நூற்கொடை, நடுவே கடல்

நூல்கொடைகளின் பயன்

நூல்கொடைகள் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். ஒரு நிகழ்வை, கொண்டாட்டத்தை ஒட்டி அளிக்கப்படும் நூல்கொடைகள் ஒருபோதும் வீணாவதில்லை என்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன். அவ்வாறு கொடையளிக்கப்படும் நூல்கள் மிக எளிதாக வழக்கமாக நூல்களை வாங்கி வாசிக்கும் வட்டத்திற்கு வெளியே சென்று சேர்கின்றன. பலருக்கு அவை முதல் நூல்களாக அமைகின்றன. பலர் வாசிப்புக்குள் நுழைய வழிவகுக்கின்றன.

கோவையைச் சேர்ந்த வாசகியும் நண்பருமான அகிலா அண்மையில் அவர் நண்பர் ஆ.ப. கௌதம்- செ.மீனாட்சி திருமணத்தின்போது அருண்மொழி தொகுத்த நடுவே கடல் என்னும் நூலை பரிசளித்தார்.

அ.முத்துலிங்கம் எழுதிய கதைகளில் இருந்து அருண்மொழி தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பு இது. திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் அந்நூலை அகிலா பரிசளித்தார். 800 பிரதிகள் வாங்கி அவரே திருமண மண்டபத்தில் அமர்ந்து வருபவர்களுக்கு அளித்தார். கேட்டவர்களுக்கு அந்நூல் பற்றியும் விளக்கினார்.

அதன் விளைவுகள் ஆச்சரியமானவை. பலர் அவர்களின் வாழ்க்கையின் முதல் இலக்கியப்படைப்பை வாசித்தனர். பலர் இலக்கியம் என்பதன் உவகையை அறிந்தனர்.

அ.முத்துலிங்கம் படைப்புகள் அதற்கு மிக உதவியானவை. இனியவை, வாழ்வின்மேல் தீராப்பெரும்பற்று கொண்டவை. உலகத்தையே திறந்து நம் முன்வைப்பவை.

மகிழ்வுக்குரிய ஒரு நிகழ்வு. இவை அனைத்து இடங்களிலும் தொடரவேண்டும்.

நடுவே கடல் அருண்மொழிநங்கை கட்டுரை

நடுவே கடல் வாங்க

முந்தைய கட்டுரைசாம்ராஜ் படைப்புகள், கடிதம்
அடுத்த கட்டுரைவிழா, கடிதங்கள்