எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் குறித்த ஆவணப்படமான ‘சுழற்பாதை யாத்ரீகன்’ பார்த்தேன். இயக்குனர் ஆனந்த் குமார் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். சிறப்பான ஒளிப்பதிவோடு ஒரு எழுத்தாளரைக் குறித்து இவ்வளவு மலர்ச்சியான ஆவணப்படத்தைக் காண்பது அரிது. யுவனின் ஆளுமை மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. இதனோடு சேர்த்து சில மாதங்களுக்கு முன் அகழ் இதழில் வெளியான அவருடைய நீண்ட நேர்காணலையும் இணைத்து வாசிக்கலாம்.
அவருடைய படைப்புலகின் மையம், எழுத்தாக்க நுட்பங்கள், தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத எளிமையான இயல்பு, இசை ரசனை, தத்துவம் குறித்த தேடல் எனப் பலவற்றில் ஏதேனும் ஒன்றிற்கான உந்துதலை இந்த ஒருமணிநேர உரையாடலில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். தேவதச்சன் மற்றும் ஜெயமோகன் முன்வைத்த கருத்துக்கள் யுவனுடைய படைப்பு மையத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும். எம்.கோபாலகிருஷ்ணன் யுவனின் ஆளுமைச் சித்திரத்தை சிறப்பாக சித்தரித்திருந்தார்.
யுவனின் கவிதைத் தொகுப்பான ‘புகைச்சுவருக்கு அப்பால்’ , உயிர்மை வெளியீடுகளாக வந்திருந்த ‘ஏற்கெனவே’ மற்றும் ‘ஒளிவிலகல்’, கதைத்தொகுதிகள், அவருடைய நாவலான குள்ளச்சித்தன் சரித்திரம் ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். இரத்தமும் சதையுமான உள்ளடக்கம் அல்லது விவரிப்பைக் கொண்டிருந்த படைப்புகளின் மீது என் வாசக ஆர்வம் திரும்பிவிட்டதால் எடையற்ற தன்மைகொண்டு உத்தி விளையாட்டுகளோடு இருந்த யுவனின் எழுத்தைத் தொடர்வது நின்றுவிட்டது. இப்போது ஒரு ரெட்ரோஸ்பெக்டிவாக அவரை முழுமையாக வாசித்துவிடும் விழைவை இந்த ஆவணப்படம் அளித்திருக்கிறது.
குணா கந்தசாமி