எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
நலம் நாடுகிறேன். விஷ்ணுபுரம் விழா புகைப்படங்களில் உங்கள் முகத்தின் வழக்கமான பொலிவும் களையும் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் உடல் எடை மிகவும் மெலிந்துவிட்டதுபோல் தெரிகிறது. என்ன காரணம்? திட்டமிட்ட எடைக்குறைப்பா (நீங்கள் ஒன்றும் பருமனானவர் அல்லவே)? அல்லது ஏதேனும் உடல்நிலை பிரச்சினையா?
எப்படி என்றாலும் நான் உங்களுக்கு அறிவுரை கூறத் தேவையில்லை. உடல் நலனில் சரியான அக்கறை எடுத்துக்கொள்வீர்கள் என்று தெரியும். ஆனால் தொலைவிலிருந்து உங்களை ரசிக்கும் வாசகனாக. ரசிகனாக நீங்கள் எப்போதும் பூரண நலத்துடன் இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்
கோபாலகிருஷ்ணன்
அன்புள்ள கோபாலகிருஷ்ணன்,
மெலிந்துவிட்டிருப்பதைப் பற்றி பலரும் சொன்னார்கள். தானாக மெலியவில்லை. அதன்பின் கடும் உழைப்பு உள்ளது.
கடந்த பெப்ருவரியில் தவாங் சமவெளிக்குப் பயணம் செய்தபோது கொஞ்சம் மூச்சுவாங்கியது. காரணம் தொப்பை. மெல்லிய தொப்பைதான். ஆனால் மலையேற்றத்தில் பிரச்சினை முழங்கால் அல்ல, நுரையீரல்தான். அங்குதான் பிடி விழும். மொத்த உடல் எடையையும் நுரையீரலே தாங்கவேண்டியிருக்கும். (ஆனால் நான் அனைவரிலும் முதலில் நடக்கவும் செய்தேன். குழுவில் நானே மூத்தவன் என்றபோதிலும்)
என் மகிழ்ச்சிகளிலொன்று மலை ஏறுவது. அதில் சிக்கல் வருமென்றால் நான் முதன்மையான ஒன்றை இழக்கிறேன். ஆகவே எடையை கவனித்துக் கொள்ளவேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகள் மலைகளில் ஏறவேண்டும் என்பது திட்டம்.
உடன் வந்த ‘ஏண்டர்ப்ரினர்’ அரங்கசாமி அப்போது கடும் எடைக்குறைப்பில் இருந்தார். ( ‘காசில்லாதபோது தின்பார்கள். காசு வந்தால் பட்டினி கிடப்பார்கள்’. ’கல்விச்சித்தப்பா’ சக்தி கிருஷ்ணன் பொன்மொழி, அரங்கா பற்றி). அரங்கா மெலிந்து துடிப்பாக இருந்தார். அதே அரங்கா பூட்டான் பயணத்தின்போது ‘இதோ ஆள் பூட்டான்’ என்னும் வகையில் மூச்சுவாங்கியதை நினைவுகூர்ந்தேன்.
அரங்காவின் ஆலோசனைப்படி எடைக்குறைப்பில் இறங்கினேன். வழக்கமான உணவில் மாவுச்சத்தை குறைத்து புரோட்டீனை கூட்டினேன். அசைவ உணவு. முட்டை குறிப்பாக . மாலை 7 மணிக்கு முன் மாலையுணவாகிய பழங்களை உண்டால் மறுநாள் காலை 9 மணிக்கு காலையுணவாகிய முட்டைகள். மதியம் வழக்கமான உணவு. பசியை குறைக்க கறுப்புக் காப்பி. அதாவது நல்ல அசல் டிக்காஷன். எட்டு மாதங்களில் 12 கிலோ குறைத்தேன். 80ல் இருந்து 68. எனக்கு மருத்துவம் பரிந்துரைக்கும் சரியான எடை.
அமெரிக்கப்பயணத்தின்போது எடையின்மை நடக்கவும் மலையேறவும் மிக உதவியாக அமைந்தது. வரும் ஆண்டில் பல பயணங்கள் திட்டத்தில் உள்ளன. நான் எப்போதுமே சுறுசுறுப்பானவனே. உடலை ஒரு சிக்கலாக உணர்ந்ததே இல்லை. இப்போதும் அப்படித்தான்.
ஆனால் நண்பர் பலருக்கு இந்த எடைக்குறைப்பு பிடிக்கவில்லை.”கிளாமர் கம்மியாகுது சார்” என்றார்கள். (எல்லாம் ஆண்கள்தான். பெண்களுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை) குக்கூ இயக்கத்தின் தன்னறம் பதிப்பகம் அசோகமித்திரன் காலண்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதை நான் வெளியிட்டு ஒரு புகைப்படம் எடுத்தேன். ஒரு நண்பர் “இப்டியே போனா அசோகமித்திரன் மாதிரியே ஆயிடுவீங்க” என்றார். அப்படி உத்தேசமில்லை.
அசோகமித்திரன் தன் எடை பற்றிய பிரக்ஞை கொண்டவர். இதழாளர் பதிப்பாளர் மற்றும் சோட்டாக்கவிஞரான ஒருவர் அசோகமித்திரனை காரிலேற்றி தன் நூல்வெளியீட்டுக்கு கொண்டுசென்றுவிட்டார். “ஏன் சார் போனீங்க?” என்று கேட்டேன். “அவரு எவ்ளோ வெயிட்டு! எப்டி மாட்டேன்னு சொல்றது, சொல்லுங்கோ” என்றார். அந்த அளவுக்கு போகாமல் எடையை காத்துக்கொள்ளவேண்டும்.
ஜெ