையும் பின்னலாக்கிய நாவல். அதிகாரம் என்ற சொல்லை அரசியல் பின்னணியில் மட்டும் பயன்படுத்தவில்லை. ஒருவர் மீது மற்றொருவருடைய அதிகாரத்தையும் சொல்கிறேன். அந்த விழைவுதான் பூஞ்சை போல பெருகி வாழ்கிறது. இந்த விழைவு மன்னராட்சியின்போதும், நிலவுடைமை காலகட்டத்திலும் நவீன ஜனநாயக காலத்திலும் தன்னை எப்படி தகவைமைத்துக்கொள்கிறது என்பதுதான் கதைவழியே நாவல் காட்டும் பரிணாமம். நாவலிலிருந்து முன்னும் பின்னும் விரித்தெடுத்துக்கொள்ள வேண்டியது வாசகனுக்கு கொடுக்கப்பட்ட இடம்.

முதலில் மேல்கொண்டையார் செவல்கொண்டையார் போட்டி ஆரம்பிப்பது மன்னராட்சி காலத்தில். அப்போது நிலப்போட்டி அல்ல. வெறும் அதிகாரத்துக்கான போட்டி. கிட்டத்தட்ட வழிப்பறியில் இருந்த கும்பலை, அரசு அங்கீகரித்து ஒரு பதவியை கொடுத்துவிடுகிறது. வழிப்பறிக்கு பதில் வரி வசூல். அது மீறப்பட்டு அண்ணனை கொன்று தம்பி பதவியை பறிக்கும்போது, அது அரசுக்கான அறைகூவல். எனவே அரசியே தலையிட்டு தம்பியைக் கொன்று அண்ணன் மகனுக்கு பதவியை திரும்ப அளிக்கிறார். வரிவசூல், நீதி பரிபாலனம் அப்போதைய அதிகாரத்தின் வடிவம். அது யார் கையில் என்ற போட்டியில்தான் மகன்கள் வழியே பகை கிளைவிடுகிறது.

நாவலின் போக்கில், தலைமுறைகள் தாண்டி அந்த போட்டி நிலத்துக்கான போட்டியாக உருமாறுகிறது என்பதைப் பார்க்க முடிகிறது. இது வேறு காலம். இங்கு நிலத்தை கைக்கொள்வதுதான் அதிகாரத்தை விட்டுவிடாமல் இருக்க வழி. அதன் ஒரு பகுதியாகத்தான் வீரலட்சுமி யாருக்கு மனைவியாவது என்பதும் முடிவு செய்யப்படுகிறது.  பிராந்தியத்தில்  உள்ளதிலேயே நல்ல பெண்ணுக்கு எவன் தாலி கட்டுகிறான் என்பதுகூட அதிகாரத்தை நிலை நிறுத்த செய்யப்படும் முயற்சி. ஒரு பெண்ணை கடத்தி வந்து மணந்து வன்முறையாக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் மகனைப் பார்த்து தாய் பெருமிதம் அடையும் காலம்.

