அன்னையுடன் ஒரு நாள்

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

‘செயல் எழுக’ நிகழ்ச்சி அன்று அதிகாலை சிவராஜ் அண்ணனுடன் தனியே ஒரு மணி நேரம் உரையாடும் நல்வாய்ப்பு பெற்றேன். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று என்னை ஊக்கப்படுத்தினார்.

அதன்பின் அவர்களின் வாழ்க்கை வரலாறான ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகத்தை படித்து முடித்தபின் அவர்களை நேரே சென்று சந்தித்தேன். நான் பெற்றுக்கொண்டது பல. அதை எழுதி உள்ளேன். உங்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்கிறேன். சிவராஜ் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

இன்று கட்டாயமாக கிருஷ்ணம்மாள் அம்மாவை சந்தித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்து நேற்றே அவர்களின் வாழ்க்கை வரலாறான ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகத்தை வாசித்து முடித்தேன். எனக்கு அவர்களிடம் கேட்க ஒன்றும் இல்லை, அவர்கள் இருக்கும் இடத்தில் சில நேரம் இருந்தால் போதும் அவர்களை பார்த்தால் போதும் என்று நினைத்தேன்.

காலை ஒன்பது மணிக்கு சிவகாசியில் இருந்து கொடை ரோடு செல்லும் ரயிலில் பயணித்து பதினொரு மணிக்கு சென்று சேர்ந்தேன்.

“அண்ணா காந்தி கிராமத்துக்கு எந்த பஸ்ல போறது ?”

“திண்டுக்கல் போற எல்லா பஸ்ஸும் போகும் தம்பி, இப்படி இடது பக்கமா போங்க, வலது பக்கம் தெரிர கட்டடம் எங்க முடியுதோ அங்க பஸ் நிக்கும், ஆளுங்க பஸ்ஸுக்கு நின்னுட்டு இருப்பாங்க பாத்தாலே தெரியும்”

“நன்றிண்ணா”

வழியின் இரு பக்கமும் சபரிமலை செல்லும் பக்தர்களின் பேருந்து நின்று கொண்டிருந்தது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மாலை அணிந்து கருப்பு உடை உடுத்தி பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள்.

ஐயப்பனை காண விரதம், வேண்டுதல் என கொண்டாட்டமாக இருந்தனர். லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் ஐயப்பனை தேடி செல்கிறார்கள்.

காந்தி கிராமத்துக்கு பேருந்தில் வந்து இறங்கினேன். பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு உள்ளே நடந்து செல்ல வேண்டும்.

” அண்ணா, கிருஷ்ணம்மாள் அம்மாவ பாக்கணும் எங்க இருப்பாங்க ”

“அந்தா ஒரு கார் இருக்குல, அதுக்கு முன்னாடி வலது பக்கம் பாதை போகும், அதுக்குள்ள கடைசிவரை போங்க பெரிய கேட் இருக்கும் அது வெளியகூடி பூட்டித்தான் இருக்கும், அதுக்கு ஒட்டுனாப்ல ஒத்தயடி பாதை போவும், அதுவழியா உள்ள போய், அம்மாவ பாக்கணும்னு சொல்லுங்க கூட்டி போய் விட்ருவாங்க”

வயதான பெண்மணி ஒருவர் வெளியே உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஓய்வாகவும் இருக்கலாம்.

“அம்மா நான் கிருஷ்ணம்மாள் அம்மாவ பாக்க வந்திருக்கேன்”

“அம்மா உள்ள இருக்காங்க” என்று வல பக்கம் கை காட்டினார்.

வெளியில் செப்பலை கழட்டும் போதே ஒருவர் வந்து விசாரித்தார், ” தம்பி யார பாக்கணும் ?”

“கிருஷ்ணம்மாள் அம்மாவ பாக்க வந்தேன்”

“எங்க இருந்து வரீங்க ?”

“சிவகாசில இருந்து”

உள்ளே அழைத்து சென்றார். வள்ளலார் புகைப்படம் கூடத்தின் நடுவே இருந்தது. இடப்பக்கம் ஜெகந்நாதன் அய்யாவின் ஆளுயர படமும், வலப்பக்கம் சவுந்தரம்மாளின் படமும் தொங்கவிடப்பட்டு இருந்தது. தெற்கே பார்த்த படி அம்மா உட்கார்ந்திருந்தார்கள்.

