விழா – கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள ஜெ.,

2023 விஷ்ணுபுரம் விழா சிறப்புற நடந்து இனிய நினைவாக எஞ்சிவிட்டிருக்கிறது. விழா அறிவிப்பு வந்தவுடனேயே நண்பர் கோவிந்தராஜன் இருவருக்கும் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டார். கடைசியில் தவிர்க்கமுடியாத சூழலில் அவரால் பங்குகொள்ள முடியாததால் நான் மட்டும் பயணித்தேன். 15 ஆம் தேதி மாலைமுதலேவாட்சப்குழுமத்தில் இந்த ரயில் இந்தகோச்என்று நண்பர்களிடையே செய்தி பறந்தவண்ணம் இருந்தது. ஏதோ உறவினர்வீட்டு திருமணத்திற்குப் போவது போல இருந்தது. ரயிலிலேயே விஜயபாரதி மற்றும் சில நண்பர்களைப் பார்த்துவிட்டேன். எல்லோரும் ஏதோ பரீட்சைக்குப் படிப்பது போல யுவனின் ஒரு கவிதைப்புத்தகத்தைப்  படித்துக்கொண்டிருந்தனர். ஏதாவது கேள்வியைக் கேட்டுவிடக்கூடாதே என்ற கவலையில்காலையில் பார்க்கலாம்என்று கூறி வேகமாக இடத்தைக் காலி செய்தேன்.

காலையில் ஒரு உணவகத்தில் (RHR Restaurant, Estd 1931) ‘காபிஅருந்திவிட்டு பேருந்தில் குஜராத்தி சமாஜம் வந்து சேர்ந்தோம். எளிய சுத்தமான அறைகள். வேகவேகமாகத் தயாராகி ராஜஸ்தானி பவன் அரங்கிற்கு வந்து சேர்ந்தேன். வரும் வழியில் ஆர். எஸ்.புரத்தின் செழுமையைப் பார்த்துக்கொண்டுவந்தேன். சில நவீன வீடுகள் போல நான் சென்னையிலும் பார்த்ததில்லை. அரங்கத்தில் கடலூர் சீனுவின் தாடி இல்லாதபுது கெட்டப்பலபேரின் பேசுபொருளாக இருந்தது. வெண்முரசைப் படமாக எடுத்தால் அர்ச்சுனனாக ஜாஜாவைப் போடவேண்டும் என்று நான் ஏற்கனவே எழுதியதை உறுதிப்படுத்திக் கொண்டு பெண்கள் புடைசூழ அமர்ந்திருந்தார் பிரபந்தம் ஜா.ராஜகோபாலன்.

இன்னொருபக்கம் விழா நாயகன் யுவன் அவருக்குடஃப்கொடுத்துக்கொண்டிருந்தார். வழக்கம்போல உங்களைச் சுற்றி ஆண்களின் பெருங்கூட்டம். ‘இவர்தான் கிருஷ்ணன் சங்கரன். சினிமாப்பாட்டு இலக்கியம்னு கலந்துகட்டி எழுதுவாருஎன்று சுற்றியிருப்பவர்களிடம் கூறினீர்கள். இப்படி அங்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பேர்களைப்பற்றியும் உங்களால் ஏதோ சொல்லமுடிந்ததுதான் ஆச்சரியம். அன்று இரவு உணவுக்குப்பின்  ‘எனக்கு எப்பயும் வாழைப்பழம் கொண்டுவந்து கொடுப்பாரு..’ என்று ஒரு பெரியவரை அறிமுகப்படுத்தி அவரிடம் கைபேசி எண் வாங்கிக்கொண்டீர்கள்.  

வழக்கம்போல சிறப்பான அரங்குகள், சிறப்பான உரையாடல்கள், சரியான மட்டுறுத்தல்கள், ஒரு நிமிடம் மிகாத குறையாத நேர ஒழுங்கு. அனைத்து அரங்குகளிலும் வந்திருந்த அனைவரும் உன்னிப்பாக கவனம் குவித்தது ஆச்சரியம். உங்கள் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல இந்த உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டால் இது நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது. சுபத்ரா, லதா அருணாசலத்தின் அரங்கில் ஒருவர் சற்றே சீண்டுவதுபோல கேள்விகேட்கஇங்கு அவர்கள் அமர்ந்திருப்பதே அவர்கள் தகுதிக்குச் சான்று. அவர்கள் படைப்புகளை சரியாகப் படிக்காமல் வந்து கேள்வி கேட்பது இந்த அவையின் மரபல்லஎன்று ஒரே போடாகப் போட்டீர்கள். நீங்கள் நகம் கடித்துக்கொண்டுமட்டும் இல்லை என்று தெரிய ஒரு சோறு பதம்.

