ஓர் உரையாடலில் இன்றைய இலக்கியத்தில் உணர்வெழுச்சிகளுக்கான [emotions] இடம் என்ன என்று கேட்கப்பட்டது. நாம் இலக்கியத்தில் இன்று மெல்லுணர்ச்சிகளை இழந்துகொண்டிருக்கிறோமா என்று ஐயம் தெரிவிக்கப்பட்டது. இனிமேல் வரவிருக்கும் இலக்கியம் என்பது உணர்வெழுச்சிகளுக்கு எதிரானதாக, அறிவார்ந்த கூர்நோக்கு மட்டும் கொண்டதாக இருக்கும் என்றும் ஆகவே பகடி, அங்கதம் ஆகியவையே இனி இலக்கியத்தின் மையப்போக்காக இருக்கும் என்றும் ஒருவர் சொன்னார்
ஆனால் இந்த வரிகளை ஏறத்தாழ இதேபோல ஆரம்பகாலப் பின்நவீனத்துவர் சொல்லி இருபத்தைந்தாண்டுகளாகின்றன. தமிழிலும் அது எதிரொலித்தது. அன்று அதற்கான எல்லா வாதங்களையும் அவர்கள் முன்வைத்தார்கள். அதாவது உணர்வெழுச்சிகள் என்பவை சமூகத்தில் ஏற்கனவே உருவாகியிருக்கும் மதிப்பீடுகளில் இருந்து எழுபவை. அம்மதிப்பீடுகளை நம்பிக்கைகளாகவும் சார்புநிலைகளாகவும் நிலைநாட்டியிருக்கிறார்கள். அம்மதிப்பீடுகளின் நோக்கம் என்பது சமூக அமைப்புக்களைக் கட்டி நிலைநாட்டுவது. அத்தகைய அமைப்புகள் அனைத்தும் பின்நவீனத்துவ சிந்தனையாளர்களால் கேள்விக்குரியதாக்கப்பட்டுவிட்டன. அவற்றின் அடித்தளம் நொறுங்கிவிட்டது. எனவே அவற்றிலிருந்து எழும் உணர்வெழுச்சிகளுக்கு இலக்கியத்தில் இடமில்லை. அவை மெல்லுணர்ச்சிகளாக, கலையம்சம் இல்லாததாகவே தோன்றும்.
ஆனால் பின்நவீனத்துவத்தின் அடித்தளம்தான் அப்போது நொறுங்கிக்கொண்டிருந்தது. அடுத்த அலையாக உண்மையில் உணர்வெழுச்சி எழுத்தே எழுந்துவந்தது.Frank McCourt எழுதிய Angela’s Ashes உதாரணம். தமிழிலும் உணர்ச்சிகரமாக கதைசொல்லும் அடுத்த தலைமுறைப்படைப்பாளிகளே உருவாகி வந்தார்கள்.மானுட உணர்ச்சிகளை கருத்தியல் கட்டமைப்புகள் என்று பார்க்கும் பின்நவீனத்துவர்களின் நோக்கு காலாவதியாகியது. உயிரியல் வெளிப்பாடுகளின் மாற்றுவடிவம் அவை என நோக்கும் பார்வை மேலோங்கியது.
உணர்ச்சிகள் இல்லாமல் இலக்கியம் இல்லை. இந்தக்காலத்தில் நுண்மையான உணர்ச்சிகள் குறைகின்றன என்று சொல்வது ஒரு வழக்கம் என்றாலும் அது உண்மை அல்ல. யோசித்துப்பாருங்கள், பெரும்போர்கள் பஞ்சங்களின் காலமாக இருந்த நம் இறந்தகாலங்கள் மெல்லுணர்ச்சிகளுக்கு இன்றைவிட சாதகமான காலங்களா என்ன? மெல்லிய உணர்ச்சிகள் எப்போதும் இருக்கும். அவை இலக்கியத்தையும் கலைகளையும் எப்போதும் ஊடகமாகவும் கொள்ளும்.அடிப்படையில் கலையின் நோக்கமே அதுதான்.
