போதை வரலாறு, கடிதம்

ஸாகே போதையின் கதை

அன்புள்ள ஜெ,

அண்மையில் வாசித்த ஒரு நல்ல நூல் லோகமாதேவி எழுதிய ஸாகே போதையின் கதை. நான் லோகமாதேவி அவர்களின் கட்டுரைகளை உங்கள் இணையதளத்திலும் வெவ்வேறு இணையப்பத்திரிகைகளிலும் வாசித்துள்ளேன். இண்டிகோ பற்றி அவர் எழுதிய கட்டுரை நான் முதலில் வாசித்தது. ஒரு பெரிய புனைவு அளிக்கும் மன எழுச்சியை அந்தக்கட்டுரை எனக்கு அளித்தது. அறிவியல் தகவல்களும் சரித்திரச்செய்திகளும் கலந்து ஒரு ஒட்டுமொத்தமான சித்திரம் கிடைத்தது. நான் மிக மகிழ்ந்து வாசித்த கட்டுரை. பலருக்கும் பார்வேட் செய்தேன். அதன்பின் கருவேலமரங்கள் பற்றிய கட்டுரையும் மிகவும் நிறைவளித்த கட்டுரை. புதியபார்வையை அளித்த கட்டுரை.

ஸாகே மிகச்சிறந்த ஒரு நூல். போதையின் கதை என்ற தலைப்பினால்தான் வாங்கினேன். போதையூட்டும் தாவரங்கள் பற்றிய ஒரு நூல்.ஆச்சரியமான தாவரவியல் செய்திகள் நிறைந்த நூல். கூடவே அந்நூலில் சரித்திரமும் பின்னிப்பிணைந்துள்ளது. எனக்கு என்ன ஆச்சரியமென்றால் இந்த போதைத்தாவரங்கள் மனிதப்பண்பாட்டை கட்டமைப்பதிலே என்னென்ன பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன என்பதுதான்.

நான் டான் ஜுவான் நூல்களை பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தேன். செவ்விந்தியர்களின் மதமும் ஞானமும் போதைக் காளான்களால் உருவானது என்ற செய்தி அன்றே தெரியும். சோமபானம் சுராபானம் இல்லாவிட்டால் வேதங்கள் கிடையாது. ஆப்ரிக்காவிலும் போதை உண்டு. பழங்கால பூசாரிகள் சொன்ன எல்லா ஞானமும் போதையிலேதான். அப்படியானால் மனித ஞானமே போதைத்தாவரங்களால்தான் உண்டாகியிருக்கிறது என்று சொல்லலாமா. இன்றைக்குள்ள மதம், கலையிலக்கியம் எல்லாமே அப்படித்தான் வந்ததா?

நான் அதை யோசித்துக்கொண்டு எங்கள் குரூப்பில் அதைப் பகிர்ந்திருந்தேன். நாங்கள் ஆன்மிக விஷயங்களை விவாதிக்கும் ஒரு குடு. எங்கள் ஆசிரியர் போன்றவர் சொன்னார். அப்படியென்றால் அந்த தாவரங்கள் உருவான நோக்கமே மனிதஞானம் இங்கே முளைக்கவேண்டும் என்பதாகத்தான் இருக்கும் என்று சொன்னார். மனித ஞானம் முதலில் தாவரங்களாக முளைத்து அதன்பின்னர் மூளையில் கருத்துக்களாகவும் கனவுகளாகவும் ஆகியது என்றார். ஆச்சரியமான சிந்தனை என்று நினைத்துக்கொண்டேன்.

அருமையான நூல். பல கோணங்களிலே விவாதிக்கப்படவேண்டிய நூல். ஆன்மிகம் பற்றியெல்லாம் பேசுபவர்கள்கூட கூர்ந்து வாசிக்கவேண்டிய நூல். அருமையான வாசிப்பனுபவம் அளிக்கும் நடையிலே உள்ளது. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

ரா. ஞானதேசிகன்

முந்தைய கட்டுரைஞானத்தின் படித்துறை – கடிதம்
அடுத்த கட்டுரைசரவணன் சந்திரன்