மக்கள், பாமரர் எனும் சொற்கள்- முன்தொடர்ச்சி…
அறிவியக்கத்தில் செயல்படுவதில் ஓர் அடிப்படையான சிக்கல் உள்ளது. அதை ஒவ்வொரு நாளும் நடைமுறையில் நாம் சந்தித்தாலும் தெளிவாக உணர்ந்திருப்பதில்லை.
நேற்றைய அறிவியக்கம் அதன் முழு ஆற்றலுடன் சில கருத்துக்களை விவாதித்து சமூகமனதில் நிறுவுகிறது. இன்றைய சமூகத்தில் சிந்தனையின் அடித்தளமாகவே அவை மாறிவிட்டிருக்கும். ஆனால் இன்றைய அறிவியக்கம் அக்கருத்துக்களின் போதாமையை உணர்ந்து முன்னகரும். அவற்றை வளர்க்கவும், மாற்றியமைக்கவும் முயலும். அப்போது அந்த முன்னகர்வுக்கு முதல் தடை என பெருகி முன்வந்து நிற்பவை சென்றகால அறிவியக்கம் உருவாக்கிய சிந்தனைகளாகவே இருக்கும்.
‘அரசியல்சரிநிலை‘கள் என நாம் இன்று சொல்பவை எல்லாம் நேற்று சமூகத்தைச் சீண்டிய, கொந்தளிக்கச் செய்த புதிய சிந்தனைகளாக முன்வைக்கப்பட்டவை. கடும் எதிர்ப்பைச் சந்தித்தவை. மெல்லமெல்ல தங்களை நிறுவிக்கொண்டவை. இன்று அவை பொதுமக்களில் ஓரளவு சிந்திப்பவர்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளன. அவற்றை கடந்து செல்வதே பெரும் மீறல் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களை மீறி அச்சிந்தனைகளைக் கடந்துசென்றே ஆகவேண்டும்.
‘மக்கள்’ என்னும் சொல்லின் புனிதமும் அவ்வாறாக ஒரு வகை அரசியல்சரிநிலையாக நிலைகொண்டுவிட்டது. பாமரர்களின் ‘களங்கமற்ற விழுமியங்கள்’ என்பதும் அவ்வாறே.
‘மக்கள்’ என்னும் கருத்துருவம் மானுட சிந்தனையில் பதினேழாம் நூற்றாண்டு முதல் உருவாகி வந்தது ஒரு மகத்தான முன்னகர்வு என்பதில் ஐயமில்லை. நாம் இன்று காணும் அரசியல், சமூகவியல் சூழலை உருவாக்கிய அடிப்படைச் சிந்தனையே அதுதான். ஜனநாயகம், மனிதாபிமானம், மானுட சமத்துவம், சமூகநீதி, தனிமனித உரிமை ஆகிய கொள்கைகள் எல்லாமே அதன் விளைகனிகள்தான்.
மக்கள் என்றால் என்ன? அவர்களிடம் அதிகாரம் எப்படி நிலைகொள்ள முடியும்? மிகச்சாமானியன் எப்படி அதிகாரத்தை கையாளக்கூடும்? பதினெட்டாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இந்த வினாக்களுக்கு விடையாக முக்கியமான நூல் ஒன்றையேனும் எழுதியிருப்பார்கள்.ஜான் ரஸ்கினின் Unto This Last ரூஸோவின் The Social Contract ஆகியவை அவ்வகையில் மகத்தான மானுட ஆவணங்களாகக் கருதப்படும் நூல்கள்.
