கேரள இலக்கிய விழாக்கள் இன்று மிகப்பிரம்மாண்டமான கார்ப்பரேட் நிகழ்வுகளாக ஆகிவிட்டிருக்கின்றன. மூன்று சர்வதேச இலக்கியவிழாக்கள் அங்கே நிகழ்கின்றன. ஒவ்வொன்றும் சராசரியாக ஐந்து முதல் பத்துகோடி ரூபாய் வரை செலவு பிடிப்பவை. அவற்றுக்கு முதன்மையான நிறுவனங்கள் புரவலராக உள்ளன. குறிப்பாக லுலு வணிகவளாகம் உரிமையாளர் முகமது அலி முக்கியமான புரவலர். அவ்வாறு ஒரு விழா தமிழில் இது வரை நிகழ்ந்ததில்லை. இயலுமா என்பதும் ஐயமே. இங்கே புரலவலர்கள் அரிது. அவ்விழாக்களால்தான் மலையாள இலக்கியம் உலக அளவில் சென்று சேரமுடிகிறது.
ஆனால் இப்படி உலக இலக்கிய விழாக்களாக அவை ஆவதற்கு முன்னால் பலபத்தாண்டுகள் அவை கேரள அளவில் நிகழும் இலக்கிய விழாக்களாக இருந்தன. கிட்டத்தட்ட விஷ்ணுபுரம் விழாக்கள்போல. இன்று அனைவரும் பங்கெடுக்கும் விழாக்களில் எழுத்தாளர்கள் உள்ளேயே சிறு குழுக்களாக ஆகியுள்ளனர். ஆனால் முன்பு ஒரு குடும்பச் சூழல் இருந்தது. அவற்றை உருவாக்குபவர்கள் குழந்தைகள். அன்று பல எழுத்தாளர்களும் வாசகர்களும் விழாக்களுக்கு குழந்தைகளுடன் வருவது வழக்கமாக இருந்தது.
கேரளத்தின் மிகப்பெரிய இலக்கிய விழா என்பது 1921ல் திருவிதாங்கூர் அரசர் முன்னெடுப்பில் திருவனந்தபுரத்தில் நிகழ்ந்த விழா என்பார்கள். அதில் கேரளத்தின் முதன்மைக் கவிஞர்களான குமாரன் ஆசான், உள்ளூர் பரமேஸ்வர ஐயர், வள்ளத்தோள் நாராயண மேனன் ஆகிய மூவருமே பங்கெடுத்தார்கள். மாபெரும் மக்கள்பங்கேற்பு இருந்த விழா. அவ்விழாவில் கேரள இலக்கியம் ‘கண்கூடாகத்’ தெரிந்தது என்றும், அதன்பின்னரே மலையாள புத்திலக்கியம் என்னும் கருத்து நிலைகொண்டது என்றும் விமர்சகர் சொல்வதுண்டு.
அவ்விழாவில் குழந்தைகளாகக் கலந்துகொண்டவர்கள் பலர் பின்னாளில் புகழ்பெற்ற கவிஞர்களாக ஆனார்கள். அவர்களின் நினைவுகள் வழியாக அவ்விழா மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டிருந்தது. அந்த அளவுக்கு இல்லை என்றாலும் அவ்வண்ணம் ஒரு இலக்கியவிழா என்.எஸ்.கிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் நாகர்கோயிலில் நிகழ்ந்தது. அதில் இளஞ்சிறுவனாகப் பங்குகொண்டது பற்றி சுந்தர ராமசாமி பெருமையுடன் நினைவுகூர்வதுண்டு.
விஷ்ணுபுரம் விழாவுக்கு வரும் சிறுவர்களை பார்க்கையில் அவர்களின் எண்ணங்களில் இவ்விழா எப்படி நிலைகொள்ளும் என நான் வியப்பதுண்டு. அவர்கள் வளர்ந்து படித்து வேலைசெய்து மணந்து தந்தையராகி என்னென்னவோ ஆகக்கூடும். சிலர் நினைவிலாவது இது வளரக்கூடும்.
நண்பர் கதிர்முருகனின் மகன் போதி விஷ்ணுபுரம் விழாக்கள் வழியாகவே வளர்வதை புகைப்படங்கள் வழியாகப் பார்க்கிறேன்.மகிழ்ச்சியான ஒரு அனுபவம் அது.