நீலகேசியின் உண்மை – தமிழ் சுப்ரமணியம்

நீலகேசி வாங்க 

காதலின் பொருட்டு கொல்லப்பட்டவர்கள் தெய்வங்களாக்கப் பட்டதுபோலவே  உணவுக்காக கொல்லப்பட்டவர்களும் சிறுதெய்வங்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். ‘ஆணவக்கொலைச் சாமிகளும் பெருமித கொலை அம்மன்களும்’ பிரதியில் ஆ.சிவசுப்ரமணியன் வண்டிமறிச்சி/மலைச்சி அம்மனைப் பற்றி கூறுகையில், பசியால் பாவுக்கஞ்சியை திருடி உண்டு கொலைசெய்யப்பட்ட அண்ணன்-தங்கை சிறுதெய்வங்களான கதையினை  விளக்கியிருப்பார். எட்டையபுரம் பகுதியில் வண்டிமறிச்சி அம்மன் வழிபாடு இருக்கிறது.

சிவசங்கர் எஸ்.ஜே-வும் இந்த (நீலகேசி) ஆய்வுப் புனைவில் உணவு உண்டதன் அடிப்படையில் அடித்து அவமானப்படுத்தப்பட்ட பெண் தற்கொலை எய்தி தெய்வமான வரலாற்றை மொழிகிறார். இட்டகவேலி நீலகேசியின் கதையினை, முதன்மை பாத்திரம் சந்தித்துப் பேசும் மாந்தர்கள், தாங்கள் கேட்டறிந்ததின் அடிப்படையில் முன்பின் சில மாற்றங்களோடு கூறுகின்றனர்.

உதாரணத்திற்கொன்று சொல்ல வேண்டுமென்றால், மாமியாக வரக்கூடிய பாத்திரம் இன்னொருவர் கூறுகையில் சித்திப் பாத்திரமாக மாறுகிறது. கதைப்படி நாயர் சமூகப் பெண்ணாக நீலகேசி அறியப்பட்டாலும், நாவலில் சந்திக்கும் மனிதர்களில் சிலர் அவளை காணிப்பறையர் குடி என்று நம்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இது நாவலுக்குள் விவாதமாகவே நடைபெறுகிறது. விஜயன் அண்ணன் பாத்திரம், ஸ்ரீகாந்த், மாது(கதைசொல்லி) இவர்களுக்குள் நடக்கும் உரையாடல்களாலும் விவாதங்களாலும் இப்பிரதி கட்டமைக்கப்பட்டுள்ளது.

மாது எழுப்பிய கேள்வியான எப்போதும் சமாதானம் மேற்கொள்ளக்கூடிய இடத்தில் ஒடுக்கப்பட்டவர்களே இருக்கிறார்களென்பது எனக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு பதிலளிக்கும் விதமாக விஜயன் பாத்திரம் வன்முறை குறித்தான புரிதலைப் பற்றியும் சமாதானத்தின் முக்கியத்துவத்தையும் விலக்கியிருப்பார். வன்முறையைக் காட்டிலு சமாதானமே சிறந்தது. அச்சமாதானத்தை யார் முதலில் கையிலெடுத்தால் என்ன என்பது போன்ற கேள்வியை விஜயன் முன் வைப்பார். மாது போல எனக்கும் அவர் பதிலில் முழு திருப்தியில்லை.

தூக்க நேர்ச்சை நடைபெறும் நாளில் பிறந்து ஒரு வயதுக்குள்ளிருக்கும் குழந்தைகளை நீலகேசிக்கு காட்டி பிள்ளை வளத்தைப் பெருக்கும் சடங்கொன்று செய்யப்படுகிறது. இங்கு வளம் என்பதை உடலாரோக்கியம், நீண்ட  ஆயுளென்றும் கருத்தில் நிறுத்தலாம். பிள்ளைகளை கருவிலேயே பிடுங்கும் தெய்வத்தைப் பற்றி ஜெயமோகன் தூவக்காளி எனும் பெயரில் புனைவு ஒன்றினை எழுதியிருப்பார். அதுவும் காணிக்காரர்கள் சம்பந்தப்பட்ட கதைதான். தெய்வம் (தூவக்காளி) வேடமிட்டு, கோமரம் ஆடி கெடுதல் நீக்கி பிள்ளைவரம் கிடைக்க செய்வார்  காணிக்காரர். ஆக நீலகேசிக்கும் தூவக்காளிக்கும் சிறு தொடர்பு இருப்பதை நம்மால் அறிய முடிகிறது.

நீலகேசி என்பது காப்பிய நூலானது  கணவனால் கொல்லப்பட்ட பெண்ணின் கதையாக நாட்டாரியல் கூர்மையோடு சமணம் அடிப்படையில் எழுந்த பனுவல். அதேபோல பழையனூர் நீலகேசி பற்றி தொ.ப எழுதியிருப்பார். கணவனால் கொல்லப்பட்ட பெண் பேயாக மாறி பழி தீர்க்கும் கதையினை. இக்கதை வணிகன் × வேளாளர் என்கிற இடைநிலை சமூகங்களின் சண்டை வழி பிறந்த தெய்வமாக இருக்கிறது. மாறாக, சிவசங்கர் முன்வைக்கும் இட்டகவேலி நீலகேசி முன்சொன்ன தெய்வங்களிலிருந்து விலகி நிற்கக்கூடியது. இந்த நீலகேசியில் உணவு ஒரு பிரதான ரூபம் எடுக்கிறது. அதிலும் அந்த உணவு மாட்டிறைச்சி எனும்போது கதையின் போக்கு நம்மை உன்னிப்புக் கொள்ளச் செய்கிறது. நீலகேசி காணிக்குடியிலிருந்து தத்துக்கொடுக்கப்பட்ட பிள்ளை என்று மாது(கதைசொல்லி) விசாரிக்கையில் பாத்திர மாந்தர் கூறுவார். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஒரு சமூகத்தின் மரபு இன்னொரு சமூகத்திற்கு கடத்தப்படும். மேலும், வலுகொண்ட சமூகம் இன்னொரு சமூகத்தின் பண்பாட்டினை தனதாக மாற்றும் அல்லது பிடுங்கிக் கொள்ளும்.  இப்படி வரலாற்று நெடுகிலும் பிரச்சினைகளும் குழப்பங்களும் இருக்கின்றன. இட்டகவேலி நீலகேசி அம்மை எழுந்தருளி சொன்னால்தான் அவள் குறித்த விவாதம் முழுமை பெறும்.

(பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற அடிப்படையில் அதாவது, சித்தி கொடுமை மற்றும் அத்தை கொடுமை எனும் தன்மையிலேயே அன்றைய நாட்டார் கதைகள் வடிவமைத்திருப்பதற்கு தாய்வழிச் சமூகத்தை வெறுத்த ஆண்மையத்தின் பார்வையே காரணமென்று பாத்திர மாந்தர்களின் விவாதம் வழியே, சமணம் நிரூபணமாகிறது. பௌத்தம் முறையே மணிமேகலை, நீலகேசி போன்றை பெண்களை முதன்மைப் பாத்திரங்களாய் கொண்டு வரும். பக்தி இலக்கிய காலத்தில் ஆண் தெய்வங்களே ஆளுமை செலுத்தினர். ஆனால் சிறுதெய்வ வழிபாட்டினை பொறுத்தமட்டில் பெரும்பாலும் பெண் தெய்வங்களே அதிகம்.)

– தமிழ் சுப்பிரமணியம்

முந்தைய கட்டுரைநோன்பு என நிகழ்தல்
அடுத்த கட்டுரைமுகில்களின் வடிவம், கடிதம்