மூன்றாவதுதான் நம் கதாநாயகன் வக்கீல் மாரி நாவல் முடிவில் எடுக்கும் எதிர்பாரா முடிவு. இது நவீன காலம். அந்த நிலப் போட்டி இன்னும் இருக்கிறது, ஆனால் நிலம் பிரதானமல்ல. அதிகாரம் வேறு வடிவம் எடுத்திருக்கிறது. தொழிலில் வெற்றிதான் இங்கு தராசு எந்தப்பக்கம் சாய்கிறது என்று காட்டுகிறது. மூன்று வகை சமூகங்களிலுமே போட்டி எதற்காகவேனும் இருக்கலாம், ஆனால் அடிநாதம் அதிகாரம்தான். ஜூனியர் வக்கீல் கிருஷ்ணசாமி மீது மாரிக்கு தேவைப்படுவது அந்த அதிகாரம்தான். மாரியால் எங்கும் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாது என்று முன்னர் கிருஷ்ணசாமியிடமே சொல்லியிருக்கிறான். “நான் மறவன்,என்னால் அந்தாளை கண்டுபிடிக்காமல் ஓயமுடியாது” என்பான். இதுவும் போர்க்குணத்தின் நவீன நீட்சியே. போட்டி மனப்பான்மை எனலாம். ராஜச குணம் என்றும் சொல்லலாம். அதனால்தான் தன்னிடமிருந்த வழக்கு தன் ஜூனியருக்கு சென்றதை ஏற்க முடியாமல், எதிர்கட்சிக்கு ஆதரவாக களம் இறங்குகிறான். அவனுக்கு இப்போது மேல்கொண்டையார் குடும்பத்துக்கும் செவல்கொண்டையார் குடும்பத்துக்கும் வித்தியாசமில்லை. தன் எதிரில் யார் நிற்கிறார்கள் என்பதுதான் முக்கியம். உங்களுக்கு எதிராக என்றுமே நிற்கமாட்டேன் என்று சொன்ன ஜூனியர் இன்று பிரதான எதிரி.

விவாதத்தின்போது “இந்த போட்டியில் , வன்முறையில் நேரடியாக ஈடுபடுவோரை விடுத்து, அதன் அடுத்த நிலைகளிலும், கடைசியில் கூலிக் கொலை செய்பவர்கள் வரை பரவி கொல்ல வைப்பது எது?” என்றொரு கேள்வி எழுந்தது.

இந்த நாவல் பரிசீலிக்காத தரப்புகள் நிறைய உள்ளன . கூலிப்படை, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் ஆகியவற்றை சொல்லலாம். கொலையாளிகளின் ஒரு சில கோணங்கள் மட்டுமே நமக்கு காட்டப்படுகின்றது. கோர்ட்டில் அவர்களது நடத்தை அவர்கள் இயல்பான அன்றாடத்தில் இருப்பது போன்ற பாவனை. பின்னர் சந்தானத்தின் நண்பனிடம் காப்பாற்ற சொல்லி ஒரு கொலையாளியின் மனைவி அழைத்து வரும் கட்டம். இறுதியில் கோப்ரா க்ரைம் என்பதன் ஒரு பக்கம் குற்றம் புரிவோரையும், மறுபக்கம் வக்கீல்களையும் வைப்பது போன்ற மெல்லிய தீற்றல்கள்தான். எனவே  பகை , வஞ்சம், அழிப்பதற்கான விழைவு , அன்பு, அதிகாரம் இவற்றைப்பற்றித்தான் இந்த நாவல் கூர்கொள்ள விழைகிறது.

இந்த அதிகாரப் போட்டியிலேயே இல்லாத ஒருவர் சந்தானம், அவரை எங்கு பொருத்துவது என்ற கோணத்திலும் விவாதித்தோம். தன் மகனை தவறுதலாக கொன்றுவிட்ட தலைவெட்டி குடும்பத்தை சட்டபூர்வமாக எதிர்கொள்வதுதான் சந்தானத்தின் இயல்புக்கு ஏற்ற எதிர்வினை.  ஆனால் வழக்கில் தோற்ற சந்தானம், தன் சொத்தையெல்லாம் விற்று , அந்த குடும்பத்தை வேரோடு அழிக்க களமிறங்குவது ஒருவகை அதிகார மோதல்தான். நீதிக்கான மோதல்தான், இருந்தும் தன் இடத்தை வகுக்கும் போட்டியும்கூட. சந்தானத்துக்கு மகனின் இழப்பு என்றால், கிருஷ்ணசாமிக்கு கொலையாளி சொன்ன பட்டினத்தார் பாட்டு முதல் பொறி. நாவல் முழுதும் சந்தானத்துடன் சேர்ந்து பொருமி, கோபப்பட்டு , பதறி உடன் சென்ற எனக்கு , அவரது இடம் வீழ்ந்த தருணமும் முக்கியம். மாரி சந்தானத்தைக் கண்டுபிடித்து அவரிடம் , “உங்கள் மகனுக்காக நீங்கள் அவர்களை கொல்ல ஆரம்பித்தது உண்மைதான், ஆனால் ஒரு கட்டத்தில் அதில் நீங்கள் மகிழ்ச்சியை கண்டடைந்தீர்கள்” என்பான். அது அவருக்கு அதிர்ச்சியை உருவாக்கும். அதை ஆழம் ஏற்றுக்கொள்ளும் உடல்மொழிகள் இருக்கும். அதன் பின்னரே அவர் சண்முகத்தை மன்னித்து விட்டுவிட ஒப்புக்கொள்வார். அவர் மீண்டும் தந்தையாக உணரும்போது கொலைவெறி தணிந்துவிடுகிறது. அப்படியென்றால் அதற்கு முன்னர் செய்ததெல்லாம் தந்தையாக நின்று அல்ல. தனியனாக மகிழ்ந்து கொலை செய்கிறார். அந்த கொலைகள் நடப்பதை தான் உயிரோடு இருந்து பார்க்க வேண்டும் என்கிறார். அதுதான் அவர் நாயகன் ஸ்தானத்திலிருந்து வீழ்ந்த கணம்.

