மேட்டிமைவாதமா?
அன்பு ஜெ,
வணக்கம். நலம் விழைகிறேன்.
இன்று அதிகாலையில் எழுந்ததும் கொல்லி மலையை முட்டும் முழுநிலவை பார்த்ததும் ஓடிவந்து அலைபேசியை எடுக்கும் போது தவறி கீழே விழுந்தது. அம்மா தூக்கக்கலக்கத்தில் என்னா…பௌர்ணமி நிலாவப் பாத்துட்டியா..மெதுவாப் போ என்று சொல்லிவிட்டு திரும்பிப்படுத்துக் கொண்டார். இந்த மார்கழி பௌர்ணமி காலையில் உதிக்கிறது. அதை கண்டதன் பரவசத்தை அம்மாவால் புரிந்து கொள்ள முடிகிறது.
வாசிக்க அமர்ந்ததும் உங்கள் தளத்தில்‘மேட்டிமைவாதமா? என்ற பதிவை வாசித்தேன். முடித்ததும் கண்கலங்கியது. ஒருவித பெருமிதத்தால்….
‘தந்தை மகற்காற்றும் உதவி அவயத்து முந்தியிருப்பச் செயல்‘ என்று அடிக்கடி சொல்லும் அய்யாவின் குரல் காதுகளில் ஒலித்தது. அறிவுக்கான வாய்ப்புகளை அளிப்பதுதான் தான் ஒரு தந்தை குழந்தைக்கு அவையத்து முந்தியிருப்ப செய்ய வேண்டிய கடமை என்று அய்யா நினைத்தார். அறிவு என்றால் வகுப்பறை கல்வியை தாண்டிய அறிவு. அவருக்கு இலக்கியம், கணிதம் அறிவியல் அனைத்து அறிவுத்துறைகள் மீதும் பெரும்விருப்பம் இருந்தது. ஒவ்வொரு துறைக்கும் ஒருப்பிள்ளை என்று சொல்வார்.
‘வருஷத்தை எதுக்கு வீண்பண்றீங்க…ஒரு டிகிரி முடிச்சதும் சர்வீஸ் கமிஷன் பரிட்ச்சை எழுதலாம்,கல்யாணம் பண்ணிட்டு காலேஜ் போகட்டுமே…ரெண்டு வேலையும் முடியுமே‘ என்று சொல்பவர்களிடம் அய்யா கண்டிப்புடன் முடியாது என்று சொல்வார்.
அவர் வறுமையால் விரும்பியதை படிக்க முடியவில்லை என்பதால் நாங்கள் விரும்பும் வரை படிக்க வைத்தார். அவர் சம்பளத்தில் பெரும்பகுதி எங்கள் மூவரின் படிப்பிற்கே செலவானது. நானும் தங்கையும் வேலைக்கான தேர்வு எழுதும் போது ‘படிக்கறதுக்கு அர்த்தமே வேலைக்கு போகனும்..படிச்ச பிள்ளைங்க வேலைக்கு போனா தான் படிப்புக்கு மரியாதை‘ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். எங்கள் ஊரில் படிப்பிற்கு அத்தனை முக்கியத்துவம் இன்றும் கூட இல்லை. பிள்ளை வயதிற்கு வந்தால் திருமணம். பையனுக்கு கால் திரண்டால் வயல்காடு என்பது தான் நடைமுறை.
‘படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்
எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்‘ என்று எங்கள் கூட்டுக்குடும்பத்திற்குள்ளேயே எங்களை பற்றிய பகிரங்கமான கேலி உண்டு.
தங்கை வேலைக்கு தேர்வானதும் அய்யா மிகவும் மகிழ்ச்சியாக, பெருமையாக உணர்ந்தார்.
