ரஹ்மான்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

ரஹ்மானை சிறபித்து பாராட்ட வேண்டிய இந்த நேரத்தில் நீங்கள் அவரை பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியுட்டுகிறது. அனால் அதே நேரத்தில் அவரை பாராட்டும் நோக்கில் சற்றே அதீதமாய் சென்று “தமிழ் சினிமா நவீனத்துவத்துக்கே வராமலிருந்த காலத்தில் இசையை பின்நவீனத்துவ காலகட்டத்துக்குக் கொண்டு சென்றதே ரஹ்மானின் சாதனை.” என எழுதியிருப்பது தமிழ் சினிமாவையோ அதன் இசை மரபையோ  சரியாக உள்வாங்காமல் அவசரத்தில் எழுதி விட்ட த்வனி வருகிறது. தமிழ் சினிமாவின் இசை மரபில் மெல்லிசை மன்னர் MSV காலம் தொட்டே நவீன இசை ஒலிக்க துவங்கியத்தையும், அதன் தொடர்ச்சியாக இளையராஜா அவர்கள் அந்த நவீனத்தை முன்னெடுத்து சென்று, பின் சீறி பாய்ந்து பின் நவீனத்துவ இசை மரபை உருவாக்கியதையோ மறந்து, எப்படி நீங்கள் ரஹ்மானுக்கு மட்டும் அந்த புகழாரம் சூட்டுகிறீர்கள்?

“இது ஒரு பின்நவீனத்துவ  இயல்பு. நவீனத்துவ இசை அந்த ஆளுமையின் தனிப்பட்ட இயல்பின் வெளிப்பாடு. ரஹ்மானுக்கென உறுதியான சட்டகம் ஏதுமில்லை.. அவரது ஆளுமைக்குப் பதிலாக ஒரு கூட்டுவெளிப்பாடு அவர் வழியாக நிகழ்கிறது. அவ்வாறு பல்வேறு திறமைகள் முயங்க உயர்தொழிநுட்பம் உதவுகிறது.” – இதுதான் நீங்கள் உள்வாங்கியுள்ள இசை பற்றிய புரிதலா? கூட்டு செயல்பாடு என்பது ‘செயல்’ மட்டுமே சார்ந்த ஒரு புரிதல். இசையின் இறுதி வடிவம் மட்டுமே அது பின்நவீனத்துவ பிரதியா அல்லது நவீனத்துவ பிரதியா என்பதை தீர்மானிக்கும். உதாரணமாக ‘நிறைய பேர் சேர்ந்து கூடி விவாதித்து சினிமா எடுப்பதால்’ எல்லா சினிமாவும் பின்நவீனத்துவ பிரதியில் அடங்குமா என்பதை யோசித்து பார்க்க வேண்டுகிறேன். அது அல்ல என்பது புரிய வரும்.

ராஜாவின் இசையோ ரஹ்மானின் இசையோ முழுக்க பின் நவீனத்துவ பிரதி ஆகிறது எப்படி என்றால் அதன் இறுதி வடிவம் ஒற்றை இசை மரபை சார்ந்து இல்லாமல், பல்வேறு இசை மரபுகளையும் அதன் கூறுகளையும் கூட்டி நெய்வதினால். ராஜாவின் பல்வேறு பாடல்களில், பின்னணி இசையினில் கூர்ந்து கவனித்தால் அப்பிரிக்க, ஜாஸ் , ராக், பாப், டிஸ்கோ, மாண்டரின், செல்டிக், ஸ்பானிஷ்/ மெக்சிகன்/ லத்தீன்,மேற்கத்திய செவ்வியல், கர்நாடக, இந்துஸ்தானி, நாட்டார்…என நீளும் பல்வேறு இசை வடிவங்களை கையாண்டு இருப்பது தெரிய வரும். ரஹ்மானின் இசையிலும் அவ்வாறே. இருவரும் வேறுபடும் புள்ளி எதுவெனில் ராஜாவின் இசையில் இந்த எல்லா மரபும் தங்கள் வேர்களை இழந்து, அவரது இசை பற்றிய ஆழமான அறிவினாலும், புரிதலினாலும் மற்றும் ஆளுமையினாலும் தனியாக ஒலிக்காமல், முழு பாடலின் அல்லது இசை கோர்வையின் உணர்வுக்கு தங்களை உருமாற்றம் செய்து கொள்கின்றன. (தேர்ந்த இசை வல்லுனர்கள் கூட அவரது சில பாடல்களில் வரும் பல்வேறு இசை வடிவங்களை அறுதியிட்டு முத்திரை குத்த முடியாமல் அது ‘ராஜமுத்திரை’ என முடித்து கொள்கிறார்கள்.)
ரஹ்மானின் இசையில் இந்த பல்வேறு இசை மரபுகளும் தங்கள் வேர்களை அப்படியே தக்க வைத்து கொள்கின்றன. மேலும் அவரது இசை உலகமயமாக்கலின் பின்விளைவான ஒற்றை உலகு, ஒற்றை கலாசாரம், ஒற்றை இசை எனும் திசையில் பயணிக்கிறது. இதில் எது சரி எது தவறு என்னும் விவாதங்களுக்கு செல்லாமல் இசை ரசிகர்கள் தங்களின் தேர்வுகளை செய்யலாம்.