வன்முறை வழியே அதிகாரத்துக்கான இந்த விழைவு மன்னராட்சியிலிருந்து இன்று வரை என்ற கோட்டில் அடங்கிவிடுவது அன்று. நாவல் பிரதிக்கு வெளியே பின்னோக்கி யோசித்தால் தன்னுடைய எல்லைக்குள் வந்துவிடும் மற்ற குழுவினரை வன்முறையாக கொன்று குவிப்பது பழங்குடி வாழ்க்கையிலேயே தொடங்கிவிட்ட ஒன்றுதான் இல்லையா? அதிகம் பேரை காவு வாங்கியவன்தான் அன்று புகழோடு வாழ்ந்தவன். முன்னோக்கி சென்றால், மக்களாட்சி முதிர்ந்து இனி வரும் காலங்களில் அதன் நீட்சி அறிவின் போட்டி என்ற சாத்தியம் இருக்கிறதல்லவா?

காலத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு மனிதர்களை அதிகாரத்துக்காக, செல்வத்துக்காக , புகழுக்காக எந்த எல்லைக்கும் தள்ளும் ஆகிருதி கொண்ட அந்த விழைவு, தான் வாழ மனிதர்களை பெருக்கி அழிக்கும் அதன் வல்லமை, மானுடம் இங்கு எஞ்சி வாழந்திருக்க அந்த விழைவு அத்தியாவசியமானது என்ற நிதர்சனம், மானுடத்தை களமாக்கி வேறொன்று பெருகி வளர்கிறது என்ற புரிதல் – இவை அனைத்தும் உண்மையிலேயே கனவுகளை ஆளும் அளவு பதற வைப்பவைதான்.

பழனி ஜோதி இந்தியா வந்தால் சுக்கிரி நண்பர்கள் சந்திப்பது வழக்கம். காய்ச்சலின்போது ஆலம் நாவல் கனவில் வெளிப்பட்ட விதத்தை கேள்விப்பட்ட நண்பருக்கு அபரிமிதமான சந்தோஷம். கிண்டி நகர்ச்சதுக்கத்தில் சந்திப்புக்கு வரும்போது கையோடு ஒரு புத்தகத்தை எடுத்துவந்திருந்தார். அடுத்து காய்ச்சல் வருவது போல் இருந்தால் இதை வாசித்துவிடுங்கள் என்று சொல்லி “பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும்” புத்தகத்தைக் கொடுத்தார்.

நன்றி

பா.விஜயபாரதி

முந்தைய கட்டுரைதுருவஜோதிடம்
அடுத்த கட்டுரைஇலக்கியத்துடன் வளர்தல்- கடிதம்