நம்பிக்கையின் சொற்கள், கடிதம்

ஜெ,

உங்கள் புனைவுகளை தொடர்ந்து வாசித்து வந்தவன் நான். உங்களுடைய நம்பிக்கையூட்டும் நூல்களை ஒருவகை சுயமுன்னேற்றவகை நூல்கள் என்று எண்ணி தவிர்த்தே வந்தேன். ஆனால் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணத்தில் கிட்டத்தட்ட கைவிடப்பட்டவனாக உணர்ந்தேன். துணை என்று எவரும் இல்லை. அப்போதுதான் ஒளிரும்பாதை வாசிக்க முடிந்தது. அந்த நூலை ஆழமாக உள்வாங்குவதற்காக தினம் ஐந்து பக்கம் வீதம் மொழிபெயர்த்தேன். அப்படியே அந்த நூலிலேயே இருந்தேன்.

மொழிபெயர்ப்பு சரியாக வரவில்லை. ஆனால் நூலை நான் என் மொழியில் ஆழமாக உள்வாங்க முடிந்தது. அதோடு மனம் கொந்தளித்துக்கொண்டே இருந்த அந்நாட்களில் ஒரு வகையான தியானமாகவும் அமைந்தது. அந்நூல் எனக்கு அளித்த ஊக்கமும் நம்பிக்கையும் மிகப்பெரியது. பிரச்சினைகளை கொஞ்சம் விலக்கி வைத்து நிதானமாக அணுகினேன். என்னுடைய சிக்கல்களை கண்டடைந்தேன். மற்றவர்களை குறைசொல்வதை தவிர்த்தேன். ஓராண்டில் முழுமையாகவே மீண்டுவிட்டேன். இன்று எனக்கு என் பிரச்சினைகள் பற்றி தெளிவு உள்ளது. எவர்மேலும் மிதமிஞ்சிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் எதிர்மறை மனநிலைகளும் இல்லை. இந்த வகையான ஒரு மீட்பை ஒரு புனைவு கொடுக்கவே முடியாது.

 

அதன்பின் தன்மீட்சி வாசித்தேன். அதுவும் என்னை மிக ஆழமாகப் பாதித்த நூல். அந்த வகையான நூல்களை சாதாரணமானவர்கள் எழுதிவிட முடியாது. மிகத்தீவிரமான மொழிநடை அதற்குத்தேவை. அப்படியே துளைத்து ஏறவேண்டும். நினைவில் நின்று விதைபோல வளரவேண்டும். மிகப்பெரிய எழுத்தாளர்களே எழுதமுடியும். உங்களை நான்குபேர் அசட்டுத்தனமாக தன்னம்பிக்கை எழுத்தாளர் என்று கேலி செய்யலாம். ஆனால் அதைத்தாண்டி வாசகர்கள் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையால் பரிவால் அந்நூல்களை எழுதியிருக்கிறீர்கள்

இன்றைக்கு இளைஞர்கள் நம்பிக்கையிழப்பு சோர்வு ஆகியவற்றால் நலிந்துள்ளனர். பற்றிக்கொள்ள ஒன்றுமே இல்லை. எங்குபோனாலும் பதற்றம் ஊட்டும் செய்திகள். சோர்வூட்டும் செய்திகள். இன்றைய சூழலில் இந்தவகையான நூல்கள் அளிக்கும் மருந்து அமுதம் போன்றது. பயன்பெற்றவன் நான். ஆகவே வணக்கத்துடன் நன்றி சொல்கிறேன்

கா.தமிழ்ச்செல்வன்

ஒளிரும் பாதை மின்னூல் வாங்க

தன்மீட்சி மின்னூல் வாங்க ‘

ஒளிரும் பாதை வாங்க

தன்மீட்சி வாங்க 

முந்தைய கட்டுரைஅடியடைவு, கடிதம்
அடுத்த கட்டுரைஅகரமுதல்வன்