….மற்றும் சர்வதேச அங்கீகாரம் என்பதெல்லாம் டூ மச். அது அந்த தேசத்து சினிமா எக்ஸ்பிரஸ், பிலிம் பேர் விருது போல்தான். என்ன இன்று அமெரிக்கா உலகளாவிய ரீதியில் ஆதிக்கம் செலுத்தி வருவதால் இது நமக்கு மிக பெரிய விருது போல் தோற்றம் வருகிறது. நாம் இந்த விருதை அடிமை நிலையில் இருந்து ‘அவன் அங்கிகரித்து’ விட்டானே என்று பார்க்காமல், அவன் விளையாட்டில் அவனை வெற்றி கொண்டுள்ளோம் என கர்வம் கொள்ளும் நேரத்தில் தான் இந்த விருதுக்கான முழு மதிப்பு நமக்கு புரிய வரும். கொஞ்சமே கொஞ்சம் கமலின் வார்த்தைகள் அந்த கர்வத்தை பகிர்ந்து கொண்டது, மற்றவரெல்லாம்…!

தோழமையுடன்,
புலிகேசி

 

அன்புள்ள புலிகேஸி,

நான் கையைத் தூக்கிவிடுகிறேன். எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. நான் சொன்னது ஒரு எளிய மனப்பதிவு. அதற்கு இசை அறிந்த ஷாஜி போன்ற சில நண்பர்களின் கூற்றுக்கள் உதவி புரிந்தன. எனக்கு ராஜாவின் இசையையும் ரஹ்மானின் இசையையும் ஒப்பிடும் தகுதியும் கிடையாது.

நவீனத்துவம் என்ற சொல்லை நான் மீண்டும் மீண்டும் வரையறைசெய்திருக்கிறேன். நவீனத்துவம் நவீனம் இரண்டும் வேறு வேறு நவீன என்றால் புதியகாலகட்டத்தைச் சேர்ந்த என்று பொருள்படும். நவீனத்துவம்  என்றால் சில குறிப்பிட்ட குணாதிசயங்கள் அதனுடன் இணைந்துள்ளன.

நவீனத்துவம் 1. ஒருங்கிணைவும் ஒத்திசைவும் உள்ள படைப்புகளை உருவாக்கும். 2. ஒரே குரலில் ஒலிக்கும் ஆக்கங்களை உருவாக்கும்  3. ஒரு தனி மனிதனின் சுயத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

இவ்வியல்புக்கு எதிரானது பின் நவீனத்துவம். அது 1. ஒத்திசைவுக்குப் பதிலாக பலதிசைகளிலும் விரியும் தன்மை கொண்ட ஆக்கங்களை உருவாக்கும் 2. பலகுரல்களின் கூட்டுவெளியாக, உரையாடல்தன்மை கொண்டதாக இருக்கும் 3. ஒரு தனிமனிதனின் சுயத்தை மட்டும் வெளிபடுத்தாது, அவன் ஓர் ஊடகமாகவே இருப்பான். அவன் வழியாக ஓர் காலகட்டம் வெளிப்பாடு கொள்ளும்
இலக்கியத்தில் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்களை நவீனத்துவர்கள் என்கிறோம். அவர்களின் பல இயல்புகளை பிறகு வந்த ஆக்கங்கள் விலக்கிக் கொண்டன

ரஹ்மானின் இசையை பின் நவீனத்துவக் குணங்கள் கொண்டது என நான் சொன்னது இதன் அடிப்படையிலேயே. ராஜாவின் இசை எத்தனை விரிவானதாக இருந்தாலும் அது முழுக்கமுழுக்க ராஜாவால் மட்டுமே உருவாக்கப்பட்டு அவரது ஆளுமையை மட்டுமே வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு இம்மி கூட பிறிதை அவர் அனுமதிப்பதில்லை

என் கருத்து தவறானதாக இருக்கலாம் என்றும் ஒப்புக்கொள்கிறேன். நான் இதைச்சார்ந்து விவாதிக்கும் தகுதி கொண்டவன் அல்ல

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,
                          தங்களின்  ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மான் பாராட்டு கட்டுரை படித்தேன். உங்கள் கருத்துகளோடு உடன்படுகிறேன். சில சந்தேகங்கள்… பின் நவீனத்துவ இசை பற்றிய கருத்தாக்கம் அவரது இசையை நீங்கள் உள்வாங்கி கொண்டதன் மூலம் மற்றும் அவரது இசை அணுகுமுறை மூலமும் நீங்கள் உருவாக்கியதா அல்லது அப்படி ஒரு கருத்தாக்கம் ஏற்கனவே உள்ளதா?. மேலும்  தமிழ் சினிமா இசையில் நவீனத்துவம் பற்றி “ஆளுமையின் தனிப்பட்ட இயல்பின் வெளிப்பாடு” என்று கூறுவதன் மூலம் ரஹ்மான் ஒரு புதிய தளத்திற்கு திரை இசையை எடுத்து சென்றதாக கொள்ளலாமா?.