ஆனால் இந்த உணர்ச்சி என்ற சொல்லை நாம் கொஞ்சம் கவனமாகப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. உணர்ச்சிகளை மெல்லுணர்ச்சி [sentiment] களில் இருந்து வேறுபடுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. பலசமயம் சல்லிசான ஒரு உணர்ச்சியையே மெல்லுணர்வு என்று சொல்லிக்கொள்கிறார்கள். பெரும்பாலும் அன்றாட லௌகீக வாழ்க்கையின் சில சாதாரணமான தருணங்களை வேறுகோணங்களில் கண்டடைவதையே அப்படி எண்ணுகிறார்கள். அவற்றை முன்வைக்கும் எழுத்துக்களுடன் எளிதாக அடையாளம் காணமுடிகிறதென்பதே அவற்றை ரசிப்பதற்கான காரணங்களாக அமைகின்றன.
இது இலக்கியவெளிப்பாட்டில் மிகச்சிக்கலான ஒரு இடம். ஓர் உணர்ச்சி இயல்பாகத் தீவிரமாக வெளிப்படுகையில் உணர்வெழுச்சியாகிறது. அதையே இன்னொருவர் செயற்கையாக போலி செய்யும்போது அது மெல்லுணர்ச்சி அல்லது மிகையுணர்ச்சி ஆகத்தெரிகிறது. நம் வணிகக் கதைகளிலும் வணிக சினிமாக்களிலும் உள்ள பெரும்பாலான மிகையுணர்ச்சித் தருணனக்கள் பேரிலக்கியங்களில் உள்ள உணர்ச்சிகரத் தருணங்களின் போலிவடிவங்கள் எனக்காணலாம். எதை மிகையுணர்ச்சி எதை உணர்வெழுச்சி என முடிவுசெய்வது வாசகனின் நுண்ணுணர்வு சார்ந்தது. நுண்ணுணர்வற்ற அசடர்கள் எல்லா மிகையுணர்ச்சியையும் உணர்வெழுச்சியாகக் கருதி நெகிழக்கூடும். நுண்ணுணர்வற்ற வரண்டவர்கள் எல்லா உணர்வெழுச்சிகளையும் மிகையுணர்ச்சியாகக் கருதித் தள்ளிவிடவும் கூடும்.
மிகையுணர்ச்சி வெளிப்பாட்டுக்கும் உணர்வெழுச்சிவெளிப்பாட்டுக்கும் கட்டமைப்பில் உள்ள வேறுபாடு இதுதான் – அதுவும் வாசகன் அகவயமாக உணரத்தக்கது. மிகையுணர்ச்சிவெளிப்பாடு மேலும் மேலும் திறந்துகொள்ளும் தன்மையற்றதாக இருக்கும். ஏனென்றால் அது வாழ்வின் உண்மையான உணர்ச்சித்தருணத்தில் இருந்து வாசகன் விரும்பும் ஒர் அம்சத்தை மட்டும் எடுத்து மிகையாக்கிக் கொண்டிருக்கும். உணர்வெழுச்சி நேரடியான வாழ்க்கை வெளிப்பாடு. மேலும் மேலும் விரியும் தன்மை கொண்டிருக்கும்
மிகையுணர்ச்சி வெளிப்பாடு வாழ்க்கையின் நேரடியான துயரங்களை அப்படியே பதிவுசெய்வதாக, அதை மேலும் விரிப்பதாக அமையும். இறப்பு, பிரிவு, நோய், அழிவு என அதன் கருக்கள் நேரடியானவை. உணர்வெழுச்சிவெளிப்பாடு அடிப்படை உணர்ச்சிகள் சார்ந்ததாக மேலோட்டமாகத் தோன்றினாலும் ஆழத்தில் அது ஒரு மதிப்பீடு சார்ந்ததாகவே இருக்கும். ஜன் வல்ஜானுக்கு [லெ மிஸரபிள்ஸ்] பாதிரியார் அவன் திருடவந்த வெள்ளி மெழுகுவத்திநிலைகளை அளிக்கையில் அங்கே எந்த உணர்ச்சிவெளிப்பாடும் இல்லை, விழுமியமே வெளிப்பாடுகிறது, ஆனால் உணர்வெழுச்சிகளை உருவாக்குகிறது.
