இலக்கியத்துடன் வளர்தல்- கடிதம்

நாவலெனும் கலைநிகழ்வு

அன்புள்ள ஜெ

நலம் என நினைக்கிறேன்.

எனக்கு இலக்கியவாசிப்பு தொடங்கியபோது உருவான பதற்றங்களில் ஒன்று நான் சரியாகத்தான் வாசிக்கிறேனா என்ற கேள்விதான். நான் ஏராளமான புனைவுகளை வாசிப்பவன். ஆனால் பிறரிடம் பேசும்போது அவர்கள் சொல்லும் எதையும் நான் கவனித்திருக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டதுண்டு. அது மிகப்பெரிய தாழ்வுணர்ச்சியை உருவாக்கும். வாசித்தும் பயனில்லை என்ற எண்ணமும் ஏற்படும். நான் உங்களுக்கே இதைப்பற்றி எழுதியதுண்டு.

நீங்கள் எழுதிய வாசிப்பு பற்றிய புத்தகங்களை நான் வாசித்தேன். இலக்கியம் பற்றிய ஒரு தெளிவு கிடைத்தது. எப்படி யோசிக்கவேண்டும், எப்படி விவாதிக்கவேண்டும் என்றெல்லாம் தெரிந்துகொண்டேன். தொடர்ச்சியான விவாதம் வழியாக இலக்கியங்களை கருத்துக்களாக பேச நான் படித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் வந்தது.

ஆனால் எனக்கு மிகுந்த நம்பிக்கையும் தேர்ச்சியும் அளித்த புத்தகம் பி.கே.பாலகிருஷ்ணன் எழுதி அழகிய மணவாளன் மொழிபெயர்த்த நாவல் எனும் கலைநிகழ்வு என்ற புத்தகம். மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவற்றை படித்து கடுப்பானதுண்டு. ஒரு சொற்றொடரை பலமுறை படித்தாலும் புரியாது. அப்படியே எல்லா சொற்றொடர்களும் இருக்கும். மொழிபெயர்ப்பு என்றாலே நான் வாங்க யோசிப்பேன். ஆனால் இந்த புத்தகம் அப்படியே தமிழ் புத்தகம் போன்ற மொழிபெயர்ப்பு. அற்புதமாக இருந்தது.

இந்தப்புத்தகத்த்தில் இருந்து நான் அடைந்தது என்ன என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் நான் சிந்திப்பதைப்போல இருந்தது. நான் இதிலுள்ள சில கிளாஸிக் நாவல்களைப் படித்திருக்கிறேன். அந்த நாவல்களைப் பற்றி பி.கே.பாலகிருஷ்ணன் சிந்திக்கும்போது நானும் கூடவே சிந்திப்பதுபோல் இருந்தது. எனக்கே சிந்தனை கைவருவதுபோல உணர்ந்தேன்

இந்த கட்டுரைகளிலுள்ள சிறப்பு வழக்கமாக இலக்கியம் பற்றிப்பேசுபவர்கள் எழுதுவதுபோல கோட்பாடுகளையும் மேற்கோள்களையும் கொண்டுவந்து கொட்டாமல் பாலகிருஷ்ணன் அவரே ஆழமாகச் சிந்திக்கிறார் என்பதுதான். இந்த கட்டுரைகளிலுள்ள இருந்த ஒரிஜினாலிட்டிதான் எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்த விஷயம். நான் கூர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தது அந்த சிந்தனைகளைத்தான்.

சிறப்பான நூல். நன்றி

எம். மாரி குமார்

முந்தைய கட்டுரைஆதிவிஷத்தின் தடங்கள்
அடுத்த கட்டுரைமங்கலங்களின் வருகை, கடிதங்கள்