ஒரு பெருங்கனவு, கடிதம்

 

கொற்றவை வாங்க

கொற்றவை மின்னூல் வாங்க 

அன்புள்ள ஜெ

உங்கள் படைப்புகளிலேயே எனக்கு மிக அணுக்கமானது கொற்றவை. பல நாவல்களை வாசிக்கிறோம். நம் வாழ்க்கையின் பலநிகழ்வுகளைத் தெரிந்துகொள்கிறோம். கலாச்சாரம் சார்ந்த சிக்கல்களை புரிந்துகொள்கிறோம். யதாத்தவாத நாவல்கள் அளிக்கும் வாழ்க்கைப்புரிதல் முக்கியமானது. ஆனால் அவற்றுக்கு என்னைப்பொறுத்தவரை ஓரு எல்லை உண்டு. அவை நம் கனவுக்குள் ஊடுருவுவதே இல்லை. நாம் அவற்றை கொஞ்சகாலத்தில் மறந்துவிடுவோம். மங்கலாகவே ஞாபகம் வைத்திருப்போம்.

ஆனால் கொற்றவை போன்ற நாவல்கள் அப்படி அல்ல. அவை நம் கனவாக மாறிவிடுகின்றன. நம் கனவுகளுக்குள் கலந்துவிடுகின்றன. கொற்றவையை நான் வாசித்தேனா கனவிலே கண்டேனா என்றே குழப்பம் உண்டு. கொற்றவையின் பல காட்சிகளை நான் கனவு மாதிரி ஞபகம் வைத்திருக்கிறேன். அந்த மாபெரும் குமரியன்னையின் சிலையை நான் துல்லியமாக பலமுறை கனவிலே கண்டதுண்டு. 2020ல் கன்யாகுமரி வந்து அந்த ஒற்றைப்பாதத்தடத்தைப் பார்த்தபோது மனம் நெகிழ்ந்து அழுதேன்

நம் கலாச்சாரம் என்பதே நம்முடைய கூட்டுக்கனவைலேதான் இருக்கிறது. ஒரு சமூகம் கூட்டாக ஒரு கனவிலிருந்தால் அது ஒரு கலாச்சாரம். அந்தக்கலாசாரத்தில்தான் கொற்றவையும், தமிழன்னையும், கண்ணகியும் எல்லாம் உள்ளனர். புத்தரும், அருகரும் உள்ளனர். கொற்றவை நாவல் அத்தனை கனவுப்புள்ளிகளையும் இணைத்து ஒரு பெரிய கோலமாக ஆக்க்கிவிடுகிறது. நூறாண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட மிகப்பெரிய கனவு கொற்றவைதான்.

கொற்றவையை வாசிப்பது மிக எளிது. நாம் நாவலென கதைத்தொடர்ச்சியை நினைப்போம். அதைவிட்டுவிட்டு அந்தப் படிமங்களை மட்டுமே வாசித்துச்சென்றால்போதும் ஓர் இடத்தில் எல்லாமே இணைந்து கதையாக ஆகிவிடும். ஏனென்றால் இது ஒரு கதை அல்ல. ஒட்டுமொத்த தமிழ்ப்பண்பாட்டின் கதை. ஒட்டுமொத்த தமிழினத்தின் கதை. இப்படி ஒரு நவீனப்புனைவு எழுதப்படமுடியுமென்பதே ஆச்சரியம்.

ஆனால் நான் ஒன்றைக் கவனித்தேன். கொற்றவையின் நல்ல வாசகர்கள் எல்லாமே என்னைப்போல 1990க்குப் பின் பிறந்த தலைமுறைதான். உங்கள் தலைமுறையில் அதை வாசித்தவர்கள் ரொம்ப கம்மி. உங்கள் சக எழுத்தாளர் எவரும் வாசித்ததில்லை. அவர்களுக்கு உங்கள் மெய்யான ஆகிருதி தெரியாது என நான் நினைப்பது இதனால்தான். இனிய நண்பராகவே அவர்கள் உங்களைப் பார்க்கிறார்கள். ஆனால் அடுத்த தலைமுறையில் மொழி, கலாச்சாரம் பற்றி கொஞ்சம் அறிவும் கொஞ்சம் இலக்கிய ரசனையும் உள்ள பெரும்பாலும் அனைவரும் வாசித்திருக்கிறார்கள்.

விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் கொற்றவை புதிய பதிப்பு அற்புதமாக உள்ளது.

நன்றி

அர்விந்த் கிருஷ்ணமூர்த்தி

முந்தைய கட்டுரைமேட்டிமைவாதம் என்னும் சொல்…
அடுத்த கட்டுரைவாசிப்புப் பயிற்சியும் வகுப்புகளும்