இலக்கியத்தில் உணர்வெழுச்சிக்கு எதிரான பாவனைகள் பல. அவற்றிலொன்று நுண்மை. பலசமயம் ஹோமியோ மருந்துபோல ஊசிமுனையில் தொட்டு ஒரு செம்பு நீரில் கலக்கி ஒன்றை அளித்தால் அது நுண்மை என்றும் அதை ஊகித்தெடுப்பதே கலையுணர்வு என்றும் சொல்லப்பட்டது. அவை உத்திநுட்பங்களே அல்லாமல் இலக்கியநுட்பங்கள் அல்ல. அதை ஊகிப்பதில் என்ன வாழ்க்கைப்புரிதல் இருக்கிறது? பெரும்பாலும் அது வாசகன் ஏற்கனவே அறிந்ததாகவே இருக்கும். நல்ல வாசகன் ஒருபோதும் படைப்பின் உத்திநுட்பங்களை அக்கறைகொண்டு வாசிக்கமாட்டான்
அறுபது எழுபதுகளில் சாதாரணமான மனிதர்களிடம் மனிதாபிமானம் வெளிப்படும் தருணங்களைக் கண்டுபிடித்து எழுதுவது நுண்ணிய உணர்வெழுச்சி சார்ந்ததாகக் கருதப்பட்டது. இத்தகைய கணிசமான கதைகளை ‘தப்பாகப்புரிந்துகொண்டுவிட்டுப் பின்னால் வருந்துவது’ என்ற வகைமைக்குள் அடக்கிவிடலாம். எழுபதுகளில் ஒரு முறைமீறிய பாலுறவை மெல்ல தொனிக்கவிட்டுச் சொன்னால் அது உணர்வெழுச்சி என்று கருதப்பட்டது. அன்றைய வாசகர்கள் அதை கலை என எண்ணிப் பரவசம் கொண்டனர்..
சுந்தர ராமசாமி சொல்வார் ‘காலையில் எழுந்ததுமே இன்று எதைப்பார்த்து நெகிழலாம் என யோசிக்கும் மனநிலை இது’ என. மிகைநாடகம் [melodrama] மிகையுணர்ச்சியின் ஒரு வெளிப்பாட்டு முறை. விழுமியங்களின் மோதல் இல்லாத நாடகத்தனம் என அதை வரையறை செய்யலாம். ஒரு நாடகத்தருணம் கவித்துவம் கொள்ளவில்லை என்றால் அது பெரும்பாலும் மிகைநாடகீயமே.
ஆசிரியரே நெகிழ்ந்துகொண்டே கதைசொல்வது எப்போதுமே தமிழில் ரசிக்கப்படுகிறது. வாசகர் முன்கூட்டியே அந்த மனநிலைக்குத் தன்னைத் தயாரித்துக்கொள்கிறார். தன் முதிர்ச்சி, தர்க்கபுத்தி, நகைச்சுவைஉணர்ச்சி ஆகியவற்றை இக்கதைகளுக்காக கொஞ்சம் ரத்து செய்துகொள்கிறார்.
நல்ல வாசகன் அதைச்செய்வதில்லை. அவனுக்குத் தேவை சௌகரியமான சில மனநிலைகள் அல்ல. உண்மைகள். ஆகவே தன் முழுத் தர்க்கத்தாலும், முழு நகைச்சுவையாலும், முழு முதிர்ச்சியாலும் இலக்கியத்தை அணுகுவதே அவன் வழக்கமாகும். அந்த நிலையிலும் அவனை ஈர்த்து மேலே கொண்டுசெல்லும் ஆக்கங்களையே நாம் முக்கியமானவை என்கிறோம். தர்க்கத்தை நிறைவுசெய்தபின் உணர்வுகளையும் உள்ளுணர்வுகளையும் நோக்கிப் பேசுபவையாக அவை இருக்கும்.
“மனிதன் எத்தனை மகத்தான ஒரு சொல்!” என்னும் கார்க்கியின் சொல்லாட்சிக்கும் ஆசிரியன் நெகிழ்வதற்கும் என்ன வேறுபாடு? கார்க்கியின் சொல் கவித்துவதரிசனம். ஆசிரியனை விட மகத்தானவற்றின் முன் அவன் மொழியும் சித்தமும் விரிந்தெழுவதையே கவித்துவதரிசனம் என்கிறோம். ஆசிரியன் அன்றாட உணர்வுநிலைகளின் முன் நெக்குருகினான் என்றால் அது வெறும்நெகிழ்வு. இவ்விரண்டுக்கும் இடையே வேறுபாட்டை உணரும் அளவுக்கு நுண்ணுணர்வு கொண்டவனே இலக்கியவாசகன்.