அந்த அறிவியக்கம் கீழ்க்கண்ட கருத்துக்களை நிலைநாட்டியது. மக்கள் என்னும் கூட்டான சக்தியின் உள்ளக்கிடக்கையை ஒட்டியே அரசுகள் அமையவேண்டும், சட்டங்கள் அமையவேண்டும், ஒழுக்கங்களும் அறங்களும் அமையவேண்டும். மக்களின் முடிவே அறுதியானது. அந்த எண்ணம் சென்ற இரு நூற்றாண்டுகளில் வலுத்தபடியே வந்தது. ஓர் அரசியலாளர் மக்களின் உள்ளக்கிடக்கையை அறியும் ஆற்றல் கொண்டவராக இருக்கவேண்டும்.ஓர் ஆட்சியாளர் மக்களின் உள்ளக்கிடக்கையை நிறைவேற்றுபவராக திகழவேண்டும். ஒரு மக்கள்தலைவர் என்பவர் மக்களின் உள்ளக்கிடக்கையை சரியாக பிரதிநிதித்துவம் செய்பவராக அமையவேண்டும்.
இன்னொரு பக்கம், ஒரு தத்துவசிந்தனையாளன் மக்களின் கூட்டான உள்ளக்கிடக்கையை நோக்கிப் பேசி அதை கட்டமைப்பபவனாகத் திகழவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஒரு சமூகசீர்திருத்தவாதி மக்களின் கூட்டான உள்ளக்கிடக்கையை ஊடுருவி அதை மாற்றியமைப்பவனாக வேண்டும். எல்லா சிந்தனைகளும் மக்களை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன. எல்லா கலைகளும் மக்களை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் அறிபவர்கள், எல்லாவற்றையும் மதிப்பிடுபவர்கள், எல்லாவற்றையும் ஏற்பவர்கள் அல்லது மறுப்பவர்கள் மக்களே என்று கூறப்பட்டது.
ஜனநாயகம் என்னும் நவீன அரசுவடிவம் நிலைகொள்ள மக்கள் என்னும் இந்தக் கருத்துருவம் மிகப்பெரிய பங்கு வகித்தது. ஆட்சியாளர்களின் கோணத்தில் வரலாற்றையும் தேசத்தையும் நிலத்தையும் சமூகத்தையும் பண்பாட்டையும் எல்லாம் மக்கள்த்திரளாக பார்க்க அது வழியமைத்தது. தனிமனிதர்களின் கோணத்தில் ஒவ்வொருவரும் தங்களை மக்கள் என்ற பேருருவ அமைப்பின் ஒரு துளியாக உணர வழியமைத்தது. தாங்கள் எவ்வளவு சாமானியராயினும் மக்கள் என்ற அமைப்பின் ஒரு பகுதி என்னும் நிலையில் உரிமைகளைக் கோரவும், போராடவும் ஆற்றல்கொண்டவர்கள் என்ற எண்ணத்தை அது ஒவ்வொருவரிடமும் உருவாக்கியது. இந்த இருமுனை நம்பிக்கையே ஜனநாயகத்தின் ஆதாரம்.
உலகமெங்கும் ஜனநாயக இயக்கங்கள் உருவாயின. ஜனநாயக அரசுகள் உருவாயின. அவை மக்கள் என்னும் கருத்துருவை வளர்த்துக்கொண்டே சென்றன. முன்பு தமிழில் நாம் இன்று சொல்லும் பொருளில் மக்கள் என்னும் சொல்லே இல்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். மக்கள் என்னும் சொல் மைந்தர்கள் என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்ட ஒன்று. குறிப்பிட்ட ஒரு திரளைச் சொல்ல மாக்கள் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது.