தேவதேவன், நாஞ்சில் நாடன், சாம்ராஜ், காளிபிரசாத், கா.சிவா, கடலூர் சீனு, போகன், சுசித்ரா, ப்ரியம்வதா, குவிஸ் செந்தில், ‘கப்பல்காரன்ஷாகுல் ஹமீது, ஓவியர் ஜெயராம், மீனாம்பிகை, விஜய் சூரியன், ஈரோடு கிருஷ்ணன், அரங்கசாமி, அந்தியூர் மணி, அழகிய மணவாளன், வெங்கட்ரமணன், சிவகுமார் ஹரி என்று எப்போதும் பார்க்கும் முகங்கள். புதிதாக நிறைய இளைஞர்கள் வந்துகொண்டே இருப்பதும்  தெரிந்தது.

இலக்கியக்காதலர்கள் அஜிதனும், தன்யாவும் எல்லா இடங்களிலும் தெரிந்தார்கள். தன்யாவின் பக்கத்தில் எப்போதும் ஒரு இருக்கை கைப்பை வைக்கப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. நல்ல பாந்தமான இணை என்றும் சிறிது  காலத்திற்கு முன்பே யாராவது ஒருவர் முடிவு தெரிவித்திருந்தால்  உங்கள் மன அலைக்கழிவு தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் அதனால் என்ன இன்னொரு தொகுப்பிற்கான கதைக்கரு கிடைத்தது என்றும் பலவாறாகத் தோன்றியது.    

பெண் கவிஞர் மற்றும் கதாசிரியர் சந்திரா, கனலி  விக்னேஸ்வரன், பெண் கவிஞர் தீபு ஹரி என்று எல்லோர் அரங்குமே தனித்தன்மையோடு இருந்தது. தீபு ஹரி அரங்கில் அப்பளப்பொரியாகப் பொரிந்தார். ‘அப்பப்ப டார்க் மூடுக்குப் போயிருவேன்என்றார். அடப்பாவமே என்றிருந்தது. வாசு முருகவேலின் அரங்கு புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியம் குறித்து, அவர்கள் பாடுகள் குறித்து புது வெளிச்சம் பாய்ச்சியது. எல்லோருக்கும் சென்று சேரும் வகையில் வட்டார வழக்கை ஒழித்து எழுதிய தனது படைப்பு குறித்து வந்த மாற்றுக்கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இவர் பேச்சில் இயல்பான பகடி நிறைந்திருந்தது. காவல்துறையிலும் நல்லவர்கள் உண்டு என்று தன்னிடம் கனிவு காட்டிய காவலரைப் பற்றிக் கூறினார். இலக்கியபௌன்சர்கள்யோகேஸ்வரனும், கதிரும், அனங்கனும்  குறுக்கும் நெடுக்கும்மைக்கோடு பாய்ந்தபடி இருந்தனர்.

எழுத்தாளர் பா.ராகவனின் அரங்கை சிறப்பாக ஒருங்கிணைத்தார் ரம்யா. ஒவ்வொரு கேள்வியையும் உள்வாங்கி நேரம் எடுத்துக்கொண்டு தெளிவாக பதிலளித்தார் பா.ராகவன். நிறையத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதி தன்னுடைய பொருளாதாரத்தை நிலைநிறுத்திக்கொண்டது எப்படித் தன்னுடைய படைப்புலகில் தீவிரமாக ஈடுபட உதவிசெய்தது என்று அவர் கூறியபோதுஉபரியின் மூலமே கலை வளர்கிறதுஎன்ற உங்கள் வரி நினைவுக்கு வந்தது. ரம்யா அவருடைய இரு வேறு நாவல்களின் இரண்டு பெண் கதாபாத்திரங்களை ஒப்பிட்டுக் கேள்விகேட்டுசெமையாப் படிச்சிருக்கீங்கஎன்று பாராட்டுப்பெற்றார். அவர் தந்தை குறித்த நினைவுகள் நெகிழச் செய்தன. ‘அவையத்து முந்தி இருப்பச் செயல் ‘  என்ற தந்தை மகற்காற்றும் உதவியை தந்தைக்கு ஆற்றி அவரை சிறந்த மொழிபெயர்ப்பாளராக களம் அமைத்துக்கொடுத்த விதம் சிறப்பு.  