இலக்கியத்தில் மிகக்குறுகிய காலம் – நவீனத்துவத்தின் காலகட்டம் அது – உணர்ச்சிகளுக்கு எதிரான ஒரு நிலைபாடு சில ஆசிரியர்களிடம் இருந்தது. அவர்கள் தங்கள் இயல்பால் உணர்ச்சிகளற்ற கலையை உருவாக்கினர். இரு சிறந்த உதாரணங்கள் காம்யூ, ஹெமிங்வே. அவர்களை போலிசெய்யும் எழுத்தாளர்கள் உலகமெங்கும் உருவாகி வந்தனர். உணர்ச்சியற்ற எழுத்தை உருவாக்கியவர்கள் வாழ்க்கைநோக்கிய கூரிய பார்வையை, ஒட்டுமொத்த தரிசனத்தை முன்வைத்துக் கலையைச் சென்றடைந்தனர். போலி செய்தவர்களுக்கு அந்த விரிவும் ஆழமும் இல்லை. ஆகவே அன்றாட வாழ்க்கைச்சித்திரங்களை கற்பனை இல்லாமல் பதிவுசெய்வதே இலக்கியம் என்னும் எண்ணம் உருவாகியது. அது உலக இலக்கியத்தில் உருவாக்கிய குப்பைமேடு மிகப்பெரியது
பின்நவீனத்துவம் அந்த வரட்டு நவீனத்துவத்தையே அறைந்து உடைத்தது . அந்த உணர்ச்சியின்மை என்பது உண்மையில் ஆழ்மனவெளிப்பாட்டுக்கான மொழித்தகுதி இன்மை, கனவுகளை நோக்கிச்செல்லும் கற்பனை இன்மை, விழுமியங்களை ஆராயும் ஆழமின்மை மட்டுமே என அடையாளம் கண்டது. அதை முழுக்க நிராகரித்து ‘கட்டற்ற’ எழுத்துமுறையை முன்வைத்தது. கட்டுப்படுத்துவது பிரக்ஞை. பிரக்ஞையால் கடிவாளமிடப்பட்ட புனைவு சமகால அறிவுத்துறைகளில் இருந்து கடன்வாங்கிய அறிதல்களை முன்வைப்பது. அன்றாட உண்மைகளை இலக்கிய உண்மைகளாக எண்ணுவது.
இலக்கியம் தனித்துவம் கொண்ட அறிதல்முறை. அது தன் அறிதல்களை தன் ஆழ்மனப்பயணம் வழியாகவே கண்டடையவேண்டும். அதை a raid in to the unconscious என வகுத்தது பின்நவீனத்துவம். அதற்காகவே பிரக்ஞையின் கட்டுக்கள் மீறப்படவேண்டும் என்றது. ஆசிரியனை மீறி வெளிப்படுவதே கலை என்றது. கலையின் நோக்கம் உன்னதமாக்கல் [sublimation] என்றது.கட்டற்ற உணர்ச்சிவெளிப்பாடும் அதன் வழியே என கண்டடைந்தது. உணர்வெழுச்சி என்னும் செவ்வியல்கூறு இலக்கியத்தின் சாரம் என்றது. தர்க்கபூர்வமான, ஒழுங்கமைக்கப்பட்ட, பிரக்ஞை சார்ந்த, உணர்ச்சிகளை ஐயப்படும் நவீனத்துவ எழுத்துக்களை மறுத்தது. அறிவார்ந்த எழுத்து என்பது பொய்யே என்று வாதிட்டது.