சென்ற நூறாண்டுகளில் மக்கள் என்னும் அச்சொல் எப்படியெல்லாம் திரண்டு பொருள்கொண்டிருக்கிறது என்று பாருங்கள். ‘பெருமக்கள்’ என்னும் சொல் முன்பு சான்றோரை குறிக்க பயன்பட்டது. இன்று அது அனைத்து மக்களையும் குறிக்கிறது. அரசியல்கட்சிகளின் பெயர்களில் மக்கள் உள்ளது. வணிகநிறுவனங்களின் பெயர்களில் மக்கள் உள்ளது. மக்கள் திலகம், மக்கள் செல்வன், மக்கள் நீதி மையம், மக்கள் டிவி…
எல்லா அரசியல்பேருரைகளும் எல்லா விளம்பரங்களும் மக்கள் மக்கள் என்றே பேசுகின்றன. மக்களால் ஏற்கப்பட்டுவிட்டால் அதன்பின் விவாதத்திற்கே இடமில்லை. அது உண்மை, அது சரியானது, அது தேவையானது, அது மாறாதது. ‘மக்கள் ஏற்றுக்கொண்டாயிற்று, அதற்குமேல் என்ன?’ என்ற பேச்சு நம் காதில் விழாத நாளே இல்லை. ஓர் ஊழல் அரசியல்வாதி தேர்தலில் வென்றுவிட்டால் உடனே அந்த வரி வந்து நிற்கிறது, ‘மக்களே சொல்லிவிட்டார்கள்’
ஜனநாயகம் உருவானபோது கூடவே உருவான வேறு இரு அமைப்புகள் ஜனநாயகத்தில் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்தின. ஒன்று, பொதுக்கல்வி. இரண்டு, பொது ஊடகம். இரண்டுமே நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டு மிகப்பெரிய அளவில் வளர்ந்தன. பள்ளிக்கல்வி அல்லது பொதுக்கல்வி அமைப்பு அனைவருக்கும் சமானமான கல்வியை அளித்து சமானமான மனநிலைகள் கொண்ட மக்களை உருவாக்கியது. இது மக்கள் என்னும் கருத்துருவை வலிமைப்படுத்திய அம்சம். ஜனநாயகத்தின் ஆற்றலின் அடிப்படையும்கூட.
நவீனக்கல்வி வழியாக உருவான ‘எழுத்தறிந்த’ சமூகம் நவீன ஊடகங்களை உருவாக்கியது. அச்சு ஊடகம் முதலில். பின்னர் வானொலி, சினிமா, தொலைக்காட்சி போன்ற பிற மின்னூடகங்கள். தொடக்கத்தில் மிகச்சில காலம் மட்டுமே ஊடகங்கள் செய்திகளை பரப்பவேண்டும் என்னும் நோக்கம் கொண்டிருந்தன. அறிஞர்களும் சமூகசீர்திருத்தவாதிகளும் அரசியலாளர்களும் அவற்றை தொடங்கி நடத்தினர். மிக விரைவிலேயே செய்தி என்பது ஒரு விற்பனைப்பொருள் என ஆயிற்று. ஊடகம் என்பது ஒரு பெருந்தொழிலாக மாறியது.
ஊடகம் பெருந்தொழிலாக ஆனதுமே ‘விளம்பரம்’ என்னும் புதிய ஒரு நிகழ்வு அறிமுகமாகியது. அது பொருளியலின் முக்கியமான கூறாக மாறியது. மக்களின் கருத்தை திட்டமிட்டு உருவாக்கமுடியும் என்பது கண்டறியப்பட்டது. மக்களை ஊடகங்கள் வழியாக திரட்டமுடியும், நுகர்வோராகவும் தொண்டர்களாகவும் கட்டமைக்கமுடியும் என்று நிறுவப்பட்டது. மக்கள் என்னும் சொல்லை கற்பனாவாத நெகிழ்வுடன் சொன்ன ஜனநாயக முன்னோடிகள் எவருக்குமே தெரியாத ஒரு சரித்திர முன்னகர்வு இது. இன்றைய மக்கள் என்பவர்கள் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட திரள். உள்ளும், புறமும்.
ஜனநாயக அரசுகள் உருவாகி ஒரு தலைமுறைக்குள்ளாகவே அவற்றின் தொடக்க காலகட்டத்தில் இருந்த இலட்சியவாதம் இல்லாமலாகியது. அவையும் அதிகார அரசியலாடல் கொண்டவையாக மாறின. மன்னராட்சிக்காலத்தில் அதிகாரம் போர்கள் வழியாக வந்தது. இனப்போர்கள், தேசியப்போர்கள், மதப்போர்கள். ஜனநாயகத்தில் வென்றெடுக்கப்படவேண்டியவர்கள் மக்கள் என ஆகியது. ஆகவே எல்லா போர்களும் மக்களை வெல்வதற்கானவை ஆக மாறின. போர்கள் ஊடகங்களில் நிகழலாயின.
