அன்புள்ள ஜெ.,
https://www.youtube.com/watch?v=6JxSpbXBHUE
சமீபத்தில் கேட்ட பாடல். அந்தக்காலத்து ‘ஐட்டம் நம்பர்‘. படம்: ஆசை (1956) பாடியவர்: ஜமுனா ராணி, இசை: டி.ஆர்.பாப்பா(1922-2004). துள்ளல் இசையும், ராஜசுலோச்சனாவின் கண்கவர் நடனமும் நம் மனதையும் விரல்களையும் (பாடலைத் ‘தள்ளி‘ விடாமல்) கட்டிப்போட்டு விடுகிறது. ஐம்பது, அறுபதுகளில் பல மிகச் சிறந்த பாடல்களைக் கொடுத்துள்ளார் டி.ஆர்.பாப்பா. ‘சமரசம் உலாவும் இடமே‘ – சீர்காழி ,’ஒண்ணுமே புரியலே‘ – சந்திரபாபு, ‘வருவேன் நானுனது மாளிகையின் வாசலுக்கே‘, ‘ஆசை பொங்கும் அழகு ரூபம்‘ – ஏ.எம்.ராஜா, ஜிக்கி.’உள்ளத்தின் கதவுகள் கண்களடா‘, ‘முத்தைத்திரு பத்தி‘ டி.எம்.எஸ் என்று பெரிய வரிசை.’திருநீலகண்டர்‘ படத்தில் பணிபுரியும்போது இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் மரணமடைந்தவுடன் இவரே இசையமைத்து நிறைவு செய்தார். பல தெலுங்கு, மலையாள மற்றும் சிங்கள மொழிப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். ‘சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி‘ என்று சீர்காழி பாடிய புகழ்பெற்ற பக்திப்பாடலுக்கு இசை இவரே.
திருத்துறைப்பூண்டி ராதாகிருஷ்ணன் சிவசங்கரன் (டி.ஆர்.பாப்பா) அடிப்படையில் வயலின் கலைஞர். இசை வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற தவிற்கலைஞர் பெரம்பலூர் அங்கப்பபிள்ளை இவரது மனைவியின் தந்தை. அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். 1970 – 80 களில் வானொலியில் தொடர்ந்து ஒலித்த ‘பில்லல்லாரா பாப்பல்லாரா‘ (தெலுங்கு) போன்ற புகழ்பெற்ற தேசபக்திப்பாடல்கள் பலவற்றுக்கும் இவரே இசை. 1996 ல் தமிழிசைச் சங்கத்தின் இசைப்பேரறிஞர் விருது பெற்றார். அவர் பிறந்த நூறாவது ஆண்டு இது.
‘மேரா கவுன் மேரா தேஷ்‘ பாடலின் தழுவல் ‘வைரம்‘ படத்தில் எஸ்.பி.பி – ஜெயலலிதா பாடியது.
https://www.youtube.com/watch?v=x6CE81oIMFM
எத்தனை பாடல்கள், எத்தனை இசையமைப்பாளர்கள், மனிதக்கரங்களில் இருந்து, மனதில் இருந்து, தீராமல் பொங்கிக்கொண்டே இருக்கிறது இசை. ‘அமைதிக்கு மிஞ்சிய சங்கீதம் எதுவுமில்லை‘ என்கிறார் இளையராஜா. அந்தக் ‘கேளாச்சங்கீதம்‘ தான் நாளைய உலகின் இசையோ?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்