உணர்வெழுச்சி அடிப்படையில் மானுட உயிர்ச்சாரத்தின் வெளிப்பாடு. பரதனைக் கண்டதும் “ஆயிரம் இராமர் நின் கேள் ஆவரோ?” என குகன் கேட்பது உயர்நிலை உணர்வெழுச்சி அது செவ்வியல்பண்பு. காவியங்களின் அடித்தளம். எந்த இலக்கியமும் ஆழத்தில் செவ்வியல்பண்புகளை நோக்கியே செல்லும். மானுட விழுமியம் ஒன்றின் உணர்ச்சிகர வெளிப்பாடூ அது. அத்தகைய உண்மையான உணர்வெழுச்சி தொட்டதுமே சல்லிசாகப் போய்விடாது. நினைவிலும் உணர்விலும் வளரும். நாம் இங்கே சாதாரணமாக மெல்லுணர்வு என்று சொல்லிக்கொள்ளும் பலநெகிழ்வுகள் ஒருநாள் தாண்டினால் அற்பமானவையாக ஆகிவிடுகின்றன.
கலையின் இலக்கு இதெல்லாமா என்ன? கலையின் ஊடகம் கற்பனை. அது நம்மைக் கற்பனைவழியாக இணையான ஒரு வாழ்க்கையை வாழச்செய்ய வேண்டும். அன்றாடவாழ்க்கையில் எப்போதோ ஒரு உச்ச அனுபவத்தருணத்தில் மட்டுமே நாம் நம் ஆழத்தைக் கண்டுகொள்கிறோம். அந்தத் தருணத்தைக் கலை கற்பனைமூலம் அளிக்கவேண்டும். அதன் வழியாக நம் ஆழ்மனத்தை நோக்கி , அதன் வழியாக வாழ்க்கையின் மையம் நோக்கி அது செல்லவேண்டும்.
அறிவுடன் மட்டும் பேசும் மேலான ஆக்கங்கள் உள்ளன. அங்கத இலக்கியங்கள் அவ்வகைப்பட்டவை. ஆனால் சிறந்த இலக்கியங்கள் நம் கனவுடன் பேசுகின்றன. நம்மில் ஊடுருவி நம் கனவை அவை கட்டமைக்கின்றன. அதற்காக மொழியைப் படிமங்களாக ஆக்குகின்றன.
அப்படியானால் படைப்பில் தர்க்கம் எதற்காக? ஒரு நல்ல வாசகனின் கனவுத்தளம் வலிமையான தர்க்கத்தால் மூடப்பட்டதாகவே இருக்கும். அவன் அதுவரை வாசித்தவையும் யோசித்தவையும் அடங்கிய ஒரு ஓடு அது. அதை உடைத்துத் திறக்கக்கூடிய அளவுக்கு வல்லமையான தர்க்கம் எழுத்தில் தேவை. வாசகனைவிட மேலான அறிவார்ந்த தர்க்கதளம் இல்லாத படைப்பு அவனைக் கவர்வதில்லை. ஆனால் அந்தக்கதவைத் திறந்தபின் இலக்கியம் செல்லும் இலக்கு அவனுடைய ஆழ்மனக் கனவுகளை நோக்கியே.
நல்ல வாசகனின் கனவுலகைச்சுற்றி அவன் அறிவுத்தர்க்கம் வீட்டைக் காக்கும் நாய்களைப்போல நின்றுகொண்டிருக்கிறது, எப்போதும் விழிப்புடன். அவனுக்கு அந்தக் கனவு அவ்வளவு முக்கியமென்பதனால் அவன் அதை அப்படிப் பத்திரமாக அந்தரங்கமாகத்தான் வைத்திருப்பான். அதைத் தீண்டாமல் ஆயிரம் கதைகளை சும்மா வாசித்துத் தள்ளிக்கொண்டுமிருப்பான். புனைகதையின் அறிவார்த்தம் என்பது அந்த வேட்டைநாய்களுக்கான இறைச்சித்துண்டுகள்தான். அவற்றை மீறி உள்ளே நுழைவதற்காக.
ஒரு நல்ல படைப்பின் உடல் மெல்லுணர்வைத் தீண்டும் நூற்றுக்கணக்கான அவதானிப்புகளுடன் மொழிவெளிப்பாடுகளுடன்தான் கட்டமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் சில வரிகளை எடுத்து நீர்க்கச்செய்து அளித்தால் எளிய வாசகர்கள் எழுச்சியும் உவகையும் கொள்வார்கள். ஆனால் நல்ல வாசகனுக்கு அவை அவன் செல்லும் வழியாகவே இருக்கும் , இலக்காக அல்ல. இலக்கு என்பது மெய்மையைத் தீண்டும் கனவாகவே இருக்கமுடியும்
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Aug 16, 2011