பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய ஆசிரியருக்கு,
வணக்கம்.
ஆறாம் வயதில் முருகனைக் காண கூட்டிச்சென்று, திருச்செந்தூரில் சட்டென்று கடற்கரையில் இறக்கி விடப்பட்டபோதுள்ள விவரிக்க இயலாத பரவச மனநிலையை இன்று விஷ்ணுபுரம் விழா அரங்கில் அடைந்தேன்.
விஷ்ணுபுரம் விருதளிப்பு துவங்கிய 2010 ம் ஆண்டில் ஒரு பயணக் கட்டுரை வழியாக அறிமுகமான உங்களை, இணையத்திலும் அச்சிலுமாக தொடரந்து வாசித்து வருகிறேன் .ஏறத்தாழ அனைத்து பயண நூல்களையும்,ரப்பர், இரவு, அறம், வெள்ளை யானை உள்ளிட்ட பல நூல்கள் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புத்தம்புது நிகர் வாழ்வனுபங்களை அளிக்கின்றன என்றபோதும் , கொற்றவையையோ விஷ்ணுபுரத்தையோ வெண்முரசையோ முதல் 10 பக்கங்களுக்கு மேல் வாசிக்க இயலாமல் ஒவ்வொரு முறையும் நிற்கிறேன் .
கோவையிலும் திருப்பூரிலும் பணிபுரிந்து கொண்டிருந்தாலும், இங்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவும் சந்திக்கவும் பெருவாய்ப்பும் பேராரவமும் இருந்தபோதிலும் மிகமுக்கிய நூல்களை வாசிக்க இயலாததே ஒரு தகுதியின்மையாகவும் , அறிந்தோரின் அவைக்குள் அந்நியனாக ஆகிவிடுவேன் என்ற உறுத்தலிலும் ஒவ்வொரு முறையும் கடைசி கட்டத்தில் பின்வாங்கி நின்றுவிட மட்டுறுத்தியது.
இம்முறை வெள்ளிமலை தியான முகாம் நண்பரும் வாசகருமான விஜயகுமாரின் தொடர் வற்புறுத்தலுக்கு அறைகுறையாக இணங்கி , அதுவும் இரண்டாம் நாள் அமர்வில் கலந்துகொண்டேன். விழா அரங்கின் முகப்பிலேயே விழா நாயகன் – எழுத்தாளர் யுவன் அவர்கள் துள்ளல் நடையுடனும் குழந்தைச் சிரிப்புடனும் நண்பர்களுடன் அளவாளவிய காட்சியின் கணமே நெருங்கிய உறவின் திருமணத்தில் கலந்துகொள்கிறோம் என சட்டென்று எண்ண வைத்தது.
தும்பி மற்றும் நூற்பு இவற்றின் வழி அறிமுகமாகியிரு்த நண்பர் சிவகுருநாதன் துவங்கி , வலைப்பதிவர் ஷாகுல் அமீது, எழுததாளர் காளிப்ரசாத், உங்களது நண்பரும் விமர்சகருமான ஈரோடு கிருஷ்ணன் உள்ளிட்ட பெயர் தெரிந்த தெரியாத அனைத்து நண்பர்கள் முகத்திலும் மட்டற்ற உற்சாகத்தையும் இனம் கண்டறிய இயலாத இணக்கத்தையும் நட்புணர்வையும் நெகிழ்வையும் விழா இறுதிவரை ஒவ்வொரு கணமும் உணர முடிந்தது.
ராமச்சந்திர குகாவை அதுவரை ஒரு பாடநுநூல் ஆசிரியராகவும் , போட்டித் தேர்வுகளுக்கான நூல் வரிசைப் பட்டியல்களில் புததக ஆசிரியராகவும் , தொலைக்காட்சி விவாதங்களிலுமே கண்டிருக்கிறேன். ஆனால் அமர்வின் ஒரு பதிலில் ,குறிப்பாக விநோபாபா மற்றும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் குறித்த பதில்களின்போது மதுரை, திண்டுக்கல் என துவங்கி ஒட்டன்சத்திரம் என்ற சிறு நகரில் இயங்கும் மருத்துவமனையின் சேவை வரை நுணுக்கமாகவும் அதே சமயம் விரிவான தகவல்களுடனும் ஒரு சாாரண உரையாடல் பேச்சில் கொண்டுவருகிறார் எனில் இந்தியப் பெருநிலம் முழுக்க அவருக்கிருக்கும் வரலாற்று அறிவும் தகவல் தொகுப்பும் பிரம்மிக்க வைத்தது.