மக்களைக் கவர்பவர்களுக்கு அதிகாரம், செல்வம் எல்லாமே அமைந்தன. புகழ் என்பது நேரடியாகவே பணமாகவும் அதிகாரமாகவும் மாறியது இன்றைய ஜனநாயக யுகத்தில்தான். எண்ணிப்பாருங்கள் எத்தனை மகத்தான கவிஞனாக இருந்தாலும் கம்பன் ஆட்சியாளனோ செல்வந்தனோ ஆகமுடியாது. மாபெரும் கலைஞர்களாக இருந்தாலும் ஆட்சியாளர்களின் கருணைக்கொடைகளை நம்பியே மன்னராட்சிக்காலத்தில் வாழமுடியும். நவீன ஊடகம் உருவானதுமே புகழ்பெற்ற கலைஞர்கள் மன்னர்களுக்குரிய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர். தியாகராஜ பாகவதர் தங்கத்தட்டில் உணவு உண்டார் என்பதும் அதனால் சீண்டப்பட்ட அக்கால உயர்குடிகளின் சீற்றமே அவருடைய அழிவுக்கு வழிவகுத்தது என்பதும் வரலாறு.
அவ்வாறாக மக்கள் என்பது ஒருவகை நவீன தெய்வமாக ஆகியது. அதை வழிபடவேண்டும், கேள்வி கேட்காமல் பணியவேண்டும், அதற்கு படையலிடவேண்டும், அதை புகழ்ந்து துதித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதன் அருள்பெற்றவர்கள் அனைத்தையும் அடைவார்கள். பணம் ,புகழ் ,அதிகாரம் எல்லாமே அதன் கடைக்கண் பட்டால் வந்துசேரும். அது அனைத்துக் கல்யாணகுணங்களும் கொண்டது. அதன்மேல் சிறு விமர்சனம் வைத்தால்கூட அவன் அழிக்கப்படவேண்டிய எதிரி.
மக்கள் என்னும் கருத்துருவை கடவுளின் இடத்துக்கு கொண்டுசென்றவர்கள் இடதுசாரிகள். அவர்கள் கடவுளை மறுத்து அங்கே மக்கள் என்னும் கருத்துருவை வைத்தனர். லெனின் முதலான இடதுசாரிகளின் எழுத்துக்களை வாசித்தால் முன்பு மதவாதிகள் கடவுளின் பெயரை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்களோ அப்படியே மக்கள் என்னும் பெயரை இவர்கள் பயன்படுத்துவதைக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரை அனைத்து அதிகாரமும் மக்களுக்குரியது. அனைத்துச் செல்வங்களும் மக்களுக்குரியவை. அனைத்து அறங்களும் மக்களால் முடிவெடுக்கப்படுபவை. மக்களின் எதிரிகள் அழித்தொழிக்கப்படவேண்டியவர்கள்.
ஆனால் மக்கள் என்பது கண்கூடான ஒன்று அல்ல, அது ஒரு கருத்துருவம். ஆகவே மக்களின்பொருட்டு மக்களின் பிரதிநிதிகளாகிய ‘நாங்கள்’ எல்லாவற்றையும் செய்வோம். நாங்கள் செய்பவை எல்லாம் உண்மையில் மக்களால் மக்களுக்காகச் செய்யப்படுபவைதான். எங்களை எதிர்ப்பவர்கள் மக்களை எதிர்க்கிறார்கள். அவர்களை மக்களின்பொருட்டு நாங்கள் அழிக்கிறோம். இன்றும் அதைத்தான் உலகமெங்கும் இடதுசாரி சர்வாதிகாரிகள் எல்லாமே சொல்கிறார்கள்.