“அம்மா உங்கள பாக்க வந்துருக்காங்க, சிவகாசில இருந்து”

பார்த்ததும் அவர்களின் பாதங்கள் முன் என் தலையை வைத்து ஆசி பெற்றேன். அம்மாவின் அருகில் நாற்காலி ஒன்றை இழுத்து போட்டு அருகே அமர்ந்தேன்.

சுதந்திரத்தின் நிறம் புத்தகத்தை வெளியே எடுத்தேன். அவர்களிடம் கொடுத்து விட்டு,”குக்கூ சிவராஜ் அண்ணன்கிட்ட பேசுனேன், கண்டிப்பா போய் அம்மாவ பாத்து வரணும்னு சொன்னாங்க”

“சிவராஜா ! இங்கு இருக்குற போட்டா எல்லாத்தையும் அவன் தானே மாட்டிட்டு போனான், நான் அப்போ இங்க இல்ல, எங்கயோ போராட்டம்னு போயிருந்தேன்”

சுற்றி பார்த்தேன். வினோபாவ்வுடன் காமராஜருடன் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன்

டாக்டர் சவுந்தரம்மாளுடன் கிராமத்து பெண்களுடன் மாணவிகளுடன் போராட்ட களத்தில் என அத்தனை புகைப்படங்கள். கணவரும் பூமிதான இயக்கத்தின் முக்கிய ஆளுமையாகிய ஜெகந்நாதன் அய்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் என கடந்த காலம் உயிர்ப்போடு அந்த கூடத்தை சுற்றி நிறைந்திருந்தது. அதில் இராட்டை சுற்றும் அம்மாவின் புகைப்படம் ஒரு ஓவியம்.

“நேத்து ஒருத்தவங்க பாக்க வந்தாங்க, பேங்குல வேல பாத்து ரிடயர்ட் ஆயிருக்காரு. புருஷனும் பொஞ்சாதியும் சேர்ந்தே வந்தாங்க. அம்மா நான் இனிமேல் வாழும் காலம் முழுக்க சமூகத்துக்கு எதாவது பண்ணணும்னு வந்தாங்க. சிவராஜ போய் பாத்துருக்காங்க அவன் இங்க என்ன பாக்க சொல்லி அனுப்பி வச்சிருக்கான்”

கையில் நான் கொடுத்த சுதந்திரத்தின் நிறம் புத்தகத்தை புரட்டி கொண்டே அதில் வினோபாவ் இருந்த புகைப்படத்தை பார்த்து பேச தொடங்கினார்.

“வினோபாவ் பூமிதான யாத்திரை போகும் போது நான் அவருக்கு வலப்பக்கம் விளக்கு பிடிச்சுட்டு போவேன். வினோபாவ் நம்மல மாறிலா சாப்புடமாட்டாரு, சின்ன கின்னத்துல தயிர் இருக்கும். மொத்தம் பதினெட்டு தடவ ஒரு நாளுக்கு சாப்டுவாரு. ஒவ்வொரு தடவ சாப்புட்ற முன்னாடியும் கீதை ஒரு ஸ்லோகம் சொல்லி முடிச்சுருவாறு. தினமும் பதினெட்டு ஸ்லோகம்.”

” தீடீர்னு என்ன பாத்து ‘முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே’ அப்படினு பாடுவாரு. கிருஷ்ணம்மாள் இதுக்கு என்ன அர்த்தம் தெரிமானு கேப்பாரு. எனக்கு ஆச்சரியமா இருக்கும் ” சிரித்து விட்டு சில நொடிகள் மௌனமானார்.

“அவரு தினமும் இரண்டரை மணிக்குலா எந்திரிச்சுருவாறு. ஆதிசங்கரரோட பாட்டு இருக்கே, அது பேரு என்ன ” கண்களை மூடி கைகளை நெஞ்சோடு வைத்து உடல் நடுங்க யோசித்து ” அது இருக்கே, அத முழுசா படிச்சு முடிச்சப்பிறகு தான் மத்த வேலைய செய்வார்”

” தெரிஞ்சவர் ஒருத்தர் வந்து சொன்னாரு, ஒரு கிராமத்துல கோயில் பேர்ல் இருக்கிற நிலத்துல அங்கு இருக்குற மக்கள வச்சு குறஞ்ச சம்பளம் கொடுத்து நிலக்கிழார் ஒருத்தரு ஏழைங்கள ஏமாத்திட்டு இருக்காரு நீங்க தான் போய் அவங்கள கேட்கனும்னு சொன்னாரு ” வினோபாவ்விடம் இருந்து எண்ணங்கள் போராட்டங்களால் நிறைந்த தருணங்களுக்கு மாறியதை புரிந்து கொண்டேன்.