அன்று 16 ஆம் தேதி இரவுச் சாப்பாடு மிக விரிவாக ஒருங்குசெய்யப்பட்டிருந்தது. மிகச் சிறப்பாகவும் இருந்தது. விஜய் சூரியனிடமும் தெரிவித்தேன். ‘இவ்வளவு செய்யும் விஜய் சூரியனை நாம் கேலி செய்வது தவிர என்ன செய்திருக்கிறோம்என்ற உங்கள் ஒரு முந்தைய கட்டுரையின் வரி நினைவுக்கு வந்தது. இவரை ஏன் மேடையில் அழைத்து கௌரவிக்கக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன். மறுநாள் விருதுவழங்கும் மேடையில் உங்களை கௌரவிக்கச் செய்து அதைச் செய்தபோது நிறைவாக இருந்தது. நேற்று ரயிலில் சரியாகத் தூங்காததால் சாப்பாட்டிற்குப் பிறகு வினாடிவினா முடிந்தவுடன் நானும் நண்பர் முரளியும் குஜராத்தி சமாஜத்திற்கு கிளம்பிவிட்டோம். மறுநாள் காலை அறை நண்பர் விஜய் (மிஸ்டர் ப்ரியம்வதா) சொல்லித்தான் நல்ல ஒரு பேச்சு/இசைக்கச்சேரியை தவறவிட்டது தெரிய வந்தது.ம்ம்…  

காலையில் உணவுக்கு முன் யுவனிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாப்பாடல்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்த போதுடி.எம்.எஸ். கூட நல்லாப்பாடுறார்னு எழுதுறார் சார் உங்க பிரண்டுஎன்று உங்கள் பழைய கட்டுரை பற்றிக் கூறினேன். ‘ஜெயமோகன் கூட நல்லா எழுதுறாருன்னு யாராவது சொன்னா எவ்வளவு கோவம் வருமோ அவ்வளவு கோவம் வந்துச்சு எனக்குஎன்றேன். ‘அய்யய்யோ தப்பாச்சே. என்ன பாட்டு?’ என்றார். ‘பாவை யுவராணி கண்ணோவியம்என்றேன். (நீங்கள் சொன்ன பாடல் இதைவிட சுமாரானசித்திர மண்டபத்தில்..’ என்று பின்னால்தான் நினைவுக்கு வந்தது).  ‘அது சுமாரான பாட்டுதான். நான் அவருடைய சினிமாப்பாடல்களுக்கு பெரிய ரசிகன். அதுக்காக அவர் கர்நாடக சங்கீதக் கச்சேரி பண்றதையெல்லாம் சகிச்சுக்க முடியாது. முழுக்கச்சேரியும் நேரயே கேட்டிருக்கேன்என்றார்.

மறுநாள் அவருடைய ஏற்புரையில் ஜேசுதாஸ் குறித்தும் அதையே கூறினார். பாண்டியராஜபுரம் பள்ளியில் படிக்கும் போது அணைப்பட்டியில் நடந்த ஒரு படப்பிடிப்பைக்காண பத்துகிலோமீட்டர் நடந்தே சென்றபோது கரட்டுப்பட்டியைக் கடந்து சென்றதை நினைவு கூர்ந்தேன். ‘மட்டப்பாறை வழியாப் போயிருப்பீங்க. அடடாநம்மூர் காரரா?… தெரிஞ்சிருந்தா இன்னும்கொஞ்சம் அன்பா பேசிருப்பேனே..’ என்று சுற்றியிருந்த எல்லோரையும் சிரிக்க வைத்தார்.

மலேசிய இளம் எழுத்தாளர் அர்வின்குமாரின் அரங்கும், அதைத் தொடர்ந்து அவர் ஒருங்கிணைத்த மலேசிய எழுத்தாளர் எஸ்.எம். ஷாகீர் அவர்களின் அரங்கும் சிறப்பாக இருந்தது. ஷாகீர் தன்னுடைய உரையில் இந்தோனேசியாவை மலேசியாவைவிட மிகப்பெரிய கலாச்சார மையமாக அறிமுகம் செய்து ஆச்சரியப்படுத்தினார். விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்குபெறும் முதல் வெளிநாட்டு எழுத்தாளர். இது உலகப்படைப்பாளிகள் பங்குபெறும் பெருவிழாவாக விரியும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதற்கு கட்டியம் கூறுவதுபோல இருந்தது.