இந்த மக்கள் என்னும் கருத்துரு அதன் வரலாற்றுப் பாத்திரத்தை வகித்துவிட்டு, அதன் நன்மைகளை எல்லாம் அளித்துவிட்டு, அதன் தீமைகளை வெளிக்காட்டும் காலகட்டம் வந்துவிட்டது என்று ஜனநாயக யுகம் உருவாகும் தொடக்ககாலத்திலேயே சிந்தனையாளர்கள் சொன்னார்கள்
இயல்பாக திரண்டு உருவான ஒரு திரளை மக்கள் என உருவகித்தனர் முன்னோடியான ஜனநாயகச் சிந்தனையாளர்கள். நவீன அரசியலில் அந்த மக்கள்த்திரள் ஊடகவல்லமையால், ஆதிக்க நோக்குடன் செயற்கையாக கட்டமைக்கப்பட முடியும் என்னும் நிலை உருவானது. மக்களிடமிருந்து அதிகாரத்தை பெறுவதற்கு பதிலாக மக்களையே அதிகாரத்திற்கு ஏற்ப வடிவமைக்க முடியும் என நிரூபிக்கப்பட்டது.
மக்கள் என்னும் கருத்துருவின் எதிர்மறைக்கூறுகளை முதன்மையாக வெளிக்காட்டியது ஃபாஸிசமும் நாஸிஸமும்தான். இனம், மொழி, மதம் போன்ற அடையாளங்களைக் கொண்டு மக்களை மிக எளிதாகத் திரட்டமுடியும் என அவை காட்டின. மிகப்பெரிய அழிவுச்சக்தியாக அந்த மக்கள் அதிகாரத்தை மாற்றமுடியும் என்று நிரூபித்தன.
வரலாற்றில் மன்னராட்சியும், மதஆட்சியும் நிகழ்த்திய அழிவை விட அதிகமான பேரழிவை முஸோலினி, ஹிட்லர், ஸ்டாலின், போல்பாட் உள்ளிட்ட நவீன சர்வாதிகாரிகள் உருவாக்கிய மக்கள்அதிகாரம் நிகழ்த்திக்காட்டியது. அவர்களெல்லாம் மக்களின் ஏற்பு வழியாக அதிகாரத்தை அடைந்தவர்கள்தான்.
இந்த விவாதத்தில் மிகமுக்கியமான நூல், நான் முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து மேற்கோள் காட்டிவரும் நூல், வில்ஹெல்ம் ரீஹ் எழுதிய The Mass Psychology of Fascism. ஒரு தனிமனிதனின் சராசரி அறிவுத்தரம் அவனைப்போன்றவர்கள் ஒன்றாகி ஒரு திரளாக ஆகும்போது மிகமிகக் குறைகிறது என அந்நூல் வாதிடுகிறது. அதாவது நூறு புத்திசாலிகள் ஒரு கூட்டமாக ஆனால் முட்டாள்தனமான ஒரு கும்பல்தான் உருவாகும். அதிலுள்ள ஒவ்வொரு புத்திசாலியும் கும்பலாக செயல்படும்போது முட்டாளாகவே இருப்பான்.
பெருந்திரள் என்பது உணர்ச்சிகளால் ஆனது என்றார் ரீஹ். எதிர்மறை உணர்ச்சிகளே மேலும் வலுவானவை.எதிரிகள் மீதான வெறுப்பும் அச்சமும்தான் மக்களை ஒருங்கிணையச் செய்கிறது. ஒரு எதிரியை சுட்டிக்காட்டி, அதன் மேல் வெறுப்பை உருவாக்கி பிரச்சாரம் செய்யும் ஒருவர் மிக எளிதாக மக்களின்மேல் முற்றதிகாரத்தை அடையமுடியும். ஹிட்லரும் முஸோலினியும் அழிந்தாலும் இன்று உலகமெங்கும் அரசியல்வாதிகளின் அரசியல்நடவடிக்கை என்பதே எதிரிகளை சுட்டிக்காட்டி வெறுப்பை உருவாக்கி அதிகாரத்தை வெல்வதாகவே உள்ளது.