“நான் அங்க போயி வயல்ல வேல பாக்கிற பொம்பளைங்க கிட்டலாம் பேசுறேன், அவங்கள எப்படி நிலக்கிழார் ஏமாத்திட்டு இருக்காருனு சொல்றேன், எவளும் காது கொடுத்து கூட கேக்கல. பின்ன நான் என்ன பண்ணேன் அவங்களோடையே சேர்ந்து வேல பாத்து கொஞ்சம் பழகிக்குவோம்னு முடிவெடுத்தேன். ஒரு வாரம் இப்படியே போச்சு. ஒருநாள் அவங்க கிட்ட ‘ ஏம்மா எங்க வீட்டுல சாயங்காலம் ஆன விளக்கு ஏத்தி சாமி கும்புடுவோமே நீங்களா அதுமாரி பண்ண மாட்டிங்களா’னு கேட்டேன். அந்த ஒரு வாரம் பழகுனதிலேயே அவங்களுக்கு என்ன புடிச்சு போச்சு. நாங்க என்ன பண்ணோம். அங்க நூறு பொம்பளைங்க இருப்பாங்க. அவங்க எல்லாத்தையும் கூட்டிகிட்டு பக்கத்துலே இருக்கிற கோவில எல்லாரும் சாயங்காலம் வேலை முடிஞ்சதும் போய் விளக்கு ஏத்துனோம். நூறு நூத்தம்பது விளக்கு இருக்கும் ஏத்துனது. அங்க வச்சு அவங்க கிட்ட நிலக்கிழார் பண்ற ஏமாத்து வேல எல்லாத்தையும் சொல்லி, நியாயம் கேட்க வச்சேன். அந்த நிலக்கிழார் என்ன ஒரு மண்டபத்துக்கு வர சொல்லி ஆள வச்சி சொல்லி அனுப்பிருந்தாரு. நான் போனப்ப அந்த நிலக்கிழார் நீ என்னம்மா பொம்பளைங்கள கூட்டி வச்சி விளக்கு ஏத்தி போராட்டம் பண்ணிட்டு இருக்க, ஒழுங்கா இங்க இருந்து போயிரு இல்ல தல இருக்காதுன்னாரு. நான் பயப்படல திரும்பி வந்தேன். போராட்டம் பண்ணோம். அந்த கோவில் நிலம் எல்லாம் அந்த ஏழைங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தாங்க ”

இரவில் அம்மண்டப விளக்கொளியில் கிருஷ்ணம்மாள் அந்த மக்களிடம் பேசி புரிய வைத்த தருணத்தை எண்ணிக் கொண்டேன், எழுந்து ஒளிர்ந்தது சக்தியின் இருப்பு. கண் அப்போத கலங்க தொடங்கியது எனக்கு.