அழகிய மணவாளனிடம் உங்களுடைய படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதைக் குறித்து (அதாவது அவர் மொழிபெயர்ப்பதைக்குறித்து) பேசிக்கொண்டிருந்தேன். அது அவ்வளவு எளிதல்ல என்றும் கவிஞர் ராமன் கொண்டுவந்த உங்களுடைய மலையாளச் சிறுகதைத் தொகுப்பு குறித்து கே.சி.நாராயணன் கூறும்போது உங்கள் எழுத்தின் வீர்யம் அதில் இல்லை என்பதுபோலக் குறிப்பிட்டதாகவும், தான் நிறையத் தயாராகவேண்டும் என்றும் கூறினார். பரவாயில்லை, நீண்டகாலத் திட்டமாக மனதில் கொள்ளுங்கள் என்று கூறினேன். ஏதோ, நம்மால் முடிந்தது.  

கால சுப்ரமணியம் வந்திருந்தார். அவருடைய சமீபத்திய பதிப்பான பிரமிளின் ஆறு பாகங்கள் கொண்ட பெருந்தொகுப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தேன். சத்தியமங்கலத்தில் இருப்பதாகவும், மகள் வீட்டுக்கு கோவைக்கு வந்து போவதாகவும் தெரிவித்தார். நீங்கள், நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால், தேவிபாரதி என்று கோவையை இலக்கியத் தலைமைச் செயலகமாக மாற்றிவிட்டீர்கள்.  

ராமச்சந்திர குகாவின் அரங்கை எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் சிறப்பாக ஒருங்கிணைத்தார். இவர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க அவர் உடனடியாக பதிலளிக்க ஆரம்பிக்க அவரை கையமர்த்திவிட்டு ஒவ்வொருமுறையும் தமிழில் கேள்வியை மொழிபெயர்க்கவேண்டியிருந்தது குகாவிற்கு சற்று எரிச்சலூட்டியிருக்கலாம். ஆனால் வேறு வழியில்லை. தன் வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட அரசியல் தலையீடுகள், ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பங்குபெற வந்த அழைப்பை மறுத்தது, வரலாற்றாய்வாளர் எவ்வாறு கட்சி அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறியபோது உங்கள்அரசியலின்மைகட்டுரை நினைவுக்கு வந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்சிங்கிள் மால்ட் விஸ்கிஅல்லது ஹிந்துஸ்தானிக்யால்என்றால் டி 20 நாட்டுச் சரக்கு அல்லதுதுக்கடாபாட்டு என்றார். காந்தி இருந்தால் டி 20 கிரிக்கெட் போட்டிகளை ஒத்துக்கொண்டிருக்கமாட்டார் என்றும் வெவ்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் குகா. அவ்வப்போது இருமிக்கொண்டிருந்தார். மாலை விழாவில் விருது வழங்கி பேசிவிட்டுச் செல்லும்போது குன்னூர் செல்லவேண்டியிருப்பதால் சற்று முன்னதாகக் கிளம்புவதாகவும், குமார் கந்தர்வாவின் பாடலைக் கேட்டுக்கொண்டு தான் செல்லவிருப்பதாகவும் யுவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கவிஞர் நகுலன் தன்னுடைய நெருங்கிய உறவினர் என்று விழாவில் பேசும்போது தெரிவித்தார்

யுவனின் அரங்கை நீங்கள் ஒருங்கிணைத்தது பொருத்தமானது. அவருடைய கரட்டுப்பட்டி வாழ்க்கை, நகர வாழ்க்கை, தேவதச்சனின் அறிமுகம், உங்களின் அறிமுகம், மாற்றுமெய்மை என்று அவருடைய பலமுகங்கள் வெளிப்பட்ட உரையாடல். அவர் சிறந்த உரையாடல்காரர் என்று நீங்கள் அடிக்கடி கூறுவது எதனால் என்று தெரிந்தது. ‘ஒரு துளி ஞானம் போதும்என்ற அவருடைய கருத்துகுறித்து அகரமுதல்வன் எழுப்பிய மற்றும் அவருடைய மொழிபெயர்ப்பின் தரம் அவர் படைப்பில் பிரதிபலிக்காதது குறித்து சு.வேணுகோபால் எழுப்பிய சீண்டலான கேள்விகளையும் அனாயாசமாக எதிர்கொண்டார். பேசி முடிக்கும்போது ஏழெட்டு பாட்டில் தண்ணீரை காலிசெய்திருந்தார் யுவன்.  

