அன்புள்ள ஜெ
குமரித்துறைவி நாவலை என் அம்மா, அக்காவுக்கு சென்ற ஆண்டு கோவை புத்தகக் கண்காட்சியில் வாங்கி பரிசாகக் கொடுத்தேன். தமிழில் பரிசாகக்கொடுக்கச் சிறந்த நாவல் என்றால் குமரித்துறைவி என்றுதான் சொல்வேன். ஏனென்றால் அந்தக்கதையின் அடிப்படையான விஷயங்களை இங்கே உள்ள சாமானியப்பெண்களும் எளிதாகப்புரிந்துகொள்ள முடியும்.
அந்தக் கதையின் நடை கொஞ்சம் அன்னியமாக கோவைக்காரர்களுக்குத் தோன்றினாலும் உடனடியாக அவர்களால் அதற்குள் வந்துவிட முடிகிறது. கதை அப்படி ஓர் ஓட்டம் உடையது. நம்பூதிரி அம்மைக்கு திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லும் இடத்தில் கதை சூடுபிடித்து ஒருவகையான பதற்றமும் பரவசமுமாகவே ஓடுகிறது.
என் அம்மா மிகச்சரியாகச் சொன்னார். “தம்பி நம்ம வீட்டிலே ஒரு கல்யாணம் நடந்தா எப்டி இருக்கும்? அப்ப பதற்றமா இருக்கும். எப்டியாவது நல்லபடியா முடிஞ்சாச் சரின்னு இருக்கும். ஆனா அது சந்தோசமான நேரம்னு பிறகு நினைக்க நினைக்க தோணிட்டே இருக்கும். ஏக்கமா இருக்கும். அந்தமாதிரி ஒரு நாவல் இது” குமரித்துறைவி பற்றி மிகச்சிறப்பான ஒரு வரையறை இதுதான் என நினைக்கிறேன்.
சு.சிவக்குமார்
அன்புள்ள ஜெ
எங்கள் ஊர்ப்பக்கம் (கீழத்தஞ்சை) ஒரு நம்பிக்கை உண்டு. ஒரு வீட்டில் மங்கலக்காரியம் நடக்கவேண்டும் என்றால் ஒரு சின்ன மங்கலக்காரியத்தைச் செய்தால்போதும், லட்சுமி குடியேறிவிடுவாள், அதன் பின் மங்கலங்கள் நடக்கும் என்பார்கள். என் அண்ணனுக்கு திருமணம் தட்டித்தட்டிப்போய்க்கொண்டிருந்தது. (அவருக்கு வாய் கொஞ்சம் திக்குவாய்) ஒரு சோசியர் சொன்னார் என்று வீட்டில் பசு குட்டிபோட்டதற்கு பத்தாயிரம் ரூபாய்ச் செலவில் ஒரு கொண்டாட்டம் நடத்தினோம். வந்த பெண்களுக்கெல்லாம் குங்குமம், வெள்ளிச்சிமிழ், வஸ்த்ரம் குடுத்தோம். அடுத்தமாதமே அண்ணனுக்கு திருமணம் ஆகிவிட்டது. அது எனக்கு ஆச்சரியமான விஷயம்
குமரித்துறைவி வாசித்ததுமே நான் இங்கே நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆசான் வீட்டில் லட்சுமி குடியேறிவிட்டாள். நல்லது உடனே நடக்கும் என்று. அதேபோல தம்பி திருமணம் நடக்கப்போகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எஸ்.கலியமூர்த்தி