” நானும் அவரும் கல்யாணம் பண்ணி ரொம்ப வருஷம் ஆச்சு. எங்கயும் சேந்து போனதில்ல. ஒருநாள் வந்து என்ன காசிக்கு போவோம்னு கூப்டாரு. நாங்க போய் கங்கைல குளிச்சோம். பக்கத்துல ஒரு பீஹார்ல ஒரு ஊரு ஒன்னு இருக்கே புத்தரோட ஊரு, அங்கயும் போனோம். அங்க பெண்கள் எல்லாம் கூட்டமா போராங்க, எங்க போராங்க இப்படின்னு எனக்கு ஆர்வம். அவருகிட்ட சொல்லி நான் மட்டும் போய் பாத்துட்டு வரேன் நீங்க இங்க இருங்கனு சொல்டு போய் பாத்தேன். காலுல தங்க வளையல் பெருசா இருக்கு அத போட்டுட்டு ஒரு சாமியார் அங்க இருக்கான். அவன பாக்க ஜனம் எல்லாம் வந்துருக்கு. அவர பாத்துட்டு வெளிய வந்தப்ப மரத்தடியில ஒருத்தர் உக்காந்திருந்தாரு, போய் விசாரிச்சேன்‌. அந்த சாமியார் முப்பதாயிரம் ஏக்கர் வச்சி அங்க இருந்த தாழ்த்தப்பட்ட பெண்கள வச்சி வேல வாங்குறான். கூலியா ஒரு கை அரிசியும் தவிடும் போட்ரான், அடிமையோட மோசமா நடத்துரான். நான் நேருல போய் நடக்குற எல்லாத்தையும் பாத்தேன். அந்த மக்களோட சேர்ந்து அவங்க கூடயே வாழ்ந்து போராட்டம் பண்ணேன். ராத்திரி நான் படுத்து தூங்க அவுங்க வளத்த பன்னிய அவுத்து விட்டுடுவாங்க. அங்கேயே படுத்து கிட்டேன். காலைல எந்திரிச்சா உடம்பு முழுக்க பூச்சி எறும்பா இருக்கும்”

கண் மூடி ஆழ்ந்த அமைதிக்கு சென்று மீண்டு வந்தார்.

” அந்த மக்களுக்கு ஒரு கை அரிசி கூட போட்ர மாட்டாய்ங்களானு எனக்கு கண்ணீர் வரும் ”

நான் உடைந்து அழத்தொடங்கினேன்.

“இன்னும் பீஹார் மோசமாதா இருக்கு”

கிருஷ்ணம்மாள் அம்மாவின் சமூக பணிக்காக 2020 ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. அதை எடுத்து வந்து என்னிடம் காட்டினார். அந்த வருடம் விருது வாங்கியவர்களை பற்றி இதழாக தொகுத்து ஒரு புத்தகம் அரசாங்கம் போட்டிருந்தது. அதில் அவரைப் பற்றி இருந்த பக்கத்தை எடுத்து கொடுத்து ” என்ன பத்தி சுருக்கமா இருக்கு படிச்சு பாருங்க” என்று கையில் கொடுத்தார். முழுவதும் படித்தேன். முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று ” Following the call of Jeyaprakash narayan, she tirelessly worked in BIHAR to liberate 26,000 women from slavery and redistributed 24,000 acres of land to them”. கிருஷ்ணம்மாள் அம்மாவின் பாதங்களை மனதில் ஏந்தி கொண்டேன்.

தீடீரென்று “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிஎல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து” கைகூப்பி கண்களை மூடி உடல் நடுங்க பிரார்த்தனை செய்து என்னை நோக்கி கண்கலங்க புன்னகைத்தார்.

“தினமும் வள்ளலார தான் வழிபடுரேன். என் அம்மா கிட்ட இருந்து கத்துக்கிட்டேன். தினமும் அம்மா விளக்கு ஏத்தி சாமி கும்பிடுவா. அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டாரு. அம்மா தான் என்ன படிக்க வச்சது எல்லாம்”

” இப்போ இங்க குளிரு அதிகம். அதான் சும்மா உட்கார்ந்து இருக்கேன். ஜனவரி மாசம் பொங்கலுக்கு அப்றம் ஆளுங்க எல்லாம் சேத்து ஒரு ஐயாயிரம் வீடு ஏழப்பெண்களுக்கு கட்டித் தரணும். ஆளுங்க சேந்தா போதும், வேலைய ஆரம்பிச்சுருவேன். பணமெல்லாம் நான் பேசி ரெடி பண்ணிருவேன், ஆளுங்க தான் வேணும்”

இதை என்னிடம் கூறும் கிருஷ்ணம்மாள் அம்மாவின் வயது தொண்ணூற்று ஏழு.

” ஏன்கூடவே ஒருத்தி இருந்தா, மேல உட்காருடினு சொல்வேன். கேட்கவே மாட்டா. கீழயே உட்காந்துகிறேனு சொல்வா. அவளுக்கு ஒரு வீடு கட்டி கொடுத்தோம். ரொம்ப ஏழ. வீடு வேணவே வேணானு சொன்னா. நான் ஒங்க கூடவே இருந்துகிடுதேனு சொன்னா.” தன்னிடம் இருந்த புகைப்படத்தொகுப்பில் இருந்து அந்த பெண்ணின் புகைப்படம் ஒன்றை காண்பித்தார், கட்டி முடிக்கப்பட்ட சிறிய வீட்டிற்கு முன் அந்த பெண்மணி.