பின் நவீனத்துவம் என்பதை எழுத்து மற்றும் கட்டிடக்கலை போன்ற துறைகளில் மட்டுமே அறிந்திருக்கிறேன் அதுவும் பின் நவீனத்துவ எழுத்து என்று ஒன்று கிடையாது வாசிப்பு முறைதான் இருக்கிறது என்று படித்த ஞாபகம்.

மேலும் இசை பற்றிய இன்னுமொரு கேள்வி தன்  இசை அனுகுமுறை மூலமாக ”நான் கடவுள்” படத்தை சர்வதேச தளத்திற்கு எடுத்து செல்ல தவறிய இளையராஜா பற்றிய சாருவின் விமர்சனக் கட்டுரை படித்தீர்களா? அதில் பங்களித்த படைப்பாளி என்ற முறையில் தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.

-கவி 
 

 அன்புள்ள நண்பருக்கு

உங்கள் கடிதத்துக்கு என் பதில் இதுதான், எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. சும்மா பாட்டு கேட்கும் ஒரு ரசிகன். ஆகவே கருத்து சொல்ல விரும்பவில்லை. நவீனத்துவ இயல்புகள் குறித்தவை என் வழக்கமான பேசுதளம் சார்ந்தவை அவ்வளவுதான்
ஜெ

அன்புள்ள ஐயா
நான் செந்தில் வேல் ராமன்

http://www.geocities.com/ilaiyaragam/index.html

இது என்னுடைய தரவுத்தொகுப்பு. இதில் ராஜா சார் போட்ட கிட்டத்தட்ட 1300 பாடல்களுக்கான ராகக் குறிப்புகள் உள்ளன

  
 

 
 அன்புடன் வேல்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

முதலில் நான் ரகுமானின் ரசிகன் என்பதை சொல்லிகொள்கிறேன். நான் அவரது இசை அமைக்கும் முறையையும், அவர் தனது சக இசைகலைஞர்களிடம்  அவரது அணுகுமுறையும் பாராட்ட பட வேண்டியது.

அனால் எனக்குள்ள ஒரு ஆதங்கம். இதைவிட சிறப்பாக அவர் பல திரைபடங்களில் இசை அமைத்து உள்ளார்.
ஆஸ்கார் கொடுக்கப்பட்ட ஒரு காரணத்திற்காக (ஒரு அமெரிக்க குழுவின் பரிந்துரையில்)  அவரை இமாலய உச்சிக்கே கொண்டு செல்கிறோம்.

நீங்கள் ‘ஜெய் ஹோ’ பாட்டு கேடீர்களா?  “சலம் டாக் மில்லினர்” படம் பார்த்தீர்களா?
இன்னும் இந்த படம் இந்தியாவில் வெளியாகி கூட இருக்காது.
படம் மற்றும் பாட்டு இரெண்டும் என்னை வெகுவாக கவரவில்லை.
ஒருவேளை நான் ரொம்ப எதிர் பார்கிறேனோ, என்னவோ.?

இதற்கே ரெண்டு ஆஸ்கார் என்றால், கீழ் காணும் பாடல்களுக்கு (அதன் படக்ளுக்கு) இன்னும் ஒரு பத்து ஆஸ்கார் தரலாம்.

ஒ  பாலன்தரே – லகான்
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே !
தமிழா தமிழா நாளை நம் நாளே !
இது அன்னை பூமி , எங்கள் அன்பு பூமி !
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே !

ரகுமானின் இதற்கு முந்தய படைப்புகள், பின்னணி இசை இதை விட பல விதங்களில் மேலானவை என்பது எனது கருத்து.

அனாலும் எனது ரசனையில் ரகுமான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் , யுவன் சங்கர் ராஜா அனைவருமே இத்தகைய விருதுக்கு தகுதியானவர்கள்.

ரகுமானுக்கு விருது கிடைத்து விட்டது. இவர்களுக்கு அந்த சந்தர்பம் கிடைக்கவில்லை. அல்லது இவர்கள் அதற்கு முயற்சிக்கவில்லை எனலாம்.

எனது கருத்து ரகுமானுக்கு எதிரானது அல்ல.. அனால் நான் ஆஸ்கார் விருதுக்கு எதிரானது  என்பதை தெளிவுபடுதிகொள்கிறேன்.
இது ஒரு அமெரிக்க விருது.  நோபல் பரிசு போல் உலக விருது அல்ல.
ஏனோ தெரியவில்லை இந்தியாவில் இதற்கு பெரும் வரவேற்ப்பு.

அன்புடன்,
பாஸ்கி.

 

ஏ.ஆர்.ரஹ்மான்,ரஸூல் பூக்குட்டி

முந்தைய கட்டுரைஆஸ்திரேலியா பயணம்
அடுத்த கட்டுரைசங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1