தேநீர் எப்போது அளிப்பார்கள் என்பது குறித்து சிறுகுழப்பம் இருந்தது. எனவே வெளியே காப்பி குடித்துவிட்டு  மழையில் நனைந்துகொண்டே ஓடிவந்தேன். மண்டப வாயிலில் வழுக்கி விழத் தெரிந்தேன். யுவனின் குறும்படம் ஆரம்பித்துவிட்டிருந்தது. எம்.கோபாலகிருஷ்ணன் இசை ரசிகன் யுவனைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். அருமையான படம். அரங்கம் சிரிப்பில் குலுங்கிக்கொண்டிருந்தது. விருதுவிழா முடிந்து மின்தூக்கியில் யுவனை மறுபடி சந்தித்தபோதுஎல்லாரும் சிவாஜி கணேசன் மாதிரி வாயில சிரிப்பும் கண்ணுல தண்ணியுமா பாத்தாங்க சார் ,அருமைஎன்றேன். ‘இல்லையா பின்ன, எடுத்தவரைத்தான் சொல்லணும்என்றார்.

விருது விழாவில் எல்லோருடைய உரையும் கனகச்சிதமாக இருந்தது. என் கண் கடிகாரத்தில்தான் இருந்தது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மகளுக்கு சீமந்தம். ஒன்பதரை மணிக்கு ஜூம் ல் இணையச் சொல்லியிருந்தாள் மனைவி வாட்சப்பில். யுவன் பேசி முடிக்கும் தருவாயில் பையை அறையிலிருந்து எடுத்துக்கொண்டுவந்து சாப்பிட்டுவிட்டு உடனே கிளம்பத் திட்டம். மேலே நாலாவது மாடியில் சென்று பார்த்தால் அறை பூட்டியிருந்தது. பதட்டமாக இருந்தது. கைபேசியில் சார்ஜ் போய்விட்டிருந்தது. மேலும் கீழுமாக அலைபாய்ந்து கொண்டிருந்தேன். சிறு மழை பெய்து தரையெங்கும் ஒரே ஈரடியாக இருந்தது. ஒருவழியாக அறை திறந்து, பையை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி உங்களிடம் சொல்லிக்கொண்டு டாக்ஸி கிடைக்காமல் திண்டாடி ஒருவழியாக நண்பர் முரளியோடு ரயில்நிலையம் வந்து சேர்ந்தேன்.  

ரயில்நிலையம் நோக்கி காரில் பயணிக்கையில் விழா பற்றியே நினைவு ஓடிக்கொண்டிருந்தது. உங்களிடமும் அருண்மொழி மேடமிடமும் சரியாக விடைபெறக் கூட இல்லை. அந்த வினாடி வினா பற்றி நினைத்துக்கொண்டேன்.  புதுமைப்பித்தன் மெரினா பற்றிக் கூறியது போல தி.ஜானகிராமனும் அம்மா வந்தாளில் கூறியிருப்பார். .நா.சு கூறியதாக சிற்றிதழ் குறித்த ஒரு கருத்தை எழுத்துப் பிரகடனத்தில் சி.சு.செல்லப்பாவும் கூறியிருக்கிறார். ‘ருசியியல் கட்டுரைகள்குறித்து அரங்கில்  கேள்வி எழுப்பிய ஒருவரிடம் பா.ராகவன் பதிலளித்தார்என் கூட ஒரு மண்டலம் இருந்து பாருங்க, சைவத்துல எவ்வளவு இருக்குனு காட்டறேன்“. இதை அந்தியூர் மணியும் சொல்லியிருக்கக்கூடும்தானே.

போக வரஅப்பர் பெர்த்தான். எனக்கு மேலே ஏறுவதில் பிரச்சினையில்லை. ஆனால் ஒன்று கவனித்தேன். முன்னெல்லாம்அப்பர் பெர்த்ல் இருக்கும் முதியவர்கள் மேலே ஏற முடியவில்லையென்றால் கீழே உள்ள இளைஞர்களிடம் சொல்லி இடம் மாற்றிக்கொள்வார்கள். இப்போதோ இளைஞர்கள் உதவி செய்யமுடியாதபடி நன்றாகப் பருத்துவிட்டிருக்கிறார்கள். ரயில் கிளம்பி சென்று கொண்டிருந்தது. கைபேசியில் மகளின் சீமந்த விழா விட்டுவிட்டுத் தெரிந்து கொண்டிருந்தது.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரைஇன்னுமொரு ஆங்கிலச் சிறுகதைத் தொகுதி- கடிதம்
அடுத்த கட்டுரைபிரான்சுவா குரோ