” தினமும் அவளதான் இப்போ கும்புட்றேன் ”

” ஏ முருகா, நேத்து ஒன்னு சொன்னேல ஏன்கிட்ட அத சொல்லு ” முருகன் அண்ணா அம்மாவுடன் இருந்து அவர்களை பார்த்து கொள்கிறார்கள்.

” என்ன சொன்னேன், சூப்பர் சிங்கர்ல ஜெயிச்சு வர காச வீடு கட்ட தரேனு சொன்னேன், அப்படியே அம்மா கூட வீடு கட்ட நானும் கூட வருவேன்னு சொன்னேன்” முருகன் அண்ணா பதில் சொன்னார்.

” அது இல்ல வேர ஒன்னு சொன்னியே, ஆடு மாடு இல்லன்னானு ஒரு பழமொழி சொன்னியே ”

” ஆமா சொன்னேன், ஆடு மாடு இல்லன்னா அடமழைக்கு பயமில்ல, பொண்ணுபிள்ள இல்லனா பஞ்சத்திக்கு பயமில்ல ”

முருகன் அண்ணா சொன்னவுடன் அம்மாவின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. அந்த பழமொழி சமுதாயம் ஒளிர தன்னை ஆகுதியாக்கி இலட்சியவாத வாழ்க்கை வாழ்ந்த சமூக போராளிகளின் எளிமையான மனதின் வெளிப்பாடு.

பின் சுதந்திரத்தின் நிறம் புத்தகத்தை திறந்து அதில் உள்ள ஒவ்வொரு புகைப்படங்களையும் அம்மாவிற்கு காட்டினேன்.

லாரா கோப்பா புகைப்படத்தை பார்த்து ” இந்த பொண்ணு இங்க வந்திருக்கா. நான் இதாலி எல்லாம் போயிருக்கேன். அங்க இவ கூட இருந்திருக்கேன். நான் கன்னியாகுமரில இருந்து கேஷ்மீர் வர எல்லா ஊருக்கும் போயிருக்கேன். வெளிநாடு எல்லாம் போயிருக்கேன். ஆஸ்திரேலியா மட்டும் தான் போனதில்ல” தான் செய்த பயணம் அத்தனையையும் ஒரு நிமிடம் எண்ணி கொண்டார்.

” காமராஜர் இங்க வருவாரு. வேற எங்கயும்

போகமாட்டாரு. ‘ஜெகந்நாதன் இருக்கானானு கேட்பாரு ?’, அவரு இல்லனு தெரிஞ்சா சிகரெட்ட ஊதி இங்கயே போடுவாறு. அவர் இருக்கும் போது புடிக்க மாட்டாறு” காமராஜருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பார்த்து கொண்டே என்னிடம் கூறினார்.

” நம்ம கூட சேர்ந்து சாப்புடலாமா ” என்னை மதிய உணவு சேர்ந்து சாப்பிட கூப்பிட்டார்.

சாப்பிட்டு முடித்த பின் அம்மாவின் பாதங்களில் விழுந்து ஆசி பெற்றேன். அம்மா “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ” என்று வேண்டி விபூதி பூசி விட்டார்.

திரும்பி செல்வதற்கு முன் அம்மாவின் கண்களை பார்த்து கொண்டேன். அக்கண்களில் நான் கண்டது, லட்சக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து ஆயிரக் கணக்கான உள்ளங்களை ஒன்றிணைத்து மேற்கொண்ட அஹிம்சை வழி யாத்திரையின் அத்தனையாயிரம் பாதங்கள். அன்பின் ஊற்றில் இருந்து மட்டுமே சுரக்கக்கூடிய கண்ணீரை கொண்டு மட்டுமே கழுவக்கூடிய பாதங்கள். இந்த தேசமே அவர்களுடைய பாதத்தின் கீழ் தான்.

ஞானசேகரன் ரமேஷ்

முந்தைய கட்டுரைவிழா கடிதம், கடலூர் சீனு
அடுத்த கட்டுரைமருபூமி முன்னுரை, அஜிதன்