வணக்கம் சார்.
விஷ்ணு புரம் இலக்கிய பெரு திரு விழாவிற்கு வந்தேன்.. வேதையிலிருந்து தாரா ஷங்கர் பந்த்யோபத்யாயவுடன் பயணம் துவக்கம்.. ஆரோக்கிய நிகேதனம் மறுவாசிப்பு.. சாகித்ய புத்தகம்தான்.. நிறைய எழுத்துப் பிழைகள்… கோவையின் ஏனுங்க.. சொல்லுங்க வழக்கு பேருந்திலேயே ஒத்தடம் தர துவங்கி விட்டது.. மாலை தேநீர் நேரத்தில் தான் அரங்கில் நுழைந்தேன்.. இங்கு ஒரு பிழை.. 20 மணி பயணம்.. 4மணி நேரம் மட்டுமே விழாவில் இருந்தேன்.. அடுத்தடுத்த முறைகளில் சரியாகத் திட்டமிடணும்..
வரவில்லை என்றாலும் கடந்த கால விஷ்ணு புர விழாக்களை மனம் கொண்டாடிக் கொண்டே இருக்கும்.. இந்த முறை அகம் புறமென விருது விழாவில் திளைத்து திரும்பினேன் இருந்த நேரம் குறைவெனினும்… தாங்கள் உட்பட அங்கிருந்த எல்லா படைப்பாளர்களையும் காண்பது இதுவே முதல் தடவை.. அனைவரும் புகைப்படம் பிடித்துக் கொண்டேன்.. தேவதேவன் அவர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. ஒரு விஷயத்தைக் கவனித்தேன்.. அங்கிருந்த எழுத்தாளர்கள் எல்லோருமே நிரம்பி வழியும் குழந்தைத் தனத்தோடும் நட்புணர்வோடும் இருந்தீர்கள்.. அவை என்னை வாரி சுருட்டிக் கொண்டன.. அதிலும் குறிப்பாக உங்களின் பேச்சு, செய்கை ஈர்க்கும் சுறுசுறுப்பு கொண்டிருந்தது.. கண் படுதலில் எனக்கு நம்பிக்கை உண்டு கவனம்..
கொடுங்காளூர் கண்ணகியில் தங்களிடமும்.. ஒளிரும் பாதையில் யுவன் சாரிடமும் நினைவு ஒப்பம் பெற்றுக் கொண்டேன்.. இதில் மோகன்ல ஒப்பமிடணும் என சார் சிரித்த வண்ணம் கூறினார்.. எடப்பாடியில் இருந்து வந்த நண்பர் சொன்னார்.. நிறைய படிக்க வேண்டும் என்பதை இவ்விழா கோருகிறது.. அடுத்த முறை அதிக வாசிப்போடு வர வேண்டும் என்றார்.. இவ்விழா ஓராண்டுக்கான வாசிப்பு ஊக்கம் தரும் என தாங்கள் கூறியது நினைவுக்கு வந்தது.. இந்த விழா எப்படி வினையைத் துவக்குகிறது என்பதற்கு அந்த வாசக எடப்பாடியார் வாக்கே சான்று.. ராகவன் அய்யா வின் அமர்வு கலகலப்பாக இருந்தது.. அவருக்கே உரித்தான எள்ளல்.. இருப்பினும் அமர்வு கனமான இடங்களும் உண்டு.. காட்டாக அவரது தந்தை என்னால மல்லாக்க மட்டும்தான் படுக்க முடியுது என்ற இடம் நிலைகுலைய வைத்து..
விழாவில் என்னை கவர்ந்தது வெற்று சடங்குகள் இன்மை.. பல விழாக்கள் பிரேதமாக மாறுவது சலிப்பு தரும் சடங்குகளால்.. விழா பார்வையாளர்களுக்கானதாக இருக்க வேண்டும்.. மேடையில் இருப்பவர்களுக்காக அல்ல எனும் தங்கள் மொழி கொண்டே விஷ்ணுபுர விழாவைப் புரிந்து கொள்கிறேன்.. எத்தனைக் கு எத்தனை தனிநபர் சுதந்திரம் கொண்டதாக நிகழ்வுகள் இருந்ததோ அதை நெறிபடுத்தும் வண்ணம் தேவையான இடத்தில் கறாரும் இருந்தது.. அமர்வில் பேச்சு ஓரிடத்தில் நேர்நிலை மாறுதல் போல தோன்ற அதை நோ ஆர்க்குமென்ட் என ஒற்றை வார்த்தையில் சரியான திசைக்கு கொண்டு வந்தீர்கள்.. பார்க்கும் இடமெல்லாம் நல்ல புத்தகங்கள், பெரிய எழுத்தாளர்கள், தீவிர வாசகர்கள் பூத்திருந்த விஷ்ணுபுரம் இலக்கிய பெரு திருவிழா மறக்க முடியாத அனுபவம்…
முத்தரசு
வேதாரண்யம்