சமகால மாபெரும் வரலாற்றை கட்டமைக்கும் ஒரு மாமனிதரை , பக்கச்சாய்வின்றி வரலாற்றை நோக்குவது குறித்த அவரது நேர்ப்பேச்சைசுடன் ,அவரின் ஆளுமையையும் வீச்சையும் நேரில் மிக நெருக்கமாக காண அமைந்தது ஒரு நல்வாய்ப்பு.
அமர்வின்போது யுவன் அவர்களது ஒரு பதிலில் “ ஒரு துளி ஞானம் போதும், சமயத்தில் அவ்வளவு ஞானமே அதிகம்” என்றும் “நான் ஒரு பாமர மனநிலை வாசகனாகவே இருக்க விரும்புகிறேன் ” என்றும் அவருக்கே உரிய நகைச்சுவை உரையாடலாக கூறிய அக்கூற்றுகள் எனக்களித்தது விவரிக்க முடியாத மாபெரும் திறப்பு.பல பெரும் நூல்கள் எனக்கு திறக்காத போதும் நான் ஒரு பாமர வாசகனாக மற்ற என்னாக நூல்களுடன் என்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிட முடியும் எனவும் அவை எனக்களித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை அனுபவஙகள் போதுமென்றும் அக்கணத்திலிருந்து உய்த்துணர்நதேன். அதில் நான் அடைந்த உந்துதலும் சக்தியுமே ஏற்கனவே உங்களுக்கு பல தருணங்களில் எழுதி எழுதி அழித்துவிட்டிருந்த கடிதங்களில் ஒன்றாக இதை ஆக்காமல் உங்களுக்கு அனுப்பும் துணிவை எனக்களித்தது.
இதுவரை அளிக்கப்பட்டிருக்கும் அனைத்திற்கும் பெறவிருக்கும் அனைத்திற்குமான, அனைவருக்கமான
அன்புடனும் நன்றிகளுடனும்
செ.தினேஷ்குமார்
காங்கேயம்
சார் வணக்கம். விஷ்ணுபுரம் விழா 2023. 17டிசம்பர் ஞாயிற்றுக்கிழமை அன்று முழுவதும் விழாவில் கலந்து கொண்டேன். நான் இந்த வருடம் தான் முதன்முதலாக கலந்து கொள்கிறேன். வாசகர் கேள்வி பதில் பகுதி சிறப்பாக இருந்தது. நீண்ட தூரத்தில் இருந்து வரும் வாசகர்களை தங்குவதற்கும் மற்றும் உணவு சகல வசதிகளையும் சிறப்பாக செய்து இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி கூறிக் கொள்கிறேன்.
உங்களுடைய நூல்பனி மனிதன் படித்தது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. நான் ஆசிரியராக பணி செய்வதால் அது போன்ற கதைகளை மாணவர்களிடம் படித்துக் காட்டும் போது மிகவும் ஆர்வமாக கேட்டார்கள். மிக்க நன்றி. அவ்வப்போது உங்கள் உரைகளை You tube ல கேட்டுக் கொண்டிருக்கிறேன். தென் மாவட்டங்களில் உங்களுடைய நிகழ்வுகள் ஏதாவது இருந்தால் தயவு கூர்ந்து இணையதளத்தில் தெரியப்படுத்தினால் என் போன்ற வாசகர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். மிக்க நன்றி சார்.
நாசர்
தென்காசி
அன்புள்ள நாசர்
விழாவில் வாசகர் சந்திப்பின்போதான உரையாடல்களை தன்னியல்பாக நிகழவிடவேண்டும் என்று எண்ணுகிறோம். அவற்றை பதிவுசெய்தால் ஒரு கவனம் வந்துவிடக்கூடும் என்பதனால் தவிர்க்கிறோம்
ஜெ