சிந்தனைகள் பெருந்திரளைச் சென்றடைவது மிக அரிது. அடையாளங்களும், குறியீடுகளும், ஆசாரங்களும், உணர்ச்சிக் கூச்சல்களுமே பெருந்திரளைச் சென்றடைகின்றன. தர்க்கபூர்வமாக நிறுவப்படுவனவற்றை விட திரும்பத் திரும்பச் சொல்லப்படுபவையே மக்களால் ஏற்கப்படுகின்றன. மக்கள் அறிவாளிகளை விட தங்களைப்போன்ற அறிவுத்தரம் கொண்ட ஒருவரையே நம்பி ஏற்று கொண்டாடுகிறார்கள். திரள் பெரிதாகும்தோறும் அவர்கள் ஏற்றுக்கொள்பவர்களின் அறிவுத்திறன் குறைகிறது.
இந்தச் சிந்தனைகள் முன்னர் ஜனநாயகத்தின் முன்னோடிச் சிந்தனையாளர்கள் மக்கள் என்னும் கருத்துரு பற்றி என்னென்ன சொன்னார்களோ அவற்றுக்கு நேர் எதிரானவை என்பதைக் காணலாம்.
வில்ஹெல்ம் ரீஹின் நூல் வெளிவந்து நூறாண்டுகளாகப்போகிறது. இன்றைய வணிக உலகின் விளம்பரக்கொள்கைகள் அனைத்துமே வில்ஹெல்ம் ரீஹ் கண்டுசொன்ன அடிப்படைகளை ஒட்டியே வடிவமைக்கப்படுகின்றன என்பது கண்கூடு. மக்களின் சிந்தனைகளை வடிவமைப்பவை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் திட்டமிட்டு செய்யப்படும் பிரச்சாரங்கள்தானே ஒழிய முன்னோடிச் சிந்தனைகள் அல்ல. மக்களை பிரச்சாரம் வழியாக தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும்படி செய்யமுடியும் என்பதற்கு வரலாறெங்கணும் உதாரணங்கள் உள்ளன.
அந்தப் பிரச்சாரங்கள் மூன்று நிலைகள் கொண்டவை. ஒன்று, விரிவான களஆய்வு வழியாக மக்களின் மனநிலையும் தேவைகளும் கண்டடையப்படுகின்றன. இரண்டாவதாக, நிபுணர்களால் மக்களிடம் கொண்டுசெல்லப்படவேண்டிய கருத்துக்களும் அவற்றை கொண்டுசெல்லும் வழிமுறைகளும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. மூன்று மிகப்பெரிய பொருட்செலவில் அக்கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. மக்கள் சிந்தனை செய்வதற்குள்ளாகவே அக்கருத்துக்கள் மக்களின் மனதுக்குள் ஆழமாக நிறுவப்படுகின்றன.
கட்சியரசியல், நுகர்வு, கேளிக்கை ஆகிய மூன்று தளங்களில் இன்றைய மக்கள் இடைவிடாமல் பிரச்சாரத்திற்கு இரையாகிறார்கள். சிந்திக்கவே விடாமல் அவர்கள் முற்றுகையிடப்படுகிறார்கள். அவர்களின் தெரிவுகள், ரசனைகள் எல்லாமே அரசியல்கட்சிகள், வணிக விளம்பரங்கள், கேளிக்கையூடகங்கள் ஆகிய மூன்று மாபெரும் பிரச்சார அமைப்புகளால் கட்டமைக்கப்படுகின்றன. உங்களைச் சூழ்ந்திருப்பவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கவனியுங்கள். மேலே சொன்ன மூன்றை மட்டும்தான். வேறெதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்கள், கவனிக்க அவர்களால் இயலாது. ஒரு சொல்கூட உள்ளே செல்ல வழி கிடையாது. அவர்கள் ஒருவகை இயந்திரங்கள்போல உள்ளிருக்கும் மென்பொருளில் பொறிக்கப்பட்டுள்ள ஆணைக்குக் கட்டுப்பட்டு இயங்குபவர்கள்.
இன்றைய சூழலில் மக்கள் என்னும் சொல்லுக்கு என்னதான் பொருள்? மக்கள் என்ற சொல்மீது ஏற்றப்பட்டுள்ள பழைய நெகிழ்வுகள், புனிதங்கள் ஆகியவற்றுக்கு என்னதான் மதிப்பு?
(மேலும்)