அவள் வேலையில் சேர்வதற்கான விஷயங்கள் முடிவது வரை என்னை சும்மா கவனித்துக்கொண்டிருந்தார். நான் பெரும்பாலும் யாரும் பேசும் போது தலைகுனிந்து அமர்ந்து யோசனையில் இருப்பேன். கிராமங்களில் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பது என்பது பெருதற்கரிய பேரு போன்றது. பெரும்பாலும் ஆண்டுக்கணக்கில் கூட அதை பற்றியே பேசிக்கொண்டிப்பார்கள்.
பேருந்துநிலையத்தில் ‘தங்கச்சி வேலைக்கு போயிட்டா…நீ என்ன வீட்ட தேய்க்கிற‘ என்று ஒரு அம்மாள் மற்ற ஆட்கள் முன் என்னை கேட்டதை அம்மா அய்யாவிடம் சொன்னார். அய்யா என்னை பார்த்தார். நான் தலையை குனிந்து கொண்டேன்.
“நிமிந்து பாரு சாமீ..”என்று வேகமான குரலில் அதட்டினார். பதறி நிமிர்ந்தேன். அந்தக் குரலை என்னால் மறக்கவே முடியாது. ‘வேலைக்கு போகனுன்னு சொன்னது நிவேதாவுக்காக …ஒனக்காக இல்ல..நீ வேற‘என்று அவர் வாங்கி வந்திருந்த எழுதும் அட்டையை என்னிடம் தந்தார். [ நான் முதல் கதையே தட்டச்சு செய்வேன் என்பது அவருக்கு தெரியாது]
‘நீ எழுத
இன்னும் பத்துவருஷம் ஆனாலும் பரவாயில்லை..சாப்பாட்டுக்கும், மருத்துவத்துக்கும், புத்தகம் வாங்கவும் பணம் இருந்தா பத்தாதா…அறிவாளிங்க யாரையும் நேரா பாத்து பேசனும்‘ என்றார்.
அவர் சிறுவயதிலிருந்தே என்னை ‘நீ வேற‘ என்று என்னிடமும் ‘கமல்பாப்பா மத்த பிள்ளைங்க மாதிரி இல்லைங்க..நிறைய புத்தகம் படிக்கற பொண்ணு‘என்று மற்றவரிடமும் பரவசமாக கண்களை விரித்து சொல்லிக்கொண்டே இருப்பார். அவரை அவருக்கு பின்னால் வாத்தியார் உலகம் புரியாதவரு… என்று நிறைய பேர் சொல்வார்கள். ஆனால் அவருக்கு முன்னால் நின்று பேசும் தைரியம் இருக்காது.
பதினேழு வயதில் இருந்தே அய்யாவுடன் இருந்ததால் அம்மாவும் அவர் மனநிலை கொண்டவர் தான்.
அய்யா அவ்வளவு தீவிரமாக ஒரு சிறிய கிராமத்தின் பள்ளியிலும் ,சமூகத்திலும் பிள்ளைகளை படிக்க வைப்பதையும், நூலகத்திற்கு சென்று புத்தகம் படிப்பதையும் சொல்லிக்கொண்டே இருந்தார்.
நம் பெற்றோரை நாம் பெருமையாக உணரும் தருணம் வாழ்வில் மகத்துவமாக தருணம்.
அதிகாலையில் உதிக்கும் முழுநிலவை போன்றவர்கள் கலையிலக்கியவாதிகள் என்று தோன்றியது. அந்த அமுதமான வெளிச்சம் பற்றிய பிரஞ்ஞை வானத்தை பார்ப்பவர்களுக்கே வரும். நிலத்தில் இருந்து தலையை உயர்த்த ஒரு அதட்டல் நமக்கே தேவைப்படுகிறது. இங்கு ஒருவர் எழுத்தாளர் கலைஞர் என்பதே முக்கியம். அவர் என்ன வேலையில் இருக்கிறார் என்பதும், என்ன படித்திருக்கிறார் என்பதும் உபரியான தகவல்கள் அல்லது அந்தக் கலைஞரை எழுத்தாளரை புரிந்து கொள்வதற்குமான ஒரு வாய்ப்பு மட்டுமே.
அன்புடன்,
கமலதேவி