விழா, கடிதங்கள்

அன்பின் ஜெ

திரண்டு வரும் இலக்கிய விழுமியங்களில் முங்கியெழ இரண்டு நாட்களும் கோவை வந்திருந்தோம்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அரங்கசாமி, ராஜகோபால், செந்தில், ஷாகுல் ஹமீது,மீனாம்பிகை,விஜயசூரியன், ஈரோடு கிருஷ்ணன்,சுதா, சீனிவாசன் ஆகியோர் இரவு பகலாக அயராது உழைத்து விழாவை சிறப்பாக நடத்தி தருவதற்காக நாங்களும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்

சந்திரா, சுபத்திரா,தீபுஹரி,லதா அருணாசலம் ஆகியோரின் முதல் நாள் அமர்வில் அறிவை திரட்டிக்கொண்டோம்.

ராமச்சந்திர குஹா அவர்களின் கனீரென்ற குரலும் வார்த்தை பிரயோகமும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.குஹாவின் பேச்சிலோ பார்வையாளர்களின் கேள்வியிலோ அரசியல் உள்நுழைய எத்தனிக்கும் போதெல்லாம் மிக சாதுர்யமாக அரசியலை விலக்கி வைத்து மொழிபெயர்த்த சுனில் கிருஷ்ணனுக்கு ஒரு சபாஷ்.

யுவனின் ஆவணப்படத்தை நேர்த்தியான ஒழுக்கில் வடிவமத்துத்தந்த ஆனந்த் குமாருக்கு நன்றி.ஆவணப்படத்தில் தேவதச்சன் யுவனை கடிந்துகொண்டு “அருவியில் போய் விழு”என்று சொல்ல “அருவியில் நீர் விழும்”என்ற யுவனின் சிலேடை பதிலை நீங்கள் குறிப்பிட்டபோது அரங்கம் அதிர்ந்தது.

யுவனின் ஏற்புரை உணர்ச்சிகரமாகவும் உள்ளபூர்வமாகவும் இருந்தது.
யுவனின் விழாவுக்கு வந்திருந்தோரில் ஏராளமானோர் யுவன்களும் யுவதிகளும் கலந்துகொண்டதை பார்க்கும்போது இலக்கியம் சரியான திசையில் செல்கிறது என்பதை உறுதி செய்துகொள்ள முடிகிறது.

கடலூர் சீனு, கவிஞர் இசை, சுரேஷ் பிரதீப், போகன் சங்கர், சாம்ராஜ், சுசித்ரா உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களை சந்தித்து பேசியதில் பெருமகிழ்ச்சி.மரபின் மைந்தர் அவர்களை சந்திக்கும்போது முதற்கனல் விமர்சனம்’ வியாச மனம் ‘குறித்து பேசினோம்.அவர் குரலுக்கு ரசிகரென்றோம்.

அஜிதனை சந்தித்து மருபூமிபற்றி யறிந்து ஒரு மருபூமி புத்தகம் வாங்கிக் கொண்டோம்.இப்படியொரு விழாவில் மூழ்கி திளைக்க டிசம்பர் 24வரை காத்திருக்கவேண்டும்.

நன்றி ஜெ.

மூர்த்தி விஸ்வநாதன்
சந்திரமோகன்
வாழப்பாடி.

அன்புள்ள ஜெ

இரண்டு நாட்கள் கொண்டாட்டமாய் கழிந்தது உங்கள் தளத்தில் எழுத்து மூலம் அறிமுகமானவர்களை நேரடியாக முகம் காண வாய்ப்பு கிடைத்தது. படைப்புகளை வெறும் வாசிப்போடு மட்டும் நிறுத்தி விடாமல் உள்வாங்கி விமர்சனம் செய்யும் இளையர்கள் அசத்தினார்கள்.

முதல் நாள் கலந்துரையாடலில் பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர், இதழியலாளர் திரைப்பட இயக்குனர் (சந்திரா) பதிப்பாளர் (கனலி விக்னேஸ்வரன்) இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் (சுபத்ரா மற்றும் லதா அருணாசலம்).

மதியத்தில் கவிஞர் (தீபு ஹரி), புலம்பெயர்ந்த எழுத்தாளர் (வாசு முருகவேல்) தொடர்ந்து பரவலாக வாசிக்கப்படுகின்ற மூத்த எழுத்தாளர் ராகவன் ஆகியோரின் கலந்துரையாடல்களுடன் இனிதே முடிந்தது.. நாங்கள் அளவலாகிய இளையர்களின் முதல் சாய்ஸ் தீபு ஹரியே..

அனைத்திற்கும் சிகரம் இரவு 9 மணிக்கு நடந்த விநாடி விழா நிகழ்ச்சி குறைந்தது 400 பேராவது திரண்டு இருப்பார்கள்.   எத்தனையோ வினாடி வினாவில் பரிசு பெற்றிருந்தாலும் நா பார்த்தசாரதி குறித்த கேள்விக்கு பதில் சொல்லி யுவன் யுவன் சந்திரசேகர் கைகளில் புத்தகம் பரிசாக வாங்கியது எனக்கு மகிழ்ச்சி.

இரண்டாம் நாள் காலை அயல்நாட்டு தமிழ் எழுத்தாளர் அரவிந்த் குமார் மற்றும் மலாய் மொழி எழுத்தாளர் ஜாகீர் அமர்வு. தொடர்ந்து விருது பெரும் யுவன் சந்திரசேகரின் கலந்துரையாடல் என நேர்த்தியான தொகுப்பு.

உணவு இடைவேளைக்கு பிறகு ராமச்சந்திரன் குகாவின் கலந்துரையாடல் சுவாரசியம். குஹாவின் பதில்களை தமிழில்  மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் இல்லையோ என நினைத்தேன்.

மாலை எழுத்தாளர் யுவன் குறித்துஆனந்த்குமார் எடுத்த “சுழற்பாதை யாத்ரிகன்” ஆவணப்படம் வழங்கப்பட்டது.. மிக நன்றாக எடிட் செய்து 50 நிமிடங்களில் உலகத் தரத்தில் வழங்கி இருக்கிறார்..யுவனுக்கு வாழ்த்துரை வழங்கியதில் கோபாலகிருஷ்ணன் அவர்களும் நீங்களும் தனிக் கவனம் எடுத்துக் கொண்டீர்கள்..

இரண்டு நாட்களும் நேர ஒழுங்கில், மிகக் கவனம் செலுத்தி, அத்தோடு வேளா வேளைக்கு உணவு வழங்கி அமைப்பாளர்கள் அசத்தினார்கள்..

அமைப்பாளர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

கோபால் சென்னை

முந்தைய கட்டுரைம.நவீனின் ‘தாரா’ வெளியீடு
அடுத்த கட்டுரையா தேவி, மருத்துவ ஆய்வுக்கட்டுரையில்